|
|
|
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது மனத்தில் ஆழமாகப் பதிந்த வரிகளில் ஒன்று: "புற்று நோய் வராமல் அறவே தவிர்க்க ஒரே வழி பிறக்காமல் இருப்பதே." அதாவது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறு உண்டு. ஆனால் ஒரு சிலரை மட்டுமே தாக்குவது இயற்கையின் செயல்பாடு. இதில் நாம் கடைபிடிக்கும் சில வாழ்க்கை முறைகள் இந்த சாத்தியக் கூறை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம். புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களையும் அவற்றைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் இங்கே பார்க்கலாமா?
வாரத்தின் ஏழு நாட்களைப் போலப் புற்றுநோய் தவிர்க்க ஏழு முக்கிய நடைமுறை வழிகள்: 1. புகையிலை அறவே தவிர்த்தல் புகை பிடிப்பதன் மூலம் நுரையீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகம், தொண்டை, மண்ணீரல் போன்ற பல உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. புகை பிடிக்காதவர்களுக்கும் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.
2. நல்ல உணவுப் பழக்கங்கள் நாம் தினமும் உண்ணும் உணவு புற்றுநோய்க்கான காரணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கின்றன.
புற்றுநோய் தவிர்க்கும் உணவுகள்: பழங்கள், காய்கறிகள், சைவ உணவுகள், பருப்புகள் (nuts), தாவர எண்ணெய்கள். மற்றும் அதிக நார்ப்பொருள் (fiber) கொண்ட உணவுகள் சேர்ப்பது நல்லது.
புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் உணவுகள்: அதிகமான மாமிசவகை உணவு, அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவு, செயற்கை முறையில் தயாரித்த உணவுகள், உயர் வெப்பத்தில் செய்யப்படும் உணவுகள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது
3. உடல் எடை பராமரித்தல் நல்ல உணவு மூலமும் சரியான உடற்பயிற்சி மூலமும் உடல் எடையைச் சரியான அளவில் வைத்திருப்பது மார்பகப் புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகப் புற்றுநோய்களைத் தவிர்க்க உதவுகிறது. தினம் போதுமான உடற்பயிற்சி செய்வது அவசியம். |
|
4. கடும் சூரிய வெளிச்சம் தவிர்த்தல் உச்சி வெயிலைத் தவிர்ப்பதும், நிழலை நாடுவதும், சூரியத் தடுப்பு மருந்துகள் தடவுவதும், தோல் பழுப்பாக்குதல் (Tanning) தவிர்ப்பதும் நல்லது.
5. தடுப்பூசிகள் கல்லீரல் புற்றுநோய் தவிர்க்க Hepatitis B தடுப்பூசியும், பெண்குறிப் புற்றுநோய் தவிர்க்க HPV தடுப்பூசியும் (Gardisil) தற்போது உபயோகத்தில் உள்ளன. இவற்றை எடுத்துக்கொள்வது சிறப்பானது.
6. தவிர்க்க வேண்டிய தகாத பழக்கங்கள் இனச்சேர்க்கை முறைகளில் கவனமும், போதைப் பொருட்களைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியமானது.
7. புற்றுநோய்ப் பரிசோதனைகள் (Cancer Screening) மார்பகப் புற்றுநோய்க்கு - Mammogram (ஆண்டுதோறும்) பெண்குறிப் புற்றுநோய்க்கு - Pap smear பெருங்குடல் புற்றுநோய்க்கு - Colonoscopy சுக்கியச் சுரப்பிப் (Prostate) புற்றுநோய்க்கு- Rectal exam and PSA
இந்தப் பரிசோதனைகளைச் சரியான கால இடைவெளிகளில் செய்துகொள்வதும், மருத்துவரின் ஆலோசனையை முறையாகக் கேட்பதும் முக்கியமானது. இவற்றை மீறி புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான தீர்வு முறைகளை உடனடியாகக் கைக்கொள்வதும் அவசியம். மனிதனின் ஆயுட்காலம் அதிகரிக்க அதிகரிக்க புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். இத்தோடு நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் புகை மண்டலமும் இதனை அதிகரிக்கும். உணவு சமைக்கும் முறைகளில் மாற்றமும் அவசர உலகில் ஏற்படும் பல தீய பழக்கங்களும் நம்மை இயற்கைக்கு எதிராகச் செயல்பட வைக்கும். நம்மால் முடிந்தவரை புற்றுநோய் தவிர்க்கும் முறைகளை கையாள்வோம். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவுவோம்.
மேலும் விவரங்களுக்கு www.mayoclinic.com
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|