Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம்
வாடகைக்கு விட்ட வீடு
- எல்லே சுவாமிநாதன்|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeசம்பளத்தை பாங்கில கட்டிட்டயா?" என்றான் ரகு.

"கட்டியாச்சு. இப்ப எவ்ளோ சேர்ந்திருக்கு தெரியுமா? ஒரு லட்சம் டாலர். நம்ம பணத்துல 46 லட்சம் ரூவா. கிட்டத்தட்ட அரைக் கோடி சேர்த்துட்டோம் ஒரு வருசத்துல" என்றாள் உமா.

"இதை எடுத்திட்டு இந்தியாவுக்குப் போயிட்டா பேங்கில போட்டு வட்டியிலயே வாழ்ந்திடலாம். வேலை செய்யவே தேவை இல்லை" என்றான் ரகு.

"அரைக்கோடி பெரிய விசயமா? எங்கப்பா சொத்துல என் பங்கே ரெண்டு கோடி வரும். பத்து வருசம் இருந்து அஞ்சு கோடி பண்ணிட்டு போயிடலாம்"

"பணத்தை நல்ல விதமா முதலீடு பண்ணினா பெருக்கலாம்" என்றாள் உமா.

"பங்கு மார்க்கெட் சமாசாரம் வாண்டாம். அதில் ரெண்டு வருசம் முன்னால காசு போட்டவன் எல்லாம் போண்டியாயிட்டான்."

"பங்கு மார்க்கட் இல்ல. ரியல் எஸ்டேட். வீடு விலை எப்படி ஏறிப்போச்சு ரெண்டு வருசத்தில பார்த்தீங்களா. ஒரு வீட்டுத் தரகரை நாளைக்கி வரச் சொல்லி இருக்கேன்."

"நமக்கு இந்த சின்ன பிளாட் போதும்மா. எதுக்கு வீட்ல போயி காசு போட்டு. எங்க அப்பாகிட்ட சொன்னா சென்னையில ஒரு பிளாட் வாங்கி வாடகைக்கி விடலாம்."

"வேண்டாம். உங்கப்பா உங்க தங்கையக் குடி வெச்சிடுவார். வாடகையும் கேட்க முடியாது. காலியும் செய்ய மாட்டாங்க. வெளியாளுக்குக் கொடுத்தா காலி செய்யமாட்டாங்க. கட்டைப் பஞ்சாயத்துதான் பண்ணனும். ஊர்ல வீடு நாம போகறச்ச வாங்கிக்கலாம். இங்க வீடு வாங்கி வாடகைக்கு விடலாம்" என்றாள் உமா.

"இங்கயே வாங்கறதா? வாடக சமாசாரம் நமக்கு சரியா வருமா?" என்றான் ரகு.

"சும்மா இருங்க. உஷா பட்டேல் கிட்ட பேசினேன். அவங்க ரெண்டு வீடு வாங்கி வாடகைக்கு விட்ருக்காங்களாம். பேங்கு கடன் தவணையை விட அதிகமா வாடகை வருதாம். வீட்டு விலையும் மேல போயிருச்சாம்"

ரகுவுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் வளர்ந்த பின்னணிகள் சற்று வித்தியாசமானவை. ரகு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சேத்த காசை பத்திரப்படுத்த வேண்டும் என்ற வெறி இருந்தது. உமாவின் குடும்பம் துணிமணி வணிகத்தில் பொருள் ஈட்டியது. பணத்தை முதலீடு செய்து பெருக்குவதில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

மறுநாள் வீட்டுத் தரகராகப் பணியாற்றும் ஒரு பெண்மணி அவர்களுடன் பேசினாள். அவர்கள் இருந்த சான் ஹொசே நகரில் வீட்டு விலை இரண்டு வருடத்தில் இரட்டிப்பாக உயர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டினாள். இவர்களுக்குத் தேவையான மூன்று அறை கொண்ட வீடு சுமார் ஆறு லட்சம் ஆகும் என்று சொன்னாள்.

