|
|
|
திருவிளையாடல் நாகேஷ், சிவாஜிகணேசன் உரையாடல் போல் வைடமின் D குறைபாடு பற்றி கேள்வி பதிலாகச் சொன்னால் அதிகமாய் இருப்பது? பாலிலும் தயிரிலும் பகலவன் ஒளியிலும்
வேண்டிய அளவு? இருபதும் முப்பதும் இன்னமும் மேலும்
வேண்டிய மக்கள்? வளரும் குழந்தைகளும் வையகத்து உயிர்களும் இல்லத்தரசியரும் இருட்டுப் பிரதேசியரும் இல்லாது போனால்? எலும்பு முறிவும் ஏக்கமும் சோர்வும் தினமும் வேண்டிய அளவு? நானூறு முதல் எண்ணூறு ஓர் அறையில் பத்து மருத்துவர்கள் கூடியிருந்தால் பத்துவிதக் கருத்துக்கள் இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. வைடமின் D அளவைப் பொறுத்தவரை அது உண்மை. வெவ்வேறு ஆராய்ச்சிகள் வெவ்வேறு முடிவுகளைத் தரும்பொழுது அறிவியல் சான்றுகள் பலம் குறைவதால் மருத்துவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. வைடமின் D முக்கியமாகச் சூரியக் கதிரின்மூலம் கிடைக்கின்றது. இது தோலில் உருமாறிப் பின்னர் சிறுநீரகத்தில் வேறுவடிவம் பெற்று எலும்புக்கும் தசைகளுக்கும் செல்கின்றன. இதனால் குளிர்ப் பிரதேசங்களிலும், கருப்புத் தோல் இருப்பவர்களிடமும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களிடமும் இதன் அளவு குறையும். இதைத்தவிர Parathyroid என்ற நாளமில்லாச் சுரப்பியின் கோளாறும் இதன் அளவை மாற்றும்.
வைடமின் D குறைவாக இருந்தால் எலும்புகள் பலம் குறைந்து காணப்படும். உடல் சோர்வு கூடுதலாக ஏற்படும். ஒரு சில இருதய நோய் உடையவரிடமும். புற்று நோயாளிகளிடமும், நரம்புநோய் உடையவர்களிடமும், வைடமின் D குறைபாடு இருப்பது தெரியவருகிறது. இதுதான் இவர்களின் நோய்க்குக் காரணம் என்று சொல்ல முடியாதபோதும், வைடமின் D எடுத்துக் கொள்வது நல்லதெனக் கருதப்படுகிறது.
வைடமின் D யாருக்கு வேண்டும்? எல்லோருக்கும் வேண்டும். குறிப்பாக மகளிருக்கு, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு, வளரும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே அடைபட்டு இருக்கும் மூதாட்டியருக்கு, வெயிலில் அதிகம் போகாதவர்களுக்கு, குளிர்ப் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு. ஆக மொத்தம் எல்லோருக்கும் வேண்டும். |
|
வைடமின் D எவ்வளவு இருக்க வேண்டும்? இது காலம், நேரம், நோயாளியின் மற்ற நோய்கள், இருக்குமிடம் எல்லாம் பொறுத்து வேறுபடும். வைடமின் D 25 OH அளவே முக்கியம். அளவு பரிசோதிக்கத் தேவையில்லை. வெயில்காலத்தில் அதிகமாகவும் குளிர்காலத்தில் குறைவாகவும் இருக்கலாம். 30-100 வரை Normal என்று சொல்லப்பட்டாலும், மிகவும் அதிக அளவு ஆபத்தாக முடியலாம். வைடமின் D உடலின் கொழுப்பில் கரையக்கூடியது. அதனால் அதிகம் எடுத்துக் கொண்டால் அது உடலில் சேமித்து வைக்கப்படும். வைடமின் B, C முதலியவை நீரில் கரையக்கூடியவை. அதனால் இந்த வைடமின்களைச் சேமித்துவைக்க இயலாது.
ஒரு நாளைக்கு எவ்வளவு வைடமின் D வேண்டும்? ஒரு நாளைக்கு 400-800 IU வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு 1000 IU வேண்டும். பால், தயிர் போதிய அளவு உட்கொண்டு, கோடைக்காலத்தில் தினமும் 15 நிமிடமாவது சூரியக்கதிர் மேலே படும்படி இருந்தாலே இது கிடைத்துவிடும். சூரியக்கதிர் படாமல் இருக்கத் தடவும் சூரியத்திரைக் களிம்பு (Sun screen) வைடமின் D பெறுவதையும் தடுத்துவிடும். ஆனால் தற்காலத்தில் சொகுசாக குளிர்சாதன வாகனத்தில் பயணித்து, குளிர்சாதன அறையில் வாழ்க்கை கழியும்போது மாத்திரைகள் தேவைப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் 1500 IU தேவைப்படும். இவர்கள் மாத்திரை வடிவில் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். அளவு குறைவாக இருப்பவர் மருத்துவ ஆலோசனைப்படி தினமும் அல்லது வாரம் ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
வருடாந்திர நோய்த்தடுப்பு பரிசோதனையில் (Annual Preventive Physical Exam) வைடமின் D அளவைப் பரிசோதிக்க வேண்டுமா? Endocrine Society இது தேவையில்லை என்று சொல்கிறது. வைடமின் D அளவு குறையக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதிக்க வேண்டும். அல்லது அதன் குறைபாட்டின் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதிக்க வேண்டும். வேறு சில அமைப்புகள் இதன் அளவைப் பார்க்கவேண்டும் என்றும் சொல்கின்றன. ஒரு சில காப்பீடுகள் இந்தப் பரிசோதனை செலவை எடுத்துக்கொள்ளாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
வைடமின் D மாத்திரை எவ்வளவு வேண்டும்? வைடமின் D அளவு 20க்கு குறைவாக இருந்தால் கண்டிப்பாக வைடமின் மாத்திரைகள் தேவை. அளவு 15க்குக் குறைவாக இருந்தால் கனமான அளவு 50,000 IU வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கப்படும். 20 முதல் 30வரை இருப்பவர்களுக்கும், அளவைச் சரியாக வைத்திருக்க முயல்பவர்களும் தினமும் 1000 IU எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் வாரம் ஒருமுறை எடுப்பதை விரும்புவர். தினமும் எடுத்துக்கொள்ள மறந்து போகலாம். இரண்டு மாதங்களுக்கு பின்னர் பரிசோதித்தால் மாத்திரை எடுத்ததன் பயனை உணரலாம்.
வைடமின் D எந்தெந்த உணவுகளில் உள்ளன? அமெரிக்காவில் கிடைக்கும் பால், தயிர், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றில் வைடமின் D சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தவிர முட்டை, மீன் வகைகளிலும் வைடமின் D அதிகம் உள்ளது.
கடமை தவறாமல் தினமும் வந்திடும் கதிரவனின் கதிர்களை அவ்வப்போதாவது பெற்று வைடமின் D போதிய அளவு பெறுவோம்.
மரு.வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|