|
|
|
|
தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். திருப்பதிப் பெருமாளின் அருளால் பிறந்த குழந்தையைப் பெற்றோர்கள் போற்றி வளர்த்தனர். கும்பகோணம் மடத்தில் குரு சுதீந்திர தீர்த்தரிடம் கல்வி பயின்றார் ராகவேந்திரர். வேதாந்த பாடங்கள், வியாகரணம், தர்க்க சாஸ்திரம் யாவும் பயின்று மாபெரும் புலமை மிக்கவராய் விளங்கினார். சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சோழ நாட்டில் சுதீந்திரர் தனது சிஷ்யர்களுடன் மத்வப் பிரசாரம் செய்யப் புறப்பட்டார். உடன்சென்ற ஸ்ரீ ராகவேந்திரர் பூர்வ மீமாம்ஸ சாஸ்திரத்தில் வாதில் ஈடுபட்டு வென்றார். 'மஹா பாஷ்யாசார்யா' என விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
ஒருநாள் விடியற்காலை கனவில் ஸ்ரீ சரஸ்வதி தேவி தோன்றி, "இந்த வித்யா சமஸ்தானத்திற்கு உம்மைத் தவிர வேறு யாரும் தகுந்த கல்விமான் இல்லை. மூல ராமரை பூஜை செய்யத் துறவிகளே ஏற்றவர். நீர் பீடாதிபதியாக இருந்து மத்வ மார்க்கத்தைப் போதித்து விஷ்ணுவின் பெருமையை ஜனங்களிடையே எடுத்துரைக்க வேண்டும்" என ஆணையிட்டு செவியில் மந்திரங்களை ஓதி மறைந்து விட்டார். பின் குரு சுதீந்திரர் பிரணவ மந்திரம் உபதேசம் செய்து வேங்கடநாதருக்கு ஆசிரம தீட்சை அளித்து "ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்" என நாமகரணம் செய்து அருளி ஆசீர்வதித்தார். ஸ்ரீ ராகவேந்திரர் தனது ஆசிரம தர்மத்தை நிறைவேற்றிக் கொண்டே இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பல அற்புதங்களை நிகழ்த்தினார். மத்வ சம்பிரதாயத்தின் மகாகுரு ஆனார். அவர் அனுதினமும் பூஜை செய்து வந்த மூல ராமர் மகத்தான சக்தி மிக்கவராக விளங்கினார்.
| ஸ்ரீ ராகவேந்திரர் தனது ஆசிரம தர்மத்தை நிறைவேற்றிக் கொண்டே இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பல அற்புதங்களை நிகழ்த்தினார். மத்வ சம்பிரதாயத்தின் மகாகுரு ஆனார். | |
குருராஜர் ஸ்ரீ ராகவேந்திரர் மத்வாசாரியாரின் வழியைப் பின்பற்றிய எல்லா யதீந்திரர்க்ளுடைய ப்ருந்தாவனங்களையும் வணங்கிவிட்டு 'அதோனி' என்ற இடத்தை அடைந்தார். அவ்விடத்தை ஆட்சி செய்த நவாப் குருராஜரின் பெருமைகளை நன்கு கேள்விப்பட்டிருந்தும் அவரைப் பரிசோதிக்க எண்ணி, தட்டில் மாமிசம், கள் ஆகியவற்றை வைத்து மூடி எடுத்து வந்து அவர் முன் வைத்தார். முக்காலமும் உணரும் திறன் கொண்ட குருராஜர் நவாபின் செய்கையையும் அறிந்தார். மூல ராமரை வணங்கி அந்தத் தட்டின் மீது புனித நீரைத் தெளித்தார். பின் பக்தர்கள் திறந்து பார்த்தபோது அதிலிருந்தவை பூக்களாகவும், பழங்களாகவும் மாறிவிட்டிருந்தன.
தவறை உணர்ந்த நவாப் குருராஜரை வணங்கி, மன்னிப்புக் கோரி, தன் ராஜ்ஜியம் முழுமையும் குருராஜருக்கு காணிக்கையாக அளிக்க முன்வந்தார். குருராஜரோ அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஒரு கிராமத்தையாவது குருராஜர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நவாப் வேண்டிக் கொள்ள, திவான் வெங்கண்ணா மற்றும் பக்தர்களும் வேண்டிக் கொள்ளவே, ஸ்ரீ ராகவேந்திரர் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மாஞ்சாலி கிராமத்தைப் பெற்றுக் கொண்டார். திவான் வெங்கண்ணா அங்கே பிருந்தாவனம் எழுப்பினார்.
ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் ப்ரவேசம் நடந்து ஜீவசமாதி ஆகி 350 ஆண்டுகள் ஆகின்றன. ஸ்ரீ பிரகலாதர் அம்சமாகத் தோன்றிய அம்மகான், "700 ஆண்டுகள் அரூபமாக பிருந்தாவனத்தில் இருந்து வருவோரின் குறைகள் போக்கி நிறைவாழ்வு தருவேன். இது மூலராமரின் கட்டளை" என்று அருளியிருக்கிறார்.
ஸ்ரீ ராகவேந்திரரது அருளால் நோயின்மை, நல் வாழ்வு, குழந்தைப் பேறு, பொருள்வளம், திருமணம் என எல்லா நன்மைகளையும் மக்கள் அடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் மந்த்ராலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்ரீ குருராஜரின் மந்த்ராட்சதை, பிருந்தாவனத்தின் மிருத்திகை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பெருமைகளை விஜய தாசர், கோபால தாசர், ஜகன்னாத தாசர் ஆகியோர் போற்றிப் புகழ்ந்துள்ளனர். |
|
ஸ்ரீ ராகவேந்திரர் சன்னதிக்குச் சென்று வழிபடும் முன் பக்கத்தில் உள்ள மாஞ்சாலம்மன் சன்னதிக்குச் சென்று மல்லிகை மாலை சாற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள். பின்னரே குருராஜரின் பிருந்தாவனத்துக்குச் செல்கின்றனர். குரு ராஜரின் அருளைப் பெற்ற வாதீந்திர தீர்த்தரின் ப்ருந்தாவனமும் அருகேயே உள்ளது.
மந்தாரலயத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் பஞ்சமுகி க்ஷேத்ரம் உள்ளது. இந்த ஊரை 'காண தானம்' என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலைக்குகையில் குருராஜர் செய்த தவத்தை மெச்சிப் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி காட்சி தந்தார். இங்கிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் சன்னதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிக்குப் படியேறி மலைக்குகையில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகச் சாலை போடப்பட்டு வாகனங்கள் செல்ல வசதியாக உள்ளது.
| 40 நாள் நம்பிக்கையோடு பக்தியோடு ராகவேந்திரரை வேண்டிக் கொண்டு தரிசனம் செய்து வா. மேல்படிப்பும், கல்யாணமும் கூடி வரும் என்றார் அவர். | |
சில வருடங்களுக்கு முன் கலிபோர்னியாவில் இந்தியாவைச் சேர்ந்த மைதிலிபாய் தம்பதியருக்கு தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடலில் சிறிய கரும்புள்ளி உண்டாயிற்று. குழந்தை வளர வளர அது உடலெங்கும் பரவி மிகவும் கருப்பாகி விட்டது. பிரபல மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. மைதிலிபாயின் தந்தை சிறந்த குருராஜ பக்தர். அவருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர், குருநாதரின் படத்தின் முன் குழந்தையைக் கிடத்தி, மிருத்திகையை குழந்தைக்கு இட்டு, அந்த மிருத்திகை கலந்த நீரை குழந்தையின் உடலில் பூசி, பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பிரார்த்தனை செய்து வா என்று மைதிலி பாயிடம் கூறினார். அவர் அவ்வாறே செய்து வர , குழந்தைக்கு விரைவில் குணம் ஏற்பட்டு, முன்னை விடப் பொலிவான தோற்றம் பெற்று விளங்கியது. அமெரிக்க மருத்துவர்களை வியப்பிலாழ்த்திய செய்தி இது.
20 வருடங்களுக்கு முன் எனது மூத்த மகள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு மேல் படிப்புக்காக அமெரிக்காவில் அட்மிஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த சமயம். ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திர மடத்தில் பிரதட்சிணம் வந்து கொண்டிருந்த போது, திடீரென அருள்வாக்கு போல், 40 நாள் நம்பிக்கையோடு பக்தியோடு ராகவேந்திரரை வேண்டிக் கொண்டு தரிசனம் செய்து வா. மேல்படிப்பும், கல்யாணமும் கூடி வரும் என்று அங்கிருந்த பெரியவர் என் மகளிடம் சொன்னார். பெரியவரிடம் சொன்னபடி 40 நாள் முடிந்ததும் மறுநாளே அவள் எதிர்பார்த்த மேற்படிப்பு, முழு உதவித் தொகையுடன் அட்மிஷன், நல்ல வரன் கிடைத்து கல்யாணம் 30 நாள் அவகாசத்தில் நடந்தது என்பது வியப்பான உண்மை.
மந்த்ராலயத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அன்னதானக் கூடம் உள்ளது. சிறப்பு பூஜைகள் தினம்தோறும் நடந்து வருகிறது. ஸ்ரீ ராகவேந்திர தரிசனம், வாழ்வுக்கு விமோசனம்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே |
|
|
|
|
|
|
|