|
எழுத்தாளர் ஆர்.வி. |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2008| |
|
|
|
|
மூத்த தலைமுறை எழுத்தாளரும், 'கண்ணன்' குழந்தைகள் பத்திரிகை ஆசிரியருமான ஆர்.வி. என்றழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன் ஆகஸ்ட் 29, 2008 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. ஆர்.வி. தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1918 டிசம்பர் 6ம் தேதி பிறந்தார்.
ஆர்.வி. சிறு வயதிலேயே எழுத்தாளராகப் பரிணமிக்கத் தொடங்கினார்.
1941-ல் தனிநபர் சத்தியாகிரத்தில் பங்குகொண்டு கைதாகி, பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார். இவரும், எழுத்தாளர் தி. ஜானகிராமனும் சிறுபருவ நண்பர்கள். ஆர்.வி.யின் முதல் நாவல் 1942-ல் சுதேசமித்திரனில் பிரசுரமாகியது. தொடர்ந்து கல்கி, கலைமகள் எனப் பல பத்திரிகைகளில் அவரது எழுத்துக்கள் பிரசுரமாகின. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக ஆர்.வி. எழுதிய பல கதைகள் மிகுந்த பாராட்டுதலைப் பெற்றன.
முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'கலைமகள்' பத்திரிகைக் குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு, இருபத்திரண்டு ஆண்டுகள் கலைமகள் வெளியீடான 'கண்ணன்' சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார். அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஒரே நேரத்தில் நாலைந்து பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய ஒரே எழுத்தாளர் ஆர்.வி. தான். 'கண்ணன்' சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. இன்றைக்குப் பிரபலமாக விளங்கும் பல எழுத்தாளர்களை அவர் அன்று ஊக்குவித்தார். கண்ணன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது பல இளைஞர்களை எழுத்தாளராக ஊக்குவித்து, அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் அங்கீகாரமும் கிடைக்கச் செய்தார். சிறுவர் இலக்கிய வரலாற்றில் சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலமாக ஆர்.வி. அவர்கள் பத்திரிகையாசிரியராக இருந்த காலம் விளங்கியது என்றால் அது மிகையில்லை. |
|
கல்கியில் தொடராக வந்த 'தேன்கூடு', 'காணிக்கை', சுதேசமித்திரனில் தொடராக வந்த 'திரைக்குப்பின்', 'அணையாவிளக்கு','மேம்பாலம்', 'முகராசி', 'சொப்பனவாழ்க்கை', 'பனிமதிப்பாவை', 'மனிதநிழல்கள்', 'சந்தனப்பேழை', 'யெளவனமயக்கம்', 'வெளிவேஷங்கள்', 'அலை ஓய்ந்தது', காவிரிப்பூம்பட்டினம் தொடர்பாக எழுதிய 'இருளில் ஒரு தாரகை', பல்லவ, பிற்காலச் சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற 'ஆதித்தன் காதலி' ஆகிய நாவல்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக அவர் எழுதிய சிறுவர் நூல்களான 'அசட்டுப்பிச்சு', 'சைனா சுசூ!', 'ஐக்கு', 'ஐக்கு துப்பறிகிறான்', 'சந்திரகிரிக்கோட்டை', 'காளிக் கோட்டை இரகசியம்', 'புதிய முகம்', 'ஜம்பு', 'காலக்கப்பல்', 'ஒருநாள் போதுமா?', 'லீடர் மணி' ஆகிய நாவல்கள் காலத்தால் அழியாதவை. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள், பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்திருக்கிறார் ஆர்.வி.
1946-ல் கல்கியைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் செயலாளராக ஆர்.வி. திகழ்ந்தார். 1960-ல் தி. ஜானகிராமன், கி.ரா., ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க.சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கொண்டு தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கினார். இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாகச் செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய்ப் பல காலம் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு என்று பலவற்றைப் பெற்றிருக்கும் ஆர்.வி. அவர்களுக்குத் தென்றல் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|