"ஆறு லட்சமா? எங்க கிட்ட ஒரு லட்சம் டாலர் தான் இருக்கு"

"அது போதும் அதை முன்பணமாக கட்டி பாக்கி அஞ்சு லட்சத்துக்கு வங்கியில முப்பது வருடக் கடன் வாங்கிடலாம். மாசம் மூவாயிரம் டாலர் தவணை இருக்கும். இன்சூரன்சு அது இதுனு கூடுதலா மாசம் நூத்தி அம்பது டாலராகும்."

ரகுவுக்கும் உமாவுக்கும் இதில் திருப்தி இல்லை.

"வந்து சில வீடுகளைப் பாருங்க" என்றார் அந்தப் பெண்மணி. இவர்கள் பார்த்த வீடுகள் இவர்களுக்குப் பிடித்தன. ஐம்பதாயிரம் டாலர் குறைத்துக் கேட்டுப் பார்த்தார்கள். இவர்களுக்குக் கிடைக்கவில்லை. வீடு நன்றாக இருந்தால் விற்பவர் கேட்ட விலைக்கு மேலேயே விற்றுப் போனது. இவர்களுக்குச் சலிப்பு வந்து விட்டது.

வீடு தேடுவதை நிறுத்தி விட்டார்கள்.

"நாம் இருக்கற இடத்துலேயே இருப்போம். வீடு ஒண்ணும் வாண்டாம்" என்றான் ரகு.

"நான் உஷாகிட்ட பேசினேன். அவ சொல்றா. நீ முதலீட்டுக்குத் தான வாங்கற. வாங்கி குடுத்தனம் வை. இந்த டவுன்ல விலை அதிகமா இருக்குன்னா. சற்றுத் தள்ளிப் போயி வாங்கேன். வாடகை எப்படியும் தபால்ல வந்துரும்னு சொன்னா. தவிர தரகர் ஒருத்தரும் வேண்டாம், தரகர் இல்லாம யாராவது வித்தா வாங்கிடுனு சொன்னா. பேப்பர்ல சாக்ர மெண்டோல ஒரு வீடு மூணு லட்சம் டாலருக்குப் போட்டிருக்காம். நம்பரை வாங்கிக் கூப்பிட்டு வெச்சிருக்கேன்."

"என்ன ஆச்சு?"

"வயசான ஆளு ஒருத்தர் விற்கறாராம். வித்துட்டு நியூயார்க்கில பெண்ணு வீட்டுக்கு போகப் போறாராம். ஞாயித்துக் கிழமை வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்லி இருக்காரு."

ஞாயிறு காலை சாக்ரமெண்டோ பயணமானார்கள். அருகிலுள்ள நகரம்தான். சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம். இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடியால் மூன்று மணி நேரம் ஆனது,

வீட்டின் சொந்தக்காரக் கிழவர் அவர்களை அன்புடன் வரவேற்றார். "நீங்கள் இந்தியர்களா? நான் இரண்டாம் உலகப்போரில் கல்கத்தா துறைமுகத்தில் கப்பலில் மூணு நாள் தங்கிருக்கேன்" என்று சொல்லி, "அமி பங்லா ஜானினா" என்றார்.

உமா விழித்தாள்.

"வங்காள மொழியில் தனக்கு வங்காளம் பேசத்தெரியாது" என்று சொல்கிறார் என்று ரகு விளக்கினான்.

வீடு அழகாக இருந்தது. நான்கு படுக்கை அறைகள். இரண்டு குளியல் அறைகள். கொல்லையில் பூச்செடிகள், பழ மரங்கள். வீட்டின் முன்புறத்தில் செவ்வக வடிவில் பசும் புல்தரை. விலையைக் குறைக்கப் பேரம் பேசினார்கள்.

கிழவர் மசியவில்லை. "தரகர்கள் தினமும் வருகிறார்கள். மூணே கால் லட்சத்துக்குக் கூட வித்துத் தருகிறேன் என்று சொல்கிறார்கள். மூணு லட்சம் எனக்குப் போதும். நேத்துக் கூட ஒரு குடும்பம் வந்து பார்த்தது. அவர்களுக்கும் பிடித்திருக்கிறது. யார் முதலில் வாங்கினாலும் எனக்குக் கவலையில்லை," என்றார்.

உஷாவுக்கு போன் போட்டதில் "மூணு லட்சமா... கண்ணை மூடிக்கிட்டு வாங்கு" என்றாள்.

இவர்கள் வீட்டை வாங்க உத்தேசித்து, "எங்களுக்கு லோன் கிடைக்குமா என்று பார்க்கணும்" என்றார்கள். கிழவர் அதற்கும் தயாராக இருந்தார். நான் வங்கியை அழைத்து விவரம் வாங்கி வைத்திருக்கிறேன். உங்கள் சம்பள, சேமிப்பு விவரங்கள் சொல்லுங்கள் என்றார். அவரே கணக்கிட்டு "பிரச்னையில்ல. உங்களுக்கு சுலபமா கடன் கிடைக்கும்" என்று தைரியம் சொன்னார்.

இவர்கள் திருப்தி அடைந்து அவர் கொடுத்த காகிதங்களில் கையெழுத்திட்டார்கள். மறுபடியும் வார நாட்களில் வங்கிக்கு வரச்சொன்னார். இவர்களும் போய் கடனுக்கு மனுச் செய்தார்கள். இரண்டு வாரத்தில் கடன் அனுமதி வந்தது. ஒரு லட்சம் முன்பணம் செலுத்தி இரண்டு லட்சம் வங்கிக் கடன். மாசம் ஆயிரத்தி இருநூறு டாலர் வீதம் வங்கிக்கு முன்னூத்தி அறுவது மாதங்கள் தரவேண்டும்.

கிழவர் தொலைபேசியில் அழைத்து, "வீட்டில் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. வீட்டில் கரையான் இல்லை என்று ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். இதற்கென பிரத்யேகமாக 'டெர்மைட் இன்ஸ்பெக்டர்கள்' இருக்கிறார்கள்.

பொதுவாக அவர்கள் இல்லாததை இருப்பதாகச் சொல்லி காசு பறித்து விட்டுதான் சான்றிதழ் கொடுப்பார்கள். இருநூறு முன்னூறு டாலர் செலவு ஆகும். நீங்களே வந்து சோதித்துவிட்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றார். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்தியாவிலிருந்து தன் பிள்ளையைப் பார்க்க வந்திருந்த ஒரு வாஸ்து நிபுணரை அழைத்துப் போனார்கள். வீட்டைச் சுற்றி பார்த்து விட்டு "கரையான் ஒண்ணும் இருக்கறாப்ல தெரியல. எதுக்கும் வாஸ்துப்படி வாசல் கதவுல சின்னக் கண்ணாடி பதிஞ்சிட்டா போதும். சர்வ உபத்ரவம் நிர்மூலம்," என்றார். அதற்கு அவருக்கு ஐம்பது டாலர் தொகை கொடுக்கும்படி வந்தது. கிழவரின் வீட்டில் கரையான் நடமாட்டம் இல்லையென்பதைத் திருப்தியோடு ஒப்புக்கொள்வதாய் ஒரு தாளில் கையெழுத்திட்டார்கள். கிழவர் அவர்களுக்கு ஒரு ஓவியத்தைப் பரிசளித்தார். அது என்ன ஓவியம் என்று தெளிவாக இல்லை. ஒரு நீலப்பின்னணியில் சின்னக் கோழிமுட்டை மாதிரி ஏதோ இருந்தது. அது என்ன என்று கேட்டு தன் அறியாமையை வெளிக்காட்ட ரகுவுக்கு இஷ்டமில்லை.

வங்கிப் பேப்பர்களில் கையெழுத்திட்டு ஒரு வழியாக அடுத்த வாரம் வீடு கைக்கு வந்து விட்டது. நண்பர்களை அழைத்து வந்து ஒரு சிறு விருந்து கொடுத்து மகிழ்ந்தார்கள். நண்பர்கள் பொறாமையுடன் வீட்டைப் பார்த்து, புகழ்ந்து விட்டுப் போனார்கள்.

இவர்களுடைய அலுவலகம் சான்ஹொசேயில் இருந்தது. இந்த வீட்டை எப்படி வாடகைக்கு விடுவது என்ற பிரச்னை எழுந்தது. வீட்டுக் கடன் தவணை ஆயிரத்து இருநூறு டாலர்கள்.

