|
பிப்ரவரி 2013: வாசகர் கடிதம் |
|
- |பிப்ரவரி 2013| |
|
|
|
|
தென்றல் இதழ் விறுவிறுப்பாக இருக்கிறது. நல்ல நாவல் படிப்பது போல் முழுதும் படித்து முடிப்பதுவரை கீழே வைக்கவே மனது வருவதில்லை. அவ்வளவு நன்றாய் இருக்கிறது என்று சொல்வது என் மனதில் இருந்து வருகின்ற உண்மையான வார்த்தைகள். ஒவ்வொரு மாதமும் நமக்குத் தெரிந்த பெரிய மனிதர்களின் தெரியாத விஷயங்கள் எல்லாம் தென்றல் மூலமாகத் தெரிய வரும்போது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. போன மாதம் டாக்டர் அழகப்பா அழகப்பன் பேட்டி நன்றாக இருந்தது. எவ்வளவு எளிமையாய்க் காட்சி அளிக்கிறார், அரிய, பெரிய செயல்களைச் செய்து! இவ்வளவு நாட்களாகத் தெரியாது அவர்தான் நியூயார்க் உள்ள வல்லப மஹாகணபதி ஆலயம், பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரர் ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம் எல்லாம் கட்டினார் என்பது. சென்னை பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோயில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
தென்றல் இதழை மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களிலும் கிடைக்கச் செய்யலாம். அதைப் படிப்பவர்களுக்கு அமெரிக்காவில் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடப்பது தெரிய வரும். கொஞ்சம் கூட அநாவசியமான விஷயங்கள் இல்லாமல் பத்திரிகை நடத்த முடியும் என்பதையும் அறிய முடியும்.
பார்வதி ராமன், டாரன்ஸ், கலிஃபோர்னியா
*****
என்னால் ஒரு தென்றல் இதழ்கூடத் தாமதமாகப் படிக்க இயலாது. என் தாய்மொழியில் இனிதான முறையில் வெளியிடப்படும் தென்றலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எஸ். பாலசந்தர் அவர்களது வீணைக் கச்சேரி என்றால் எனக்கு பைத்தியம்தான். இங்கு ஷார்லெட்டில் (வடகரோலைனா) சில வருடங்களுக்கு முன்பு வீணை விருந்து அளித்தார் அவர்.
டாக்டர் சக்ரபாணி சேதுமாதவன், கிங்ஸ்ட்ரீ, தென் கலிஃபோர்னியா
*****
ஜனவரி இதழைக் கண்டதும் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன. மகிழ்விற்குக் காரணம் 13ம் ஆண்டில் நடைபோடும் தென்றல். வருத்தத்திற்குக் காரணம் இந்த இதழிலிருந்து 'குறுக்கெழுத்துப் புதிர்' வராது என்பது. தென்றலில் நான் தேடிப் பிடித்துப் பார்க்கும் பகுதி அது. ஓ.எஸ்.அருண், பிரகதி குருபிரசாத் நேர்காணல்கள், மனதைத் தொடும் சிறுகதைகள் என அனைத்தும் சிறப்பு. திருக்குறளை வெறும் செய்யுளாகவும், பதவுரையாகவுமே அறிந்த எனக்கு இவ்வளவு விளக்கமாக, சுவையாக ஹரிகிருஷ்ணன் எழுதுவது ஆச்சரியமாகவும், அற்புதமாகவும், அடுத்த இதழில் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. 'வாழ்க்கைப் பயணிகள்' அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது. எல்லா வேலைகளும் உயர்வே என்ற உண்மையை 'வேலை(ளை) வந்துவிட்டது' கதை உணர்த்தியது. அழகாக, சிறப்பாக, தரமாக தென்றலை வெளியிடும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.
சுபத்ரா பெருமாள், கூபர்டினோ, கலிஃபோர்னியா
***** |
|
ஜனவரி தென்றலில் கீதா பென்னெட்டின் 'டாமினோ எஃபெக்ட்' கட்டுரையை மிகவும் ரசித்தேன். கல்யாணமாகி 35 ஆண்டுக்குப் பின் அப்படி ஒரு கிங் சைஸ் பெட்டை வாங்கி நாங்களும் அதே அவஸ்தையைப் படுவதால் என்னால் அதை உணர முடிந்தது. நல்லதொரு மாத இதழைத் தருவதற்கு நன்றிகள்.
உஷா ராமசுவாமி, கலிஃபோர்னியா
*****
ஜனவரி மாதத் தென்றலில் ஓ.எஸ்.அருண் நேர்காணலில் இசைக்கு மொழி தேவையில்லை என்று கூறியிருப்பது மிகவும் உண்மை. வாஞ்சிநாதனின் வித்தியாசமான குறுக்கெழுத்துப் புதிரை மறுபடி எப்போது சந்திப்போம் என ஆவலாகக் காத்திருக்கிறோம். பாலக்காடு மணி ஐயரது 100வது ஆண்டுவிழாவிற்கு தென்றலின் சமர்ப்பணம் தனி ஆவர்த்தனமாக நிறைந்துள்ளது. விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் ஜூனியர்-3ல் பாடி, பே ஏரியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பிரகதியின் நேர்காணல் அழகாக, அருமையாக இருந்தது. சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுக்கான டிப்ஸ் உண்மையாகவும், மறுக்க முடியாததாகவும் உள்ளது. தன் குரலால் உலகம் பூராவும் விரிகுடாப் பகுதியின் பெயரைத் தெரிய வைத்துள்ள அவருக்கு வாழ்த்துக்கள். ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் வேலை(ளை) வந்து விட்டது சிறுகதை சிந்திக்க வைத்தது. இளம் சாதனையாளர் கோகுல், கார்த்திக் விக்னேஷ் ப்ரணவ் மேலும் வாழ்வில் உயர வாழ்த்துகின்றேன்.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா
*****
ஜனவரி தென்றல் இதழில் கோகுல், கார்த்திக் (தென்றல் பதிப்பாளரின் புதல்வர்கள்) பாட்மின்டன் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பதைப் படித்தேன். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுகள். குறுக்கெழுத்துப் புதிர் ஆர்வலர்களுக்குத் தென்றல் இதழில் அல்வா (இது திருநெல்வேலி அல்வா) கொடுத்து வந்த வாஞ்சிநாதன் தொடரப் போவதில்லை என்ற செய்தி என்னை வருத்தியது. சிறிது இடைவெளிக்குப் பின் புதிரைத்தொடர வேண்டும் என்பது என் வேண்டுகோள். ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய 'வேலை(ளை) வந்துவிட்டது' சிறுகதை அருமை. 1950-60களில் மூதறிஞர் ராஜாஜி பள்ளியில் முற்பகலில் மொழி, கணக்கு, விஞ்ஞானம் ஆகிய பாடங்களும் பிற்பகலில் ஏதாவதொரு தொழிற்கல்வியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நல்ல திட்டத்தை அறிமுகப் படுத்தினார். ஆனால் இதை எதிர்த்துப் போராடிச் சில அரசியல் கட்சிகள் முறியடித்துவிட்டன. கதாபாத்திரம் ரகு இதை எனக்கு ஞாபகப்படுத்தினார்.
டாக்டர். அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|