|
ஏப்ரல் 2007: வாசகர் கடிதம் |
|
- |ஏப்ரல் 2007| |
|
|
|
சீதளச் சீமையிலும் ஒர் தென்றலா! தென்பாரத மண்ணிலே செழுந்தமிழ் நாட்டினிலே தென்பொதிகைச் சாரலிலே தேன் கலந்த அருவிகளில் ஒன்றாகிக் கலந்து உயிர்களை உய்விக்க வன்கரத்து ஆதவனின் வெயிலைக் குளிர்படுத்தி தென்னை இளநீரும் தேமாங் கனியும் தெவிட்டாத கதலிக்கனி சேரப் பலவின் இன்சுவை கொண்டு மணமிகு சந்தனத்தை திசைதொறு தெளித்தபடி வசந்தம் ஸ்ப்ரிங்கென தென்றலெ நீயெப்படி யிங்குவந்தாய்! புவிப்புறத்துப் போய்உழைத்திடத் தொழில்நாடி வந்திட்ட தென்னவரோடு வானவூர்தியை யும்முந்தி வேகமாய் யூ.எஸ்.ஏ. வந்து டெக்ஸாஸ் மாநிலத்து என்மைந்தன் இல்லத்துநின் மென்கரத்தால் தீண்டித் தீண்டி தென்றலே செந்தமிழ் மணம் பரப்பி நிற்கின்றாய் வா வா!
புலவர் தங்க குருசாமி பிளானோ, டெக்ஸாஸ்.
*****
லாஸ் ஏஞ்சலஸ். சான் ·பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளைப் படிக்கும் பொழுது எம் இடத்தைவிட்டு அங்கு வரத் தூண்டுகிறது.
அட்லாண்டா ராஜன்
*****
சென்னை சங்கமம் ஒரு புதிய கருத்தாக்கம் தான். கிராமியக் கலைகளுக்குக் கதவைத் திறந்துவிடும் கனிமொழிக்குப் பாராட்டுகள்.
வழக்கம் போல 'அன்புள்ள சிநேகிதியே' சுவையாக இருந்தது. சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் ஆலோசனை மிகப் பொருத்தம். இதனால் அந்தத் தம்பதிகள் நிச்சயம் பயனடைவார்கள். தென்றலின் சேவை வாழ்க, வளர்க.
ஆர். கண்ணன், கீதா கண்ணன் மில்பிடாஸ், கலி.
***** |
|
தென்றல் பிப்ரவரி 2007 இதழில் கவிஞர் மு. மேத்தா நேர்காணல் படித்தேன்.
பல நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டு வருகிற மரபு இன்று சில சமயங்களில் தனக்குக் கை விலங்காகி விடுவதை ஏற்றுக்கொள்பவர் வானம்பாடி இயக்கத்தினரோடு சேர்ந்து 'மரபுக்கவிதையின் சில வேலிகளைத் தகர்த்து புதுக்கவிதையைக் கொண்டு வந்தோம்' என்று கூறுகிறார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக செய்த முயற்சி என்றே அது தோன்றுகிறது. 'என் ஆதரவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்கிற ஆசை ஆனந்த விகடன் மூலம் நிறைவேறியது' என்ற வாக்குமூலம் அதை உறுதிப்படுத்துகிறது. அதிலொன்றும் தவறில்லை தான்.
வாசகர்களின் நெஞ்சங்கள் தான் படைப்பாளிகளின் சிம்மாசனங்கள், தொடர்ந்து நல்ல படைப்புக்களைத் தருவதன் மூலந்தான் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். 'எனக்கென்று ஒரு ஆசனமுண்டு. அந்த ஆசனத்திலிருந்து எவனும் என்னை அப்புறப்படுத்த முடியாது' என்பதெல்லாம் தன்னைப் பற்றிய மிகையுணர்வின் வெளிப்பாடே.
அ. இராஜகோபாலன் ராஞ்சோ கொர்டொவா, கலி. |
|
|
|
|
|
|
|