Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
பி. வெங்கட்ராமன்
- அரவிந்த்|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeசென்னையில் நடக்கும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களிலும் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் அனைவருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டும் இருக்கும் 74 வயது இளைஞர் ஒருவரைப் பார்க்கலாம். அவர்தான் பி. வெங்கட்ராமன். இவர் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

அக்டோபர் 14, 1935 அன்று புதுக்கோட்டையில் பிறந்த வெங்கட்ராமன் பள்ளி, கல்லூரி வாழ்க்கையைப் புதுக்கோட்டையில் கழித்தார். தந்தையார் பரசுராமன் புதுகையின் புகழ்பெற்ற கண்ணபிரான் அச்சகத்தின் உரிமையாளர். அக்காலத்தில் பிரபலமாக இருந்த பல சிறுவர் நூல்கள் இந்த அச்சகத்திலிருந்துதான் வெளிவந்தன. குறிப்பாக ‘டிங்டாங்'. இதன் பிரசுரகர்த்தர் பரசுராமன். ஆசிரியர், அப்போது மாணவராக இருந்த வெங்கட்ராமன்.

பத்திரிகை அலுவலகம் மற்றும் அச்சகம் என்பதால் எழுத்தாளர்களின் வருகைக்குக் குறைவே இருக்காது. அகிலன், அழ. வள்ளியப்பா, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, பி. நீலகண்டன் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் அடிக்கடி அங்கு வருவர். பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர். அங்கே வெங்கட்ராமன் இருப்பார். அந்தக் கலைஞர்களுடனான உறவு, இவருக்குச் சிறுவயதிலேயே விசாலமான பார்வையும், எழுத்தார்வமும் வளர்வதற்குக் காரணமானது. குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் அன்புக்குச் சிறுவயதிலேயே பாத்திரமான வெங்கட்ராமன், அவரையே தனது எழுத்துலகிற்கு முன்மாதிரியாகக் கொண்டார். பல கவிதை, கட்டுரைகளைப் படைத்தார். ‘வடமலையழகன்' என்ற புனைபெயரில் இவர் உருவாக்கிய படைப்புகள் முக்கியமானவை. தினமணி போன்ற பிரபல நாளிதழின் பகுதிநேர நிருபராகவும் பணியாற்றினார். இவர் படைத்த குழந்தைகளுக்கான ‘சாலைவிதிப் பாடல்கள்' மிக முக்கியமானதாகும். ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் இவரது நகைச்சுவைக் கட்டுரைகள், படைப்புகள் வெளியாகியுள்ளன.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவுக்கு தபால்தலை வெளியிடுதல், அவரது உருவச் சிலை அமைத்தல், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கல் போன்றவற்றில் இவரது பங்கு மிக முக்கியமானது.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் பிரபல டி.வி.எஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார் வெங்கட்ராமன். பின் கொச்சி நகரத்துக்குப் பணி மாறுதல் ஆனது. டி.வி.எஸ். வெளியிட்ட ஹார்மனி என்ற தனிச்சுற்று இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறந்த ஆசிரியப் பணிக்காக விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவர் கொச்சியில் பணியாற்றிய காலத்தில் தமிழகத்திலிருந்து நேரடிப் போக்குவரத்து வசதி அப்பகுதிக்கு இல்லாமலிருந்தது. அப்போது கொச்சிக்கு வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுபற்றி எடுத்துச் சொல்லி, போக்குவரத்துக்கு வழி வகுத்தவர்களுள் முக்கியமானவர் வெங்கட்ராமன். அதுமட்டுமல்ல தற்போது புகழ்பெற்ற எழுத்தாளர்களாக விளங்கும் கொச்சியைச் சேர்ந்த கே.ஜி. ஜவஹர், என்.சி.மோகன்தாஸ், பிஸ்மி பரிணாமன் ஆகியோரை ஊக்குவித்திருக்கிறார் இவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகு குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வெங்கட்ராமன், குழந்தைக் கவியுலகம் என்ற அமைப்பை நிறுவினார். அதன் மூலம் குழந்தை இலக்கிய வளர்ச்சியையும், அழ.வள்ளியப்பாவின் பெருமையைப் பரப்புதலையும் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவுக்கு தபால்தலை வெளியிடுதல், அவரது உருவச் சிலை அமைத்தல், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கல் போன்றவற்றில் இவரது பங்கு மிக முக்கியமானது. தனது சிறுவர் இலக்கியப் பணிக்காக குழந்தை இலக்கியச் செல்வர், சிறுவர் இலக்கிய வித்தகர், ரோட்டரி கிளப், பாலம் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் வெங்கட்ராமன்.

“அப்போதெல்லாம் இப்போது போல மின்னஞ்சல், இணையம் போன்ற வசதிகள் கிடையாது. இருந்தாலும் புதுக்கோட்டையில் இரவு நடக்கும் நிகழ்ச்சி மறுநாள் காலை தினமணியில் புகைப்படத்தோடு வெளி வந்திருக்கும்” என்கிறார் பி. வெங்க்டராமன். “குழந்தைக் கவிஞர் பெயரில் ஆண்டுதோறும் குழந்தை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்” என்பதே இவரது முக்கிய வேண்டுகோள்.

‘தென்றல்' இதழின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்ட பி. வெங்கட்ராமன், பாலா பாலசந்திரன், நல்லி குப்புசாமிச் செட்டியார். தொலைக்காட்சி மேனாள் இயக்குநர் நடராஜன், இலக்கியவீதி இனியவன் எனப் பலரை நேர்காண உதவியிருக்கிறார். ஐந்தாவது தமிழ் இணைய மாநாட்டில் பங்கு கொண்டுள்ளார். யார் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் தேடிப் போய் உதவும் குணம் கொண்ட வெங்கட்ராமன், எதிரொலி விசுவநாதன், லக்ஷ்மி நரசிம்மன், பூரம் சத்தியமூர்த்தி, டாக்டர் பூவண்ணன், எஸ்.பி. பாலு, ஆர். ரங்கராஜன், சொ. அடைக்கலம் எனப் பல எழுத்தாளர்களுக்குப் பின்னணியில் நின்று ஊக்கம் தந்து வருகிறார்.

மனைவியுடன் சென்னையில் வசிக்கும் பி. வெங்கட்ராமனின் மகன் கலிபோர்னியாவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். மகள்களில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர்.

“வயதான காலத்தில் ஏன் இப்படி கைக்காசைச் செலவழித்துக் கொண்டு இலக்கியம், பத்திரிகை என்று அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “15 வயசுலேர்ந்து இலக்கியமே வாழ்க்கையாயிடுச்சு. இதை விட்டுட்டு சும்மா வீட்ல உட்கார்ந்து செவத்தையோ, டி.வி.யையோ, ஒய்ஃபயோ பாத்துக்கிட்டே இருந்தா வாழ்க்கை போரடிச்சிடாதா?” என்கிறார். எப்போதும் தேனீபோலப் பிறர் நலம் கருதிச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வயதான காலத்திலும் இளமையோடு இருக்கலாம் என்பதற்கு பி. வெங்கட்ராமன் ஓர் உதாரணம்.
Click Here Enlargeஅரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline