|
சரித்திரம் படைத்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்! |
|
- மதுரபாரதி|நவம்பர் 2020| |
|
|
|
|
உலக நாடுகளிடையே தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்காவை அதன் முதல் குடிமகனே இதைவிடக் கேவலப்படுத்தியிருக்க முடியாதென்னும் பரிதாப நிலையில், வான் பொழிந்த வரம்போல நாடளாவிய ஆதரவோடு தேர்வு பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரையும் மனமார வாழ்த்தி வரவேற்கிறது தென்றல்.
அதிலும் பல கண்ணாடிக் கூரைகளை உடைத்திருக்கிறார் கமலா ஹாரிஸ். "துணையதிபர் பதவிக்கு வரும் முதல் பெண்மணியாக நான் இருக்கலாம், ஆனால் கடைசிப் பெண்மணியல்ல" என்று அவர் டெலவரில் பேசியபோது கூறியது அருமை.
ஒற்றுமை, இணக்கம், வளர்ச்சி, ரணத்தை ஆற்றுதல், கோவிடைச் சரியாகக் கையாளுதல் என்று பைடனும் ஹாரிஸும் ஒருமித்த குரலில் நேர்மறையான கருத்துகளை முழங்கியது நம்பிக்கை தருகிறது. ஆமாம், செய்யவும், செய்யப்பட்டதைத் திருத்தி அமைக்கவும் நிறையவே இருக்கிறது.
முன்னெப்போதும் காணாத வகையில் சிவப்பு மாகாணங்களும் நீல மாகாணங்களும் சேர்ந்து, ஐக்கிய மாகாணங்களாக இந்தப் பேராதரவைக் கொடுத்தது தேசத்தின் தாகத்தை, ஆதங்கத்தை, மாற்றத்துக்கான ஏக்கத்தைக் காண்பிக்கிறது.
"19 வயதில் என் தாயார் சியாமளா ஹாரிஸ் இங்கே கால் வைத்தபோது இப்படி ஒரு நாளைக் கற்பனை செய்திருக்க மாட்டார். இதுதான் அமெரிக்கா ஒரு சாத்தியங்களின் நாடு என்பதைக் காண்பிக்கிறது" என்று கமலா ஹாரிஸ் கூறியது மிகவுண்மை. இது நம்பிக்கையின், சாத்தியங்களின் தேசமாகவே இருக்கிறதென்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.
2004ம் ஆண்டிலேயே தென்றல் தாயார் டாக்டர் சியாமளா ஹாரிஸை நேர்காணல் செய்தது.
2010ம் ஆண்டு கலிஃபோர்னியா மாநிலத்தின் அட்டார்னி ஜெனரல் பதவிக்குப் போட்டியிட்டபோது தென்றல் கமலா ஹாரிஸைப் பேட்டி கண்டது.
2019 ஃபிப்ரவரியில் இவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப்போவதை விவரித்த தென்றல் இவ்வாறு கூறியது: "தாய் வழியில் இந்தியப் பாரம்பரியமும், தந்தை வழியில் ஆப்பிரிக்கப் பாரம்பரியமும் கொண்ட கமலா ஹாரிஸ், 2003ம் ஆண்டு மேற்சொன்ன வம்சாவளிகளில் வந்த முதல் பெண் மாவட்ட அட்டார்னியாக சான் ஃபிரான்சிஸ்கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 2010ல் கலிஃபோர்னியா மாநில அட்டார்னியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 2017ல் அமெரிக்க செனட்டர் ஆன போதிலும் அமெரிக்க அளவில் இந்தப் பின்னணி கொண்ட முதல் பெண்மணி என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டார். எந்தப் பதவியை எடுத்துக்கொண்டாலும் அதைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டு பொதுநலனுக்கு உழைப்பது இவரது தனித்தன்மை."
இந்தக் கட்டுரையின் முத்தாய்ப்பு இப்படி இருந்தது: "2010 அக்டோபர் தென்றல் இதழுக்காக இவரை நேர்காணல் செய்த திருமதி அனு நடராஜன், "ஒரு வார்த்தை. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்பதாக ஒரு பேச்சு உள்ளது" என்று கூறினார். அந்தக் கேள்விக்கு நல்லதொரு விடை நமக்கு 2020ல் கிடைக்கப் போகிறது."
விடை கிடைத்துவிட்டது. இது வாழ்த்துகிற நேரம், கொண்டாடுகிற நேரம். வாருங்கள் அதை நாம் சேர்ந்து செய்யலாம். |
|
மதுரபாரதி |
|
|
|
|
|
|
|