Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் மரு. பி.சி.ரெட்டி
தமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர்
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeவாஷிங்டன் திருக்குறள் மாநாடு நிறைவு விழா. சிறிய அரங்கம் நிரம்பி வழிகிறது. நிறைவு விழாவுக்குப் பின்னர் ·பாதர் காஸ்பர் ராஜ் பேசப்போகிறார் என்று ஏற்பாட்டாளர்கள் பலமுறை அறிவித்துவிட்டார்கள். கூட்டமும் ஆவலோடு காத்திருக்கிறது. அருள்தந்தை காஸ்பர் ராஜ் ஒரு தேர்ந்த பேச்சாளர். ஓர் இசைக்கலைஞர் வீணையை மீட்டுவது போல், மக்களைச் சொக்க வைக்கும் ஆற்றல் உள்ளவர். அவர் பேச்சின் முடிவில் நம் எண்ணங்கள் மேகத்தில் மிதந்து கொண்டிருக்கும். தரையில் கால்படுவதற்கே சில நாட்களாகும். இது, இரண்டு நாள் மாநாட்டில் ஏற்கனவே மூன்று முறை பேசிய இவரது நாலாவது பேச்சு. இதைத் தொடர்ந்து அரங்கத்துக்கு வெளியே ஒரு கலந்துரையாடல் காத்திருக்கிறது. அங்கிருந்து இன்னொரு கூட்டத்துக்கு ஓட வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சாளர்.

தான் நிறுவிய சென்னைத் தமிழ் மையம் என்ற அமைப்பின் மூலம் இளையராஜாவின் சிம்·பொனி இசையில் திருவாசகம் என்ற இசைத்தட்டைப் பெருஞ்செலவில் தயாரித்து வெளியிட்டவர் இவர். டல்லஸ் தமிழர் திருவிழா 2005 இல் இளையராஜாவின் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா வந்த இவரைத் திருக்குறள் மாநாடும் அழைத்துத் திருக்குறள் மட்டுமல்ல, திருவாசகம் பற்றியும் பேச வாய்ப்பளித்தது.

'நீங்க சொன்னா நம்புறாங்கன்னேன்!'

மெல்லிய குரலில் பேசுகிறார் அருள்தந்தை காஸ்பர்ராஜ். கூட்டம் சலசலப்பு ஏதுமின்றி வெகு அமைதியாகக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் நேருக்கு நேர் எதிரும் புதிருமாக நின்று மோதிய போதும்கூட தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் மதிக்கின்ற, பாராட்டுகின்ற பண்பும், பார்வையும் நமது தலைவர்களுக்கு சமீபகாலம் வரை இருந்திருக்கிறது என்கிறார். அதற்குக் காரணம் தமிழ் மொழி, அது பண்பாட்டின் அடையாளம். அந்த மொழி தாங்கி வரும் வரலாற்று அனுபவங்கள் என்று உடனே ஒரு கதை சொல்கிறார்.

'தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பின் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை எம்.ஜி.ஆர். வேறு ஒரு விஷயமாக பார்க்கச் செல்கிறார். அவர்கள் சந்திப்பு முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பிச் செல்லும் போது, காமராஜர் அவரை வாசல் வரை வந்து வழியனுப்புகிறார். கதவை மூடுகிற போது எம்.ஜி.ஆரைப் பார்த்து காமராஜர் சொன்னாராம் - “நீங்க சொன்னா எல்லோரும் நம்புறாங்கன்னேன்... கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கன்னேன்!” அரங்கத்தில் இரண்டு தலைவர்களையும் பற்றித் தெரிந்தவர்கள் முகங்களில் புன்முறுவல் பூக்கிறது. தொடர் கிறார் பாதிரியார். 'இப்படிப்பட்ட ஒரு நட்பும், ஒருவரை ஒருவர் மதிக்கின்ற பண்பும் தன்மையும்தான் தமிழ் சமூகத்தின் சிறப்பாக இருந்தது' என்கிறார் பலத்த கைதட்டல்களுக்கிடையே.