பேப்பரில் 'ஆயிரத்தி அறுநூறு டாலர் மாச வாடகைக்கு வீடு' என்று விளம்பரம் கொடுத்தார்கள். வாரம் முழுவதும் ஒருவரும் அழைக்கவில்லை.

அடுத்த வாரம் ஆயிரத்தி ஐநூறு என்று குறைத்தார்கள். அடுத்த மாதத்தில் ஆயிரத்தி இருநூறு ஆக்கினார்கள். அப்படியும் சீந்து வாரில்லை. இரண்டு மாதக் கடன் தவணை கட்டியாகிவிட்டது. "பாரு.. வீட்ல யாருமில்லாம, மாசாமாசம் ஆயிரத்தி இருநூறு கரையுது" என்று ரகு வயிறெரிந்தான்.

"இது வியாபாரம்ங்க. கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும். பொறுத்துப்போம்" என்று தேற்றினாள் உமா.

வார இறுதியில் சாக்ரமெண்டோ போய் அந்த வீட்டில் இருந்து கொண்டு வாடகைக்கு விட முயன்றார்கள். தரகர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். "இந்தப் பகுதியில் பள்ளிகள் சுமார்தான் என்பதால் இங்கு வசிப்பதைப் பல குடும்பங்கள் தவிர்க்கின்றன. தவிரவும் இந்த இடத்துக்கு ஆயிரம் டாலர் வாடகையே அதிகம்" என்றார்கள். தரகர் மூலம் வாடகைக்கு விட அவருக்கு ஆயிரத்து ஐநூறு தனியாக கொடுக்க வேண்டும் என்று தெரிந்தது. 'தரகர் வேண்டாம், நீங்களே செய்யுங்கள், சுலபமான வேலைதான்' என்று பட்டேல் தம்பதிகள் ஊக்கினார்கள்.

இரண்டு மாதத்தில் அவர்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது, இந்த வீடு வாடகைக்கு விட முடியும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. வார இறுதியில் இவர்கள் இங்கு வருவதால் நண்பர்கள் அழைக்கும் வார இறுதி விருந்துகளுக்கு இவர்களால் போக முடியவில்லை. இங்கேயே குடிவந்து விடலாமா என்று ரகு யோசித்தான். என்ன, அலுவலகத்துக்குப் போக மூணு மணி நேரம், வர மூணு மணி நேரம். ஆனால் உமாவுக்கு அது சாத்தியமில்லை. அவளுடைய அலுவலகத்தில் இரவில் சில நேரம் சென்று வேலை செய்ய வேண்டியதாயிருந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் வீடு வாடகைக்குப் போகாவிட்டால், இந்தப் பகுதியிலேயே வேலை தேடி விடலாம் என்று யோசித்தார்கள். ஆனால் சாக்ரமெண்டோவில் அவர்களுக்கு உகந்த வேலை இல்லை.

அடுத்த வாரம் ஞாயிறு மாலை சாக்ர மெண்டோ வீட்டை பூட்டிகொண்டு சான் ஹொசே திரும்பும் நேரத்தில் ஒரு காடிலாக் கார் வாசலில் நின்றது. அதிலிருந்து ஒரு பருத்த ஆப்ரிக்கப் பெண்மணி இறங்கினாள்.

"இந்த வீடு வாடகைக்குக் கிடைக்குமா? நீங்கள் இந்தியர்கள் தானே? நமஷ்டே, என் பெயர் ஜெசிகா ஆண்டர்சன்," என்றாள்.

இவர்கள் உற்சாகமாக வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள்.

ஜெசிகாவுக்கு வீடு பிடித்திருந்தது. "என்ன வாடகை, என்ன முன்பணம்" என்றாள் ஆர்வத்துடன்.

பேச வந்த ரகுவை அடக்கி உமா பேசினாள், "வாடகை மாசம் ஆயிரம் டாலர். முன்பணம் இரண்டாயிரம் டாலர். மூவாயிரம் டாலர் கொடுத்தால் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்."

