Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள் உணர்ச்சியா? அறிவா?
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2010|
Share:
நங்கநல்லூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. காலையில் தொடங்கி மதியம் முடிந்துவிட்டது. தற்போது வழக்கறிஞராகப் புகழ்பெற்றிருக்கும் க இரவி, ஆன்மீகப் பேச்சாளர் சுகி. சிவம் ஆகியோர் அப்போது இளைஞர்கள். இருபத்தைந்து வயதைத் தாண்டாதவர்கள். நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தைக் காட்டிலும், நிகழ்ச்சியின் இறுதியில் கால்போன போக்கில் பேசியபடி நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. அப்படித்தான் அன்றும் நடந்தது. பேராசிரியர் தி. வேணுகோபாலன் (இனிமேல் அவர் பரவலாக அறியப்பட்டிருந்த நாகந்தி என்ற புனைபெயராலேயே குறிப்பிடுகிறேன்) இல்லாமல் நங்கநல்லூரில் கவியரங்கம் கிடையாது. உற்சாகமாக ஒவ்வொரு கவிதையையும் பாராட்டி, "ஆகா... ஆகாகா" என்பதுதான் கவியரங்கின் போக்கு என்பதாக எங்களுக்கு ஒரு பிரமை உண்டு. ஆனாலும், மிகையாகவும் இல்லாமல், பொருத்தமான இடங்களில் கைதட்டுவதற்கும், குறிப்பிட்ட இடத்தை மறுபடி வாசிக்கும்படிக் கேட்டுக்கொள்வதற்கும், ஆகாகாரம் எழுப்புவதற்கும் குறைவிருக்காது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



இந்தப் போக்கை மாற்றியவர் நாகநந்தி. கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது, பொருத்தமற்ற இடங்களைச் சுட்டுவார். இடையில் நுழைந்து கேள்வி கேட்பார். சொற்பிழைகளை எடுத்துக் காட்டுவார். அர்த்தம் புரியாமலேயே கவிஞர்கள் சொற்களைக் கையாள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவார். இப்படித்தான் ஒருமுறை ஒரு கவிஞர் 'பயிர்ப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு அவரிடம் அகப்பட்டுக் கொண்டார். "பயிர்ப்பு என்றால் என்ன?" என்று கேட்டார். அந்தக் கதையையெல்லாம் இன்னொருமுறை சொல்கிறேன். 'இப்படிக் குறுக்கிடுகிறாரே, இப்படி நாம் எழுதியதைக் குறைத்து மதிப்பிடுகிறாரே' என்றெல்லாம் அப்போது தோன்றும். எதிர்ப்பதும், கோபித்துக் கொள்வதும் இரண்டு பக்கமும் குறைவில்லாமல் நடக்கும். ஆனால், காலம் செல்லச் செல்லத்தான், அவருடைய கேள்விகளின் திசை புரியத் தொடங்கியது. கவிதையை அணுகுவதற்கான அடிப்படைக் கருவிகள் என்னென்ன என்பது புரியத் தொடங்கியது.

உணர்ச்சிபூர்வமாகக் கவிதைகளை அணுகலாம். தவறே இல்லை. கவிதை மட்டுமில்லை. படைப்பின் ஒவ்வொரு வகை வெளிப்பாட்டையும், உணர்ச்சிபூர்வமாக அணுகி, உணர்ச்சிபூர்வமாக ரசிக்கலாம்.
அன்றும் இதே கதைதான். நடந்தவாறு பேசியபடி அவருடைய இல்லத்தை அடைந்து அங்கே பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாரதியைப் பற்றி உற்சாகமாக மிக உயர்வாக ஒருவரை ஒருவர் விஞ்சியபடி பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பாரதி பாடல்களிலிருந்து நீண்ட நீண்ட பகுதிகளைப் பேச்சோடு பேச்சாக மேற்கோளாகச் சொல்வதும், அந்தப் பகுதிகளில் பளீரிடும் சொற்கட்டு, சந்த அமைப்பு, வாக்கு நயம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவருடைய உலகத்தில் சஞ்சரித்தபடி, பாரதியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். சிரித்தபடி நீண்ட நேரம் எல்லோருடைய பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தார் பேராசிரியர்.

