Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
வைத்தீஸ்வரன் கோவில்
- சீதா துரைராஜ்|ஜூன் 2010|
Share:
வைத்தீஸ்வரன் கோவில் சோழநாட்டில் நாகை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ளது. சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும் இது. காவிரியின் வடகரையில் உள்ள 63 தலங்களில் இது 16வது தலம்.

தலப்பெருமை
இறைவன் தீராத நோய் தீர்த்தருளும் பொருட்டு மந்திரமும், தந்திரமும் மருந்தும் ஆகி ஸ்ரீ வைத்தியநாதர் என்னும் திருப்பெயருடனும் சஞ்சீவியுடனும் வில்வ மரத்தடி மண்ணுடனும், கைலாயத்திலிருந்து அன்னை பாலாம்பிகை மற்றும் தைலாம்பிகை என்ற பெயரில் தைல பாத்திரத்துடனும் ஏந்தி வந்து அமர்ந்தருளிய தலம் இது. 'புள்ளிருக்கும் வேளூர்' என்பது இத்தலத்தின் திருநாமம். புள் (ஜடாயு) இருக்கு (ரிக் வேதம்) வேள் (முருகன்) ஊர் (சூரியன்) என்ற நால்வரும் பூஜித்தமையால் இப்பெயர் வழங்கப்படுகிறது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



மூர்த்தி
இறைவன் திருநாமம் வைத்தியநாதர், இறைவியின் திருநாமம் தையல்நாயகி. முருகப்பெருமான் திருநாமம் செல்வ முத்துக்குமாரசுவாமி. நவகிரகங்கள் இங்கே வரிசையாக அமைந்துள்ளன. கோள் வலியற்ற இடங்களில்தான் இவ்விதம் நவகோள்கள் ஒரே வரிசையில் அமையப்பெறும். இது அங்காரகத் தலம். அதனால் இங்கு அவருக்குப் பெருமை அதிகம். முருகன் சூரன் மார்பைப் பிளக்க வேல் வாங்கியது இத்தலம். எவ்வாறு துதிப்பேன் என மயங்கிய அருட்புலவர் குமரகுருபர அடிகளுக்கு 'பொன் பூத்த குடுமி' என அடி எடுத்துக்கொடுத்து பிள்ளைத்தமிழ் பாடும்படி அருள் செய்தவர் இங்குள்ள முருகப்பெருமான்.

தீர்த்தம்
இத்தலத்தில் பதினெட்டு தீர்த்தங்கள் உள்ளன. முதன்மையானது சித்தாம்ருத தீர்த்தம். 4480 வியாதிகளைத் தீர்க்க வல்லது இத் தீர்த்தம் என்பது ஐதீகம். கலியுகத்தில் சித்தர்கள் இறைவனை தேவாமிர்தத்தால் அபிஷேகம் செய்தபோது இந்தத் திருக்குளத்தில் அது கலந்தமையால் இப்பெயர் வழங்கப்படுகிறது. கிருதயுகத்தில் காமதேனு இறைவனை அபிஷேகிக்கும்போது பால் தீர்த்தத்தில் கலந்தால் கோக்ஷீர தீர்த்தம் என்றும், திரேதாயுகத்தில் பக்தருக்குக் கருப்பஞ்சாறு போல் இனித்ததால் இக்ஷுசார தீர்த்தம் என்றும் துவாபர யுகத்தில் சம்பாதி, ஜடாயு ஆகியோர் இத்தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதால் ஜடாயு தீர்த்தம் என்றும் பெயர்கள் உண்டு. பிரார்த்தனைக்கு முடி செலுத்த வருபவர்கள் கோதண்ட தீர்த்தத்தில் நீராடிப் பின்னர் சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவார்கள். இராமபிரான் சீதாப் பிராட்டியோடும் தம்பி இலக்குவனோடும் வனவாசம் செய்யும்போது இத்தலத்தை அடைந்து இதில் நீராடி, இராவணனால் சிறகு வெட்டப்பட்டு இறந்த ஜடாயுவுக்கும் தன் குல முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்தமையால் ராம தீர்த்தம் எனவும் பெயர் வழங்கப்படுகிறது. ஒரு சமயம் சதாகந்தர் என்னும் முனிவர் சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுகையில் பாம்புக்குப் பயந்த தவளை ஒன்று முனிவரது தியானத்தைக் கலைத்ததால் இத்தீர்த்தத்தில் அவர் சாபப்படி பாம்பு, தவளை ஏதும் இல்லை. பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீநடராஜப் பெருமான் இதில் தீர்த்தம் கொடுத்தருள்வார்.
கிருதயுகத்தில் காமதேனு இறைவனை அபிஷேகிக்கும்போது பால் தீர்த்தத்தில் கலந்தால் கோக்ஷீர தீர்த்தம் என்றும், திரேதாயுகத்தில் பக்தருக்குக் கருப்பஞ்சாறு போல் இனித்ததால் இக்ஷுசார தீர்த்தம் என்றும் துவாபர யுகத்தில் சம்பாதி, ஜடாயு ஆகியோர் இத்தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதால் ஜடாயு தீர்த்தம் என்றும் பெயர்கள் உண்டு.
ஆலயம் நகரின் நடுவே நாற்புறமும் மிக உயர்ந்த மதில் சுவர்களால் சூழப்பட்டு மிக அழகாய் விளங்குகிறது. கீழ்ப்புறம், மேல்புறம் முன் பக்கமும் ராஜகோபுரமும் பின்பக்கம் கட்டைக் கோபுரமும் விளங்குகின்றன. தென்புறம் சாதாரண வாயில் உள்ளது. ஆலயத்திற்குள் இரண்டு பெரிய பிராகாரம், திருமதிலில் வெளிப்புறம் மாடவளாகம் அமைந்துள்ளது. இறைவன், இறைவியை வலம் வருவதற்கு தனித்தனி பிராகாரங்கள் உள்ளன. மேலைக் கோபுர வாயிலின் வழியாக ஆலயத்தினுள் சென்றால் வெள்ளியாலும் தங்கத்தாலும் இரு துவஜஸ்தம்பங்கள் உள்ளன. ஆலயத்தின் கீழ்த்திசையில் வைரவர், மேற் திசையில் வீர பத்திரர், தெற்கே கற்பக விநாயகர், வடக்கே காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர். உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு மேற்புறம் ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்ளார். சிந்தனாமிர்த தீர்த்தத்தில் நாற்புறமும் அழகிய திருமாளிகை பத்தி மண்டபங்கள் அமைந்துள்ளன. வடக்கு பிராகாரத்தில் ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மையோடு அமர்ந்தருளியிருக்கிறார். தெற்குப் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சன்னதிகளும், சப்த கன்னிகை சன்னதிகளும் அமைந்துள்ளது. ஜடாயுவை தகனம் செய்த இடம் ஜடாயு குண்டம் உள்ளது. இராமர், விசுவாமித்திரர், வசிட்டர், ஜடாயு முதலியோர் திரு உருவங்கள் உள்ளன.

