Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | முன்னோடி | அஞ்சலி | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
சிறுகதை
நிதானம் பிரதானம்
லாக்கெட் லோகநாதன்
- மருங்கர்|மார்ச் 2022|
Share:
தேசிய நெடுஞ்சாலை 81ல் அரசுப் பேருந்து கட்டுக்கு அடங்காத காவேரி வெள்ளம்போல சீறிப் பாய்ந்து சென்றது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் நடுவில் இருந்த திரைச் சீலையைச் சற்று விலக்கி, நடத்துனர் தனது தலையை மட்டும் உள்ளே விட்டு "இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல டால்மியாபுரம் வந்துடும். இறங்கறவங்க பெட்டி, சாமான் எல்லாம் எடுத்துகிட்டு முன்பக்கம் வந்துடுங்க" என்றார்.

அரைத்தூக்கத்தில் இருந்த கதிரை, தனது விரல் நுனிகள் நன்கு பதியும்படி அழுத்தி, "கதிர், இன்னும் முக்கால் மணி நேரத்தில லால்குடி வந்துடும்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கண் அயர்ந்தாள் மேகலா.

கதிர் அருகிலிருந்த ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தான். சூரிய வெளிச்சம் ஈட்டி பாய்வதுபோல உள்ளே பாய்ந்து, அதே வரிசையில் இருந்த சக பிரயாணியின் முகத்தில் சுளீரென்று பட்டது. யாரோ அவர் கண்களில் ஆசிட் ஊற்றியது போலப் பரிதவித்தார். "சார், ப்ளீஸ். கொஞ்சம் மூடுங்க" என்று எரிச்சலுடன் சொன்னார். திறந்த வேகத்தில் திரைச்சீலையைக் கதிர் மூடினான்.

"அப்பா இங்கேதானே வேலை பார்த்தாரு" என்று அப்பா லோகநாதனை நினைத்தவுடன், கண்களின் ஓரத்தில் கண்ணீர்.

"ஏம்பா நீங்க மாறிட்டீங்க. என்னைய உங்க புல்லெட்டுல வச்சுகிட்டு எங்கெல்லாம் கூட்டிகிட்டு போவிங்க! கல்லணை, திருச்சி மாரீஸ் தியேட்டர், ஸ்ரீரங்கம் கோவில் என பல இடங்கள். கொடுவா மீசை வச்சுக்கிட்டு, 'என்ஃபீல்ட்' புல்லெட்டுல, கதர் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு, லாக்கெட் வெளிய தெரிய நீங்க போகிற அழகே தனி. பிஸ்கெட் பர்ஃப்யூம் வாசனை ஆளைத் தூக்குமே! எத்தனை பொண்ணுங்க உங்களை சைட் அடிக்கறதை நானே பாத்து இருக்கேன். அந்த திமிருலதான் அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டீங்களா!" என்று ஆதங்கப்படும்போது, தன் பெண் குழந்தையின் மேலிருந்த போர்வை நழுவி விழுவதைப் பார்த்து, அதைச் சரி செய்தான்.

"கிருத்திகா செல்லம், நம்ம குட்டி தேவதை. நம்ம குடும்பத்தில நாலு தலைமுறையா ஆண் பசங்கதான். முதல்முறையா பெண் தேவதைன்னு எப்படி சந்தோஷப்படுவீங்க! ஆனா 'அந்தத் தகாத' தொடர்பினால அம்மா நொந்து செத்துப் போனாங்க. அதுக்கு அப்புறமே எனக்கு உங்களைக் கண்டா பிடிக்காம போச்சு" என்று வலியில் அவன் நெஞ்சம் கதறும் பொழுது, அதை ஆமோதிப்பது போல, அவனது பாக்கெட்டில் இருந்த அலைபேசியில் 'டிங்' எனச் சிறு ஓசை எடுத்துப் பார்த்தால், "எங்கேடா இருக்கே?" என்று மாமாவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி.

"இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுல இருப்போம் மாமா" என்று பதில் அனுப்பினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தனர்.

ஓட்டு வீடு, முன்பக்கம் கீத்துப்பந்தல். பந்தல்கால் இருந்த இடங்களைச் சுற்றி ஈரமான கருமண். நேற்று இரவுதான் போடப்பட்டது போலும்! பந்தலின் கீழே சில பிளாஸ்டிக் நாற்காலிகள். உள்ளே செல்லும் வழியின் இரு புறங்களிலும் சிறிய மேடை, கரி படிந்த மாடம், சாளரத்தை இறுக்கிப் பிடித்த நான்கு தூண்கள் என அந்த அமைப்பு, அது ஒரு பழைய வீடு என்பதை எளிதில் காட்டிக்கொடுத்தது.

அவனைப் பார்த்ததும், அங்கே இருந்த அவனது அத்தை கதறியபடி ஓடி வந்தாள்.

"கதிர், அண்ணன் நம்மளை விட்டு போயிட்டாருடா" என்று சொன்னபடியே அவனைக் கட்டிக்கொண்டாள். அத்தையை அணைத்தபடி உள்ளே சென்றான். எல்லாச் சடங்குகளும் முடியக் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.

3 அடி அகலம் 8 அடி நீளமான மரக்கட்டிலில் லோகநாதன் உடல் இருந்தது. அவருக்குப் பிடித்த வெள்ளை வேட்டி, கதர் சட்டையில் இருந்தார். ஆறு அடி, நல்ல ஆஜானுபாகுவான உடலமைப்பு. நெற்றியில் திருநீறு. கழுத்தில் இருந்த 'லாக்கெட்' கிட்டத்தட்ட அவரது நெஞ்சின் நடுப்பகுதிவரை இருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட விக்டோரியன் ஸ்டைல் லாக்கெட். லோகநாதனின் கொள்ளுப்பாட்டனார் வெள்ளைக்காரனிடம் பரிசு வாங்கியதாக ஒரு சிலர் சொல்லுவார்கள். ஒரு சிலர் அவரது மூதாதையர் ராஜ வம்சத்தைச் சேர்த்தவர்கள் எனச் சொல்லுவார்கள். ஆனால் லோகநாதன் அதைப்பற்றி யாரிடமும் பேசியது இல்லை. அது எவ்வளவு உண்மை என கதிருக்குத் தெரியாது. ஊரில் லோகநாதனை வேட்டி இல்லாமல்கூடப் பார்க்கலாம், ஆனால் லாக்கெட் இல்லாமல் பார்க்க முடியாது என்ற கேலிப்பேச்சும் உண்டு! அதனாலேயே ஊரில் அவரை எல்லோரும் 'லாக்கெட் லோகநாதன்' என்றுதான் கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே கூப்பிடுவோம்!

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் தகனம் முடிந்து வீட்டுக்கு வந்தனர்.

பெரிய மாமா, அவனைப் பார்த்து "கதிர், அப்பா லாக்கெட்டை உன் கையாலே அவர் படத்துல போடு" எனச் சொன்னார்.

"மாமா, அவர் விஷயத்தில என்னைய கட்டாயப்படுத்தாதீங்க. அம்மா மனசு ரொம்ப நொந்து போய்த்தான் போனாங்க. இப்ப இந்த வீட்டுலேயே அவளைக் கொண்டுவந்து வச்சுருக்காரு" என்று சொல்லும்பொழுதே அவன் குரல் விம்மியது.

"தம்பி, அவங்களுக்கு கல்யாணம் ஆகி, எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பிறந்தீங்க. உன் மேல பாசமாத்தான் இருந்தாரு. அவன் செஞ்ச ஒரே தப்பு, அவள் விஷயம்தான். அவனுக்கு உடம்பு சரியில்லாம போனப்ப, உன்கிட்ட பேச தினமும் ட்ரை பண்ணுவான். நீதான் ஃபோனை எடுக்கவே இல்லை"

"அதைப்பத்தி நாம நிறைய பேசியாச்சு. அவள் இந்த வீட்டுலே இருக்கட்டும். நான் இங்க வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு சில மணி நேரத்தில் ஊருக்கு கிளம்பிச் சென்றான். கதிருக்கு அப்பா என்றால் அவ்வளவு பிடிக்கும். அவனது ரோல் மாடல்! அவர் அப்படிச் செய்தது, அவனுக்கு மிகப்பெரிய வருத்தம். அதுவே அவனது வெறுப்புக்கு வித்திட்டது.

ஒரு மாதம் வேகமாக ஓடியது. இரவு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி இருக்கும்.

சோவென மழை பெய்து கொண்டிருந்தது. டமால் என்று இடிச்சத்தம். நல்ல தூக்கத்தில் இருந்த கதிர் சட்டென்று விழித்தான். தாகம். பக்கத்தில் தண்ணீர் இல்லை.

மேகலாவும், கிருத்திகாவும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். இரண்டு அடுக்கு வீடு.

மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கினான். யாரோ அவனைப் பின்தொடர்வது போல ஒரு உணர்வு. சட்டென்று அவனைச் சுற்றி பிஸ்கெட் வாசனை. கிருத்திகா பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, இங்கு எங்கேயோ போட்டிருக்கலாம் என்று நினைத்தவாறே கீழே இறங்கினான்.

பிஸ்கட் வாசனையும், யாரோ ஒருவர் பின்தொடர்வதும் நிற்கவில்லை. வேகமாகச் சென்று ஹால் விளக்கைப் போட்டான்.

மனதில் சிறு பயம். அப்பா விரும்பிப் போடும் அதே பிஸ்கெட் பர்ஃப்யூம் வாசனை. சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. வாசனையும் தெரியவில்லை. மனப்பிரமை என்று நினைத்துக் கொண்டு ஃப்ரிட்ஜைத் திறந்தான். பளிச்சென்று எரியும் ஃப்ரிட்ஜ் பல்ப் ஐந்தாறு முறை அணைந்து எரிந்தது.

மீண்டும் அதே வாசனை.

கதவை மூடிவிட்டுச் சுற்றிப் பார்த்தான். வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் கதவைத் திறந்து, வாட்டர் பாட்டிலில் இருந்து 'க்ளக் க்ளக்' என்று தண்ணீர் குடித்த அவசரத்தில் ஒரு பயம் தெரிந்தது.

ஹால் விளக்கை அணைத்துவிட்டு மாடிக்குச் செல்லத் திரும்பும்பொழுது சமையலறை அருகில் ஏதோவோர் உருவம் வெள்ளையாகத் தெரிந்தது. உருவத்தின் வடிவம் தெளிவாக இல்லை. சற்று முன்னர் அணைத்த விளக்கு, ஐந்தாறு முறை அணைந்து எரிந்தது.

அந்த வெளிச்சத்தில், அந்த உருவத்தின் நெஞ்சிலிருந்த லாக்கெட் வேகமாக ஆடியது நன்கு தெரிந்தது. பிஸ்கெட் பர்ஃப்யூம் மூக்கைத் துளைத்தது. கையை அசைத்து அந்த உருவம் அவனைத் தன் பக்கம் வரச்சொல்லிக் கூப்பிட்டது. அன்றுமட்டும் கதிர் நூறு மீட்டர் ரேஸில் ஓடியிருந்தால் ஹுசைன் போல்ட் மண்ணைக் கவ்வியிருப்பார்!

கங்காருபோலத் தாவி, தன் ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரவு நேரத்தில் ரூமைவிட்டு வெளியே வருவதேயில்லை!

ஒரு வாரம் ஓடியது. கதிர் கிருத்திகாவைக் கூட்டிக்கொண்டு எங்கோ வெளியே சென்று இருந்தான்.

மேகலா கிச்சனில், ராஜாவின் "பூங்கதவே தாள் திறவாய்" பாட்டைக் கேட்டுக்கொண்டே காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்தாள். கத்தியை மேடையில் தள்ளி வைத்துவிட்டு, நறுக்கிய காய்கறிகளை வாணலியில் சேர்த்து வதக்க ஆரம்பித்தாள்.

சற்று மூடிய நிலையில் இருந்த கிச்சன் கதவு 'க்ரீச்' எனத் தாள் திறந்தது! திடீரென்று பிஸ்கெட் பர்ஃப்யூம் வாசனை. மேகலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் பிஸ்கெட் எதுவும் இல்லை! கிருத்திகாவும் வீட்டில் இல்லை.

சட்டென்று மேடையில் இருந்த கத்தி இரண்டு முறை சுற்றி நின்றது. சமையலறை குழாயிலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொட்டி நின்றது. இது அதிக நீரழுத்தம் காரணமாக இருக்கலாம். மற்ற விஷயங்கள் எப்படி? அவளது இதயத்துடிப்பு எகிறியது. மூடிய கிச்சன் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பும் பொழுது, அவள் கண்ட காட்சி....

வாணலியின் வெந்துகொண்டிருந்த காய்கறியில் எழும்பிய நீராவி நடுவே 'ஆவி உருவம்' ஒன்று. முதலில் அதை மனப்பிரமை என நினைத்தாள். ஆனால் வெள்ளை சட்டை, வேட்டி கட்டிய மனித உருவம் அதில் தெரிந்தது. 'ஸ்டார் வார்ஸ்' படங்களில் வரும் ஹாலோகிராம் 3D காட்சி போன்று இருந்தது. சிறிய லாக்கெட் வேகமாக அதன் கழுத்தில் ஆடியது.

மீண்டும் சுற்றிய கத்தி, குழாயில் தண்ணீர் மற்றும் அணைந்து எரியும் சமையலறை விளக்கு! மேகலா கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த மொபைல் ஃபோனை எடுத்துக்கொண்டு, பூஜை அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

சிறிது நேரத்தில், கதிர் வந்தான். குழந்தையை வேறோர் அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, சமையலறைக்கு அவனைக் கூட்டிச் சென்றாள். அவள் ஏதோ சொல்வதற்கு முன், கதிர் "அப்பாவைப் பார்த்தியா? பிஸ்கெட் பர்ஃப்யூம் வாசனை, லாக்கெட், சம்பந்தம் இல்லாத ஏதாவது நடந்துச்சா" எனக் கேட்டான்.

அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"உனக்கு எப்படி?" என்று திகிலுடன் கேட்டாள்.

நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் அவளிடம் சொன்னான் கதிர். அவனை அடிக்காத குறையாக சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

"ஏன், இதைப்பத்தி என்கிட்ட சொல்லலை. ஒரு செகண்ட் என் ஹார்ட் நின்னுபோச்சு தெரியுமா?" என்று சொல்லிவிட்டு, விக்கி, விக்கி அழுதாள். கதிருக்கு அவளைச் சமாதானம் செய்யக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது.

"கதிர், நாம எங்க அப்பா வீட்டுல போய் ஒரு வாரம் இருக்கலாம், நாளைக் காலையில கிளம்புறோம்" என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்தாள்.

★★★★★


தூத்துக்குடி. மேகலாவின் வீடு.

"கதிர், நீங்க அப்பா காரியம் சரியா செய்யாததுனால இப்படி நடக்குதோ?" எனக் கேட்டார் மேகலாவின் தந்தை வாசுதேவன்.

"இல்ல அங்கிள், உங்களுக்குதான் அவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமில்ல? அவர் கூட்டிகிட்டு வந்த அந்தப் பொம்பள நாங்க வாழ்ந்த வீட்டுலதான் இருக்கிறாள். நான் என் கடமையைச் சென்னைக்கு வந்ததும் ஐயரை வச்சு பண்ணிட்டேன்" என்றான் விரக்தியோடு.

"ஓ, அப்படியா. எதுக்கும் ஒரு படையல் போட்டுவிட்டு, நமக்குத் தெரிஞ்ச ஒரு ஜோசியரையும் பாத்துடுவோம்" என்றார்.

"எனக்கு இருக்கற பிரச்சனையில இது வேற தேவையா அங்கிள்? பிஸினெஸ்ல பெரிய நஷ்டம். இன்னும் ஒரு மாசத்துல நான் 50 லட்சம் பாங்குல கட்டியே ஆகணும்" என்று சொல்லி வருத்தப்பட்டான்.

மறுநாள். ஜோதிடர் வீடு.

அவர் ஆவிகளுடன் பேசும் சக்தி உள்ளவர் என்ற நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருந்தது. சினிமாவில் வரும் மந்திரவாதிபோல் அவர் இல்லை. நெற்றியில் திருநீறு, வெள்ளைச் சட்டை, ஐயப்பன் மலைக்குச் செல்லும் பக்தர்கள் அணிவதுபோல காவி வேட்டி. பார்க்க ஒல்லியாக ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் போலத்தான் இருந்தார். ஆனால் தலையில் நிறைய முடி!

"தம்பி, என் பெயர் குருசாமி. நான் ஒரு ஜோசியன்தான். ஆவிகள் கிட்டேயும் பேசுவேன். பில்லி சூனியம், ஏவல் எல்லாம் எடுக்கற ஆள் இல்லை. ஐயா ஃபோன்ல எல்லாம் சொன்னாரு. வாங்க உள்ள போவோம்" என்றார். கதிர் நம்பிக்கையில்லாமல் அவரைப் பின்தொடர்ந்தான்.

வீட்டின் உள்ளே ஒரு குறுகலான அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். இருண்ட அறை. மின்விசிறி இல்லை. ஓட்டில் இருந்த துளைகளின் வழியே ஆங்காங்கே சூரியவெளிச்சம் ஊசி ஊசியாக உள்ளே வந்தது.

அவர் ஒரு சிறிய பலகையில் அமர்ந்தார். கதிரும் வாசுதேவனும் எதிரில் அமர்ந்தனர். அவர்களுக்கு நடுவே ஒன்றின் உள்ளே ஒன்றாக இரண்டு வட்டங்கள். வெளி வட்டத்திற்கும், உள் வட்டத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு அங்குலம் இடைவெளி இருக்கும். உள் வட்டத்திற்குள் ஒரு நட்சத்திரம் வரையப்பட்டு இருந்தது. நட்சத்திரத்தின் விளிம்புகள், வட்டத்தைத் தொட்ட இடங்களில் சில சோழிகள். அதன் நடுவில் அசாதாரண வடிவில், கறுப்புக்கயிறு கட்டிய ஒரு கல். வட்டத்தைச் சுற்றிலும் எண்ணெயில் எரியும் விளக்குகள். வேறு எந்த வெளிச்சமும் இல்லை. அந்த இருட்டும், காட்சி அமைப்பும் கதிரின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

குருசாமி கதிரைப் பார்த்து, அப்பாவுக்குப் பிடித்த பாதாம் அல்வாவைக் குறியீட்டின் பக்கத்தில் வைக்கச் சொன்னார்.

"தம்பி, என்னைப்போல ஆவிகளுடன் பேசறவங்க, ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையிலதான் இதைச் செய்யறாங்க. இது என் தாத்தா எனக்குக் கற்றுக்கொடுத்த முறை. இறந்தவர்களுடன் தொடர்புகொள்வது மூலம் நான் மரணம் என்பது ஒரு மாற்றம் மட்டுமே என்பதை உணர்ந்தேன். அந்த உடம்பில் இருந்த சக்தி, அதாவது ஆத்மா ஒருபோதும் இறப்பதில்லை. அவங்க நம்மகூடத்தான் இருக்காங்க, நம்மளைப் பாத்துக்கிட்டேதான் இருக்காங்க. நான் அவங்களை இங்க கூட்டிக்கிட்டு வரது, நீங்க அவங்கமேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என்பதைப் பொறுத்தும் இருக்கு" என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

கதிரின் அப்பாவைப்பற்றிச் சொல்லுமாறு கேட்டார். கதிர் சொல்லச் சொல்ல சோழிகளை வேகமாக நகர்த்தினார். அவர் நகர்த்த நகர்த்த, அந்த இடத்தில் குப்பென்று பிஸ்கெட் பர்ஃப்யூம், ஆனால் அந்த வாசனை சில வினாடிகளே நீடித்தது. சில வினாடிகளுக்குப் பிறகு அவர் கண்களைத் திறந்து கதிரைப் பார்த்து "தம்பி, அவர்மேல் உள்ள கோபம் உங்களுக்கு இன்னும் போகலைன்னு நெனைக்கிறேன். அவர் லாக்கெட் மட்டும்தான் வந்தது. ஊர்ல இருக்கற வீட்டுக்கு உங்களை வரச் சொல்லறாரு. வேற ஒண்ணும் சொல்லலை" என்று சொல்லி முடித்தார்.

★★★★★


அன்று சென்னைக்குக் கிளம்பும் நாள். பின்வாசலில் கிருத்திகா பக்கத்து வீட்டுப் பையனுடன் பந்து வைத்து விளையாடிக் கொண்டு இருந்தாள். ஹாலில் இருந்து வீட்டின் பின்பக்கம் தெரியும். அவள் விளையாடுவது தெரிந்தது. அந்தப் பையன் தெரியவில்லை.

"கதிர், நீங்கள் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க?" எனக் கேட்டார் வாசுதேவன்.

"மேகலா லால்குடிக்கு போகலாம்னுதான் சொல்லறா. அவள் பார்த்தது மாமாதான் என நம்புகிறாள். எனக்கு அங்கே போகப் பிடிக்கலை. ஒருவேளை மனப்பிரமையோ என்று தோணுது. அந்த ஜோசியர்மேல எனக்கு நம்பிக்கை இல்லை. நாம சொன்னதையே, திருப்பிச் சொல்லிட்டாருன்னு நினைக்கிறேன்" என்று பிடிவாதமாய்ச் சொல்லும்பொழுதே முன்வாசலை எதார்த்தமாகப் பார்த்தான்.

பக்கத்து வீட்டுப் பையன் மிதிவண்டியில் போய்க்கொண்டு இருந்தான். பின்பக்கத்தில் கிருத்திகா யாருடனோ பேசியபடி விளையாடிக் கொண்டு இருந்தாள். தூக்கிவாரிப் போட்டது. அவள் பெயரைச் சொல்லிக்கொண்டே கதிர் பின்பக்கம் ஓடினான். பயத்துடன் மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். வேறு யாரும் அங்கு இல்லை. சுவரும் கிடையாது. பந்து எப்படித் திரும்பி அவளிடமே வந்தது என்று குழம்பிப் போனான்.

"பாப்பா, யாரோட விளையாடிக்கிட்டு இருந்த?" எனத் தன் பதட்டத்தை வெளியே காட்டாதவாறு கேட்டான்.

"அப்பா, நம்ப 'லாக்கெட்' தாத்தாவோடதான்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவர்களுக்கு பயத்தில் கால் நடுங்கியது. கதிருக்குப் பேச்சு சரியாக வரவில்லை. மேகலா குழந்தையைப் பார்த்து, "என்னடி சொல்லறே, பக்கத்து வீட்டுப் பையனோடதானே விளையாடிகிட்டு இருந்தே" எனக் கேட்டாள்.

"அவன் கிரிக்கெட் விளையாட அப்பவே போயிட்டான். தாத்தாதான் எனக்குக் கம்பெனி கொடுத்தாரு. தாத்தா என்கிட்ட, அப்பா என்மேல ரொம்ப கோவமா இருக்கான், ஒரு தடவை லால்குடி வீட்டுக்கு வரச்சொல்லுன்னு கெஞ்சிக் கேட்டாரு. பாவம் தாத்தா, வாப்பா போகலாம்" என்று கெஞ்சினாள்.

மேகலா கதிரை முறைத்துப் பார்த்தாள். அதில் ஆயிரம் அர்த்தங்கள். அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அடுத்த நாள் காலையில் எல்லோரும் லால்குடி வீட்டில் ஆஜர்!

★★★★★


லால்குடி வீடு. சிறிய மர அலமாரியில் லோகநாதனின் படம் லாக்கெட்டுடன் சற்றுச் சாய்வான கோணத்தில் மாட்டப்பட்டு இருந்தது. கதிர் 'இப்ப எதுக்கு என்னைய இங்க வர வச்ச?' என்று கேட்பதுபோல அந்தப் படத்தையே பார்த்தான். 'என்ன அவசரம் உனக்கு, பொறுமையாக இரு' என்று லாக்கெட் சொல்வதுபோல அவனுக்குத் தோன்றியது. பயத்துடன் கவனத்தை வேறுபக்கம் திருப்பினான்.

"தம்பி கதிர், காபி எடுத்துக்க" என்றாள் ராதா. நல்ல உயரம், மாநிறம், கிட்டத்தட்ட அம்மாவின் வயது இருக்கும். ஆனால் அவளை அவன் அம்மாவின் இடத்தில் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்த வீட்டில் அவள் இருப்பது இன்னும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மேகலா வந்த விஷயத்தை விவரமாகச் சொன்னாள்.

"இருங்க, இப்ப வரேன்" என்று சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்றாள். அவனது அப்பா, அம்மா இருந்த அறை, அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறியது. மேகலா அவன் கையைப் பிடித்துக்கொண்டு, கண்களால் சமாதானம் செய்தாள்.

திரும்பி வந்த ராதாவின் கைகளில் ஏதோ ஒரு பத்திரம்.

"அவர் சொத்து எல்லாம் எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்கங்க" என்றான் கோபத்துடன்

"நீ முதல்ல இந்த பத்திரத்தைப் படிப்பா" என்றாள் பொறுமையுடன்.

கதிர் அதைப் படிக்க ஆரம்பித்தான். அவன் பிறப்பதற்குமுன் எழுதப்பட்ட வாடகைத் தாய் ஒப்பந்தப் பத்திரம். அப்பா அம்மாவுடன் அமெரிக்காவில் இருந்த சமயம் அது. குழந்தைக்கும், ராதாவுக்கும் எந்த உயிரியலான தொடர்பும் இல்லை என அதில் எழுதி இருந்தது. கதிருக்குப் பேய் அறைந்ததுபோல இருந்தது. ராதா அவனின் கர்ப்பகால வாடகைத் தாய்!

"தம்பி, என் வீட்டுக்காரர் அமெரிக்காவில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் சமையல்காரராக வேலை பார்த்தாரு. என் கெட்டகாலம் அவர் போய்ச் சேர்ந்துட்டாரு. உங்க அப்பா அம்மா தங்கி இருந்த விருந்தினர் மாளிகையில் நான் வேலைக்குச் சேர்த்தேன். உங்க அம்மாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அந்த சமயத்துல அமெரிக்காவுல வாடகைத் தாய் என்ற விஷயம் ரொம்ப பிரபலமாகிக் கொண்டிருந்தது. உன் தந்தையின் விந்துவின் மூலம், என் கருவில் செயற்கையாகக் கருத்தரிக்கப்பட்டு நீ உருவானாய். உங்க அப்பா, அம்மாவை தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. எனக்குப் பணம் கொடுத்தாங்க. நான் வாடகைத் தாய்தான் என்றும், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சட்டரீதியா ஒப்பந்தம் போட்டாங்க" என்றாள் ராதா கண்ணீருடன்.

"அமெரிக்காவுல இருந்த நீங்க எப்படி இந்த ஊருல? எப்படி மாமாவை சந்திச்சீங்க, உங்களுக்கும் லாக்கெட் மாமாவுக்கும்..." எனப் பல கேள்விகளை அடுக்கினாள் மேகலா.

பொறுமையாக அவளைப் பார்த்த ராதா "இரும்மா, நான் சொல்லறேன். அவங்க இந்தியாவுக்கு வந்து சில வருஷம் கழிச்சு நானும் இங்க வந்து செட்டில் ஆய்ட்டேன். அதுக்கு அப்புறம் அவங்களை நான் பார்க்கவில்லை. ஒரு தடவை சென்னைக்கு ஏதோ ஒரு வேலையா வந்த உங்க அப்பா, நான் ஒரு டெலிஃபோன் பூத்ல வேலைபார்க்கிறதைப் பார்த்து ரொம்பக் கஷ்டப்பட்டாரு. என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டு வந்து சிமென்ட் தொழிற்சாலையில ஒரு வேலையும், வாடகைக்கு வீடும் செட் பண்ணிக் கொடுத்தாரு" என்று சொல்லிவிட்டுக் கதிரைப் பார்த்தாள்.

"தம்பி கதிர், உங்க அப்பா மூலமா என் வயித்துல செயற்கையா நீ உருவானே. என் கணவர்மூலமா எனக்கு வேற எந்த வாரிசும் உருவாகலை. அவர் வாரிசைச் சுமந்த நான் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சாரு. எனக்கும், உங்க அப்பாவுக்கும் இடையில ஒரு நல்ல நட்புத்தான் இருந்துச்சு. தன்னோட பிள்ளையை வயித்துல சுமந்ததாலே, உங்க அப்பாவுக்கு நன்றி உணர்ச்சி. அவ்வளவுதான், ஆனால் நீ..." மீதியைச் சொல்லி முடிக்க முடியாமல், பக்கத்தில் இருந்த சொம்பில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தாள். அவள் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டான்.

"அப்ப அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எதுனால பிரச்சனை?" என்று வாடகைத் தாயிடம் கேட்கும்போது 'அம்மா' என்ற வார்த்தையில் உள்ள சங்கடத்தை உணர்ந்தான்.

மனதில் சிறிது வருத்தம் இருந்தாலும் அதைக் காண்பிக்காமல் ராதா அவனைப் பார்த்து "கதிர், உங்கம்மா எங்க நான் உன்கிட்ட இதைப்பத்தி சொல்லிடுவேனோன்னு பயந்தாங்க. அதுனாலதான் அவங்களுக்குள்ள ஒரு வாக்குவாதம். அப்பா என்னைய இரண்டு இல்ல மூணு தடவை வந்து பார்த்தப்ப, ஊர்க்காரங்க உன்கிட்ட ஏதோ என்னையப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. உங்க அப்பாவால என்ன விஷயமுன்னு உன்கிட்ட சொல்லமுடியாது. உங்க அம்மா சாதாரணமாத்தான் இறந்து போனாங்க" என்றாள்.

"அம்மா. அவரை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்" என்று கதறியபடி அவள் காலில் விழுந்தான்.

"கதிர், எழுந்திரு, உனக்கு உங்க அப்பாமேல ரொம்ப பாசமுன்னு பல தடவை சொல்லியிருக்காரு. உங்க அம்மா போன பின்னாடி நீ அவர்கிட்ட பேசவே இல்லை. பேச முயற்சித்தாலும் நீ அவரைக் கண்டுக்கவேயில்லை. அவர் செத்துப்போறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, இந்த ஒப்பந்தப் பத்திரத்தையும், லாக்கெட்டையும் உன்கிட்ட கொடுக்கச் சொன்னாரு. அதுமுடிய இந்த வீட்டுல என்னைய இருக்கச் சொன்னாரு" என்று சொல்லிவிட்டு மாடத்தில் இருந்த லாக்கெட் லோகநாதன் படத்தையும், லாக்கெட்டையும் அவனிடம் கொடுத்தாள்.

"எனக்கு பிசினஸ்ல கிட்டத்தட்ட 50 லட்சம் நஷ்டம். அந்தச் சமயத்துல இந்தப் பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டேன். அம்மா போனதுக்கு அப்புறம் கேள்விப்பட்டதுனால ஒழுங்கா விசாரிக்கவும் இல்லை, என் தப்புதான். அவராலே இதைச் சொல்லவும் முடியாது. நான் நடந்துக்கிட்டது தப்புதான்" என்று அப்பாவின் படத்தைப் பார்த்து அழுதான். லாக்கெட் அவனை மன்னித்ததுபோல ஆடியது!

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா வீட்டின் உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு பந்து. "அப்பா, கேட்ச் இட்" என்று சொல்லிக்கொண்டே வேகமாகப் பந்தை அவன்பக்கம் எறிந்தாள். அந்தப் பந்து அவன் கையிலிருந்த லாக்கெட்மீது பட்டு எங்கோ பறந்து சென்றது.

பட்ட வேகத்தில் லாக்கெட் தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் இரண்டாகப் பிளந்து உள்ளேயிருந்து ஏதோ சில கற்கள் நாலாபக்கமும் தெறித்து ஓடின.

கதிர் அவற்றை எடுத்துக் கைகளில் வைத்துக் கூர்ந்து பார்த்தான்.

கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மதிப்புள்ள, அவனது பரம்பரை வைரங்கள், பளபளவென மின்னின!
மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா
More

நிதானம் பிரதானம்
Share: 




© Copyright 2020 Tamilonline