|
மார்ச் 2013: வாசகர் கடிதம் |
|
- |மார்ச் 2013| |
|
|
|
|
தென்றல் ஃபிப்ரவரி இதழில் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரை படித்து மகிழ்ந்தேன். அவரது தம்பி எம்.எஸ். ஸ்ரீனிவாசன் பற்றியும் ஒரு வரி எழுதியிருக்கலாம். ரேடியோ அண்ணா என்று அழைக்கப்பட்ட இவரும் ஒரு வயலின் வித்வான். 1954ல் எனது முதல் சிறுவர்கள் நாடகத்திற்கு என்னை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊக்குவித்தவர் ஸ்ரீனிவாசன் அவர்கள்தான். இரு சகோதரர்களும் மார்கழி மாதத்தில் ஜார்ஜ் டவுன் வீதிகளில் தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டு நடந்த நாட்கள் இன்னும் என் நினைவுகளில் நிற்கின்றன.
ஆர். சந்திரசேகரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
*****
பிப்ரவரி இதழில் ராஜேஸ்வரி ஜெயராமனின் 'மாகாளியின் மகிமை' மற்றும் வற்றாயிருப்பு சுந்தரின் 'கொல்லிமலை' கட்டுரைகளைப் படித்தேன். நானும் திருச்சிவாசிதான். 20 வருடங்களாக அமெரிக்கப் பயணம் செய்து வருகிறேன். குறைந்த பட்சம் 10 முறையாவது மாகாளி, வடுமாங்காய் ஊறுகாயுடன் அமெரிக்கா பயணித்திருப்பேன். திருச்சி மலைவாசலில் பாத்திரக்கடை வாசலில் மூங்கில் தட்டில் மாகாளிக் கட்டு, எலுமிச்சம் பழங்களை வைத்து பாட்டுப்பாடி வரவேற்று ஜனங்களை எப்படியாவது வாங்க வைத்துவிடுவார் அந்த வியாபாரி. திருச்சி ஆண்டவர் தெரு மூலை மரத்தடியில் மாவடு வாங்கிக் கொண்டு பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஊறுகாய் தயார் செய்து, பின்னர்தான் விமானம் ஏறுவது வழக்கம்.
எனக்கு இரண்டுமுறை கஸ்டம்ஸில் கேள்விமேல் கேள்வி கேட்டனர். நானும் எனது கணவரும் தெரிந்தவரை பதில் சொல்லி சமாளித்து, பிரச்சனை ஏதுமின்றி பொருட்களை எடுத்து வந்தோம். ஒருமுறை க்ளீவ்லாண்ட் விமான நிலையத்தில் எங்கள் பெண் எங்களை அழைத்துச்செல்ல வந்தபோது எனது பெட்டிகள் அடுத்த ஃபிளைட்டில் வரவே என் பெண் முகம் வாடிவிட்டது. வளைகாப்பு, சீமந்தத்திற்கு வாங்கி வந்த புடவை, பட்டு, நகை, வளையல் என எதைக் காண்பித்தும் அவள் முகம் மலரவில்லை. மறுநாள் காலை பெட்டிகள் வந்ததும் திறந்து மாகாளி, வடுமாங்காய் ஊறுகாய்களைப் பார்த்ததும்தான் அங்கு மகிழ்ச்சி தெரிந்தது. இந்த நிகழ்ச்சியினால் என் இளைய பெண், சான் ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இறங்கி சோதனை முடித்து வெளியில் வந்ததுமே, ஊறுகாயுடன் பயணம் இனிது நடந்ததா, பிள்ளையாருக்கு வீட்டுக்குப் போய் தேங்காய் உடைத்து விடுகிறேன் என சிரித்துக்கொண்டே சொல்வது வழக்கம். கட்டுரையை ரசித்து, மாகாளி சாப்பிட்ட ருசி மனதில் ஏற்பட இக்கடிதத்தை எழுதி உள்ளேன். சுந்தர் அவர்களது கொல்லிமலை தொடரைப் படித்து விட்டு, மலையின் அழகை ரசிக்கவும், மாகாளியின் பிறப்பிடத்தைப் பார்க்கவும், அறப்பளீஸ்வரரை தரிசனம் செய்யவும் மிகவும் ஆவல்தான். சாத்தியமில்லாவிடினும் கட்டுரையை அணுஅணுவாகப் படித்து ரசிக்க முடிந்தது. நேரில் சென்று பார்ப்பதுபோல் மிக அழகாக, அருமையாக எழுதியுள்ளார் கட்டுரை ஆசிரியர்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா
***** |
|
தென்றல் நாளுக்கு நாள் இதம் பதமாக மெருகேறி வருகிறது. அமெரிக்கத் தமிழர்களின் சாதனைகளைப் பார்க்க மனம் பூரிப்படைகிறது. அறிவியல், கலை, இலக்கியத் துறைகளில் மேலும் சாதனை பெற விழைகிறேன். ஒருமுறை சேலத்தில் எழுத்தாளர் விக்கிரமன் தலைமையில் எழுத்தாளர் வல்லிக்கண்ணனைப் பாராட்டிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்விழாவில் எனது சிறுகதைத் தொகுப்பு 'அழகு' அறிமுகப்படுத்தப்பட்டது. உடனே அதன் பிரதியைக் கேட்டு வாங்கிய விக்கிரமன், அடுத்த மாத அமுதசுரபியில் அதன் விமர்சனத்தை வெளியிடச் செய்தார். அத்தகைய பண்பாளர் அவர். புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதிலும், கைதூக்கி விடுவதிலும் அவருக்கு நிகர் அவரே!
சென்ற இதழில் அ. முத்துலிங்கம் அவர்களது நேர்காணல் சிறப்பினும் சிறப்பான அம்சமாகும். ஓர் இலக்கிய வரலாற்றையே நேர்காணல் வெளிக் கொணர்ந்திருக்கிறது. கனடா தமிழ்த் தோட்டம் பற்றியும், அதில் தென்றலின் பங்கு பற்றியும் அறியும்போது உவப்படையாமல் இருக்க முடியுமா? தமிழை எங்கும் வாழும் தமிழாகச் செய்வதில் அமெரிக்க, கனடத் தமிழர்களின் பங்கை எப்படிப் பாராட்டுவது? தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தியின் ஓய்வுறாப் பணி உள்ளத்தைத் தொடுகிறது.
தமிழறிஞர் மு. இராகவையங்கார் பற்றிய தகவல்கள் முக்கியமானவை. சேதுபதிகளின் தமிழ்ப் பற்றும், பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ப் பணியும், காதலும், ராகவையங்கார் தம் வாழ்நாள் முழுக்கத் தமிழுக்குச் செய்த அர்ப்பணிப்பும் இன்றைய தலைமுறை அறிய வேண்டுவன. வீரத்தாய்மார் கட்டுரையைப் படித்த பாரதியார் பெற்ற உணர்ச்சி, அதை அவர் வெளியிட்ட பாங்கு என நெஞ்சைக் கவர்கிறது.
முந்தைய இதழ் நேர்காணல் இசைத் துறையைப் பெருமைப்படுத்தியது என்றால் இந்த இதழ் நேர்காணல்கள் இலக்கியம், வரலாறு, வரலாற்றிலக்கியம் என மின்னிப் பொலிகின்றன. சிறுகதை, கவிதை, சமயம், நிகழ்வுகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்து பொலிவு பெற்று விளங்குகிறது பிப்ரவரி மாத இதழ்.
இரவீந்திர பாரதி, சிடார் ரேபிட்ஸ், அயோவா |
|
|
|
|
|
|
|