|
|
காலை மணி ஏழரை. டிசம்பர் குளிருக்கு நாலரைக்கே இருள் சூழ்ந்துவிடுகிறது. முழு வீச்சில் ஓடும் ஹீட்டருக்கும் பெப்பே சொல்லிவிட்டு உடலைப் போட்டுத் தாக்குகிறது. அருகிலிருக்கு கெளண்ட்டியின் பனிப்புயல் நிலவரம் தொலைக்காட்சிப் பெட்டியில் வரிச் செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமையல் வேலையை முடித்து உணவு வகைகளை மேஜையின் மேல் வைத்துவிட்டு, சுவாமி அலமாரியில் எரிந்துகொண்டிருந்த விளக்கை சாந்தி செய்தபின் அலமாரியை மூடிவிட்டு ஹால் பக்கம் திரும்பினாள் மதுரம். சொல்லி வைத்தாற்போல் மின்விளக்குகள் அணைந்தன. மின் தடை; இந்தியாவிலோ மின் தடைஎன்பது சகஜமான நிகழ்ச்சியானதால் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி என்று உபகரணங்களெல்லாம் கைக்கெட்டும் விதத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அத்தி பூத்தாற்போல் வரும் மின்தடங்கலுக்கு ஆயத்தமாக இல்லை. யார் செய்த புண்யமோ, சமையல் வேலை முடிந்து விட்டது. இல்லாவிட்டால் மின் அடுப்பும் இல்லாமல் தவித்துப் போக வேண்டியதுதான்..
தட்டுத் தடுமாறி ஹால் பக்கம் நகர்ந்தாள். திடீரென்று வாயிற்கதவை யாரோ திறக்கும் ஓசை. ஓங்கு தாங்காக ஓர் உருவம் இருட்டைத் துழாவிக் கொண்டே உள்ளே நுழைவது தெரிந்தது. 'இவன் எங்கு எப்படி வந்தான்?' என்று எண்ணத்தை ஓட்டும் முன்பே தடாலென்று ஓர் பேரோசையுடன் பாத்திரம் உருளும் தட புடா சத்தமும் நாற்காலிகள் சாயும் சத்தமும் சேர்ந்து கொண்டது. சுரீலென்று உடல் முழுதும் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் உணர்ந்தாள் மதுரம். "அடப் பாவி, என்னடா செய்கிறாய்?" என்று ஓலமிட்டாள். மனக் கண்முன் விஸ்வாமித்திரர், அதான் கணவர் சலம் தோன்றி அவளை நடு நடுங்கச் செய்தார்.
பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த விபரீதத்தைச் சிறிதும் அறியாமல், கண்ணாமூச்சி ஆடிய குழந்தை 'இதோ இருக்கேனே' என்று எட்டிப் பார்ப்பதுபோல் மின்விளக்குகள் பிரகாசித்தன. உணவு மேஜையின் மேலிருந்த ரசப் பாத்திரம் உருண்டு தரையெல்லாம் கம கமக்கும் வேப்பம் பூ ரசம் ஆறாக ஓடி, அவள் கால் மீதும் தாராளமாகக் கொதிக்கக் கொதிக்க அபிஷேகம் ஆகியிருந்தது. சலத்தின் அக்கா சென்ற வாரம் சிகாகோ போகும் வழியில் தங்கி, தம்பிக்கு அருமையாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்த அபூர்வப் பரிசு! '(ஏனோ தானோ என்று புளியையும் பொடியையும் கொட்டிக் கொதிக்க விட்டு டாதே; துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயெல்லாம் நன்றாக நெய்யில் வறுத்துத் தாளித்து செய்' செய்முறை விளக்கம் வேறு. நேரம் தான், இருபது வருஷமாகக் குடித்தனம் செய்பவளுக்கு இப்படி ஒரு விமர்சனம்! அடுத்த நாளே போக வேண்டியதால் தானே அருமைத் தம்பிக்குச் செய்து போட முடியவில்லை என்ற ஆதங்கம் வேறு.) காலையிலேயே மெனக்கெட்டு மெனு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். மனுஷர் நாக்கைத் தீட்டிக்கொண்டு வந்துவிடுவாரே; புதிதாகச் செய்யலாமென்றாலோ அவர் வரும் நேரம் ஆகிவிட்டதே! |
|
அருகிலேயே அறை எடுத்துத் தங்கிக் கல்லூரியில் படிக்கும் தம்பி சந்துரு, "பக்கத்தில் லைப்ரரிக்கு வந்தேன்; தெரு மிகவும் மோசமாக இருக்கு; வண்டி ஓட்ட முடியவில்லை என்று இங்கு வந்து விட்டேன். பாவம், என்னால் தானே உனக்கு இந்த நிலை? கால் கொப்பளித்து விடப் போகிறதே, என்று கவலையுடன் களிம்பை எடுக்க ஓடினான். உடல் எரிச்சல் கூடத் தெரியவில்லை மதுரத்துக்கு; கணவர் வந்ததும் ஒரு சந்தேகப் பார்வையுடன், "என்ன, காலையில் அகல்யாவில் ஆரம்பித்து மனைவி வரை எல்லாத் தொடர்களும் பார்க்கும் சுவாரஸ்யத்தில் 'கணவருக்காக' ரசம் வைக்கக் கூட நினைவிருக்குமா என்ன?" என்ற குத்தல் கலந்த கேலி மொழிகள் காதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டன.
இதுவரை கதையில் வராத புதுப் பாத்திரம், காதில் ஒட்டிய செல்போனுடன் மாடியிலிருந்து இறங்கியவாறு "என்னம்மா, அமெரிக்க மண்ணுக்கு நம் அருமையான இந்திய ரசத்தின் ருசியைக் காட்டினாயா? கமகமவென்று மணக்கிறதே." என்றபடி வந்த மகள் தாயின் நிலை கண்டு பதறிப் போய் தானும் மருந்தைத் தடவவும், ரசம் கொட்டிய இடத்தைச் சுத்தப்படுத்தவும் உதவிக் கொண்டே, "சொல்ல மறந்து விட்டேனே, அப்பா போன் பண்ணார். ஏதோ க்ளையன்ட்டுடன் மீட்டிங் இருக்காம். டின்னருக்கு வர மாட்டாராம்", என்று வயிற்றில் பால் வார்த்தாள். ஆசுவாசப் பெருமூச்சு விட்ட மதுரம், மருந்து தடவிய காலை நீட்டியபடி அரற்ற ஆரம்பித்தாள்.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி |
|
|
|
|
|
|
|