Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமணியம்
- பா.சு. ரமணன்|மே 2016|
Share:
அக்காலத்தின் பிரபல கர்நாடக இசைமேதைகளான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம் போன்றோரின் சமகால வித்வானாகப் புகழ்பெற்று விளங்கியவர் திரு. சாத்தூர் சுப்ரமணியம். இவர், 1916ம் ஆண்டில், திருச்சி மாவட்டம் ஆங்கரையில், கணேசன் - தைலம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். அண்ணாமலை பல்கலையின் இசைத்துறையில் பயின்று 1936ல் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். அங்கு இவரது ஆசிரியர்களாக டைகர் வரதாச்சாரியார், திருவையாறு சபேச ஐயர், தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை போன்றோர் இருந்தனர். சிறிதுகாலம் சாத்தூரில் தனது மாமாவுடன் இணைந்து கச்சேரிகள் செய்தார். அதனால் சாத்தூர் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டார்.

1937ல் தனது முதல் கச்சேரியை சங்கீதமேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்களது ஆசியுடன் திருவையாறு சத்குரு தியாகராஜ விழாவில் நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என்று பல மொழிப் பரிச்சயமும், உச்சரிப்புச் சுத்தமும், பாடல்களைப் பொருளறிந்து பாடும் வல்லமையும் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தன. ராகமாலிகைகளில் ராகம் தானம் பல்லவி பாடுவதில் மிகத் தேர்ந்தவராக இருந்தார். தஞ்சாவூர் சங்கரஐயரின் “யமுனா விஹாரா", மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "தயைபுரிய இன்னும் தாமதமா", கோபாலகிருஷ்ண பாரதியின் “இன்னமும் சந்தேகப்படலாமோ" போன்ற இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் ஒலிபெருக்கியின்றி இவர் நிகழ்த்திய பல கச்சேரிகள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன. பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், ஷிமோகா, ஒடிசா என இந்தியா முழுதும் பல நகரங்களில் கச்சேரிகள் செய்திருக்கிறார். கோவை ராமநவமி உற்சவத்தின் போது எப்போதும் முதல் கச்சேரி இவருடையதுதான். வெளிநாட்டுக் கச்சேரி மற்றும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்புகள் வந்தபோதும் தனது ஆசார அனுஷ்டான வாழ்க்கை முறையால் இவர் ஏற்கவில்லை. காஞ்சி மகாபெரியவர், சிருங்கேரிப் பெரியவர் என பல பீடாதிபதிகள் முன்னிலையில் பாடிப் பாராட்டுகள் பெற்றிருக்கிறார். அகில இந்திய வானொலியிலும் தொடர்ந்து கச்சேரிகள் நிகழ்த்தியிருக்கிறார்.

இவரது இசைக் கச்சேரிகளுக்குப் பக்கபலமாக இருந்த வயலின் மேதைகள் கும்பகோணம் ராஜாமணிக்கம் பிள்ளை, வி. சேதுராமய்யா, மைசூர் டி. சௌடையா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ருக்மிணி, கண்டதேவி அழகிரிசாமி, கோவை தக்ஷிணாமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் மிருதங்க வித்வான்கள் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை, உமையாள்புரம் சிவராமன், திருச்சி சங்கரன், கட மேதைகள் ஆலங்குடி ராமச்சந்திரன், விக்கு விநாயகராம் என பலரைச் சொல்லலாம். கச்சேரிகளுக்கு வரும் சன்மானத்தை நேர்த்தியாக பக்கவாத்தியக் கலைஞர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர் இவர். சுப்ரமணியம் அவர்களது முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர், அவருடைய மனைவி திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமணியம். இத்தம்பதிகளுக்கு நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள். மூத்தமகள் சிறந்தபாடகியும் இசையாசிரியையுமான திருமதி. லக்ஷ்மி சுந்தரம்.
சாத்தூராரின் இல்லம் எப்பொழுதும் இசையால் நிரம்பியிருக்கும். பாடலின் ஸ்வரக் குறிப்புகளைத் தன்கைப்படத் தெளிவாக ஒவ்வொரு மாணவருக்கும் எழுதிக்கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். சங்கீத கலாசிகாமணி உட்பட பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் பெற்றவர். இவரது சில இசைக் கச்சேரிகளின் தொகுப்பை "ட்ரீம்ஸ்ஆடியோ" குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளது.

இசையே உயிர்மூச்சாக வாழ்ந்த சாத்தூர் சுப்ரமணியம், நவம்பர் 20, 1977 அன்று தியாகராஜரின் "ஜகதானந்தகாரகா"வைக் கேட்டுக்கொண்டே இயற்கை எய்தினார். உலகம் முழுவதும் அவரது சீடர்கள் அவரது இசையைப் பரப்பி வருகின்றனர். அவர்களுள் திருமதி. சீதாமணி ஸ்ரீநிவாசன், திருமதி. சுலோசனா பட்டாபிராமன், திருமதி. அனந்தலக்ஷ்மி சடகோபன், திருமதி. லலிதா சேஷாத்ரி, சீர்காழி சகோதரர்கள் திரு. சுப்ரமணியம் - ஜெயராமன், முசிறி ரங்கராஜன் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். மேலும் இவரது மகள்கள் திருமதி. லக்ஷ்மி சுந்தரம், திருமதி. லலிதா சந்தானம், திருமதி. புவனா ராஜகோபாலன் (சாத்துர் சிஸ்டர்ஸ்), பேத்தி திருமதி. சாந்தி ஸ்ரீராம் (கலிஃபோர்னியா), திருமதி. உமா குமார் (ஸ்விட்சர்லாண்ட்), பேரன் திரு. கிருஷ்ணா ராமரத்தினம் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கச்சேரிகள்செய்தும், இசை கற்பித்தும் சாத்தூர் சுப்ரமணியம் அவர்களது வழிநின்று இசைப்பணி ஆற்றிவருகின்றனர்.

இவரது நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 2016 ஜூலை மாதத்தில் அகில இந்திய வானொலி நிலையம், இவரது சிறப்புக் கச்சேரிகளை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. விரிகுடாப் பகுதியின் சன்னிவேலில் உள்ள நாதலயா இசைப்பள்ளி, வரும் ஜூன் 25 அன்று மில்பிடாஸ் சீரடி சாய்பரிவாரில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த இசைப்பள்ளியை சாந்தி ஸ்ரீராம் (சாத்தூராரின் பேத்தி) மற்றும் அவரது கணவரும், புகழ்பெற்ற மிருதங்க வித்வானுமாகிய ஸ்ரீராம்பிரும்மானந்தம் இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஜூலை மாதம் 15, 16, 17 தேதிகளில் சென்னையில் திரு. ஏ.ஜி. சுப்ரமணியம் அவர்களது நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline