|
|
|
|
"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை வலிமையான தேசமாக்கி விடலாம்" என்று கனவு கண்டார் விவேகானந்தர். "தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே கடவுள் சேவை" என்றும் அவர் சொன்னார். அப்படிப்பட்ட பல இளைஞர்கள் மக்கள் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை இங்கே சந்திக்கலாம்....
மகி என்ற மகேந்திரன்
கோவை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மகி என்ற மகேந்திரன். இவர் சாலையில் சுற்றித் திரியும் மனநலம் குன்றியோர், ஆதரவற்ற முதியோர், தன்னுணர்வற்ற மனநோயாளிகள் என யாரைப் பார்த்தாலும் அவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறார். இப்பணியைத் தனது வாழ்நாள் லட்சியமாகவே கொண்டுள்ளார். மகியால் பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
ஒருமுறை மகேந்திரனின் சகோதரிக்கு பொது இடத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது. மக்கள் பலரும் விலகிப் போக, ஓரிருவர் மட்டுமே வந்து உதவியிருக்கின்றனர். பலர் வேடிக்கைமட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலே ஆதரவற்றோருக்குத் தன்னால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனதில் உண்டாக்கியது. பிறரால் அணுகக் கூட முடியாத அளவுக்கு முகம் சுளிக்கக் கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவது, உடலைத் தூய்மை செய்வது, நல்ல உடை அணியச் செய்வது, உணவளிப்பது, அதற்குப் பின் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பது என்று இவற்றை மிக்க அன்போடு செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்களுடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறார்.
நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலாவை, மகேந்திரன் ஒரு வருடகால பெரும் முயற்சிக்குப் பின் அவளுடைய பெற்றோர்களைக் கண்டறிந்து அவர்களோடு இணைத்து வைத்திருக்கிறார். அசோகன், சண்முகம் எனப் பலர் மகேந்திரனின் பெருமுயற்சியால் இழந்த தங்கள் சொந்தங்களை அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் கூட மகியின் உதவியால் தங்கள் சொந்த பந்தங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சேவை பற்றிய ஒளித்தொகுப்பைக் காண:
தனது கருத்துக்களை eerammagi.blogspot.com என்ற வலைப்பதிவில் பகிர்ந்து வருகிறார் மகி. அங்கே காணப்படும் வீடியோக்கள் மனதை நெகிழ்த்துவனவாக இருக்கின்றன. நாமும் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குவதும் உண்மை. மகேந்திரனின் சேவை தொடர வாழ்த்துக்கள். |
|
|
கோபி என்கிற கோவிந்த கிருஷ்ணன்
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்த கிருஷ்ணன். பிறவியிலேயே பார்வை இழந்தவர். கோபிக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சாதாரணப் பள்ளியிலேயே கோபியைப் படிக்க வைத்தனர் அவரது பெற்றோர். பார்வைக் குறைபாட்டின் காரணமாக பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நான்குமுறை பள்ளி மாறிவிட்டார் கோபி. பிற மாணவர்கள் போலவே உதவியாளர் எவருமின்றி இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதியதால் தோல்வியுற்றார். பின்னர் அரசுக்கு விண்ணப்பித்துச் சான்றிதழ் வாங்கி உதவியாளர் உதவியுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பின் கல்லூரியில சேர்ந்தார். அங்கும் பல பிரச்சனைகள். பிற மாணவர்கள் உதவியின்றி படிக்க இயலாத நிலை. பிறரது உதவியின்றி நூலகம் அல்லது வெளியிடங்களுக்குச் செல்ல இயலாத நிலை. ஒருவாறாகப் பட்டப் படிப்பை முடித்தார் கோபி.
ஒரு ப்ராஜெக்டுக்காக ரயிலில் பிச்சை எடுப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 119 நபர்களில் 82 பேர் படித்தவர்கள் என்பது தெரிய வந்தது. சரியான வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் இப்படித் திசை மாற வாய்ப்பில்லையே என்று நினைத்தார். அவர்களின் அவல நிலை அவரது சிந்தனையைத் தூண்டியது. பார்வையற்றவர்களுகென்று தனிக் கல்லூரிகள் கிடையாது. மற்ற மாணவர்கள் புரிந்து கொள்ளும் வேகத்திலேயே ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் புரிந்து கொள்வதும் கடினம். பிறர் உதவியின்றி எதுவும் செய்ய இயலாத நிலை. பார்வையற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கோபிக்குள் தோற்றுவித்தது. நாம்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். நமக்குப் பின் வருபவர்களாவது கஷ்டப்படாமல் இருக்க நாம் வழிகாட்டுவோம் என்ற எண்ணத்தில் ‘நேத்ரோதயா’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
2002ம் ஆண்டு காந்தி ஜயந்தி அன்று தோன்றிய நேத்ரோதயா, தொடக்க காலத்தில் வாடகை வீடுகளிலேயே இயங்கியது. 2008ல் அரசு ஏழு கிரவுண்ட் நிலம் ஒதுக்கியது. தன்னார்வலர்களும் நண்பர்களும் உதவிக்கு வர நேத்ரோதயாவுக்கென்று சொந்தக் கட்டடம் உருவானது. தற்போது விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். அவர்களுக்கு உணவு, படிக்க உதவி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்கி வருகிறார் கோபி. இங்கு தங்கிப் படித்த பலர் ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனராம். இவற்றோடு 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை இலவச ஒலி நூல்களாக வழங்கி வருவதுடன், பார்வையற்றோருக்கான இலவச சட்ட ஆலோசனை மையம், 24 மணிநேர மருத்துவ உதவி, ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா, சிறப்புத் தமிழ், இசை, கணினிப் பயிற்சி எனப் பலவும் இங்கே உண்டு. பார்வையற்றவர்களுக்கான தனி நூலகமும், பிரவுசிங் சென்டரும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ‘வாய்ப்புக்கள்’ கையேட்டையும் தயாரித்திருக்கிறார் கோபி.
கடந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சமூகப் பணியாளர் விருதைப் பெற்றிருக்கும் கோபி, "பார்வையற்ற மாணவர்களின் கல்வி சிறக்கும் வகையில் அரசு பிரெய்லி வகை நூல்களை இலவசமாக வழங்கினால் அது பேருதவியாக இருக்கும்" என்கிறார்.
உதவ விரும்புவோர் பார்க்க வேண்டிய இணைய தளம்: www.nethrodaya.org
அரவிந்த் |
|
|
|
|
|
|
|