|
வித்யா சந்திரசேகர் |
|
- மதுரபாரதி|பிப்ரவரி 2004| |
|
|
|
பரதநாட்டியத்தின் மூலம் கின்னஸ் தனிநபர் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்க முடியுமா? "முடியும்" என்கிறார் டெட்ராய்ட்டின் (மிஷிகன்) வித்யா சந்திரசேகர். 1989ஆம் ஆண்டில் 48 மணி நேரமும் பின்னர் 1996ல் 72 மணி நேரமும் தொடர்ந்து ஆடி இந்தச் சாதனை யைச் செய்துள்ளார். 'லிம்கா அனைத்துலக இந்தியர்கள்' சாதனைப் பட்டியலிலும் இவர் பெயர் நிச்சயம் உண்டு. இது போதாதென்று 120 மணி நேரம் ஆடுவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்.
இந்தியக் கலாச்சாரம் அதிகம் பரிச்சய மில்லாத காலத்திலேயே அதை மேலை நாடுகளுக்கு Hindu Temple Rhythms என்ற அமைப்பின் மூலம் கொண்டு சென்ற மும்பை வைத்தீஸ்வரன் - ஜெயா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் வித்யா. சொல்லப்போனால் இன்னும் ஒரு படி மேலே சென்று, அமெரிக்க நடனம் இசை வகைகளுடன் இந்தியக் கலைகளைக் கலந்தும் பல நிகழ்ச்சிகளை அளித்திருக் கிறார். வித்யாஞ்சலி என்ற அமைப்பின் மூலம் இவற்றைச் செய்கிறார். இவருடைய தாய் சுதா கதக் மேதை கோபி கிருஷ்ணனுடன் அறுபதுகளில் பரதம் - கதக் இரண்டும் சேர்ந்த கதம்ப நிகழ்ச்சியை அமெரிக்கா முழுவதும் அளித்தார்.
இளவயதிலேயே வித்யா இந்தியக் கலைஞர்களான பாலசரஸ்வதி, ஜான் ஹிக்கின்ஸ், எம்.எல்.வி, ஸ்ரீவித்யா, கமலா லக்ஷ்மண், பத்மினி ராமச்சந்திரன் ஆகியோரை அருகிலேயே இருந்து கவனிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவும் இவரது திறனையையும் கற்பனையையும் வளப்படுத்தியது.
"ஒரு நாட்டியப் போட்டிக்காக நானும் என் தோழிகளும் ஓர் இரவு பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். பயிற்சி நடந்துகொண்டே இருக்கும் போது திடீரென்று முதல் பறவையின் சத்தம் கேட்கவும் தான் எங்களுக்குக் காலை ஆனது புரிந்தது. அப்போதுதான் 48 நேரம் தொடர்ந்து நடனமாடினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது" என்கிறார் வித்யா. அதன் வெற்றி தொடர்ந்து 72 மணிநேரச் சாதனைக்கும் அடிகோலியது. "சாதனை என்பது சகமனிதர்களுக்குப் பயன்படுவது மிக அவசியம்" என்கிறார் வித்யா. இந்தச் சாதனைகளின் மூலம் திரட்டிய நிதி 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷ'னின் குழந்தைகள் இதய அறுவைசிகிச்சைக்குப் போனது. "மூன்று வயதுக் கெல்லியின் தந்தை என்னிடம் 'உங்கள் மகத்தான முயற்சியால் என் மகள் இன்று உயிரோடிருக்கிறாள்' என்று சொன்னதை நான் விலைமதிப்பற்றதாகக் கருதுகிறேன்" என்கிறார் வித்யா. |
|
இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் வெகுநீளமானது. சிறுவயதிலேயே 'நிருத்ய மீரா' (உலகச் சமயங்கள் பேரவை), மிஷிகன் மாநில அழகி (1984), அமெரிக்க இந்திய அழகி (1986) ஆகியவை இவரது அழகுக்குக் கட்டியம் கூறுவன. பல அமெரிக்க இசைக் குழுக்களோடு மட்டுமின்றி ஹரிஹரன், உஸ்தாத் ஜாகீர் ஹ¤சேன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து மேடையில் பாடியதும் உண்டு. மூளைவளர்ச்சி குன்றிய சிறார்பற்றியும் இன்னும் பல கலை, சமுதாயப் பிரச்னைகள் பற்றியும் PBS, ABC, ABU, UPN போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செய்திப் படங்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். இவற்றிற்காகவும் விருதுகள் பெற்றிருக்கிறார். இப்படி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
1980ஆம் ஆண்டில் மகான் ஸ்ரீஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களின் ஆராதனை விழாவில் ஆடியதையே தன் அரங்கேற்ற மாகக் கருதும் இவர், தன்னைத் "தொழில் முறை (professional) நர்த்தகி என்பதைவிட தெய்வீகக் காரணங்களுக்காக நாட்டியம் ஆடுபவர்" என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறார். அதே நேரம் "நாட்டிய நிகழ்ச்சிகளில் நாம் எப்படி ஆடி ஒரு தனி நபரையோ, மகானையோ அல்லது கடவுளையோ புகழ்ந்து பாடுகிறோம் என்பதை விட அது எவ்விதத்தில் மக்களுக்கு பயனுடையதாக உள்ளது என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாகும்" என்று சொல்வது ஆன்மீகத்தின் ஆன்மா மனித நேயம்தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கலையின் உந்துவிசையும் அதுதானே.
தகவல்: ரமேஷ் அர்விந்த் கட்டுரை: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|