Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
டாக்டர் பிரபாகரன்
- காந்தி சுந்தர்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeமுனைவர் இரா. பிரபாகரன் மேரிலாந்திலுள்ள பெல்-ஏரில் வசிக்கிறார். கணினித்துறை நிறுவனம் ஒன்றில் இயக்குநர். தமிழுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும் தொடர்ந்து பல தொண்டுகள் செய்து வருகிறார்.

பிரபாகரன் தமிழ்நாட்டிலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது தந்தை ‘சிவயோகி' இரத்தின சபாபதிப் பிள்ளை திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், விநாயகர் அகவல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். தாயார் திருமதி கமலம். பிரபாகரனுக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். தந்தையின் வேலை நிமித்தமாக இவர்கள் குடும்பம் சிறிது காலம் ஆந்திராவில் வசித்தது. ஆந்திராவில் தமிழ்க் கல்வி இல்லாததால் தந்தையாரே இவர்களுக்கு வீட்டில் தமிழ் கற்றுக் கொடுத்தார்.

கணிதத்தில் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் பிரபாகரன். சிலகாலம் கிண்டி பொறியியல் கல்லூரியிலும், திருச்சி வட்டாரப் பொறியியல் கல்லூரியிலும் (REC) விரிவுரையாளராகப் பணியாற்றிய பின், 1968ல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். இங்கே கணினி சார்ந்த கணிதத் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.

தனது நண்பர்களுடன் ‘தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, மாதம் இருமுறை கொலம்பியா நகரத்திலுள்ள ‘ஹோவர்டு கவுன்டி' நூலகத்தின் ஓர் அறையில் திருக்குறளை ஆய்வு செய்தார்.
தமிழ்மீது கொண்ட பற்று காரணமாக கிளீவ்லாந்த் பாரதி கலாசாரச் சங்கத்தின் தலைவர் பொறுப்பை வகித்தார். அது 1977 காலகட்டத்தில். அப்போது அமெரிக்காவில் பல தமிழ்ச் சங்கங்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதை முக்கியச் செயல்பாடாகக் கொண்டிருந்தன. சங்க உறுப்பினர்களே ஆளுக்கு ஒர் உணவைத் தயார் செய்து கொண்டு வந்து, தாமே பரிமாறவும் நேர்ந்த அனுபவங்களை நினைவு கூர்கிறார் பிரபாகரன்.

பணி நிமித்தம் வாஷிங்டன் நகரத்திற்குக் குடிபெயர்ந்த பிரபாகரன், 2003ஆம் ஆண்டு திருக்குறள் ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வுச் சங்கத் தலைவர், பேரா. முருகரத்தினம் அவர்களின் உரையைக் கேட்டார். திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் நன்கு வல்லவரான பிரபாகரனுக்கு, பேராசிரியரின் உரையைக் கேட்டதும், திருக்குறளை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. தனது நண்பர்களுடன் ‘தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, மாதம் இருமுறை கொலம்பியா நகரத்திலுள்ள ‘ஹோவர்டு கவுன்டி' நூலகத்தின் ஓர் அறையில் திருக்குறளை ஆய்வு செய்தார்.

மின்னஞ்சல் மூலம் அவ்வாரத்திற்கான குறள்களையும் அருஞ்சொற் பொருளையும் முன்கூட்டியே அனுப்பிவிடுவார். அதிகாரச் சுருக்கத்தை ஆராய்ந்து, நண்பர்களின் கருத்துக்களைக் கேட்டு, மாறுபட்ட கருத்துக்களையும் வரவேற்று, பிறகு பொதுவான கருத்து ஒன்றினை முடிவு செய்வராம் இக்குழு அன்பர்கள். மூன்றுமணி நேரம் நடக்கும் இக்கூட்டம், நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடந்து, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் வெற்றிகரமாக ஆய்வு செய்து முடித்தது. மேலும் திருக்குறள் கருத்தரங்கமும் நடத்தியிருக்கிறார் பிரபாகரன்.

முத்தாய்ப்பாக, 2005ஆம் ஆண்டு வாஷிங்டனில் ‘பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு' ஒன்றைக் கூட்டி, பல நாடுகளிலிருந்தும் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்துச் சிறப்பாக மாநாட்டை நடத்தினார். ஓராண்டுக்கு முன்னரே திருக்குறளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்று அறிவிப்பு விடுத்தார். 300 கட்டுரைகள் வந்து சேர, தமிழ் மற்றும் திருக்குறளுக்கு அருந்தொண்டாற்றிவரும் பேராசிரியர்கள் முருகரத்தினம், அகத்தியலிங்கம், சண்முகம், மருதநாயகம், சுந்தர மூர்த்தி ஆகியவர்களை நடுவர்களாக அமைத்து, 100 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசைத் தட்டிச் சென்றவர் தமிழ்நாட்டைச் சார்ந்த இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள்.
Click Here Enlargeஅந்நாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்து, இம்மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். கலாம் அவர்களால் நேரில் வர இயலாததால், அவரது வீடியோ உரையை அம்மாநாட்டில் திரையிட்டனர்.

பிரபாகரன் தொடங்கிய திருக்குறள் ஆய்வை முன்னுதாரணமாகக் கொண்டு ஹூஸ்டனில் குழந்தைகளுக்குத் திருக்குறள் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. திருக்குறள் ஆய்வுக்குப் பின் ‘புறநானூறு' ஆய்வினைத் தொடங்கியுள்ளனர் பிரபாகரன் மற்றும் நண்பர்கள். சென்னையிலுள்ள திருக்குறள் பேரவை, இம்மாநாட்டை நடத்தியதற்காக பிரபாகரனைச் சிறப்பித்துள்ளது. 2007ஆம் ஆண்டு வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இவரது சேவையைப் பாராட்டி விருதளித்துள்ளனர். தற்போது அமெரிக்காவிலுள்ள பல தமிழ்ச் சங்கங்களுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று, திருக்குறள் பற்றிச் சிறப்புரையாற்றி வருகிறார் பிரபாகரன்.

இவ்வரிய இலக்கியங்களைப் படித்து, புரிந்துகொண்டு, நம் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே என் ஆசை
பிரபாகரன் தமிழ்நாடு அறக்கட்டளையில் (TNF) ஏழு ஆண்டுக் காலம் பல பதவிகள் வகித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது குழந்தைகளுக்கு FeTNAவில் தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதிலும், பாடத் திட்டங்களைச் சீரமைப்பதிலும் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியளிப்பதிலும் கவனத்தைச் செலுத்தி வரும் பிரபாகரன், இதைப்பற்றி சுவையான செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்கக் கல்வி முறைப்படி, குழந்தைகள் ஒரு புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்க் கல்வியைச் சீரமைத்தால், கவுன்டி தொகுதியிலேயே இதைப்பற்றி விளக்கி, விதிவிலக்குப் பெற்று, வேறு மொழியைப் பயில்வதற்குப் பதில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். கலிபோர்னியாவில் இதைச் சாதித்துள்ளனராம், ஒரு குறிப்பிட்ட தமிழ்ப் பள்ளிக்கூட நிறுவனத்தினர். (கலிபோர்னியா தமிழ் அகடமி இதனைச் சாதித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தென்றல் ஏப்ரல், 2008 இதழில் வெளிவந்துள்ள திருமதி வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் அவர்களின் நேர்காணலில் காணலாம்.)

FeTNAவின் வருடாந்திர கொண்டாட்டங்களில் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் ஒரு பக்கமிருக்க, தமிழ் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் புதிய அம்சங்களை இணைத்து வருகிறார் பிரபாகரன். 2007ஆம் ஆண்டில் ‘பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு' என்ற தலைப்பில் குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு போன்ற இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி ஆறு பேச்சாளர்கள் உரையாற்றியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ‘இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை, நாடக வளர்ச்சி' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. 2009ல் அட்லாண்டாவில் நடக்க இருக்கும் மாநாட்டிலும் இதுபோன்ற உரைகள் தொடருமாம்.

'தென்றல்' பத்திரிகையை தொடர்ந்து வாசித்து வரும் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்தது ‘நிகழ்வுகள்' பகுதி. பிரபாகரனின் துணைவியார் திருமதி கீதா பிரபாகரன் கணவரின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக இருப்பதோடு திருக்குறள், புறநானூறு ஆய்வுக் கூட்டங்களிலும் தவறாது கலந்து கொள்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இவர் பரதநாட்டியம் பயிற்றுவித்து வருகிறார். இவர்களுக்கு அருண், அனிதா என்ற செல்வங்கள் உள்ளனர்.

"நம் இலக்கியங்களில் என்ன இல்லை! 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியம் இருந்தது என்றால், அந்த இலக்கண நூலுக்கு முன்னோடியாக மொழியும் இலக்கியமும் இருந்திருக்க வேண்டுமே. இவ்வரிய இலக்கியங்களைப் படித்து, புரிந்துகொண்டு, நம் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே என் ஆசை" என்கிறார் பிரபாகரன்.

அவரது ஆசை நிறைவேற வாழ்த்துகிறது 'தென்றல்'.

காந்தி சுந்தர்
Share: 
© Copyright 2020 Tamilonline