"என்ன சார்...ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க" என்றான் ஒரு நண்பன். இவரிடமிருந்து கடல்போலப் பொங்கிக் கிளம்புவதையே பார்த்துப் பார்த்துப் பழகியவர்கள் நாங்கள். அந்த அமைதி கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. "இவ்ளோ உற்சாகமாக பாரதியைப் புகழ்நது பேசுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது" என்று தொடங்கினார். "ஆனா பாரதிய எவ்ளோ தூரம் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க? இந்தப் பாராட்டெல்லாம், நீங்க படிச்சது என்னன்னு புரிஞ்சுகொண்ட பிறகுதானா?" என்று தொடங்கினார். கூட்டத்தில்—ஒரு இருபதுபேர் இருந்திருப்போம்—திகைப்பு; வியப்பு; அதிர்ச்சி; மௌனம். 'என்னடா, மிக எளிதில் விளங்கக்கூடிய பாரதி பாட்டைப் புரிஞ்சிக்கிட்டீங்களா என்று கேட்கிறானேன்னுதானே பாக்கறீங்க' என்று தொடர்ந்தார். புன்னகைப்பதைத் தவிர வேறு விடையிறுக்கத் தெரியவில்லை.

"உணர்ச்சிபூர்வமாகக் கவிதைகளை அணுகலாம். தவறே இல்லை. கவிதை மட்டுமில்லை. படைப்பின் ஒவ்வொரு வகை வெளிப்பாட்டையும், கவிதை, கதை, நாவல், காவியம், ஓவியம் சிற்பம் என்று எதைவேண்டுமானாலும் சரி. உணர்ச்சிபூர்வமாக அணுகி, உணர்ச்சிபூர்வமாக ரசிக்கலாம். ஒரு தவறும் இல்லை. உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் கவிதை, இலக்கியம், கலை எல்லாமே" என்று சொல்லி ஒருகணம் நிறுத்தினார். "நம்ப கவிஞர் ஹரி கிருஷ்ணன் இப்போ 'முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்' பாடலை அவ்ளோ உணர்சி ஆவேசமாச் சொன்னார். நல்லா, சொல்லுணர்ந்து, சொல்லின் பாவம் உணர்ந்து, அதற்குரிய ஏற்ற இறக்கங்களோடு, பாடலின் உணர்ச்சியோடு ஒன்றிக் கலந்து சொன்னார்'. எனக்கு உள்ளூற உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தது. ஐயா இப்படிப் பாராட்டுகிறார் என்றால் அதை ஏதோ ஒரு ஸ்ட்ரோக் வந்து திருப்பப் போகிறது என்று பொருள். 'இந்தப் பாடலில் நாம் சொன்ன விதத்தில் என்ன குறை இருந்திருக்க முடியும்? என்ன தப்பு செஞ்சோம்? எதையாவது புரிந்துகொள்ளலாமல் சொன்னோமா? எழுத்துப் பிசகாமல் அப்படியே பாடலைச் சொன்னதாகத்தானே தோன்றுகிறது.... ஒருவேளை நம்ம ஞாபகசக்தி நம்மையும் மீறி எங்கேயாவது காலை வாரிவிட்டுவிட்டதா....' மனத்தின் ஆடியாழத்தில் நடுக்கம்.
"பாடலை உணர்சிபூர்வமாகச் சொன்னீங்க ஹரி கிருஷ்ணன். ஆனா அது போதுமா? ஒரு பாடலை உணர்ச்சிபூர்வமாக மட்டுமே அனுபவித்துவிட முடியுமா?" என்று கேட்டார். எனக்கு விடை தெரியவில்லை. 'கவிதை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு' என்ற வாக்கியம் அப்போது மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. 'உள்ளத்துள்ளது கவிதை; இன்பம் உருவெடுப்பது கவிதை' என்ற கவிமணியின் பாடலைச் சொல்லிக்கொடுத்தவரே நீங்கதானே சார். கவிதையை இப்படிச் சொல்லிச் சொல்லிப் பார்த்தால் உள்ளத்தில் அளவில்லாத இன்பம் உண்டாகிறதே, அதைத் தவிர வேறு என்ன வேணும் வாசகனுக்கு' என்று மெதுவாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னேன். சிரித்தார்.

பல சமயங்களில் ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளாமல் படிப்பதாலோ,அதன் பொருளை அறியாமல் இருப்பதாலோ, எத்தனை பெரிய இழப்புகளைச் சுமக்கிறோம் தெரியுமா?
"அன்னிக்கு நீங்க தாகூரை மேற்கோள் காட்டினீங்க. A mind all logic is like a knife all blade. It makes the hand bleed that uses it. அப்படின்னு. என்ன, நான் சொன்னது சரிதானே" ஆமோதிப்பில் தலை அசைத்தேன். "முழுக்க முழுக்க தர்க்கமே பார்த்துக் கொண்டிருந்தால் முடியாதுதான். பிடியில்லாத கத்தி, கையைக் காயப்படுத்தும்தான். ஆனா கத்தியில்லாத பிடிய வச்சிக்கிட்டு என்ன பண்றது? உணர்ச்சியின் வெளிப்பாடு கவிதைங்கறது சரிதான். ஆனா, உணர்ச்சி மட்டுமே போதுமா? கவிதை உணர்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனா அதுக்குள்ள புத்திக்கு வேலையே இல்லியா?" நிறுத்தினார். "பல சமயங்களில் ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளாமல் படிப்பதாலோ, புரியாத சொல்லை ஊகித்து, இன்ன பொருளாக இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு, அதன் பொருளை அறியாமல் இருப்பதாலோ, எவ்வளவு பெரிய உண்மைகளை இழக்கிறோம், எத்தனை பெரிய இழப்புகளைச் சுமக்கிறோம் தெரியுமா?" கொக்கி. கேள்விக்கு பதில் தேவையில்லை. இது ஒரு கொக்கி. அவரே பதில் சொல்வார். பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நீங்க இப்ப சொன்னீங்களே அந்த பாரதி பாட்ட ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவிச்சு சொன்னீங்க. சரி. ஒத்துக்கறேன். நீங்க நல்லா அனுபவிச்சுதான் படிச்சிருக்கீங்க. 'காண்டீவமேந்தி'அப்படின்னு ஒரு கண்ணி வருதில்லையா அதுக்கு அடுத்த கண்ணி என்ன, சொல்லுங்க?"

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்ததெவர் கொடைக் கை? - சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.


"ம். இந்த அடியை வௌங்கிகொண்டுதானே படிச்சீங்க?" தலை அசைத்தேன். கர்ணன் தன்னுடைய குண்டலங்களை எப்போது கொடுத்தான்? சாகும் சமயத்திலா? பாண்டவர்கள் வனவாசம் சென்ற பன்னிரண்டாம் ஆண்டு நடந்த விஷயமில்லையா அது? அதுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கழிச்சில்லையா போர் தொடங்குகிறது?

பளார் என்று அறை விழுந்ததைப்போல் உணர்ந்தேன். அதுவரையில் இந்தக் கோணத்தில் சிந்தித்ததில்லை. இப்படி இந்தப் பாடலை—இந்தப் பாடலையும் சரி, மற்ற படைப்புகளையும் சரி—அணுகியதில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றியிருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் வாயடைத்துப் போயிருந்தார்கள். "சரி. இன்னொரு இடம் சொல்றேன். அதுக்கு யாரானும் விளக்கம் சொல்றீங்களா பாப்போம்" என்று தொடர்நதார். பாரதியை ஆகாஓகோ என்று பாராட்டிக்கொண்டு, முழுநீளப் பாடலையும் மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டு, தன் மனப்பாட ஆற்றலை மனத்துக்குள் தானே ரசித்துக்கொண்டு அதிலேயே கிறங்கிப்போய்க்கிடந்த ஒவ்வொருவரும் அப்போதுதான் விழித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தோம்.

(தொடரும்)

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline