|
|
|
குரூட் எண்ணைச் சந்தை யூக விளையாட்டில் மிகுந்த நஷ்டமடைந்ததாகச் சூர்யா யூகிக்கவே, அதற்கும் குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கும் முடிச்சுப் போட்டு தன்னைச் சந்தேகிப்பதாக உணர்ந்த நீல் ராபர்ட்ஸன் அடக்க முடியாத சினத்துடன் உடனே வெளியேறாவிட்டால் எதாவது ஏடாகூடமாகச் செய்வேன் என்று சூர்யாவிடம் முஷ்டியைக் காட்டிச் சீறினார். அவரது அறையைவிட்டு அகன்றதும் அகஸ்டா சூர்யாவிடம் மன்னிப்பு வேண்டினாள்.
"சூர்யா, எங்கள் நிறுவனப் பிரச்சனைக்கு நீல் ராபர்ட்ஸனின் நிதித்தேவை நிச்சயம் காரணமாயிருக்க முடியாதுன்னு நானும் நம்பறேன். ஆனாலும் அவர் உங்களைநோக்கிக் கையை உயர்த்தியிருக்கக் கூடாது. அவர் சார்புல நான் வேண்டிக்கறேன், மன்னிச்சுக்குங்க!"
சூர்யா தலையசைத்தார். "சேச்சே, இதெல்லாம் சகஜம் அகஸ்டா. என்மேல யாராவது பழி சுமத்தறா மாதிரி தோணினா, எனக்குக் கூடதான் கோபம் பொங்கிவரும். அதனாலென்ன, நம்ம வேலை நடந்தா சரி அவ்வளவுதான்! ஆனா கோபம் வரதுனால அவர்மேல பழியில்லன்னு ஆகிடாது!"
அகஸ்டா அதிர்ச்சியடைந்தாள்! "அப்படின்னா, நீல்தான் பிரச்சனைக்குக் காரணம்னு சொல்றீங்களா!"
சூர்யா மறுதலித்தார். "அவசரப்படறீங்களே அகஸ்டா! நான் அப்படிச் சொல்லலியே!"
"அப்படின்னா? அவர்மேல பழியில்லன்னுதானே அர்த்தம்?"
"அப்படியும் இல்லை!"
அகஸ்டா குழம்பினாள். "ரெண்டும் எப்படி இல்லாம இருக்க முடியும்?!"
கிரண் இடைமறித்தான். "அகஸ்டா, சூர்யா சொல்றது என்னன்னா, அவர் இன்னும் அந்த ரெண்டுல என்னன்னு முடிவுக்கு வரலை, ரெண்டுமே சாத்தியங்கற நிலைமைலதான் இருக்கோம்."
அகஸ்டா பெருமூச்சு விட்டாள். "ஹூம்... இந்த விசாரணை விரைவில ஒரு முடிவுக்கு வரணும்னு வேண்டிக்கறேன். இல்லன்னா என் குழு முழுக்க நான் இழக்கவேண்டியதாக போயிடும் போலிருக்கே!"
ஷாலினி சமாதனப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க அகஸ்டா, இந்தப் பிரச்சனையின் காரணம் தெரிஞ்சதும் குற்றமற்றவங்க சாந்தமாயிடுவாங்க."
தலையாட்டி ஆமோதித்த சூர்யா, "கரெக்ட், இப்ப உங்க குழுவின் இறுதி உறுப்பினரான சேகர் சுப்பிரமணியனைச் சந்திக்கலாமா?"
சேகரின் அறைக்கதவைத் தட்டித் திறந்ததும் அறையின் அலங்கோலம் அனைவரையும் அசத்தியது! அறையின் நடுவே ஒரு மேஜையைச் சுற்றி சில நாற்காலிகள் இருந்தன. மற்றபடி அறையைச் சுற்றித் தாறுமாறாக ஆராய்ச்சி மேடைகளும் கருவிகளும் புத்தக அடுக்குகளும் இருந்தன! சேகரின் தலைமுடி வளர்ந்து சீர் செய்யாமல் கன்னாபின்னா என்று நீட்டிக் கொண்டிருந்தது.
கிரண் சிரிப்பை அடக்கிக்கொண்டு ஷாலினியிடம் முணுமுணுத்தான். "பாத்தியா இந்த ஆளை! சரியான கிறுக்கு விஞ்ஞானி மாதிரி இருக்காரு. இவர்தான் எதாவது கோணங்கித்தனம் பண்ணியிருக்கார்னு நினைக்கறேன்!"
"உஷ்! சும்மா கிட கிரண்! எதாவது உளறாதே. பாத்தா நீட்டா இல்லன்னா உடனே குற்றவாளியா?! இவர் என்ன கொஞ்சம் ஐன்ஸ்டைன் மாதிரியில்லை? அப்படி ப்ரில்லியன்ட்டுன்னு வச்சுக்கயேன்."
அகஸ்டா அறிமுகம் செய்ததும் சேகர் தமிழிலேயே வரவேற்றார். "ஓ! தமிழ் துப்பறிவாளர்களா? பரவாயில்லயே? கணேஷ் வஸந்த் கெட்டாங்க போங்க!"
கிரண் சிரித்தான். "சூர்யா மட்டுந்தான் நிஜம் தமிழ். நானும் ஷாலினியும் அரைகுறைதான்." |
|
சூர்யா சேகருடன் கைகுலுக்கிக் கொண்டே, "உங்க தொடரும் தமிழார்வத்தைப் பாராட்டறேன் சேகர். நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்து பதிப்பிக்கப் போறீங்க போலிருக்கு? எப்படிப் போயிட்டிருக்கு அந்த முயற்சி?"
சேகர் அதிர்ந்தார். "எ... எ... எப்படி? நான் அதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லலியே! என் மனைவிக்குக் கூடத் தெரியாது. சர்ப்ரைஸா புத்தகத்தை அவளுக்குப் பரிசளிக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு எப்படி? அகஸ்டா என்ன இது? என் தனிவாழ்க்கையைப் பத்தி குடைய வச்சீங்களா? சே! உங்கமேல எவ்வளவு மதிப்பு வச்சிருந்தேன்? எல்லாம் போச்சு!"
அகஸ்டா அவசரமாக மறுத்தாள். "சேச்சே! சேகர், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. சூர்யா ஒரு மிகச்சிறந்தத் துப்பறிவாளர். எதோ இங்க கிடைச்ச தடயத்தை வச்சு யூகிச்சிருப்பார். இப்படித்தான் மத்தவங்களையும் அதிரவச்சார். என்னைக் கூடத்தான்! ப்ளீஸ் விளக்குங்க சூர்யா!"
சூர்யா முறுவலுடன் சுட்டிக்காட்டினார். "சாரி சேகர், ஆனா நீங்க உங்க தடயங்களை சரியா மறைக்கலை. இங்க பாருங்க நாங்க வரும்போது அவசரத்துல திறந்திருக்கற மூலப்பிரதியை அறைகுறையா மேல ஒரு புத்தகத்தை வச்சு மறைச்சிருக்கீங்க. ஆனா அதுல கையால செஞ்சிருக்கற திருத்தங்களை நான் கவனிச்சேன். அதுல உங்க துறையின் விஞ்ஞான, தொழில்நுட்பக் கோட்பாடுகளைத் தமிழாக்கியிருக்கறதையும் கவனிச்சேன், யூகிச்சேன். அவ்வளவுதான். ரொம்ப சிம்பிள், பிரமாதம் ஒண்ணுமில்லை!"
கோபம் தணிந்த சேகர் உரக்கச் சிரித்தார். "ஆஹா, என்ன பிரமாதம் இல்லயா. நிச்சயமா பிரமாதந்தான் சூர்யா. இந்தச் சின்னத் தடயத்தை கணப்பொழுதுல கவனிச்சு என்னை அதிரடிச்சுட்டீங்களே? நிச்சயமா குட்டன்பயோர்க் பிரச்சனையையும் நீங்க உங்க யூகத் திறமையால கணிச்சு நிவர்த்திச்சுடுவீங்க."
கிரண் சிரித்தான். எல்லாரும் அவனை உடனே திரும்பிப் பார்க்கவும், கையை விரித்துக் கொண்டு விளக்கினான். "ஒண்ணுமில்லை, அந்தப் புத்தகம் தமிழ்ல இருக்கில்லையா, அதை வச்சுக் கண்டுபிடிக்கறத்துக்கு இங்க சூர்யாவால மட்டும் முடியும்! நான் தப்பித் தவறிக் கவனிச்சிருந்தாக்கூட, அம்மாடி தலைகால் புரிஞ்சிருக்காதேன்னு நினைசேன் சிரிப்பு வந்துடுச்சு அதான்!"
சேகர் விஷயத்துக்கு வந்தார். "சரி, உங்களுக்கு நான் எப்படி உதவலாம்? எனக்குத் தெரிஞ்சது எதுவானாலும் விளக்கறேன் கேளுங்க."
சூர்யா கேட்டார், "குட்டன்பயோர்க் தொழில்நுட்பத்தைப் பத்தி, உங்களுடைய உபதுறையில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. முழு அங்கங்களை துரிதமாகப் பதிப்பிக்க நீங்க கட்டமைப்பு முறையில பகுதி பகுதியாப் பிரிக்க உதவினீங்க இல்லயா? ஆனா அந்த எல்லா ரத்த நாளங்களூம் சரியா ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சரியா பிணைஞ்சு ரத்தம் கசியாம எப்படி இணைக்க முடிஞ்சது?"
சேகர் பவ்யமாகத் தலைகுனிந்து, அகஸ்டாவைச் சுட்டிக் காட்டினார். "அதுல எனக்கெதுவும் பங்கு கிடையாது. நான் எங்கெங்கே எந்தெந்தக் கோணத்தில அங்கப் பகுதிகளைப் பிரிச்சுப் பதிக்கணும்னுதான் கணிச்சேன். இந்த ரத்தநாள விஷயம் எல்லாம் அகஸ்டா, அலெக்ஸ், மற்றும் நீல் அவங்க கவனிச்சுகிட்டதுதான்."
சூர்யா யோசனையுடன், "ஓஹோ, ஓகே. சரி. அங்கப் பதிப்புகளை மூல உயிரணுக்களை வச்சு ஒண்ணாப் பிணைக்கும் யுக்தியை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"
சேகர் மீண்டும் பவ்யமாகத் தலைகுனிந்து அகஸ்டாவைக் காட்டினார். "அந்த விஷயத்துல எனக்கு ஒரு பங்கு இருந்ததாலும் இது அகஸ்டாவின் தலைமையில் உருவான குழுமுயற்சின்னுதான் சொல்லணும். எப்படியாவது அங்கப் பகுதிகளைப் பிணைக்கணும், ஆனா அவற்றின் நடுவில் எதுவும் கனிமப் பொருட்கள் (inorganic) இல்லாம கரிமமா (organic) இருந்தாத்தான் சரிப்பட்டு வரும்னு நான் சொன்னேன். குழு முழுவதும் சேர்ந்து கலந்தாலோசிச்சு, பலவித நுட்பங்களைப் பட்டியல் போட்டு அலசினோம். அதுல ஒண்ணுதான் இந்த மூல உயிரணுக்களையே ஒட்டவைக்கற பசையாப் பயன்படுத்தற யோசனை."
அகஸ்டா முறுவலித்து "நன்றி சேகர். இருந்தாலும் அதுல உங்க முதல் கரிமப்பொருள் கருத்து மிக முக்கியமான மூலகாரணம்." என்று பாராட்டவே சேகர் மீண்டும் தலைகுனிந்து, கைகூப்பி தமிழ்ப் பண்பாட்டுடன் ஏற்றுக்கொண்டார்!
அகஸ்டா சூர்யாவிடம், "சூர்யா, இன்னும் சேகர் கிட்ட எதாவது கேட்கணுமா, இல்லை அவரை அவருடைய தமிழ் விஞ்ஞானப் புத்தக வேலையைத் தொடர விட்டுடலாமா?" என்றாள்.
சூர்யா மீண்டும் ஒரு அதிர்வேட்டு வீசினார். "சேகர், இதெல்லாம் சரிதான், ஆனால் உங்க அப்பாவுக்கு மெடிகேர் இல்லாததுனால ரொம்ப மருத்துவ செலவாயிடுச்சு போலிருக்கு, எப்படி சமாளிக்கறீங்க?"
சேகர் குழறினார், "ஆ...ஆ... ஆமாம், அது சரிதான். ஆனா எப்படி? என்னைப்பத்தியே இப்பதான் தெரியும்னு முன்னாடி சொன்னீங்க. என் அப்பாபத்தி, அதுவும் அவரது மருத்துவ செலவு பத்தி, எப்படி? எதோ நோண்டிப் பாத்திருக்கீங்க. அகஸ்டா ஏன் இப்படி என்னை ஏமாத்தப் பாக்கிறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்படி என் சொந்தக் குடும்ப விவகாரத்தை எல்லாம் குடையறீங்க? அதுவும் எங்க அப்பா மேல! சேச்சே, அசிங்கம் அகஸ்டா, அசிங்கம்!"
அகஸ்டா பதிலளிக்கும் முன்பே சூர்யா இடைமறித்தார். "இல்லை சேகர். இதுவும் என் யூகந்தான். அங்க பாருங்க மேஜையின் இன்னொரு பக்கம் ஒரு மருத்துவ பில் காகிதம் இருக்கு. அதுல வாங்கல் சுப்ரமண்யன் மருத்துவத்துக்கு உங்க பேர்ல பில். வாங்கல் ஒரு தமிழ்நாட்டு ஊர் பேருங்கறதுனால உங்க அப்பாவா இருக்கணும்னு யூகிச்சேன் அவ்வளவுதான்."
சேகர் சற்றே சூடு தணிந்தார். இருந்தாலும் கோபம் கலந்த சோகத்துடன், "அதுக்கும் குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதை நோண்டி என்னை நோகடிச்சிருக்க வேண்டியதில்லை. ப்ளீஸ் இப்ப என்னைத் தனியா விடுங்க. வேற எதாவது கேட்கணும்னா அப்புறம் எப்பவாவது பேசிக்கலாம்" என்று கூறி விறைப்பாகக் கதவுப்பக்கம் கைநீட்டிக் காட்டவே, அகஸ்டாவுடன் நம் துப்பறியும் மூவரும் வெளியேறினர்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|