Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கீரனூர் ஜாகிர் ராஜா
- அரவிந்த்|மே 2011|
Share:
தமிழ் புத்திலக்கிய வரலாற்றில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்', 'கரிசல் இலக்கியம்', 'வட்டார இலக்கியம்', 'தலித் இலக்கியம்', 'பின் நவீனத்துவ இலக்கியம்' என பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. இவற்றுள் 'இஸ்லாமிய இலக்கியம்' என்ற வகைமையில் ஜுனைதா பேகம், மு.மு. இஸ்மாயில், அப்துல்கபூர், ஜே.எம்.சாலி, நாகூர் ரூமி, சல்மா எனப் பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைத் தந்துள்ளனர். இவர்களுள் தனித்தன்மை கொண்டவராகவும், தேர்ந்த தனது கதை சொல்லும் உத்தி மற்றும் ஆளுமைகளால் முக்கியமானவராகவும் விளங்குகிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

பழனியை அடுத்த கீரனூரில் ஜாகிர் பிறந்தார். நிலவுடமைக் குடும்பம். தந்தை ஒரு இலக்கிய ஆர்வலராக இருந்ததாலும், வீட்டுக்கு வெகு அருகிலேயே நூலகம் இருந்ததாலும் சிறு வயதிலேயே புனைவுலகு இவருக்கு அறிமுகமானது. பள்ளியும், ஆசிரியர்களும் அதை மேலெடுத்துச் செல்ல உதவினர். கல்வி முடிந்ததும் வேலை தேடித் தஞ்சை செல்ல, அங்கே இலக்கிய வட்டத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. 1995ல் எழுதத் தொடங்கினார். 'சுந்தரசுகன்' இதழில் எழுத ஆரம்பித்தார். கவிதைகளையும், சிறுகதைகளையுமே முதலில் எழுதினார். சிற்றிதழ்களில் அவை வெளியாகின. உடன் எழுதிக் கொண்டிருந்த வா.மு.கோமு, ஷாராஜ் போன்ற இலக்கிய அன்பர்களின் நட்பு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. அப்போது தஞ்சை பெரியகோவில் புல்வெளியில் 'தளி' இலக்கியச் சந்திப்புகளை எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஜாகிர் தவறாமல் கலந்து கொள்வார். தமிழ் இலக்கிய ஜாம்பவான்களின் படைப்புகள் மட்டுமல்லாது, பஷீர், தகழி என மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளும், டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, காம்யு, காஃப்கா, மார்க்வேஸ், மாக்யவல்லி எனப் பிற நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் அறிமுகமாகின. அந்தச் சந்திப்புகளில் விளைந்த தாக்கங்களும், வாசிப்பு அனுபவங்களும் அவரது எழுத்துக்கு உந்துசக்தியாகின. பல்வேறு பயணங்களும், அவற்றில் கிடைத்த அனுபவங்களும், ஜாகிரது சிந்தனையை மேலும் வளர்த்தன. படைப்பார்வம் தீவிரமடைந்தது. ஊக்கத்துடன் எழுத ஆரம்பித்தார்.

கணையாழி இதழில் இவருடைய சில சிறுகதைகள் வெளியாகிப் பரவலான கவனம் பெற்றன. குறிப்பாக 'இரட்டை மஸ்தான் அருகில்' என்ற கதை பலராலும் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகத் துவங்கின. பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'செம்பருத்தி பூத்த வீடு' என்ற தலைப்பில் கவிஞர் வியாகுலனின் அனன்யா பதிப்பகம் மூலம் வெளியானது. அது ஜாகிர் ராஜாவை இலக்கிய உலகில் பலருக்கும் அடையாளம் காட்டியது. தொடர்ந்து 2005ல் 'பெருநகரக் குறிப்புகள்' சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அடுத்து வெளியான 'மீன்காரத் தெரு' நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அழுத்தமாகக் காலூன்றினார் ஜாகிர். இலக்கிய உலகில் பரபரப்பையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது அந்நாவல். மீன்காரத் தெருவில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் அவல வாழ்க்கையைப் பற்றிக் கூறும் அந்நாவலில், இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்பட்ட வாழ்க்கை நிதர்சனங்களைத் துளியளவும் சமரசமில்லாமல் ஜாகிர் பதிவு செய்திருந்தார். இஸ்லாத்திலும் தலித்துகள் உண்டு என்பதைத் தனது படைப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தியதால் அதற்காகப் பல்வேறு எதிர்ப்புக்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்க நேர்ந்தாலும், சளைக்காமல் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரே சமூகமாக இருந்தாலும் அதிலும் தொழில், நிறம், பேச்சு போன்ற வேறுபாடுகளால் ஒரு தரப்பினர் மறுதரப்பினரை ஒதுக்கி வைத்ததே தனது இந்த புதினத்துக்குக் காரணம் என்று கூறிய ஜாகிர், தொடர்ந்து அதே தளத்தில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார்.

அடுத்து வெளியான இவரது 'கருத்த லெப்பை'யும் இலக்கிய உலகில் பல்வேறு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும் கொண்ட சமூகத்தில், முற்போக்குச் சிந்தனை கொண்டவனாக, ராவுத்தர்களின் ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் உடையவனாக, தாழ்வுற்ற லெப்பை சமூகத்தில் பிறந்தவனான கருத்த லெப்பை என்பவனது வாழ்க்கையும் மரணமுமே அந்த நாவல். கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் இக்கதை, அதன் வழியாகப் பல்வேறு சித்திரங்களை உருவாக்கி வாசகர்முன் வைக்கிறது. அவை எழுப்பும் கேள்விகள்தான் நாவலின் மைய இழை. கருத்த லெப்பை கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் விவாத்திற்குரியவை. மிக முக்கியமானவை. அடுத்து வெளியான துருக்கித் தொப்பி நாவல் இவரது ஆளுமையைப் பறை சாற்றியது. அதன் முன்னுரையில் நாஞ்சில்நாடன் "இதுவரை இஸ்லாமிய சமூகத்தைப் பற்றித் தமிழில் எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் பின்தள்ளிச் சீறிப்பாயும் சுதந்திர வேட்கை கொண்ட எழுத்து இது" என்று குறிப்பிடுகிறார்.
இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகின்றன ஜாகிர் ராஜாவின் படைப்புகள். இவரது படைப்புக் குறித்து விமர்சனப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன், "சந்தோஷப்படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகிர் ராஜாவினது. மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகிர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. இனி ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்கிறார்.

தன் படைப்புகள் குறித்து ஜாகிர், "பிற சமூகங்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் போலவே இஸ்லாம் சமுதாயத்திலும் உண்டு. அத்தகைய விளிம்புநிலை மாந்தர்கள் தமிழகம் முழுவதுமே விரவி இருக்கின்றனர். ஆனால் மத அபிமானிகளும், அடிப்படைவாதிகளும் இதை மூடி மறைக்கின்றனர்" என்கிறார். மேலும் அவர், "கதைகளையோ, புதினத்தையோ அனுபவத்தின் சாரமின்றி மொழியின் வலிமையாலோ புனைவின் திறத்தாலோ தூக்கி நிறுத்த முடியாது. எப்படைப்பும் அது ரத்தமும் சதையுமான வாழ்வின் பதிவாக மனித அவலத்தை உன்னதத்தை வாசகனுக்குப் பரிமாற வேண்டுமென்பதில் தளராத நம்பிக்கை எனக்கு உண்டு" என்கிறார். "என் கதை மாந்தர்கள் ரத்தமும் சதையுமான வாழ்வின் வார்ப்புகள். அநேக பாத்திரங்கள் இன்றளவும் உலவித் திரிகின்றனர். சிலர் இறந்து விட்டனர்" என்று கூறும் ஜாகிர், "என் படைப்புகளில் நான் எதையும் வலிந்து கூற விரும்புவதில்லை. நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன். பிரசாரவாதியாக அல்ல" என்கிறார். மேலும் "மொழி ஆளுமை மட்டுமே ஒரு படைப்புக்குப் பிரதானமாகிவிட முடியாது. எளிய மொழியில் சொல்லப்பட்டாலும் மக்கள் வாழ்வை அவதானித்து கலைப்படுத்தி இருக்க வேண்டும். அதுவே சிறந்த படைப்பு" என்றும் கூறுகிறார்.

'வடக்கே முறி அலிமா' என்னும் ஜாகிரின் நாவல் முக்கியமான ஒன்று. ஒரு இஸ்லாமியப் பெண்ணின் வாழ்க்கையை அந்தப் பெண்ணின் குரலிலேயே பேசுகிறது. அப்பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை 'அலிமா' என்னும் பாத்திரத்தைக் கொண்டு கலைத்துப் போடுகிறார் ஜாகிர், பல்வேறு பகடிகளுடன். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'மீன்குகை வாசிகள்' நாவலும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஜாகிரின் பல சிறுகதைகள் மலையாளத்திலும், 'கருத்த லெப்பை' கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதுடன், எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாவல், சிறுகதை மட்டுமல்லாது கட்டுரை, விமர்சனம் என்றும் பன்முக அடையாளத்துடன் இயங்கி வரும் ஜாகிர் தற்போது 'பித்னா பஜார்' என்கிற நாவலை எழுதி வருகிறார். சிறந்த நாவலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருதைத் தொடர்ந்து இருமுறை பெற்றுள்ளார். அத்துடன் ஏலாதி இலக்கிய விருது, திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மனைவி ராஜி. குழந்தைகள் ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதி.

தனது படைப்புகளின் மூலம் எளிய ஆனால் செழுமையான மொழியில் இஸ்லாமிய உலகின்மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் ஜாகிர்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline