|
|
|
தடுப்பூசி (vaccination) என்றாலே சின்னக் குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வயதுவந்தவருக்கும் சில தடுப்பூசிகள் அவசியம்.
தடுப்பூசிகள் பலவகைப்படும். குறிப்பாக நுண்ணுயிர்க் கிருமிகளின் தீவிரம் அதிகமாக இருக்கும் நோய்களுக்கு ஆராய்ச்சிமூலம் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அவை வயதானவர்களுக்கும் சின்னக் குழந்தைகளுக்கும் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. நடுத்தர வயதினருக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் என்பதால் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. என்றபோதும் சில தடுப்பூசிகள் அனைவருக்கும் தேவை.
டெடனஸ்/டிப்தீரியா/கக்குவான் இருமல் (TDAP) இந்தத் தடுப்பூசியைப் பத்து வருடத்துக்கு ஒருமுறை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும். வலிப்பு முதல் மரணம்வரை ஏற்படுத்த வல்லதான டெடனஸ் நோய் ஒழிக்கப்பட்டது இந்தத் தடுப்பூசி மூலம்தான். துருப்பிடித்த இரும்பு அல்லது தகரம் செய்யும் காயத்தின் வழியே டெடனஸ் பரவும். இந்த நோய் நீக்கப்பட்டுவிட்டதே என்று கவனக்குறைவு கொள்ளக்கூடாது. மறைந்துவிட்ட பல நோய்கள் மீண்டும் வருவதைத் தடுக்கத் தடுப்பூசி அவசியம். தோட்டவேலை செய்பவர்களும் மரவேலை செய்பவர்களும் டெடனஸ் தடுப்பூசி பத்து வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பச்சை அட்டை அல்லது குடியுரிமை பெற விரும்புவோருக்கும் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அவசியம்.
இதைத் தவிர புதிதாகப் பாட்டி, தாத்தா ஆகும் முதியோர் இந்தத் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். தற்காலத்தில் வயது வந்தவர்களுக்குக் கக்குவான் இருமல் பரவியுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகே தடுப்பூசிகள் போடப்படும். அதனால் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன் வீட்டிலிருப்பவர்களுக்கு TDAP போட்டிருக்கிறதா என்று விசாரித்த பின்னரே அனுப்புவர். குழந்தைபெறும் தாய் தகப்பனுக்கும் இந்த தடுப்பூசி தேவை. இந்தியாவில் இருந்து வருகைதரும் பாட்டி தாத்தாக்களும் ஊசியைப் போட்டுக்கொண்டு சான்றிதழுடன் வருவது நல்லது.
நிமோனியா குளிர்காலத்தில் பரவலாகக் காணப்படும் நோய் நிமோனியா. இதற்கான தடுப்பூசி 65 வயதானவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இவர்களைத் தவிர ஆஸ்துமா அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும், மண்ணீரல் (Spleen) நீக்கப்பட்டவர்களுக்கும், சின்னக் குழந்தைகளுக்கும் இது அளிக்கப்படும். இதில் புதிய தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Prevnar 13. 2014 ஆகஸ்டு முதல் இது 65 வயதுக்கு மேலானவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி முடிவு வந்துள்ளது. இந்தப் புதிய தடுப்பூசி பழைய நிமோனியா PPSV 23 கொடுத்தவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இது விலையுயர்ந்தது. மருந்துக் கடைகளிலும், மருத்துவ நிலையங்களிலும் அளிக்கப்படும். மெடிகேர் இதை ஏற்றுள்ளது. அதனால் 65 வயதுக்கு மேலானோர் மருத்துவரை நாடி இதுபற்றிக் கேட்டறிவது நல்லது. |
|
ஃப்ளு தடுப்பூசி இதை ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாகச் சின்னக் குழந்தைகளும், வயதானவர்களும், கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். வருடா வருடம் இந்த வைரஸ் தனது வீரியத்தை மாற்றிக்கொள்கிறது. அதனால் புதிய தடுப்பூசி வருடா வருடம் கண்டுபிடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
அக்கி தடுப்பூசி (Shingles) இது 60 வயதுக்கு மேலானவர்களுக்குத் தரப்படுகிறது. இது நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. இந்த தடுப்பூசியில் வைரஸ் உயிருடன் இருப்பதால் இதை கர்ப்பிணிகளுக்கும், புற்றுநோய் உடையவர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் அளிக்கப்படாது. இந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அக்கி வந்தாலும் தீவிரம் குறைவாக இருக்கும். இதை தற்போது மெடிகேர் காப்பு ஏற்பதில்லை. அது சர்ச்சைக்குரிய செய்தியாக உள்ளது.
தடுப்பூசி நோயைத் தராது. ஒரு நாளைக்கு வலி, காய்ச்சல் ஏற்படலாம். வெகு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். தடுப்பூசியினால் நரம்புத்தளர்ச்சி வருவது மிக மிக அரிது. வருமுன் காப்பது உசிதம். அதனால் தடுப்பூசிகளைத் தடைசொல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.cdc.gov
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|