"எனக்கு இது சரி வராது. வந்தனம்" என்று ஜெசிகா ஏமாற்றத்துடன் சொன்னாள்.

ரகுவுக்கு அவளைப் போகவிட மனசில்லை. "உங்கள் மனதில் என்னதான் இருக்கிறது? நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாமா?" என்றான்.

ஜெசிகா மகிழ்ச்சியுடன், "நல்லது என் நிலைமையைச் சொல்லி விடுகிறேன். நான் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை. சாக்ர மெண்டோ நகராட்சிக் குடியிருப்பு வாரியம் குறைந்த பணம் ஈட்டுபவர்களுக்கு ஒரு சலுகை தருகிறது. அவர்கள் கணக்குப்படி நான் மாசம் எண்ணூறு டாலர் வரைக்கும் வாடகை கொடுக்கலாம். அந்த எண்ணூறில் இருநூறு தான் நான் கொடுப்பேன். அறுநூறு வாரியம் நேரடியாக உங்களுக்குக் கொடுக்கும். உங்களால் எனக்கு எண்ணூறு டாலருக்கு இதை வாடகைக்குத் தர முடியுமா? முடியுமானால் நான் ரெண்டு வருடம் வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். இந்தக் குறைந்த வாடகை உங்களுக்கு பெரிய சிரமமாக இருக்காது அல்லவா? இந்த இளம் வயதிலேயே நீங்கள் நன்கு சம்பாதித்துச் சொந்த வீடும் வாங்கி விட்டது எனக்குப் பொறாமையாவே இருக்கிறது" என்றாள்.

ரகுவும் உமாவும் சில நிமிசங்கள் தனியே பேசினார்கள்.

"என்ன இப்படி அடிமாட்டு விலைக்குக் கேட்கறாளே!" என்றான் ரகு.

"மூணு நாலு மாசமா உட்கார்ந்திருக்கோம். இதுவரை கைவிட்டு ஐயாயிரம் கட்டியாச்சு. கேட்டா பள்ளி சரியில்ல, ஏரியா சரியில்லனு சொல்றாங்க. டக்குனு விக்கவும் முடியாது. கையை விட்டுப் பணம் நஷ்டமாயிடும். பரவாயில்ல. ரெண்டு வருசம் லீசு எடுத்துக்கறாளே? நமக்குத் தலைவலி இல்ல. மாசாமாசம் எண்ணூறு டாலர் வந்திடும் நம்ம கையிலேருந்து நானூறு டாலர் சேர்த்து கடனைக் கட்டிடலாம். ரெண்டு வருசத்துல வீடு மதிப்பு நாலு அஞ்சு லட்சத்துக்குப் போயிடும். அந்த லாபத்தில் இந்த சின்ன நஷ்டம் மறைஞ்சிடும்" என்றாள் உமா.

ஜெசிகாவுக்கு வாடகைக்கு விட ஒப்புக் கொண்டார்கள்.

ஜெசிகா சொன்னாள், "இத பாருங்க வீட்டு வாரியப் பணம் மாசக் கடசியிலதான் வரும். முதல் தேதி வராது. முதல் செக் வர இரண்டு வாரம் நேரமாகும். வர ஆரம்பிச்சிட்டா ஒழுங்கா வரும்" என்றாள். பையிலிருந்து அவள் கொடுத்த ஒப்பந்தத் தாள்களில் எல்லோரும் கையெழுத்திட்டனர். "நான் இதை நாளைக் காலையில் குடிவசதி வாரியத்தில் சேர்ப்பித்து விடுவேன். தொண்ணூத்தி ஒன்பது சதவீதம் பிரச்னை இருக்காது. சில சமயம் ஏதாவது கேள்வி கேட்பாங்க."

"என்ன கேள்வி?" என்றாள் உமா.

"உங்க கடன் பத்தி, இல்ல வசிக்கிற இடம் பத்தி... அவங்க ரிகார்டுக்குப் புள்ளிவிவரம் சேகரிக்க"

"முன்பணம் கொடுங்கள்."

ஜெசிகா தயக்கமின்றி மூவாயிரம் டாலருக்கு செக் எழுதிக் கொடுத்தாள். "ஒரு சின்ன வேண்டுகோள்.

இதை புதன்கிழமை உங்கள் வங்கியில் போட்டுக் கொள்ளுங்கள்."

நான் இவ்வளவு பெரிய முன்பணம் கொடுத்தேன் என்பது வாரியத்துக்கு தெரிய வேண்டாம். தெரிந்தால் அவர்கள் பங்குத் தொகை குறையும். இந்த முன்பணம் சமாசாரம் உங்களுக்கும் எனக்கும் மட்டும். நாளைக்கு நான் என் தாயாரிடம் சொல்லி இந்தக் கணக்கில் பணம் கட்டச் சொல்ல வேண்டும்" என்றாள்.

உமாவுக்கு இதில் முழுத் திருப்தியில்லை. "கையில் பணம் வரட்டும். அப்புறம் வீட்டுச் சாவி தரோம்" என்றாள்.

"தாராளமாக... சாவி தர நீங்கள் நேரில் வர வேண்டாம். உறையில் போட்டு தபாலில் அனுப்புங்கள்" என்று சொல்லித் தன் அறிமுக அட்டையை கொடுத்தாள். இருவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றாள்.

ஜெசிகாவின் செக்கை ரகு வங்கியில் கட்டினான். "இது உகாண்டா வங்கியிலிருந்து வர வேண்டிய தொகை. இதை உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்வோம். ஆனால் இதை நாங்கள் அந்த வங்கியிலிருந்து பெறும் வரை நீங்கள் எடுக்க முடியாது" என்றார்கள்.

வியாழனன்று மாலை ஜெசிகாவிடமிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.

"குடி வசதி வாரியம் நம்முடைய வாடகை ஒப்பந்தத்தை அங்கீகரித்து விட்டது. அவர்கள் பங்காக மாசம் அறுநூறு டாலர் செக் உங்கள் கைக்கு வரும். மாசக் கடைசியில் வராவிட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்று சொல்லி வைத்து விட்டாள்.

"இன்னும் முன்பணமே வரவில்லை. இவளை எப்படி நம் வீட்டில் வாடகைக்கு வைப்பது?" என்றாள் உமா.

"வந்துடும். அவள் பொய் சொல்றதா எனக்குத் தோன்றவில்லை. நாமும் சாவி கொடுக்கவில்லை. வாரியம் எப்படி நமக்குப் பணம் கொடுக்கும் என்று தெரியவில்லை" என்றான் ரகு.

"எதுக்கும் வாரியப்பணம், முன்பணம் வருகிற வரை சாவி கொடுக்க வேண்டாம்" என்றாள் உமா.

மாத இறுதிவரை சாக்ரமெண்டோ பக்கம் போகவில்லை. அலுவலக வேலையும் அதிகமாக ஆகிவிட்டது. மாசக்கடைசியில் குடியிருப்பு வாரியத்திடமிருந்து அறுநூறு டாலருக்கு ஒரு செக் வந்தது. இணைப்புக் கடிதத்தில் குடியிருப்பு வாரியத்தின் சமூகப் பணியில் ஒத்துழைத்து குறைந்த வருமானமுள்ள மக்கள் பயனடையும் வகையில் வீட்டை வாடகைக்கு கொடுத்ததற்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்கள். கடிதப் போக்குவரத்துக்கு ஒரு எண்ணைக் குறிப்பிட்டு அதில் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

ரகுவுக்கும் உமாவுக்கும் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. "நாம் இன்னம் சாவியே கொடுக்க வில்லை. அதற்குள் ஒரு பகுதி வாடகை வந்து விட்டது. இன்னம் குடி வைக்கவில்லை என்று இந்தப் பணத்தை வாரியத்திடம் திருப்புவதா? ஜெசிகாவுக்கு சாவி கொடுத்து விடலாமா? அவள் பங்குப் பணம் அப்போதுதானே வரும்?" என்று குழம்பினார்கள். வார இறுதியில் நேரே போய் கொடுத்து விடலாம் என்று போனார்கள்.

அவர்கள் சாக்ரமெண்டோ போனதும், ஜெசிகா வீட்டில் ஏற்கனவே குடியேறி இருந்தாள். ஜெசிகா இவர்களை வரவேற்று, "பாருங்கள் உங்கள் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறேன் என்று பாருங்கள்" என்று உள்ளே அழைத்துப் போனாள்.

"நான் உங்களுக்கு சாவி கொடுக்கவில்லையே. உங்கள் முன்பணம் வந்த பிறகு தருவேன் என்று சொல்லி..." உமா பேசி முடிக்குமுன் ஜெசிகா அவளைக் கையமர்த்தினாள். "பரவாயில்லை. நாம்தான் ஒப்பந்தம் போட்டாச்சு, வாரியமும் அதை அங்கீகரித்து விட்டது. சாவி கொடுப்பது என்பது ஒரு சம்பிரதாயம்தான். நீங்கள் அதை செய்யாவிட்டால் தப்பில்லை. ஏனென்றால் வாடகை வீடுகளில் குடி வருவோர் முதலில் செய்வது புதுச்சாவி போட்டுக் கொள்வதுதானே. இதற்கு முன்னால் யார் குடி இருந்தார்களோ? யாரிடம் சாவிகள் இருக்கிறதோ? எதற்கு வம்பு? நான் பூட்டு ரிப்பேர்காரனைக் கூப்பிட்டு மாற்றி விட்டேன். ஐம்பது டாலர் செலவு. நீங்கள் நல்லவர்கள் என்பதால் உங்களுக்கு பில் அனுப்பாமல் என் கையிலிருந்து கொடுத்து விட்டேன். வாரியம் வாடகைப் பங்கு செக் வந்ததா?" என்றாள்.

"வந்தது. உங்கள் பகுதி வாடகை வரவில்லை. முன்பண செக்கும் பணமாகவில்லை." என்றாள் உமா.

ஜெசிகா உமாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். "ரொம்பவும் வருந்துகிறேன். உகண்டா வங்கியில் இருந்ததில் கணிசமான தொகையை என் தாயார் என் தம்பி படிப்புக்காக எடுத்து விட்டாள். இது எனக்கு இப்பொழுதான் தெரிந்தது. கவலைப்படாதீர்கள். கொடுத்து விடுவேன், கொஞ்ச காலமாகும். என் பங்கு வாடகை இருநூறு டாலர்தானே, வருசத்துக்கு இரண்டாயிரத்து நானூறுதான். ஒரே செக்கில் கொடுக்க முயல்கிறேன்." என்றாள்.

உமாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உதட்டைக் கடித்துக் கொண்டு உயரே பார்த்தாள்.

ஜெசிகா, "உமா...சொல்லவேண்டுமென்று நினைத்தேன்.. மேலே பாருங்கள் என்று அறையின் கூரைப்பகுதியில் இருந்த வட்டமான தண்ணீர்க் கறையைக் காட்டினாள். "போன வாரம் மழை பெய்ததிலிருந்து இது வந்திருக்கிறது.

கூரை ரிப்பேர் செய்ய வேண்டும் போல இருக்கிறது. இல்லாவிட்டால் தண்ணீர் உள்ளே புகுந்து விடும். அதோடு நிற்காது. பாசி படர்ந்து கிருமிகள் மூச்சுக்காற்றில் கலந்து நோய் வரும். என் நாய் கூட ஒரு மாதிரியாக இருமுகிறது. அதற்கு 'கனைனோ பிராங் காயிடீஸ்' இருக்கலாம் என்று மிருக வைத்தியர் சொல்கிறார். அது இதனால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை."

உமாவுக்கு முகம் சிவந்தது. "வீட்டில் இன்னம் ஏதாவது பிரச்னை உண்டா?" என்றாள் எகத்தாளமாக.

