Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | முன்னோடி | அஞ்சலி | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
சாதனையாளர்
யூட்யூபில் சாதனை படைக்கும் 'தமிழ்ப்பையன்' சித்தார்த் ராகவன்!
- ராஜி ராமச்சந்திரன்|மார்ச் 2022|
Share:
"ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே" - இது பாரதி கண்ட கனவு. உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தங்கள் சாதனைகளின் மூலம் இக்கனவை நனவாக்கி வரும் இளம் தமிழர்களில் ஒருவர் நம் 'தமிழ்ப்பையன்' சித்தார்த் ராகவன். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் வசிக்கும் இவர் ஒன்பதாவது படிக்கும் மாணவர். 'தமிழ்ப்பையன்' என்ற தமது யூட்யூப் அலைவரிசை (YouTube Channel) மூலம் தமிழில் பல தரமான காணொளிகளைத் தந்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.



"வணக்கம் நான் உங்கள் தமிழ்ப்பையன். என்றென்றும் உங்கள் நண்பன்" என்று அழகு தமிழில் அசத்தும் இவர், பொழுதுபோக்கு மட்டுமல்லாது சுற்றுலா, கல்வி, அறிவியல், வரலாறு மற்றும் சமையல் பற்றிய காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். படிப்பில் படுசுட்டியான இவரது ஆர்வத்தைப் பாராட்டி இவரது தலைமை ஆசிரியை இவர் படிக்கும் பள்ளியைப் பற்றிய காணொளி அமைக்க அனுமதி வழங்கினார். அமெரிக்க அரசுப் பள்ளியைப் பற்றிய பல தகவல்களைத் தரும் அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கொரோனா காலத்தில் நேரில் சென்று பள்ளியைப் பார்வையிட முடியாத பல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இந்தக் காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அமெரிக்காவின் சுற்றுலாத் தலங்கள், அறிவியல் ஆய்வுகள், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிப் பாடத்தேர்வு, பயிலும் முறைகள் மற்றும் இந்நாடு குறித்து நாம் அறியவேண்டிய பல அரிய, சுவையான தகவல்களைக் கருத்தாழமும் நகைச்சுவையும் ததும்ப, எல்லா வயதினரும் ரசிக்கும் வகையில் இவர் வழங்குகிறார்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் நூறு காணொளிகளை அளித்துள்ள இவரது யூட்யூப் அலைவரிசை, அண்மையில் 104,000 சந்தாதாரர்களைத் தாண்டி நடைபோடுகிறது. இதைப் பாராட்டி யூடுப் நிறுவனம் இவருக்கு 'வெள்ளிப் படைப்பாளி' விருதை வழங்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் பொழுபோக்குகாகவே என்ற கருத்தை மாற்றி, இவற்றை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குப் பயனுள்ளதாக்க முடியும் என்று தமது காணொளிகள் மூலம் நிரூபித்து, சாதிக்கத் துடிக்கும் பல இளம் மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் ஊக்கம் தருபவராகவும் திகழ்கிறார்.

உயிரியலில் ஆர்வம் கொண்ட இவர், மரபியல் ஆராய்ச்சியாளர் ஆவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்திருக்கிறார். ஓவியம் வரைதல், தற்காப்புப் பயிற்சி, நீச்சல், காணொளித் தயாரிப்பு என்று சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் வார இறுதிகளில் அமெரிக்காவில் உள்ள லட்சுமி தமிழ்ப் பள்ளியில் தமிழ்க்கல்வி பயிலவும் மறக்கவில்லை.



"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்". உலகெங்கிலும் தமிழின் பெருமையை நிலைநாட்டும் 'தமிழ்ப்பையன்' போன்ற சீர்மிகு சிறார்களின் சாதனைகள் தமிழ்த்தாயை நிச்சயம் பெருமை கொள்ளச் செய்யும். இவரது யூட்யூப் அலைவரிசையில் அமெரிக்காவைப் பற்றிய சுவையான விஷயங்களை மேலும் பார்க்க.
ராஜி ராமச்சந்திரன்,
அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline