|
|
|
"ஸ்ரீ சண்முகம் பிள்ளை என்ற இலக்கண வித்துவான் வந்தேமாதர மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். இவருக்கு இலக்கண ஆராய்ச்சியே உயிர். இவர் வேறொன்றையும் கவனிப்பதில்லை. இப்போது பாரததேவி இவருடைய சிந்தையையும் மாற்றிவிட்டாள். பாரததேவியின் தெய்வீக விழிகளினின்றும் உதிரும் கண்ணீர் இவரது நெஞ்சை உருக்கி எமது தாய்க்கு அடிமையாக்கிவிட்டன. இது ஆகுபெயரா, அன்மொழித் தொகையா, தொல்காப்பியத்திற்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா பொருந்தாதா என்பது போன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றி வைத்துவிட்டு இந்த வித்துவான், விடுதலைப்பாட்டு இயற்றத் தொடங்கிவிட்டார். கல்வித்தாய்க்கு மட்டிலுமே இதுவரை வழிபாடு இயற்றி வந்த இவர், இப்போது பூமித்தாய்க்குத் தொண்டு புரிவது அதைக்காட்டிலும் உயர்வாகுமென்பதை அறிந்துகொண்டார். இதுவெல்லாம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இதுவெல்லாம் காலமாறுபாட்டை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்றது" இவ்வாறு மகாகவி பாரதியாரால் பாராட்டப்பெற்றவர் அரசஞ்சண்முகனார். அவ்வாறு பாராட்டைப் பெற்ற பாடல் "அந்தா மரையய நந்தா வுருவுட நன்பா னீருண" எனத் தொடங்கும் வந்தேமாதரப் பாடல். பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டதோர் அறிவிப்பைப் பார்த்து, அக்காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான 'விவேகபாநு' இதழில் இப்பாடலை எழுதியவர்களில் ஒருவர் அரசஞ்சண்முகனார்; மற்றொருவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர். பாரதியார் வாழ்ந்த காலத்தில், பாரதியைத் தொடர்ந்து 'வந்தேமாதம்' பாடலை எழுதியவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே!
செய்யுள், இலக்கணம், உரை விளக்கம், பதிப்பு, நூலாராய்ச்சி, சொற்பொழிவு எனப் பல திறன்களைக் கொண்டிருந்த அரசஞ்சண்முகனார், மதுரையை அடுத்த சோழவந்தானில், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு, செப்டம்பர் 15, 1868ல் மகனாகப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி முடிந்தது. கிண்ணிமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பதினான்காம் வயதில் 'சிதம்பர விநாயகர் மாலை' என்ற நூலைப் பாடி, ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சிறுசிறு செய்யுள்களை இயற்றியும், சித்திரக்கவிகளை வரைந்தும் தமது அறிவை மேம்படுத்திக் கொண்டார். பதினாறு வயதானபோது தந்தை காலமானார். குடும்பம் நிலைகுலைந்தது. கல்வி தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பை ஏற்ற சண்முகனார், தமிழ்ப் பணியோடு உழவுப்பணியையும் மேற்கொண்டார்.
'விவேகபாநு' ஆசிரியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அதனையடுத்துப் பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இக்காலகட்டத்தில் 'மாலைமாற்று மாலை' என்ற நூலை இயற்றினார். ஒரு பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் மாறாமல் அதே அரும்பொருள் கொண்டதாக இருக்கும் வகையில் பாடப்படுவதே மாலைமாற்று. இந்நூல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. 1886ல் காளியம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்குப் பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்து மதுரை சேதுபதி உயர்பள்ளியில் தமிழாசிரியர் பணி ஏற்றார். ஓய்வுநேரத்தில் இலக்கணம், இலக்கியம், மொழி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். இக்கால கட்டத்தில் 'ஏகபாத நூற்றந்தாதி', 'நவமணிக்காரிகை நிகண்டு' உள்ளிட்ட சில நூல்களை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த சண்முகனார், பள்ளியின் தலைமையாசிரியர் ஆங்கிலப்பாடத்துக்கான நேரத்தைக் கூட்டியும், தமிழ்ப்பாடத்துக்கான நேரத்தைக் குறைத்தும் அமைத்ததால் சினம் கொண்டார். தலைமை ஆசிரியரிடம் அது குறித்து விவாதிக்க, அவர் ஏற்காததால் மனம் வருந்தி, பணியிலிருந்து விலகினார். மீண்டும் உழவுத்தொழிலை மேற்கொண்டார்.
1901ம் ஆண்டில், தமிழ் வளர்ச்சிக்காக வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் துவங்கினார். அதில் கலந்துகொள்ள அரசஞ்சண்முகனாருக்கு அழைப்பு வந்தது. தாம் முன்னர் பாடியிருந்த 'மாலைமாற்று மாலை' என்னும் நூலை விரிவாக்கி அதனைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். பல்வேறு வகைமைகளில் அவர் அதில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் கடவுள் வாழ்த்திலிருந்து ஒரு பாடல்.
"வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ நாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா வீறுத வேயவ மானம வாவல மேலறவே
இந்தப் பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் ஒன்றாகவே இருக்கும். பாடலின் பொருள்: வேறு – (யாம் நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும், மனம் – இதயம், ஆ - ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின் கண, நாறு – தோன்றும், சமா – நடுவு நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர – ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை, மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும், நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும், அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு – நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ - அசை).
முருகப் பெருமான்மீது பாடுவதான இந்த மாலைமாற்று என்னும் பனுவல் இடையூறு ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார். அரிய பொருள் கொண்ட இவ்வகைப்பாடல்கள் இவரது மேதைமையைப் பலரும் அறிந்துகொள்ளக் காரணமாயின. |
|
பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்ச்சிக்காக 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை' உருவாக்கினார். நாராயணையங்கார், ரா. ராகவையங்கார் ஆகியோர் கலாசாலைத் தலைவராகவும், நூற்பதிப்பு ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு ஆசிரியராகச் சேர்ந்தார் அரசஞ்சண்முகனார். உ.வே. சாமிநாதையர், மு. ராகவையங்கார், மு.ரா. அருணாசலக் கவிராயர் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் இவர் திறனறிந்து நட்புக் கொண்டனர். அங்கு பணியாற்றி வந்த காலத்திலும் விவேகபாநு இதழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். 'இன்னிசை இருநூறு', 'திருக்குறளாராய்ச்சி' போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. 'செந்தமிழ்', 'தமிழ்ப்பொழில்', 'ஞானசாகரம்', 'ஞானசித்தி' எனப் பல இதழ்களில் 'சோழவந்தானூர் சண்முகம்பிள்ளை' என்ற பெயரில் கட்டுரைகள் எழுதிவந்தார். இதே காலகட்டத்தில் திருமயிலை சண்முகம் பிள்ளை என்ற தமிழறிஞரும் பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க விரும்பிய சண்முகனார், தன் பெயருடன் தந்தையார் பெயரை இணைத்து 'அரசஞ்சண்முகனார்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
ஒருசமயம் திருவாவடுதுறை மடத்தின் தலைவரான அம்பலவாண தேசிகரைச் சந்தித்தார் அரசஞ்சண்முகனார். இவரது திறமையைப் பெரிதும் போற்றிய தேசிகர், "சண்முகம் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர். நீங்கள் 'அரசஞ்சண்முகனார்' என்பதால் முருகனுக்கு அரசர் என்றாகிறதே! இது தற்புகழ்ச்சியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிறதே!" என்றார். உடனே சண்முகனார் அதற்கு, "ரசம் சண்முகன் என்றால் வீரம், சுவை, ஒளி, ஞானம் ஆகியவற்றைத் தன்பாற் கொண்ட முருகன் என்று பொருள் தரும். அ-ரசஞ்சண்முகன் என்று ரசத்திற்கு முன் அகரம் சேர்த்தால், அவை எதுவுமில்லாத சண்முகன் என்னும் எதிர்மறைப் பொருளை தரும். ஆகவே தான் அவை ஏதுமில்லாத நான் அப்பெயரைச் சூட்டிக்கொண்டேன்" என்றார் தன்னடக்கத்துடன். அவரது உரையாடல் திறனைக் கண்டு வியந்தார் தேசிகர்.
இவ்வாறு பரந்துபட்ட மேதைமை கொண்டிருந்த சண்முகனார் காட்சிக்கு எளியவர், ஆடம்பரமில்லாதவர். தனது மேதைமையைப் பிறரிடம் தானாகக் காட்டிக்கொள்ளாதவர். நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு சிறு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவி படிந்த மீசை; மெலிந்த உடம்பு என்று ஓர் ஏழை விவசாயியின் தோற்றம் கொண்டவர். ஒருசமயம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார் சண்முகனார். தமிழறிஞர்கள் பலரும் அங்கே கூடியிருந்தனர். விருந்துண்ணும் வேளை வந்தது. புலவர் ஒருவர் "ஆளுக்கொரு வெண்பாப் பாடலாமே!" என்றார். மற்றொரு புலவர், "சண்முகனார்தான் ஈற்றடி தரவேண்டும்" என்றார். 'ராமாநுசம்' என்பவர் அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், அவரைக் கௌரவிக்கும் வகையில் சண்முகனார், "சம் ராமாநுசம்" என்பதை ஈற்றடியாக வைத்து வெண்பாப் பாட வேண்டும்; அதுவும் அங்கு பரிமாறப்படும் உணவுப் பொருள்களையே வைத்துப் பாடவேண்டும்" என்றார். புலவர்களும் ஒப்புக்கொண்டனர். சில புலவர்கள் என்ன பாடுவது, எப்படிப் பாடுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.
ஒரு புலவர் பாடலைப் பாடி "ர சம் ராமாநுசம்" என்று வெண்பாவை நிறைவு செய்தார். மற்றொரு புலவர் "பாய சம் ராமாநுசம்" என்று முடித்தார். இன்னொருவர் "அதி ரசம் ராமாநுசம்" என்று பாடினார். பலரும் உணவுப் பண்டங்களைப் பொருந்தும் வகையில் அமைத்து பாடலைப் பாடி முடித்தனர். இறுதியாக அங்கு நிபந்தனைப்படி பாடுவதற்கு பாடப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் ஏதும் மீதமிருக்கவில்லை. அரசஞ்சண்முகனார் ஒருவர் மட்டுமே பாடவேண்டி இருந்தது. பரிசாரகர் ராமாநுசர் அரசஞ்சண்முகனாருக்குப் பரிமாற வந்தார். உடனே சண்முகனார், பாடலைப் பாடி "இன்னுங்கொஞ் சம் ராமாநுசம்" என்று வெண்பாவை நிறைவு செய்தார். "பரிமாறப்பட்ட பொருளையே இன்னும் கொஞ்சம் போடு" என்ற பொருளில் பொருந்தும் விதமாக அவர் பாடி முடித்த அழகை அனைவரும் வியந்து பாராட்டினர்.
சில ஆண்டுக் காலம் செந்தமிழ்க் கலாசாலையில் பணியாற்றிய சண்முகனார், உடல்நலக் குறைவால் பணி விலகினார். ஓய்வு நேரத்தை இலக்கண, இலக்கிய ஆராய்ச்சியில் செலவிட்டார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். 1905ல் வெளியான 'தொல்காப்பியப் பாயிர விருத்தி' இவரது மேதைமைக்கு மிக முக்கியமான சான்றாகும். பண்டைய உரையாசிரியர் சிவஞான முனிவரைப் பல இடங்களில் இவர் மறுத்துரைக்கிறார். 'திருக்குறட்சண்முகவிருத்தி' குறளுக்கு இவர் புதுமையான முறையில் எழுதிய விளக்கவுரையாகும். அதுபோல தொல்காப்பியரின் கருத்துக்கு மாறாக உரையெழுதிய உரையாசிரிகளின் கருத்தை மறுத்து இவர் எழுதிய 'தொல்காப்பிய நுண்பொருள் கோவை' எனும் நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். "உ ஊகார அவவொடு நவிலா" என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், "உகர ஊகாரங்கள் தாமே நின்றும், பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா" என்று எழுதியிருந்தார். அதனை மறுத்த சண்முகனார், "இதன்படிப் பார்த்தால் 'களவு, துறவு, துரவு' போன்ற சொற்கள் அமைந்திருப்பது தவறென்று ஆகும். நூற்பாவின் பொருள் இதுவல்ல" என்று மறுத்து, அதன் உண்மைப் பொருளை விளக்கி எழுதியிருக்கிறார். "உகரம் நகர ஒற்றுடன் கூடி 'நு' என்று மொழிக்கு இறுதியிலும், ஊகாரம் வகர ஒற்றுடன் கூடி 'வூ' என்று மொழிக்கு இறுதியிலும் வராது என்பதே நூற்பாவின் பொருள்' என்று விளக்கியிருக்கிறார்.
சண்முகனார் எழுதிய ஆகுபெயரா, அன்மொழித்தொகையா ஆராய்ச்சியும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
என்ற குறட்பாவில் வரும் 'கனங்குழை' என்ற சொல்லை அன்மொழித்தொகை என சிவஞான முனிவர் குறிப்பிட்டிருந்தார். பரிமேலழகரோ அதனை 'ஆகுபெயராக' வகைப்படுத்தி இருந்தார். இரண்டும் ஒன்று என்றும், வேறு வேறு என்றும் சில உரையாசிரியர்கள் எழுதியிருந்தனர். ஆகவே இதில் எது பொருத்தம் என்று ஆராய்ந்து தன் முடிவை வெளியிட்டார் சண்முகனார். (இதனையே பாரதியார் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்). இவ்வாறு பல இலக்கிய உரைகளுக்கு இவர் மறுப்பு நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, திருவடிப்பத்து, இசை நுணுக்கச் சிற்றுரை, வள்ளுவர் நேரிசை, நுண்பொருட்கோவை உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார். மதுரைக்கடவுள் வெண்பா, முருகக்கடவுள் கலம்பகம் போன்ற அச்சேறாத நூல்களும் உண்டு. மகாவித்துவான், பெரும்புலவர், இலக்கணக்கடல், இலக்கண வேந்தர் என்றெல்லாம் அக்கால அறிஞர்களால் போற்றப்பட்டவர் இவர். 1909ல் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரால் துவங்கப்பட்ட 'மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை'யை இவரே தலைமை தாங்கி நடத்தினார். கரந்தைச் தமிழ்ச்சங்கத் தோற்றத்துக்கு முன்னோடியாக தஞ்சையில் 'வித்தியா நிகேதனம்' என்ற பெயரில் ஒரு தமிழ்ச்சங்கம் அமையவும் இவர் காரணமாக அமைந்தார்
இவ்வாறு தமிழ், இலக்கண ஆராய்ச்சி, பக்தி இலக்கியம் இவற்றுக்காகவே தமது வாழ்நாளைச் செலவிட்ட அரசஞ்சண்முகனார், 1915ம் ஆண்டு ஜனவரி 11 அன்று 47ம் வயதில் காலமானார். தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடி அறிஞர் அரசஞ்சண்முகனார்.
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|