இங்கே தலவிருட்சம் வேம்பு. இத்தலம் கிருதாயுகத்தில் கதம்ப வனம் என்றும், திரேதாயுகத்தில் வில்வ வனம் என்றும், துவாபர யுகத்தில் வகுள வனம் என்றும் கலியுகத்தில் நிம்ப வனம் என்றும் பெயர் பெற்று விளங்குவதாகும். இப்போது வேம்பு தல விருட்சம். இதை வேம்படி மால் என்கின்றனர். இதனடியில் ஆதி வைத்யநாதர் எழுந்தருளியிருக்கின்றார். கோவிலில் பழைய பல்லவ சிற்பங்கள் நிறைந்த தூண்களும் திருவுருவங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கோவில் தருமபுர ஆதீன பரிபாலனத்திற்கு உட்பட்டது. ஆங்காங்கே காணப்படும் கல்வெட்டு எழுத்துக்களால் ஆலயம் குறிப்பாக, கி.பி. 1120 முதல் 1136 வரை ஆண்ட விக்கிரம சோழன் காலத்தவையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இத்தலத்தில் பக்தர்களுக்கு திருச்சாந்துருண்டை வழங்கப்படுகிறது. சித்தாம்ருதக் குளத்தின் தீர்த்தமும் அங்க சந்தான தீர்த்தத்தின் மண்ணும் பஞ்சாட்சர ஜபத்துடன் முறையாக கலக்கப்பட்டு முத்துக்குமாரர் திருமுன் உருண்டைகளாகச் செய்யப்பட்டு தேவி தையல் நாயகியின் திருவடியில் வைத்த பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் இங்கு மாவிளக்கு ஏற்றுவதும் முடி இறக்குவதும், அடி பிரதிஷணம் செய்வதும், உப்பு, மிளகு போடுவதும், குளத்தில் வெல்லம் கரைப்பதும் தினம் தினம் காணும் காட்சிகள். பரம்பரை பரம்பரையாக நாடிஜோதிடம் பார்ப்பவர்களும் இங்கே உள்ளனர். மானிடர்க்கு எல்லாம் மருத்துவம் செய்து நோயற்ற வாழ்வு வாழ வைக்கும் மகேசனையும், மகேஸ்வரியையும் மனதில் நினைத்துப் போற்றி வணங்குவோம்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே
Share: 




© Copyright 2020 Tamilonline