ஏன் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும்

'எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக, தமிழ்ச் சமூகத்துடைய முதல் மரபணு வேர் ஓர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது என்றால், ஐந்தாயிரம் ஆண்டுகளாய் ஒரு மக்கள் சமூகம் போராடி, உருண்டு, புரண்டு, தோற்று, ஜெயித்து, சிந்தித்து, கருத்து முரண்பட்டு, வாதாடி, எத்தனையோ ஞானிகள், எத்தனையோ நல்லோர்கள், எத்தனையோ அயோக்கியர்கள் எல்லோருடைய அந்த அனுபவம்... ஆக ஐந்தாயிரம் ஆண்டுகாலம்... பத்தாயிரம் ஆண்டுகாலம்... அல்லது குறைந்தது ஈராயிரம் ஆண்டுகால அனுபவங்களை, அறிவை, அந்த வரலாற்றைச் சுமக்கிறதுதான் மொழி என்பது. அந்த மொழியை இழக்கும் போது அந்த மொழியில் பொதிந்திருப்பவற்றை, பண்பாட்டை இழக்கிறோம். மொழியை அந்தப் பார்வையில் நாம் பார்க்க வேண்டும். இங்கேயும் பிள்ளைகளுக்கு ஏன் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கு அதுதான் காரணம்' என்னும்போது அமெரிக்கத் தமிழர்கள் ஆமோதிக்கிறார்கள்.

'நமது இறந்த காலத்தோடும், சமகாலத்தோடும் ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபட வேண்டும். இறந்த காலத்தினுடைய சுகங்களையும், சுமைகளையும் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாக இருக்கலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களாக இருக்கலாம். தனக்கு நேர்ந்த தோல்விகளாக இருக்கலாம். எல்லாவற்றிலும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. அப்போதுதான் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி நம் தமிழை எடுத்துக் கொண்டு செல்வது எப்படி என்பது விளங்கும்.'

வரலாற்றின் போக்கும் புதுமையும்

'யாரும் வரலாற்றின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாது. பின் நவீனத்துவமும் உலகமயமாக்கலும் சேரும்போது ஒரு பெரிய புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. வெளி நாட்டு உறவுகள், கலாச்சார மாற்றங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதையும் மீறி நம்முடைய தமிழ் நிற்க வேண்டும் என்றால் காலத்துக்கு ஏற்ப, தமிழ் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அடிப்படை விழுமியங்களையும், வலிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தன்னையும் அது சுதாரித்துக் கொள்ள வேண்டும்.'

'இப்படிப்பட்ட ஒரு புதுமைக்காகத்தான் திருவாசகத்தை நாங்கள் கையில் எடுத்தோம். இது இளம் தலைமுறையினருக்கு புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற விதத்தில் அமைக்கப்பட்டது. கொஞ்சம் புதுமையாகச் செய்திருக்கிறார். இப்படிச் செய்யும் போது அதைக் கொச்சைப்படுத்தாமல் அதனுடைய வீரியமும், அழகும் குறையாமல், படைப்புத் திறனோடு செய்தது எல்லோருக்கும் புரிகிற மாதிரி அமைந்திருக்கிறது. இதுவரை திருவாசகத்தை ஓதுவார்கள் மட்டும்தான் பாடமுடியும். நமச்சிவாய வாழ்க என்று இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பாடினாலும், இன்னும் 50 வருடங்களில் [பொதுமக்கள்] இதைத் [இளையராஜா பாடியதைத்] தான் பாடுவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.'

திருக்குறள் மாநாட்டு நிறைவின்போது திருவாசகம் போலவே திருக்குறளுக்கும் பிரம்மாண்டமாக ஒரு முயற்சியைத் தொடங்கி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வாஷிங்டனில் வெளியிடுவதாக எண்ணி யிருப்பதாகப் பலத்த ஆரவாரங்களுக் கிடையே பேச்சை முடிக்கிறார்.

சொலல்வல்லன்

ஆமாம். பெருந்தலைவர் காமராஜர் இன்று இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளாகப் பல முறை அமெரிக்க மண்ணுக்கு வந்து பேசியிருக்கும் ·பாதர் காஸ்பர் ராஜ் அவர்களிடமும் 'நீங்க சொன்னா எல்லோரும் நம்புறாங்கன்னேன். கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கன்னேன்!' என்று சொல்ல வேண்டியிருந்திருக்கும். அந்த அளவுக்கு, திருக்குறள் சொல்வது போல் 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்' வன்மையுள்ளவர் காஸ்பர் ராஜ்.

குமரி மாவட்டத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் இந்து அப்பாவுக்கும் கிறித்தவ அம்மாவுக்கும் பிறந்த இவர் இரு மதங்களின் சடங்குகள், நம்பிக்கைகள், தத்துவங்களை அறிந்தவர். இறையியல், அரசியல், ஊடகவழித் தகவல் துறைகளில் பட்டம் பெற்றவர். பத்தாண்டுப் பாதிரியார் பயிற்சிக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் குமரி மாவட்டத்தில் தொண்டாற்றிப் பின்னர் ஏழாண்டுகள் ·பிலிப்பைன்ஸ் நாட்டில் வெரிட்டாஸ் என்ற கத்தோலிக்க வானொலியில் தமிழ்ப்பிரிவின் இயக்குநராகப் பணிபுரிந்தார். வெரிட்டாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நேயர் கடிதங்களை வானொலியில் படித்ததனால் 4500 குடும்பங்கள் தங்கள் உறவினர்களைத் தேடிக் கண்டு பிடிக்கத் துணை புரிந்தது இவர் சாதனை.

தாயகம் திரும்பிய இவர் தமிழ் மையம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்மண் சார்ந்த கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தங்கள் நோக்கம் என்னும் இவர் அதில் ஒன்றாகத்தான் இளையராஜாவின் சிம்·பொனி இசையில் திருவாசகம் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க முன் வந்தததாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு கத்தோலிக்கப் பாதிரியாருக்கு ஏன் திருவாசகம் மேல் இத்தனை ஈர்ப்பு?

டல்லஸ் தமிழர் திருவிழாவில் புகழ் பெற்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அறிமுகப்படுத்த, ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரான காஸ்பர் ராஜ், இந்துமதப் பக்தி இலக்கியமான திருவாசகத்தை மேற்கத்திய இசை கலந்த இசைத்தட்டாக வெளியிட்டது சமய நல்லிணக்கத்துக்கு அறிகுறியாகப் பலரும் கருதினார்கள். அந்த வெளியீட்டின்போது, ஒரு கத்தோலிக்கப் பாதிரியாருக்கு ஏன் திருவாசகத்தின் மேல் இத்தனை ஈர்ப்பு என்ற கேள்வியைக் கேட்டுத்தான் பேசத் தொடங்கினார் ·பாதர் காஸ்பர். முதலில் திருவாசகத்தின் தமிழால் ஈர்க்கப்பட்டதுதான் உண்மை. பின்னரே, முப்பது வயதைத் தொட்ட பின்புதான் அதன் தத்துவ ஆழங்கள் தன்னைக் கவர்ந்தன என்றார்.

திருவாசகத்தின் முதல் பாடலான 'நமச்சிவாய வாழ்க' பாடலைப் படித்துக் காட்டி 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க' என்று வருவதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். 'இறைவன் ஒருவன், ஆனால் பல வடிவங்களில் இங்கே வணங்குகிறோம்' என்று விளக்கம் கொள்கிறார். அதே போல் போற்றித் திருவகவல் பாடலைப் படித்து 'தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டார்க்கும் இறைவா போற்றி' என்ற அடிகளில் உருகுகிறார். என்ன அற்புதமான சிந்தனை! 'இங்கே தென்னாட்டில் உன்னை சிவன் என்று தொழுகிறோம். எல்லா நாடுகளிலும் உன்னை இறைவன் என்று வணங்குகிறோம்' என்று தனது சமய நம்பிக்கைக்குப் பாலம் அமைக்கிறார். அது மட்டுமல்ல, மனிதர்கள் மீதான கருணை யினால் மனிதனாக வாழ்ந்து மனிதனைப் போல் துன்பப்பட்ட ஏசு கிறிஸ்துவால் ஈர்க்கப் பட்டுப் பாதிரியான தனக்கு அதே தன்மையை ஈசனிடம் மாணிக்கவாசகர் காட்டுவதைச் சொல்லி மருகுகிறார். தன் பக்தர்களுக்காக மனித வடிவெடுத்துப் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதைச் சொல்லி அடியார்களுக்காக தான் வருந்தும் ஈசனில் தன் ஏசுவைக் காண்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன். இப்படிப்பட்ட அருமையான கருத்துகள் பொதிந்த திருவாசகத்தை ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் உலகுக்குப் பரப்புவதில் எந்த முரண்பாடும் இல்லை என்று வலியுறுத்துகிறார்.
இசைத்தட்டு வெளியீடு முடிந்த பின்னர் தென்றல் சார்பில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

தெ: திருவாசக முயற்சி பல ஆண்டுகளாக உங்கள் கடுமையான முயற்சியால் இன்று நிறைவேறியிருக்கிறது. உங்கள் மனநிலை இப்போது எப்படி உள்ளது?

ஓர் அர்த்தமுள்ள நல்ல திட்டத்தை நிறைவுசெய்தோம் என்பதில் மனநிறைவு. இப்படிப்பட்ட நல்ல முயற்சியில் பங்கெடுத் தற்கு இறைவன் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு தந்தான் என்பதில் நன்றி உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்தவற்கு முப்பது மாத காலம் ஆகியது. இந்த முப்பது மாதங்களில் இதுவரை வாழ்வில் அனுபவித் திராத சவால்கள், இடர்கள், ஓரளவுக்கு மனம் வலிக்கின்ற அவமானங்கள் இவையெல்லாம் நிகழ்ந்தும்கூட எங்களின் முயற்சியை கைவிடாமல், விடாது பிடித்துக் கொண்டு, ஆங்கிலத்தில் சொல்வார்களே capacity for perseverence என்று அதுமாதிரி அதை கைக்கொண்டிருந்தோம் என்பதில் தனிப்பட்ட மனநிறைவு ஏற்பட்டது. இத்தகைய இடர்ப்பாடுகளையெல்லாம் மீறியும் உடையாமல், சிதையாமல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து நல்லவற்றை நிறைவு செய்ய முடிகிறது என்கிற மனநிறைவு ஏற்பட்டது.

தெ: வெளியீட்டிற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதா?

எதிர்பார்த்ததைவிட அமோகமான வரவேற்பு இதற்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த வினியோக ஒழுங்குகள் சரியாக செய்யப்படாத காரணத்தினால் - இன்றுகூட இந்தியாவிலிருந்து ஒரு நான்கு, ஐந்து பேர் எந்தக் கடைகளுக்கு சென்றாலும் எங்களுக்கு திருவாசக ஒலிப்பேழை கிடைக்கவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இந்தச் சிறுசிறு குறைகள் தான். ஒருநாளிலேயே 1500 ஒலிநாடாக்கள் விற்றிருக்கின்றன. அந்த அளவிற்கு மக்கள் மத்தியிலே வரவேற்பு இருக்கிறது.

தெ: இந்த இசைத்தட்டு விற்பது இளையராஜாவுக்காகவா, திருவாசகத்துக்காகவா அல்லது புதுமையான முயற்சி என்பதாலா?

இசை என்கிற பொழுது அதை உன்னதமான இசையாகத்தான் இளையராஜா அவர்கள் படைத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு இசை ரசிகன் என்கிற வகையில், ஓரளவுக்கு மேற்கத்திய இசையும் நமது மரபு இசையும் படித்தவன் என்கிற வகையில் அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரல் பீஸ் என்பதைச் சொல்லவேண்டும். எனவே அதற்குரிய தளம் என்பது உயரமான தளம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மேலும் அது எவ்வளவு தரமுடையதாக இருந்தாலும் அதைச் சரி வர மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். அதை வாங்கிக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வத்தை. ஓர் ஆசையை மக்களிடத்தில் உருவாக்கினால் தான் வர்த்தக ரீதியாக அது மக்களைச் சென்று சேர்கிறது.

அந்த வகையில் நான் சொல்ல வேண்டும் கடந்த பத்தாண்டுகளில் ஓர் இசை முயற்சிக்கு இத்துணை ஆதரவை தமிழ்நாடு சார்ந்த தமிழ், ஆங்கில ஊடகங்கள் தந்ததில்லை. வந்தேமாதரத்திற்கு அகில இந்திய அளவில் இதுமாதிரி வந்திருக்கிறது. ஆனால் தமிழ் மொழி சார்ந்த ஒரு முயற்சிக்கு இந்த அளவிற்கு ஊடக ஆதரவு இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊடக ஆதரவு இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் இதை வாங்கி எப்படி இருக்கும் என்று கேட்க வேண்டும் என்கிற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடக ஆதரவை உருவாக்குவதற்காக நாங்களும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

தெ: தமிழ்நாடு, தமிழ்சார்ந்த இளைஞர் கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பரவலாக இது விற்கவேண்டும் என்கிற முயற்சியில் நீங்கள் எந்த அளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறீர்கள்?

குறுகிய கால அளவில் மதிப்பீடு செய்கின்ற போது அதில் எந்தவித முயற்சியும் இதுவரை நாங்கள் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்வதற்கான அவகாசங்களும் எங்களுக்கு இல்லை. ஒன்று இதை பரப்புவதற்குச் செய்வதற்கான நிதிஆதாரம் நிச்சயமாக இப்போது எங்களிடம் இல்லை. இரண்டாவதாக இது ஒரு கிராஸ்ஓவர் முயற்சி. இளையராஜா உலகம் அறிந்த கலைஞன் இல்லை. தமிழ், தென்னிந்திய இசைவட்டத்துக்குள் அதிகமாக அறியப்பட்டவர். உலக அளவில் அதிகம் அறியாதவர் என்பதால் சோனி போன்ற நிறுவனங்கள் கூட உரிய விலை கொடுத்து அதை வாங்குவதற்கோ அல்லது தகுந்த சன்மானம் அதாவது ராயல்டி கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. இன்று சாதாரண நிறுவனம் தான் இதை வெளியிட்டிருக்கிறது. நாங்கள்தான் - எங்களுடைய முயற்சியால் இப்படிப்பட்ட தமிழர் திருவிழா போன்ற நிகழ்ச்சி களில், தமிழ் மக்கள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் நாடி இதை முன்னெடுத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

எனவே குறுகிய கால அளவில் யாருக்கு இது சென்று சேரவேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று நாங்கள் முயலவில்லை. அப்படி முயல்வது சரியாகவும் இருக்காது. ஆனால் இளைஞர்களைச் சென்று சேரவேண்டும். அது ஒரு நோக்காக இருந்தது. வெறும் திரையிசை அல்லது மேற்கத்திய இசை - தாளகதி சார்ந்த இசையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் எங்களின் திருவாசக இசையை திரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை வெளியீட்டிற்கு பின் இரண்டு, மூன்று நாட்களிலேயே அறிய முடிந்தது. ஆனால் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் ஒரு ஆறு மாதத்திற்குள் நாங்கள் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் கடன்பட்டிருக்கிறோம். இந்தக் கடன் தீர்ந்துவிட்டது என்றால் நிச்சயமாக யாருக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்க முயற்சிகள் எடுப்போம்.

தெ: டல்லஸ் வெளியீட்டு விழாவில் உங்களை அறிமுகப்படுத்தியவர் ஒரு முஸ்லிம்; நீங்கள் ஒரு கிறித்தவப் பாதிரியார்; நீங்கள் அறிமுகப்படுத்தியது ஒரு இந்து மத இலக்கி யத்தின் இசை அமைப்பு. இந்த மும் மதங்களும் தமிழால் இணைந்தது என்று பலர் மனம் மகிழ்ந்தார்கள். இந்த முயற்சிக்கு எங்கேயாவது எதிர்ப்புகள் இருந்தனவா?

என்னைப் பொறுத்தவரையில் இந்துமத அமைப்புகள் யாரிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. வெளிப்படையாக வரவில்லை. மனதுக்குள் கருத்து வேறுபாடுகள் வைத் திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய ஒரு முயற்சிக்கு ஒரு மிகப் பெரிய ஆதரவு வந்தது என்றும் நான் சொல்லவில்லை. நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிர்ப்பும் வரவில்லை... நான் எதிர்பார்த்த ஆதரவும் வரவில்லை. கிறித்தவத் திருச்சபையைப் பொறுத்த வரையில் எனக்கு மேல் இருக்கின்ற ஆயர்பெருமக்கள் இந்த முயற்சியை உளமார ஆதரித்து, ஆசிகூறி உற்சாகப்படுத்தி, ஓராண்டையும் கடந்து ஈராண்டையும் கடந்து நான் என்னுடைய நேரத்தையும் என்னுடைய திறமைகளையும் இதற்குள் முதலீடு செய்து கொண்டிருந்தபோதுகூட, ''இது நல்ல முயற்சி. மதநல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய முயற்சி'' என்றார்கள். திருச்சபையின் அதிகாரபூர்வ நிலைப்பாடுகளில் ஒன்று மதநல்லிணக்கம், பிற மதங்களை அறிவது. ஆகையால் இதைச் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள்.

ஆனால் எங்களுக்குள்ளும் இதை மாறுபட்டுப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேர் எனக்கு மின்னஞ்சல்கள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் தேவைதானா? திருவாசகம் செய்வதற்குப் பதில் பைபிள் செய்யக்கூடாதா? இதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவிட வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் விமரிசிப்பதற்கும், கருத்துச் சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் சொல்லுங்கள். அதற்கு பதில் சொல்லவும் நான் முற்படவில்லை. ஏனென்றால் நான் ஒன்றை செய்கிறேன் என்றால் நான் நம்புவதைத்தான் செய்வேன். நம்பாத ஒன்றை நான் செய்வதில்லை. என்னுடைய நம்பிக்கையை விமரிசிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. உங்களிடமிருந்து நான் பணம் ஏதாவது வாங்கியிருந்தால் நான் பதில் சொல்வேன். இல்லையென்றால் பதில் சொல்ல வேண்டிய தேவையாகக் கருதவில்லை. ஆனால் கொஞ்சம் எதிர்ப்பு, கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.

தெ: தீவிர இந்து அமைப்புகளுடன் சார்ந்த சிலர் 'கிறிஸ்தவர்கள் தங்களுக்கு உரிமை யில்லாத கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்படி இயேசுவோடு பிணைத்தார்களோ, அது போல நமது சிவனையும் இவர்கள் கிறிஸ்துவாக மாற்ற முயற்சிக்கிறார்களோ' என்று சந்தேகப்படுவதாகச் சொல்கிறார்களே?

இப்படிச் சிந்திக்கிறவர்கள் எல்லாம் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிச் சிந்திப்பது அவர்களுக்கு சரியான தாகப் படுகிறது என்றால்... அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஏனென்றால் நாங்கள் பயணம் செய்கிற திசை மாறுபட்ட ஒரு திசை. இதில் நாங்கள் திரும்பிப் பார்த்து நின்று கொண்டு இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் - எனக்கு இருப்பதாக தெரியவில்லை. பொதுவாகவே நான் கொஞ்சகாலமாக எதிர்மறையாகப் பேசுபவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் விலகியிருக்கிறேன். ஏனென்றால் அந்த நோய் நம்மையும் வந்து தொற்றிக்கொள்ளும். ஆகையால் இப்படிப்பட்ட கருத்துகளுக்கு நான் உண்மையிலே பதில் சொல்ல விரும்பவில்லை. பரந்துபட்ட மக்கள், தமிழுலகம், இதில் ஏதாவது பயம் இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் அதை எடுத்துக் கொள்ளட்டும். அல்லது இப்படிப் பேசுபவர்கள், பேசுவதற்குப் பதிலாக இது போன்ற இன்னும் நான்கு விஷயங்களை எடுத்துக் கொண்டு நன்றாகச் செய்தார்கள் என்றால் இன்னும் பாராட்டக்கூடியதாக இருக்கும்.

தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடுகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கும் அருள்தந்தை காஸ்பர் ராஜ், வரும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் சான்டா கிளாராவில் நடக்கவிருக்கும் சுனாமி நிவாரண இசை நிகழ்ச்சியின் போது பேசவிருக்கிறார் என அறிகிறோம். தென்றல் சார்பில் நன்றி கூறி விடை பெறுகிறோம்.

சந்திப்பு, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்
படங்கள்: ஆஷா மணிவண்ணன்
More

அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் மரு. பி.சி.ரெட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline