|
|
|
குட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச் சூர்யா யூகித்ததால், அவர்களை அறையைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுவிட்டார். அகஸ்டாவுடன் நம் துப்பறியும் மூவர் வெளிவந்து அலுவலகத்தின் நடுக்கூடத்தில் அமர்ந்தனர்.
அகஸ்டா கேட்டாள், "சூர்யா, என் அணியினர் எல்லாரையும் சந்தித்தாயிற்று. அனைவருக்கும் நிதிப் பிரச்சனையிருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதனால் அவர்களில் எவருமே எங்கள் பிரச்சனைக்குக் காரணமாயிருக்க முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் விசாரித்ததில் அவர்களில் யாராவது பிரச்சனையில் கலந்திருப்பார்கள் என்று தோன்றுகிறதா?"
சூர்யா தலையசைத்தார். "இதுவரை விசாரித்து தகவல்கள் மட்டுமே சேகரித்திருக்கிறேன். இன்னும் பிரச்சனைக்குக் காரணம் யார் என்று யோசிக்கவில்லை. அது சரியும் இல்லை. அப்படி யோசிக்குமுன் நான் உங்கள் முப்பரிமாண அங்கப் பதிப்புக் கருவிகளைக் கண்டு சோதித்து அவைபற்றிய தகவல்களையும் சேர்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் எல்லாத் தகவல்களையும் கோத்துப் பார்த்து ஒரு கணிப்புக்கு வரமுடியும். இல்லைன்னா பாதி விவரத்தோட அவசரக்குடுக்கை மாதிரிதான்!"
கிரண் சிரித்துக்கொண்டு, "ஆமாமாம். இந்த ஷாலினி தன் நோயாளிகளைப் பாக்காமலேயே மருந்து குடுக்கமுடியுமா என்ன? ஆனா, பாத்துட்டாலும் ரொம்பப் பிரமாதமா செஞ்சுடறாங்கன்னும் சொல்ல முடியாது!"
ஷாலினி உதட்டைச் சுழித்துப் பழித்தாள்! "ஹூக்கும். இந்த பங்கு வர்த்தகர்கள் மட்டும் ரொம்ப புத்திசாலிங்களா என்ன. வாங்கி விக்கற பங்குகளின் நிறுவனங்களைப் பத்தி ஒண்ணும் தெரியாது. ஒரு வாரத்துல மேல ஏறிச்சா, கீழே விழுந்துச்சான்னு கம்ப்யூட்டர் வரைபடத்தைப் பாத்துட்டு செம்மறி ஆடுங்க மாதிரி ஓட வேண்டியது! 2008 பத்தி சொல்லணுமா என்ன?"
அகஸ்டா வாய்விட்டு சிரித்தாள்! "திரும்ப அக்கா தம்பி அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? சரியான கோமாளிங்கப்பா! ப்ளீஸ் இப்படியே காமெடியா இருங்க! பிரச்சனையை மறந்து சிரிக்கமுடியுது!"
சூர்யா இடைமறித்தார், "அது சரிதான். ஆனா வேலையும் நடக்கணுமே! அகஸ்டா, உங்கள் பதிப்புக் கருவிகளைப் பார்க்கலாமா?"
அகஸ்டா அவசரமாக எழுந்தாள். "ஓ! அதுக்கென்ன, அது ரொம்ப சரியான வழிமுறைதான். எல்லாரும் வாங்க" என்று கூறினாள்.
துரிதமாகக் கூடத்திலிருந்து ஆராய்ச்சி அறைக்கு விரைந்த அகஸ்டாவை ஓட்டமும் நடையுமாக மூவரும் பின்பற்றினர். அனைவரையும் விண்வெளி வீரர்கள் போன்ற சுத்த உடையையும் தலை முழுவதையும் மூடிய தலைக்கவசமும் அணியவைத்து, தானும் அணிந்து கொண்டு ஆராய்ச்சி அறையில் நுழைந்த அகஸ்டா பெருமிதத்துடன் காட்டினாள். "பாருங்க. இதுதான் குட்டன்பயோர்கின் பெருமைக்குரிய ஆராய்ச்சிக்கூடம். இங்க உருவாக்கப்படும் தொழில்நுட்பமும், விஞ்ஞானக் கோட்பாடுகளும் அங்கப் பதிப்புத் துறையில் வேற எங்கயும் பாக்க முடியாது!"
சூர்யா அறையைச் சுற்றிக் கூரிய நோட்டம் விட்டார். கூடம் விஸ்தாரமாகவே இருந்தது. ஒரு ஜன்னல்கூட இல்லை. ஆனாலும் சூரிய ஒளிபோன்ற விளக்குகளால் பளிச்சென வெளிச்சம் தெரிந்தது. ஓரளவுக்கு குளுகுளுவென்றே வைக்கப்பட்டிருந்த்தது. சுவர்களின் பக்கம் அனைத்தும் அறிவியல் கருவிகள் வைக்கப்பட்ட கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட அடுக்குப்பெட்டகங்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் நடுவில் செவ்வக வடிவில் இரண்டு கருவி வரிசைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி, அவற்றுக்கும் கருவிப் பெட்டகங்களுக்கும் இடையில் ஆராய்ச்சி மேடையில் பலதரப்பட்ட கருவிகள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு துகள் தூசு கூட இல்லாமல் சுத்தமாக வைக்கப் பட்டிருந்தது கூடம். ஆனால் ஆள் நடமாட்டமே இல்லை!
அகஸ்டாவே விளக்கினாள். "எங்கள் பிரச்சனை காரணமாகத் தற்காலிகமாக இந்தக் கூடத்தின் வேலையை நிறுத்தி வச்சிருக்கோம். அதான் இங்க யாரும் இப்ப இல்லை."
சூர்யா தலையசைத்தபடி, செவ்வக வடிவில் நிறுத்தப்பட்டிருந்த பதிப்புக் கருவிகளை நோட்டமிட்டுவிட்டு அகஸ்டாவிடம், "ரெண்டு வரிசை இருக்கு. முதல் பெரிய வரிசையில் 5 அங்கங்களை, 8 பகுதிகளாகப் பதிக்கறீங்க போலிருக்கு. ரெண்டாவது நீளமான வரிசையில் ரெண்டு அங்கங்களைப் பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரிச்சு பதிக்கறீங்க போலிருக்கு?" என்றார்.
ஒரு கணம் பிரமித்த அகஸ்டா சுதாரித்துக்கொண்டு, "உங்க கவனிப்பு மற்றும் யூகத்திறமையை கொஞ்சம் மறந்துட்டேன். அதுவும் நீங்க மின்வில்லைத் தொழிற்சாலை நிபுணர் வேறயாச்சே? பிரமாதமான கணிப்பு சூர்யா. நீங்க சொல்றது அப்படியே சரி. ஆனா எதை வச்சு சொல்றீங்க?" என்று சிரித்தபடி கேட்டாள். |
|
சூர்யா விளக்கினார். "அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதமான யூகமில்லை அகஸ்டா! ஒவ்வொரு வரிசையிலும் அடுத்தடுத்த முப்பரிமாணப் பதிப்பான்கள் (3D printers) கொஞ்சம் கொஞ்சம் வேறமாதிரி கட்டமைக்கப் பட்டிருக்கு, ஆனா, அடுத்தடுத்த வரிசையில ஒரே இடத்துல இருக்கற பதிப்பான்கள் ஒரே கட்டமைப்புல இருக்கு. அதுனாலதான் அப்படி யூகிச்சேன். இதுல பிரச்சனை ஒரு வரிசைக்கு மட்டுமா, ரெண்டு வரிசைக்குமேவா?"
ஒருகணம் பிரமிப்புடன் நின்ற அகஸ்டா கைகொட்டினாள். "வாவ், நல்ல யூகந்தான்! உங்க கேள்வியும் அற்புதமான கேள்வி. ஆனா எங்க சிக்கல் அவ்வளவு எளிதில்லை. ரெண்டுவித வரிசைகளிலுயுமே அந்தப் பிரச்சனை அப்பப்போ வருது. அதுனால ஒருவித வரிசைன்னு உடனே குறுகலாக்க முடியாது, சாரி..."
சூர்யா தலையசைத்தார். "பரவாயில்லை. அப்படி இருந்திருந்தா அதிர்ஷ்டந்தான். இல்லைங்கறதுனால இன்னும் கொஞ்சம் ஆழமா ஆராயணும் அவ்வளவுதானே, போகட்டும் விட்டுத்தள்ளுங்க" என்று கூறிவிட்டு பதிப்பான்கள் அருகில் சென்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து ஆராய்ந்தார். எல்லாப் பதிப்பான்களையும் ஆராய்ந்தபின் நிமிர்ந்து, சற்று நகர்ந்து ஏதோ முடிவுக்கு வந்ததுபோல் கண்கள் பளிச்சிட, தலையை ஆட்டிக்கொண்டு ஏதோ கவனத்தில் ஆழ்ந்து மௌனமாக இருந்தார்.
இப்படியே ஓரிரு நிமிடங்கள் கழியவே, ஷாலினி ஆர்வத்துடன் வினாவினாள். "என்ன சூர்யா, எதாவது தடயம் கிடச்சுடுச்சா? சொல்லுங்க!"
சூர்யா கவனத்திலிருந்து மீண்டு தலையசைத்தார். "இருக்கலாம். ஆனா இப்ப சொல்றத்துக்கொண்ணுமில்லை. இன்னும் சில விஷயங்களை ஆராய்ஞ்சு பாக்கணும்." என்று கூறிக்கொண்டே மீண்டும் பதிப்பான்களின் கட்டமைப்பை ஆராயக் குனிந்தார்.
திடீரென கூடத்தின் ஒரு கதவு டமால் என்ற பெரும் ஓசையுடன் திறந்தது! முழு உடலையும் கருப்பு உடையணிந்து, கண்கள் கூட சரியாகத் தெரியாதபடி மங்கல் ப்ளாஸ்டிக் திரையால் மூடிக் கொண்டிருந்த ஒரு உருவம் வெகு வேகமாக சூர்யாவிடம் ஓடி அவரை இழுத்து தூரத்தள்ளி உருண்டு விழவைத்துவிட்டு சில பதிப்பான்களை ஏதோ குடாய்ந்து விட்டு ஓடிவந்த கதவுமூலம் வெளியேறிக் கதவை மீண்டும் படாரென பேரோசையுடன் அடித்து மூடிவிட்டு மறைந்தே விட்டது!
சில நொடிகளுக்குள்ளேயே நடந்து முடிந்துவிட்ட இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சி மற்ற மூவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. சூர்யாவின்மேல் அபரிமிதமான நேசம் வைத்திருந்த ஷாலினிதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, சூர்யாவிடம் என்ன ஆகிவிட்டதோ என்று பதறிப்போய் ஓடினாள்.
அதற்குள் எழுந்து அமர்ந்து, தரையில் இடித்துக் கொண்டதால் சற்று வலித்த தலையின் பின்பக்கத்தில் ஒரு இடத்தைத் தடவிவிட்டுக் கொண்டிருந்த சூர்யாவிடம் ஷாலினி படபடவென கேள்விகளைக் கவலையால் எழுந்த பதட்டத்துடன் அள்ளி வீசினாள். "சூர்யா, என்ன ஆச்சு? தலையில் ரொம்ப அடியா? ரத்தம் வருதா என்ன? அய்யய்யோ! காட்டுங்க பாக்கலாம். அது யார்னு எதாவது தெரிஞ்சுதா? ஏன் உங்களைத் தாக்கணும்..." என்று அடுக்கிக்கொண்டே போன ஷாலினியை நோக்கிக் கையமர்த்தினார் சூர்யா.
"ஷாலினி, ஷாலினி, ஷாலினி, அமைதி, அமைதி! எனக்கு ஒண்ணும் ஆகலை, ரத்தமும் இல்லை ஒண்ணும் இல்லை, சும்மா ஒரு சின்ன அடி அவ்வளவுதான். வீங்கக்கூட இல்லை, விடு. அது யாருன்னு நான் கண்டுகொள்ள முடியலை. ஆணா, பெண்ணான்னுகூட தெரியலை. ஆனா கீழா உருண்டபோதும் அந்த உருவம் என்ன செஞ்சுதுன்னு கவனிச்சுட்டேன். நல்லதாப் போச்சு!"
அகஸ்டாவும் கிரணும் சூர்யாவிடம் அதற்குள் ஓடி வந்திருந்தனர். கிரண் சூர்யா தலையின் பின்பக்கத்தில் நீவிய இடத்தைப் பார்த்துவிட்டு ஷாலினியிடம் தலையாட்டி, "ஷால் ரத்தம் வீக்கம் எதுவும் இல்லைதான். ஆனாலும் உன் டாக்டர் கண்ணுல பாத்துடு" என்றான். ஷாலினியும் கூர்ந்து கவனிக்கலானாள்.
அருகில் இருப்புக்கொள்ளாமல் தவித்த அகஸ்டா கூவினாள். "ஓ! சூர்யா, நல்லவேளை உங்களுக்கு இன்னும் சீரியஸா அடிபடலை. ரொம்ப ரொம்ப ஸாரி. இந்த மாதிரி ஒரு அயோக்கிய முரட்டுத்தனம் குட்டன்பயோர்கில் நிகழ்ந்திருக்கிறது எனக்கு மிகவும் அதிர்ச்சியாவும் அவமானமாவும் இருக்கு. இந்த ஆராய்ச்சி, விசாரணை போதும். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. இப்பவே போலீஸுக்குத் தெரிவிச்சுடலாம். அவங்களே பாத்துக்கட்டும்."
சூர்யா அமர்ந்துகொண்டே ஷாலினியின் அன்புக் கரிசனப் பிடியால் தலையசைக்க முடியாததால், கையசைத்து மறுத்தார். "சே, சே அகஸ்டா. அந்தமாதிரி எதாவது செஞ்சிடாதீங்க. வெண்ணை திரண்டு வரச்சே தாழியைத் தடியால் உடைச்சா மாதிரி ஆயிடும். அந்த மர்ம உருவம் நமக்கு ரொம்பப் பெரிய உதவியைத்தான் செஞ்சிருக்கு. உங்க பிரச்சனையின் மூலகாரணத்தையும், காரணகர்த்தாவையும் நாம் கண்டறியும் காலம் நெருங்கியாச்சு! இனிமேல் ஆராய்ச்சி தேவையில்லை. விசாரணை மட்டும் போதும்."
அகஸ்டா ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள். "என்ன சொல்றீங்க சூர்யா? அந்த காதக உருவம் உதவி செஞ்சுதா? பிரச்சனைக்கான மூலகாரணம் சீக்கிரம் தெரிஞ்சுடுமா? வாவ்! ஒண்ணுமே புரியலை, நம்பவும் முடியலையே சூர்யா! கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்!"
ஆனால் சூர்யா பிடி கொடுக்கவில்லை. "இப்ப முடியாது அகஸ்டா. உங்க நிர்வாகக்குழு அனைவரையும் ஒரே சமயத்தில் கூட்டிப் பேசணும். உங்க பெரிய கலந்தாலோசனை அறைக்கு அவங்களைக் கூப்பிடுங்க. அப்போ எல்லாம் வெளிவந்துடும்னு எனக்கு பலத்த நம்பிக்கை வந்தாச்சு."
மூவரும் வாயைப் பிளந்தபடி சூர்யாவையே பார்த்தனர்....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|