|
|
|
|
'டீ-ஷர்ட் கேர்ள்ஸ்'னு சொன்னா ரஞ்சனியும் ஸ்ரீவித்யாவும்தான். இருவருமே பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்றாலும் சந்தித்துக்கொண்டது சிலிக்கான் வேல்லியில், ஜூன் 2010ல்தான். சந்தித்ததுமே இருவருக்கும் இடையில் பயங்கர கெமிஸ்ட்ரி. ஒன்றாக ஊர் சுற்றி ஒரே பிளேட்டில் 'ஆலூ சாட்' சாப்பிடுமளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில்தான் 'டீ-ஷர்ட்' பற்றி அவர்களுடைய பேச்சு திரும்பியது.
ரஞ்சனிக்கு எப்போதுமே ஒரு குறை. சென்னைக்குப் போனால்கூட இதே 'ஐ லவ் சான் ஃபிரான்சிஸ்கோ' டீ ஷர்ட்களைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த அமெரிக்காவில் பச்சைத் தமிழனுக்கு ஒரு மண் வாசனையோடு கூடிய துணிமணி இல்லையே என்பதுதான் அது. சுற்றினார், சுற்றினார் சென்னையின் கடைகளெல்லாம் சுற்றினார். பீச்சுக்குப் போய் மிளகாய் பஜ்ஜிகளை மொக்கினார். எங்குமே அவர் எதிர்பார்த்த துணிமணி கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட தேசபக்தியோடு ரஞ்சனி யோசித்த போதுதான் நம்ம ஃபில்டர் காப்பி, வெங்காயம் என்று ஐடியாக்கள் அவர் மனத்தில் ஊறத் தொடங்கின. வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தார். அப்படியே ஃபில்டர் காப்பி பொங்கி வந்தது, அதாவது ஃபில்டர் காப்பி டிசைன்.
இப்போ மறுபடியும் இருவரின் முதல் சந்திப்புக்கு வருவோம். இந்த டிசைனைப் பற்றி ரஞ்சனி சொன்னவுடனே வித்யாவுக்கு உற்சாகம் பீறிட்டது. 'யூ ஆர் புட்டிங் வோர்ட் இன் மை மௌத்ஸ்' என்று 'மைக்கேல் மதன காம ராஜன்' கமல் மாதிரி சொல்லாதுதான் குறை. இருவரும் சேர்ந்தால் இந்திய வாசனையை அமெரிக்காவில் வீச வைக்கலாம் என்பது புரிந்துவிட்டது. அப்படிப் பிறந்ததுதான் 'SimplyCity'.
“இளசுகளுக்கான ஜாலி ஆடைதான் சிம்ப்ளிசிடி. ஆனா, அது நம்ம வேர்கள் பற்றிய உங்க நினைவை அலாக்கா வேற லெவலுக்குத் தூக்கிட்டுப் போயிடும். ஸ்க்ரீன் பிரிண்ட் செய்த கவர்ச்சியான டிசைன்கள் கொண்ட இந்த ஆடைகள் சவுகரியமா இருக்கும், பார்க்க சுகமா இருக்கும்; அதே நேரத்தில அது உங்க ஊர்ப் புகழைப்பத்தி மௌனமா ஒரு 'பேட்டை ராப்' பாடிடும். உதாரணமா, சச்சினோட கவர் டிரைவ், டபரா டம்பளர்ல ஆவி பறக்கும் காப்பின்னு யோசிச்சுப் பாருங்க, டிபிகலி இண்டியன்!” என்று ரஞ்சனி சொல்லும் போது நமக்கு மறுக்க வழியே இல்லை.
நெட்டிலேயிருந்து இறக்கிச் சொந்தப் படைப்பாக மார்தட்டிக் கொள்கிறவர்கள் மிகுந்த இந்த இணையக் கலிகாலத்தில் 'சிம்ப்ளிசிடி'யின் ஆடைகள் தேர்ந்தெடுத்த துணிகளில் இவர்களே வடிவமைத்த டிசைன்களைத் தாங்கி வருவன. “எடுத்து மாட்டினதுமே ஜெட்ல கொண்டுபோய் ஊர்ல உட்டுடும்” என்கிறார் வித்யா. |
|
|
வித்யா அப்படித்தான் பேசுவார். மார்க்கெடிங் வித்தகராயிற்றே. ஆமாம், டிசைன் ரஞ்சனியின் கைவண்ணம் என்றால் மார்க்கெடிங்கைப் பார்த்துக்கொள்வது வித்யாதான். சரியான வெற்றிக் கூட்டணி. “ஸ்க்ரீன் பிர்ண்ட் பண்றதுனால டிசைன் லேசுல துணியைவிட்டுப் போகாது. கலரெல்லாம் பளிச்னு இருக்கும். அதுவுமில்லாம, ஆணோ பெண்ணோ யார் வேணும்னாலும் போட்டுக்கிற யூனிசெக்ஸ் டிசைன். pre-shrunk செய்த மிக மென்மையான பஞ்சுத் துணிங்கிறதனால, மெஷின் வாஷ் பண்ணலாம், ஷேப் மாறாது,” புகழ் பாடிக்கொண்டே போகிறார் ஸ்ரீவித்யா. இப்போதே ஒன்று வாங்கி மாட்டிக் கொள்ளாவிட்டால் பெரிய தவறோ என்று நமக்கு அச்சம் ஏற்படுகிறது.
ஆனால், அதுதான் இளமையின் உற்சாகம். திறனுள்ள இருவரின் ஆற்றல் இணைந்து தாய்நாட்டிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டவர்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு தேவையை நிறைவு செய்யும் மகிழ்ச்சி ஊற்று.
ஜனவரி 26, 2011, இந்திய குடியரசு தினத்தன்று SimplyCity தொடங்கப்பட்டது. இருவரின் ரத்தத்தோடு கலந்திருக்கும் சென்னையின் அடையாளங்கள்தாம் இதுவரை இவர்களது படைப்புகளில் இடம்பெற்றுள்ளன. “இனிமேற்கொண்டு, இந்தியாவின் பரந்து விரிந்த அடையாளங்கள் முகிழ்த்து வரும்” என்கிறார் ரஞ்சனி.
நீங்களும் தூக்கம் வராத ஐடியாத் திலகமாக இருக்கலாம். கற்பனையின் கனத்தால் தலை தூக்க முடியாமல் தவிப்பவராக இருக்கலாம். அல்லது சிம்ப்ளிசிடியின் தயாரிப்புகளை உங்கள் பகுதியில் விற்கத் துடிப்பவராக இருக்கலாம். கவலையை விடுங்கள்! ஒரு குரல் கொடுங்கள்.
தொடர்புக்கான வழிகள்:
இணையதளம்: www.wearsimplycity.com வலைக்கடை: www.wearsimplycity.com Facebook: www.facebook.com Twitter: www.twitter.com மின்னஞ்சல்: info@wearsimplycity.com
மதுரபாரதி |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|