|
|
|
ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் இந்தியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவருடைய 'Rajmohan's Wife' தான் ஓர் இந்தியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் நாவல். இது 1864ல் வெளியானது. சரி, ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் யார் தெரியுமா? அவர்தான் கிருபா பாய் சத்தியநாதன். அவர் எழுதிய 'Saguna: A Story of Native Christian Life' (சகுணா - ஒரு கிறித்துவப் பெண்ணின் ஜீவிய சரிதம்) என்ற நாவல்தான், இந்தியாவில் முதன்முதலில் ஒரு பெண்மணியால் எழுதப்பட்ட ஆங்கில நாவலாகும். மட்டுமல்ல; இந்தியாவில், முதன்முதலில் வெளியான சுயசரிதை நாவலும் இதுதான்.
மகாராஷ்டிரத்தில் உள்ள அகமதுநகரில், ஹரிபந்த் கிஷ்டி - ராதா பாய் இணையருக்கு பிப்ரவரி 14, 1862ல் 13வது குழந்தையாகப் பிறந்தார் கிருபா பாய். பம்பாய் ராஜதானியில், முதன்முதலில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பிராமணக் குடும்பம் அவர்களுடையது. அரசுத்துறையில் பணியாற்றி வந்த தந்தை திடீரெனக் காலமானார். குடும்பம் தத்தளித்தது. தாய் குடும்பத்தைத் தாங்கினார். சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார் கிருபா. இளவயதிலேயே மிகுந்த புத்திசாலியாக விளங்கிய கிருபா, பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாகத் தேறினார். அரசின் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது. டாக்டருக்குப் படிப்பது கிருபா பாயின் கனவாக இருந்தது. அவரது தோழிகள் பணம் திரட்டி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அன்னை மற்றும் குடும்பத்தின் மறுதலிப்பால் அது நிறைவேறாமல் போனது. மகாராஷ்டித்திலேயே படிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், பம்பாயில் இருந்த கல்லூரிகளில் பெண்கள் மருத்துவம் படிக்க அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கவில்லை. அதனால் அவரது கனவு நிறைவேறாத ஒன்றாக இருந்தது.
இந்நிலையில்தான் 1878ல், Madras Medical College (இன்றைய சென்னை மருத்துவக் கல்லூரி) பெண்களும் மருத்துவம் படிக்க அனுமதி வழங்கியது கிருபாவிற்குத் தெரிய வந்தது. குடும்பத்தினர் அனுமதி பெற்று மருத்துவம் படிப்பதற்காகச் சென்னை வந்து சேர்ந்தார் கிருபா பாய். அக்காலகட்டத்தில் சென்னை சீயோன் சர்ச்சில் வில்லியம் தாமஸ் சத்தியநாதன் என்பவர் போதகராக இருந்தார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். படிப்படியாக உயர்ந்த இவர், தன்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாக, உதவி செய்பவராக இருந்தார். அந்த வகையில் குடும்ப நண்பர் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்ட கிருபா பாய்க்கும் உதவ முன்வந்தார். வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் இல்லத்தில் தங்கி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார் கிருபா. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் மாணவி இவர்தான். மருத்துவப் பேராசிரியர்கள் பலராலும் 'சிறந்த மாணவி' என்று பாராட்டப்பட்ட கிருபா, ஆர்வத்துடன் கல்வி பயின்றார். ஆனால், அது வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே காச நோய் தாக்கியது. அதனால் மேற்கொண்டு பயில இயலாமல் அவரது கல்வி தடைப்பட்டது. தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்ட போதும், அவ்வப்போது உடல்நல பாதிப்புக்கு உள்ளானார்.
இந்நிலையில், வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் மகனான சாமுவேல் சத்தியநாதனுடன் காதல் முகிழ்த்தது. சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் பயின்றவர். சிறந்த கல்வியாளர். கட்டுரையாளர். அப்போதுதான் இந்தியா திரும்பியிருந்தார். அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது. 1881ல் அவர்கள் மணம் செய்துகொண்டனர். உடல் நலிவுற்ற காரணத்தால் கிருபா பாயால் கல்வியைத் தொடர இயலவில்லை. சிகிச்சைக்காக அவர்கள் சில வருடங்கள் ஊட்டிக்குச் சென்று வசித்தனர். அங்கு கிருபா பாய்க்கு உடல்நலம் மேம்பட்டது. அங்குள்ள ஏழைகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் கல்வி பெறுவதற்காகப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தினார் கிருபா பாய். தனது ஓய்வு நேரத்தில் அக்காலத்தில் வெளிவந்த சில ஆங்கில இதழ்களில் An Indian Lady என்ற புனைபெயரில் சில கட்டுரைகளை எழுதினார். அவை பெரும்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் பற்றியதாக அமைந்திருந்தன. அவர் 'South India Observer' இதழில் எழுதிய ”A visit to the Todas' என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. தொடர்ந்து 'National Indian Journal' போன்ற இதழ்களிலும் எழுதினார். கணவரின் பணி நிமித்தம், ராஜமுந்திரி, கும்பகோணம் போன்ற இடங்களுக்குச் சென்று வசிக்க நேர்ந்தது. பலவித அனுபவங்கள் வாய்க்கப் பெற்றார்.
இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் சத்தியநாதனுக்குப் பேராசிரியர் பணி கிடைத்தது. அதனால் இருவரும் சென்னைக்குத் திரும்பினர். அக்காலகட்டத்தில் தான் நாவல் எழுதுவதற்கான ஆர்வம் கிருபாவுள் முகிழ்த்தது. தினந்தோறும் நாவலைத் தனது குறிப்பேடுகளில் எழுதிவந்தார். அந்த நாவல், 1887-88களில் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழில் தொடராக வெளியானது. பின்னர் 1892ல் நூலாக வெளியானது. அது தான் 'Saguna: A Story of Native Christian Life'. ஓர் இந்தியப் பெண்ணால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற சிறப்பு 'சகுணா'விற்குக் கிடைத்தது. உண்மையில் அது அவரது வாழ்க்கைதான். கிட்டத்தட்ட அவரது இளவயது வாழ்க்கையையே புனைவாக்கியிருந்தார் கிருபா பாய். அந்த வகையில் இந்தியாவில், ஆங்கிலத்தில் முதன்முதலில் சுயசரிதை நாவல் எழுதியவரும் கிருபா பாய் சத்தியநாதன் தான். கிருபாபாயின் ஆங்கிலச் சிறுகதை 1893ல் வெளியானது. தலைப்பு 'The story of Conversion'. ஆங்கிலத்தில் சிறுகதை எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் கிருபா பாய் ஆக இருக்க வாய்ப்புள்ளது.
கிருபா பாயின் கணவர் சத்தியநாதன் கல்வியாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இருந்தார். கல்வியியல் சார்ந்து சில நூல்களை எழுதியுள்ளார். 'Theosophy: An appeal to my countrymen', “Indian philophical systems with special reference to Christianity', 'History of education in the Madras Presidency' – போன்ற நூல்களை அவர் எழுதியிருக்கிறார். மனைவியை மிகவும் நேசித்த அவர் அவரது எழுத்துப் பணிக்கு மிகவும் உறுதுணையாக, ஊக்குவிப்பாளராக இருந்தார்.
இந்நிலையில் ஒரு குழந்தைக்குத் தாயானார் கிருபா பாய். அடுத்து அவர், 'Kamala – The story of a Hindu Child Wife' என்ற நாவலை எழுதத் தொடங்கினார். இரண்டு நாவல்களுமே இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மதம் மாறுவதால் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், குடும்பப் புறக்கணிப்புகளையும், உறவுகளால் ஏற்படும் அவமானங்களையும் பிரிட்டிஷ் மிஷனரிகளின் பாரபட்ச நடவடிக்கைகளையும், இந்தியர்களின் மீதான அவர்களது இனவெறியையும் காட்டுவதாக அமைந்திருந்தன. அவரது இரண்டு நாவல்களுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவை தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையை, வாழ்க்கைச் சூழல்களைத்தான் பேசின. அந்த வகையில் அவற்றை ஆங்கிலத்தில் வெளியான தமிழ்ப் பின்னணி நாவல்கள் என்றுகூடச் சொல்லலாம்.
'கமலா' நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போதே கிருபா பாய் தன் மகளை இழந்தார். அது அவர் உடல் நலனை வெகுவாகப் பாதித்தது. அதனால் அவர் உடல் மற்றும் மன நலம் தேறுவதற்காக ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்றும் நிலைமை சீராகவில்லை. அதனால் மீண்டும் சென்னைக்கு வந்து வசித்தார். பின் புனேவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைகள் காசநோய் முற்றியிருப்பதைத் தெரிவித்தன. மீண்டும் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு அவர் வெகுநாள் உயிரோடு இருக்கவில்லை. தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்றாலும் பலனில்லாமல் ஆகஸ்ட் 3, 1894ல், 32ம் வயதில் கிருபா பாய் காலமானார். அவருக்கு அவரது அன்புக் கணவர் சாமுவேல் சத்தியநாதனால் சென்னை புரசைவாக்கத்தில், அவரது மகளது சமாதியின் அருகே, ஒரு சமாதி எழுப்பப்பட்டது.
கிருபா பாயின் மரணத்திற்குப் பின் 1895ல் 'கமலா' அச்சிடப்பட்டது. நாவலின் பிரதிகள் பிரிட்டிஷ்-இந்திய அரசி விக்டோரியாவிற்கு அனுப்பப்பட்டன. அவர் படித்துவிட்டு, கிருபா பாயின் இன்னும் சில நாவல்களைப் படிக்க விருப்பம் தெரிவித்தார். நாவலாசிரியரைப் பாராட்ட விரும்பினார். ஆனால், கிருபா பாய் அப்போது உயிரோடு இல்லை. 1896ல் சகுணா, கமலா என இரு நாவல்களும் சாமுவேல் பவுல் பாதிரியாரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகின.
கிருபா பாயின் மறைவுக்குப் பிறகு சாமுவேல் சத்தியநாதன், கமலா என்பவரை மணம் புரிந்துகொண்டார். சென்னைப் பல்கலையின் (அப்போது சென்னை சர்வகலாசாலை) முதல் பெண் முதுகலைப் பட்டதாரி கமலாதான். மட்டுமல்ல; தமிழ்ப் பெண் ஒருவரால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில மற்றும் பெண்கள் பத்திரிகையான The Indian Ladies Magazine என்பதன் ஆசிரியரும் அவர்தான்.
கிருபா பாய் சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், வில்லியம் தாமஸ் சத்தியநாதன் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, Eunice De Souza என்பவர், 2005ல் 'The Satthianadhan Family Album' என்ற நூலை வெளியிட்டார். சாகித்ய அகாதமி நிறுவனம் அதனை வெளியிட்டது. கிருபா பாய், 1893ல் எழுதிய 'The story of Conversion' என்ற சிறுகதை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறித்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் 'Stories of Indian Christian Life' (1899) என்ற நூலில் இருந்தும் சில கட்டுரைகள், கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் சத்தியநாதன் குடும்பத்தாரின் வாழ்க்கை அனுபவங்களையும் அக்காலச் சூழலையும், மதம் மாறிய கிறித்தவ சமூகங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் கூறும் தக்கதோர் ஆவணமாகத் திகழ்கிறது. மற்றபடி கிருபா பாய் சத்தியநாதன் எழுதிய நாவல்கள் எதுவும் தற்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் எழுதிய இந்தியப் பெண் எழுத்தாளர்களில் முன்னோடியாக மதிக்கத் தகுந்தவர் கிருபா பாய் சத்தியநாதன். |
|
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|