|
தன்னம்பிக்கையும், தளராத உறுதியும் இருந்தால் உடற்குறைபாடு ஒரு தடையல்ல |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2008| |
|
|
|
|
தன்னம்பிக்கையும், தளராத உறுதியும் இருந்தால் உடற்குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வரும் ஜனார்த்தனனுக்கு வயது பதினாறு. ஜனார்த்தனன் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோது, மொட்டை மாடியில் சென்ற உயர் மின்னழுத்தக் கேபிளை விளையாட்டாகத் தொட்டுவிட்டான். அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்துச் சிதறியது. உயரழுத்த மின்சாரம் ஜனார்த்தனனைத் தூக்கி எறிந்தது.
விபத்தில் ஜனார்த்தனின் வலது கை முற்றிலும் கரிக்கட்டையானது. இடது காலிலும் பெரும்பாதிப்பு. வலது கால் பாதம் எரிந்து போய்விட்டது. உடலெங்கிலும் பலவித காயங்கள். மருத்துவர்களின் தீவிர முயற்சியால் உயிர் பிழைத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை. ஏழ்மை நிலையில் இருக்கும் ஜனார்த்தனின் தந்தை வேறு வழியின்றிச் சம்மதிக்க, வலதுகரம் தோள்பட்டையிலிருந்தும், இடதுகரம் முழங்கை வரையிலும், இடதுகால் முழங்கால் வரையிலும் அகற்றப்பட்டது. எரிந்துபோன வலது பாதம் அகற்றப்பட்டது. முற்றிலும் உருக்குலைந்த நிலையில் சிறுவனின் எதிர்காலமே சூன்யமானது. கல்வி தடைப்பட்டது.
| 'கைகள் போனால் என்ன, அழுது கொண்டிருக்காமல் வாயால் எழுதிப் பழகு. தொடர்ந்து படி. உன்னால் முடியும். உன் திறமை எதுவோ அதை வெளிக் கொண்டுவா'என்று உற்சாகமூட்டிய டாக்டரின் வார்த்தைகள், ஜனார்த்தனின் மனத்தில் நம்பிக்கை ஊட்ட, அதையே தனது தாரகமந்திரமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தான். | |
மருத்துவக்குழுத் தலைவர் டாக்டர் சீனி ராஜ் சிறுவன் ஜனார்த்தனனை உற்சாகப்படுத்தியதுடன், வாழ்வதற்கான நம்பிக்கையையும் ஊட்டினார். 'கைகள் போனால் என்ன, அழுது கொண்டிருக்காமல் வாயால் எழுதிப் பழகு. தொடர்ந்து படி. உன்னால் முடியும். உன் திறமை எதுவோ அதை வெளிக் கொண்டுவா' என்று உற்சாகமூட்டிய டாக்டரின் வார்த்தைகள், ஜனார்த்தனின் மனத்தில் நம்பிக்கை ஊட்ட, அதையே தனது தாரகமந்திரமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தான்.
ஜனார்த்தனனுக்கு உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மையத்தில் செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. அதனால் நடக்கவும் வாயினால் எழுதவும் பழக ஆரம்பித்தான். வாயினால் எழுத முயல்கையில் வாயின் மிருதுவான பகுதிகள் கிழிந்தன. தாடைகள் மரத்துப் போயின. சொல்ல முடியாத வேதனை ஏற்பட்டது. ஆனாலும் ஜனார்த்தனனுக்குள் சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் இருந்தது. அது அனைத்துத் துன்பங்களையும் மறக்கச் செய்ததுடன், விடாமல் போராடவும் உறுதுணையாக இருந்தது.
இன்று ஜனார்த்தனன் சைக்கிள் ஒட்டுகிறான். கேரம் போர்டு விளையாடுகிறான். சதுரங்கம் விளையாடுகிறான். கீ போர்டு வாசிக்கிறான். கம்ப்யூட்டர் இயக்குகிறான். அது மட்டுமா, மிக அழகாக வாயினால் ஓவியங்களும் வரைகிறான். அகில இந்திய அளவில் தேசிய சிறுவர் நிலையம் (National Bal Bhavan) நடத்திய ஓவியப் போட்டியில் 'Bal Sree' விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து பெற்றிருக்கிறான். சிறந்த படைப்புத்திறனுக்கான குழந்தைகள் விருதையும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருக்கிறான். முக்தி நிறுவனம், ரஷ்ய கலாசார மையம், ஹெல்ப் ஏஜ், ரோட்டரி கிளப் போன்ற பல நிறுவனங்கள் நடத்திய ஓவியப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறான். இந்தியாவில் 18 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளில் வாயினால் ஓவியம் வரையும் ஒரே சிறுவன் ஜனார்த்தனன் தான். |
|
பத்தாம் வகுப்புத் தேர்வை வாயினாலேயே எழுதிய ஜனார்த்தனன், உடல்திறன் பாதிப்புக்காக தனக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தையும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'என்னுடைய இந்த நிலையினால் என் தந்தையின் 'பிரிண்டிங் பிரஸ்' தொழில் நின்று விட்டது. லட்சக்கணக்கில் ஆன செலவுகளையும் பார்க்காமல், என் பெற்றோர்களின் விடாமுயற்சியால்தான் இன்று இந்த அளவு தேறியிருக்கிறேன்' என்று கூறும் ஜனார்த்தனன், 'எனது எதிர்கால லட்சியம் சிறந்த கிராபிக் டிசைனராக வருவதுதான்' என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறான்.
விடாமுயற்சியும், தளராத தன்னம்பிக்கையும் இருந்தால் உடற்குறைபாடு இருந்தாலும் உச்சங்களைத் தொடமுடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஜனார்த்தனனின் வாழ்க்கை, 'பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை யின்மை பழி' என்ற திருக்குறளுக்கு விளக்கமாக இருக்கிறது.
தொடர்புக்கு: positivejana@gmail.com படங்கள் உதவி: www.azhagi.com/all/jana/
அரவிந்த் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|