Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 17)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2011|
Share:
பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். சென்ற பகுதிகளில் முதல் மூன்று CL துறைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி விவரித்து விட்டு, இறுதியான சுத்த நுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். சென்ற பகுதியில், சுத்த நுட்பத்தின் உபதுறைகளைப் பற்றி
மேல்நோக்கத்துடன், அதன் முதல் ஒரு உபதுறையான மாசற்ற சக்தி உற்பத்தி துறையின் பல நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது மற்ற சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றித் தொடர்ந்து காணலாம்...

*****


மாசு குறைப்பதற்கு சக்தி உற்பத்தி சம்பந்தப்பட்ட நுட்பங்கள்தானா, இல்லை வேறு மாதிரி நுட்பங்களும் உள்ளனவா?

வேறு மாதிரி நுட்பங்களைக் கொண்ட உபதுறைகளும் உள்ளன.

சுத்த நுட்பங்களை ஐந்து உபதுறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று முன் பகுதிகளில் கண்டோம்:

  • கரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள்: உதாரணமாக, சூரிய மின்சக்தி, மின்சாரக் கார் போன்றத் தொழில்நுட்பங்கள். (non-carobonic energy generation)
  • பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விடச் சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள் (cleaner burning fuels) - பயோடீஸல், எத்தனால் போன்றவை.
  • எரிபொருட்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரே அளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிக அளவில் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization).
  • வெளிவிடும் மாசுப் பொருட்களான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)
  • சுத்த சக்தித் தகவல் நுட்பத் துறை (clean energy information technology)


இவற்றில் முதலாவது கரியமில வாயுவற்ற சக்தி உற்பத்தி உபதுறையைப் பற்றியும் அடுத்து, பெட்ரோலியத்தைவிடச் சுத்தமாக எரியக்கூடிய பொருட்களையும் பற்றியும். குறைவாக மாசு வெளிவிடும் எரிபொருட்களைப் பற்றி முற்பகுதிகளில் விவரித்தாயிற்று. இப்போது சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் உபதுறையைப் பற்றிக் காண்போம்.

குறைந்த சக்தி பயன்படுத்தி அதில் அதிக உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of utilization):

இது விளக்காமலேயே புரியும் என நம்புகிறேன். இருந்தாலும் சில உதாரணங்களைக் காண்போம்.

கார்கள், விமானங்கள் போன்றவற்றுக்கு பலத்தைக் குறைக்காமல் ஆனால் அதே பலத்துக்குத் தேவைப்படும் எடையைக் குறைத்து, அதன் பலனாக எரிபொருள் தேவையைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் கார்பன் இழை (carbon fiber), ஸெராமிக் கலப்புப் பொருட்கள் (composites) போன்றவற்றை இரும்பு எஃகு பயன்படும் வேண்டிய இடங்களில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இப்பொருட்கள் எஃகைவிடப் பலமடங்கு எடை குறைந்தவை. ஆனால் அதே பலம் உள்ளவை. டைடேனியம் போன்ற இன்னும் பல லேசான, பலம் மிக்க பொருட்களும் வந்துள்ளன. இத்தகைய நுட்பங்களை ஆராய்ந்து புதிய பலமிக்க பொருட்களைப் பயனுக்குக் கொண்டுவரும் வாய்ப்பு உள்ளது.

கணினித் துறையில் தகவல் மையங்களில் (data center), பணிப் பொறிகளின் (servers) மின் தேவையைக் குறைப்பது ஓர் உபதுறை. Intel, AMD, IBM போன்ற நிறுவனங்கள் இதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. அது மட்டுமல்ல-பல்லாயிரக் கணக்கான கணிப்பொறிகளை வைத்து பெரிய தகவல் மையங்களைப் பயன் படுத்திச் சேவைகளை அளிக்கும் கூகிள் (Google) போன்ற நிறுவனங்கள் எவ்வாறு தகவல் மையத்தின் சக்தித் தேவையைக் கணிசமாகக் குறைப்பது என்பதில் மிக அதிகக் கவனம் செலுத்தி பல முன்னேறங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். சேவைக் கணிப் பொறிகளில் எவ்வாறு குறைந்த சக்தி பயன்படுத்துவது என்பது மட்டுமல்லாமல், எவ்வாறு குறைந்த வெப்பத்தை வெளிவிடுவது, குறைந்த குளிர்பதனத்தில் எவ்வாறு வெப்பத்தை வெளியேற்றுவது என்று பல விதங்களில் சக்தித் தேவையைக் குறைக்கிறார்கள். மேலும் தகவல் மையங்களைக் குளிர்பிரதேசங்களில் நடத்தினால் குளிர்பதனத்துக்குத் தேவையான சக்தி குறைகிறது என்று தங்கள் தகவல் மையங்களையே அத்தகைய இடங்களில் வைத்து நடத்துகிறார்கள். அத்தகைய மையங்கள் தொலை தூரத்தில் இருப்பதால் அவற்றை நடத்துவதற்கான மேலாண்மை மென்பொருள் மற்றும் சாதன நுட்பங்களையும் மேம்படுத்த ஆர்வமாக உள்ளனர்.
வீடுகளில் பழைய கனலொளி (incandescent) மின்விளக்குகளுக்குப் பதிலாக, குறைந்த மின்சக்தியில் முன்னளவே அதிக ஒளிதரும் தன்னொளிர் (flourescent) மின்விளக்குகளைப் பயன்படுத்துவது இன்னொரு நுட்பத் துறை. இதில் பல புதிய நுட்பங்கள் வர ஆரம்பித்துள்ளன.

முதலில் சிறு தன்னொளிர் விளக்குகள் (compact flourescent lamp CFL) வந்தன. சமீப காலமாகத் ஒளிவிடும் டையோடு (Light Emitting Diode-LED) என்னும் நுட்பத்தைப் பயன்படுத்தும் விளக்குகள் வர ஆரம்பித்துள்ளன. இவை CFL விளக்குகளைவிட இன்னும் சக்தித் தேவையைக் குறைத்து, இன்னும் அதிக காலத்துக்குப் பயனளிப்பதாக உள்ளன. இத்தகைய நுட்பங்களை தொலைக்காட்சித் திரைகளிலும் பயன்படுத்தி மின்சக்தித் தேவையைக் குறைக்க ஆரம்பித்துள்ளனர். இத்துறையில் நல்ல வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.

இதுபோன்று பல்வேறு துறைகளிலும் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தி அதிகம் பலனடையும் உதாரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். இத்துடன் இப்போது நிறுத்திக் கொண்டு அடுத்த உபதுறைக்குப் போவோமா?

மாசைச் சுத்தமாக்குவது அல்லது அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration):

இதுவரை சுத்தமான சக்தி அல்லது மாசு குறைந்த எரிபொருட்கள், மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது அதன் எதிர்த் திசையைப் பற்றிக் காண்போம். அதாவது, அவ்வளவு குறைத்தாலும், தொடர்ந்து வெளியாகும் மாசை எப்படிப் பிடித்து அடைத்து, பசுமையகம் மீண்டும் அழுக்காகாமல் தடுப்பது என்பதுதான் குறிக்கோள்.

இதற்கு முதல் உதாரணம், வண்டிகளில் இப்போது பயன்படுத்தப் படும் காடலிடிக் கன்வெர்ட்டர்கள். முன் காலத்தில் வண்டிகள் தங்கள் அழுக்குப் புகையை நேரடியாக வெளியிட்டுக் கொண்டிருந்தன. வண்டிகள் மிகக் குறைவாக இருந்தபோது அதன் தீமை அவ்வளவாகப் புலப்படவில்லை. பல மில்லியன் கணக்கில் வண்டிகள் ஓடி, காற்றே பழுப்பானதும்தான் அதன் வண்டவாளம் தண்டவாளத்தின் மேல் ஏறிவிட்டது! அதனால், புகையை வெளிவிடுமுன் அதிலுள்ள மாசைப் பெரிதும் குறைக்கும் காடலிடிக் கன்வெர்ட்டர்களைப் புகைக்குழாயில் பொருத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் வண்டிகளை அவ்வப்போது சோதனை செய்து smog எனப்படும் மாசுக் காற்றை ஓரளவுக்கு மேல் வெளியிடாதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டது.

காற்று மட்டுமல்லாமல், மற்றும் பலவித மாசுகளை ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுப் பொருட்களையும் சுத்தமாக்கும் நுட்பங்களும் வெளிவந்துள்ளன. தொழிற்சாலைகளின் புகைச் சிம்னிகளிலிருந்தும், திரவக் கழிவுக் கால்வாய்களிலிருந்தும் தீய பொருட்கள் வெளியிடப்படாமல் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன, இன்னும் தீவிரமாக ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இப்போது, கரியமில வாயுவால் புவிவெப்பம் அதிகமாகும் அபாயமே அதிவேகமாக வளர்ந்து வருவதால், புதிதாக கரியடைப்பு (carbon sequestration) எனப்படும் துறையில் பல நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், எரிபொருட்களைப் பயன்படுத்தும் போது வெளியாகும் மாசுகளிலிருந்து பல வேதியியல் (chemistry) பொருட்களை உபயோகித்து, கார்பனைத் தனிப்படுத்தி வெளியெடுத்து சஹாரா பாலைவனம் போன்ற ஆள் நடமாட்டமில்லாத தொலைதூர இடங்களில் பூமிக்கடியிலும், ஏன், கடல்தரைக்கடியிலும் கூட அடைத்து வைக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. இதற்கான புதிய நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு எழலாம். தென்றலில் கூட முன்பு பேரா. வீ. ராமநாதன் என்னும் விஞ்ஞானியுடனான நேர்காணல் தென்றல், ஏப்ரல் 2007 இதழில் வெளியானது. இதில் கரியடைப்பைப் பற்றிய விவரங்கள் வெளிவந்திருந்தன.

இந்தத் துறையில் மேலும் வாய்ப்புக்களைப் பற்றி இனி வரும் பகுதிகளில் மேற்கொண்டு விவரிப்போம்.

கதிரவன் எழில்மன்னன்

(தொடரும்)
Share: 




© Copyright 2020 Tamilonline