|
மார்ச் 2007: வாசகர் கடிதம் |
|
- |மார்ச் 2007| |
|
|
|
2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாத 'தென்றல்' இதழில் 'அமெரிக்காவில் ஆறு வாரம்' என்ற தலைப்பில் சுவாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள சிறுகதையைப் படித்து மகிழ்ந்தோம். ஆனால் தங்கள் கதையின் கருவுக்கு விதிவிலக்கானவர்கள் நாங்கள். இருப்பினும் விதிவிலக்குகளே விதிகளாகி விடக்கூடாது.
கதை கருவில் கூடுகட்டி, உருவாகி, உலா வந்து, முடிந்த எதார்த்த நிலையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. கதாசிரியர்களில் பலர் கதையின் கருவை மட்டுமே கற்பனையில் உருவாக்கிக் கொண்டு, முடிவை வரையறுக்காமல், இடையில் அவர்கள் தவிக்கின்ற தவிப்பு அப்பப்பா.. சொல்லி மாளாது. தங்கள் கதை, அதன் தமிழ் நடை தங்குதடையின்றி ஓடிக்கொண்டே இருந்தது. முடிவை டேப்ரிக்கார்டரில் வைத்தது அருமை. சுண்ணாம்பிலே இருக்கிறது சூட்சுமம் என்ற சொலவடை போல!
வெ. இராசேந்திரன்
நம்நாடு பூரண சுதந்திரம் அடைய காந்திஜி, நேருஜி, ராஜாஜி, பட்டேல், மெளலானா ஆசாத் முதலியவர்கள் பட்டபாடு இந்தத் தலைமுறையினருக்குச் சுலபமாகத் தெரியாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நாளில் இவர்கள் பட்டபாட்டைச் சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லை. சிறைக்குப் போவது என்பது ஒரு அவமானம். அங்கே கடின உழைப்பு, வசதிகள் கிடையா. கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் தள்ள வேண்டி இருந்தது. மருத்துவ வசதியோ மிககுறைவு.
இப்பொழுது பலகாலமாக இருந்த மத்திய சிறைசாலையை கைதிகளுக்கு இடம் போதவில்லை என புழலில் வேண்டிய வசதிகளுடன் கட்டி கைதிகளை அங்கு மாற்றி இருக்கிறார்கள். வேலை இல்லாதவர்களும், வேலையில் கஷ்டப்படுவதைத் தவிர்க்கவும் பலர் இப்போது சிறைக்குப் போக விரும்புகிறார்கள். அதனால் குற்றம் அதிகரிக்கிறது. சமீபத்தில் நம் இந்தியக் குடியரசுத் தலைவர் போலீசாரின் சேவையைப் பற்றிச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறார்.
மதுரபாரதி அவர்கள் திரும்பவும் தென்றல் ஆசிரியராக வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். தென்றலுக்கு இனிப்புச் சேர்க்க மதுரபாரதி வருகிறார்.
பாரத நாட்டைப் பற்றிப் பல ருசிகரமான தகவல்களை உடனுக்குடன் கொடுப்பது 'தென்றல்' ஒன்றேயாகும். ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய மாத இதழ்.
அட்லாண்டா ராஜன் |
|
பிப்ரவரி மாத 'தென்றல்' இதழில் எத்தனை விழாக்கள்! தமிழ் மன்றப் பொங்கல் விழா, இசைவிழாக்கள், சின்மயா மிஷன் மாணவர்கள் நடத்திய பக்திப் பாடல்கள் வெளியீட்டு விழா, கவியரசு கண்ணதாசனுக்கு அமெரிக்காவில் விழா என்று பலதரப்பட்ட விழாக்களையும் வழங்கி உள்ளீர்கள். இது பொங்கலையே வாசகர்கள் வீட்டுக்கு கொண்டு வந்ததாக நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு இங்கேயே வந்துவிட்டது போல் உணர்கிறேன்.
வாழ்க வளமுடன், வாழ்க செந்தமிழ்.
சாந்தினி பரமேஸ்வரன்
தென்றல் பெப்ருவரி மாத இதழில் சுவையான பல பகுதிகள் இருந்தன. உலக அளவில் சதுரங்கத்தில் வெற்றிக்கொடி நாட்டிவரும் விஸ்வநாதன் ஆனந்துடனான நேர்காணலை வெளியிட்டு எம்மைப் பெருமையில் ஆழ்த்திவிட்டீர்கள். அவ்வளவு விருதுகள் பெற்ற ஒருவர் அத்தனை எளிமையாக இருப்பதைக் காண்பது அரிது. (சில காலத்துக்கு முன் அவரது பேட்டி ஒன்றைச் சென்னையில் விஜய் டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது). அவருடைய பெற்றோர் மற்றும் துணைவியாரின் உதவியோடு இன்னும் பல சிகரங்களை அவர் எட்டுவார். அவர் தற்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
சித்ரா வைத்தீஸ்வரனின் 'அன்புள்ள சினேகிதியே' பகுதியில் அபூர்வமான கடிதம் ஒன்றைக் கண்டேன். அது நாற்பது வயதுக்காரர் ஒருவர் தம் மனைவியுடன் கொண்ட பிரச்னைகளைப் பற்றியது. அந்த இளைஞரின் பொறுமை பாராட்டத்தக்கது. அவரது மனைவி மற்றும் மகள் தமது தவறுகளை உணரும் காலமும் அவர் மீண்டும் தமது வாழ்க்கைப் படகை மகிழ்ச்சியாக அவர்களோடு செலுத்தும் காலமும் வெகு தூரத்தில் இல்லை என்று நம்புகிறோம்.
தென்துருவத்தைத் தொட்ட முதல் பெண்ணான சரஸ்வதி காமேஸ்வரனைப் பற்றிப் படித்தோம். வாழ்க்கையின் குறிக்கோளான பனிக்கரடியை அவர் பார்த்ததும் மிகச் சுவையான சம்பவம். விரைவில் அவருடன் விரிவான நேர்காணல் ஒன்றை நீங்கள் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
R. கண்ணன், கீதா கண்ணன் மிலிபிடாஸ் (கலி.) |
|
|
|
|
|
|
|