ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா
|
|
புலவர் புலமைப்பித்தன் |
|
- |அக்டோபர் 2021| |
|
|
|
|
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ராமசாமி. இளவயதிலேயே கவிதையார்வம் முகிழ்த்துவிட்டது. முதல் கவிதை திருக்குறள் முனுசாமி நடத்திய 'குறள்மலர்' இதழில் வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதினார். குடும்பச் சூழலால் மாலை நேரங்களில் பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்தவாறே பகலில் பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். படிப்பை முடித்ததும் ஆசிரியர் பணி கிடைத்தது. சிறந்த பேச்சாளரான புலமைப்பித்தன் தமிழ்நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றினார்.
இவரது சொற்பொழிவு ஒன்றால் கவரபட்ட இயக்குநர் கே. சங்கர் இவருக்கு திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை அளித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த 'குடியிருந்தகோயில்' படத்தில் 'நான் யார் நான் யார் நீ யார்' என்ற பாடலை எழுதித் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நினைத்ததை முடிப்பவன், நான் ஏன் பிறந்தேன், பல்லாண்டு வாழ்க என எம்.ஜி.ஆரின் பல படங்களுக்குப் பாடல்களை எழுதி அவரது மனங்கவர்ந்த பாடலாசிரியர்களுள் ஒருவரானார்.
எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். அவருக்கு மிக நெருக்கமானவராகவும் விளங்கினார்.
எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மம்முட்டி எனப் பல நடிகர்களுக்கும் இலக்கியச் செறிவுள்ள இனிய பாடல்களை எழுதியுள்ளார். 'வேதம் நீ இனிய நாதம் நீ', 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ', 'பாடி அழைத்தேன் உன்னை இதோ' 'நீ ஒரு காதல் சங்கீதம்', 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', 'மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ', 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு', 'சந்தத்தில் பாடாத கவிதை', 'மழை வருது மழை வருது குடை கொண்டு வா', 'கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா' என்று இவரது சிறப்பான பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். |
|
தமிழக அரசு சட்ட மேலவை துணைத்தலைவராகவும், தமிழக அரசவைக் கவிஞராகவும் பணிபுரிந்த சிறப்பை உடையவர். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை நான்கு முறை பெற்றவர். மிகச்சிறந்த பண்பாளர். புலமைப்பித்தனுக்கு தமிழரசி என்ற மனைவியும், புகழேந்தி என்ற மகனும், கண்ணகி என்ற மகளும் உள்ளனர். |
|
|
More
ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா
|
|
|
|
|
|
|