ஜெசிகாவுக்கு இந்த எகத்தாளம் பிடிபடவில்லை. "ஆம். ஒரு பிரச்னை. தண்ணீரில் அழுத்தம் குறைவு. இதற்குக் காரணம் இந்த வீட்டில் பல வருடமாயிருக்கும் இரும்புத் தண்ணீர்க் குழாய் மாற்றப்படவேயில்லை. தண்ணீரில் இருக்கும் உப்புகள், துரு எல்லாம் அடைத்துக் கொண்டும் இருக்கலாம். இதை மாற்றிப் புதிதாய்ச் செப்புகுழாய் போட வேண்டும். சீக்கிரம் செய்தால் நல்லது. இல்லாவிட்டால் ஒரு நாள் குழாய் உடைந்து வீடெல்லாம் தண்ணீரால் நாசமாகிவிடும். உங்கள் பொறுப்பு" என்றாள்.

"வீடு வாங்கினதிலிருந்து எங்களுக்கு ஏகப்பட்ட செலவு. கையில் காசில்லை. இப்பொழுது நாங்கள் எந்த ரிப்பேரும் செய்வதாக இல்லை" என்றான் ரகு. உமா ஆமோதித்தாள்.

"உங்கள் இஷ்டம்" என்றாள் ஜெசிகா. அந்த இறுக்க நிலையை மாற்றுவது போல "உமா உன்னுடைய கருப்புப் பட்டுப்புடவை அழகாக இருக்கிறது. நீ இந்தியா போனால் எனக்கு ஒன்று வாங்கி வா" என்றாள்.

உமாவின் வாயெல்லாம் பல்லாகியது. மிகுந்த மகிழ்ச்சியுடன் "இது எனக்கு புடிச்ச கலர். எங்க மாமியாருக்கு இதைக் கட்டினா பொறுக்காது. அமங்கலம், சனீஸ்வரன்னு திட்டுவாங்க" என்றாள்.

அடுத்த சில நிமிடங்கள் அமங்கலம், சனீஸ்வரன் போன்ற சொற்றொடர்களை ஜெசிகாவுக்கு படம் போட்டு பாகம் குறிக்காத குறையாக விளக்க வேண்டியிருந்தது.

"வாடகையைச் சீக்கிரம் அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு ஊருக்கு திரும்பினார்கள்.

அடுத்த மாதம் வாரியத்திலிருந்து செக் வந்து விட்டது. அதில் ஒரு கடிதம் இணைக்கப் பட்டிருந்தது. "உங்கள் சாக்ரோமெண்டொ வீட்டில் பாசி, காளான் தாக்கம் இருக்கும் போலத் தெரிகிறது. இந்த வீட்டில் முறையாகக் கரையான், பூச்சிகள் இருக்கிறதா என்று சோதனை செய்து ரிபோர்ட்டை எங்களுக்கு ஒரு மாதத்தில் அனுப்பவும். அது வரும் வரையில் வாரியத்தின் பகுதி வாடகைப் பணம் கொடுக்கப்படமாட்டாது" என்றிருந்தது.

ரகுவும் உமாவும் குழம்பிப் போனார்கள். "என்ன திமிர் குடித்தனக்காரிக்கு. குறைச்ச வாடகையில வீட்டை எடுத்துகிட்டு, தன் பங்கைக் கொடுக்காம, முன்பணமும் கொடுக்காம, காளான், ஓணான்னு புகார் வேற போட்டுக் குடுக்கறதைப் பாரேன்!"

வாஸ்து சாஸ்திரப் பெரியவர் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார். ரகுவே வாரியத்தை அழைத்து, பெரியவர் வந்து பார்த்துக் கரையான் இல்லாததைத் தெளிவுபடுத்தியதையும் வாசல் கதவில் பரிகாரமாகக் கண்ணாடி பதித்ததையும் சொன்னார். வாரிய அதிகாரி சிரித்தார். "மிஸ்டர் ரகு நீங்க இருக்கிறது அமெரிக்கா. இங்க என்ன சட்டமோ அதன்படிச் செய்யணும். முதல்ல இன்ஸ்பெக்ஷன் செய்யுங்க. பிரச்னை இருந்தா எப்படி அதை நீக்கணும்னு அவங்களே சொல்வாங்க. செஞ்சிட்டு எங்களுக்கு ஒரு பிரதி அனுப்புங்க."

ரகு விளம்பரங்கள் படித்து விட்டு ஒரு கம்பெனியைத் தேர்ந்தெடுத்து சோதனை செய்யச் சொன்னான். நூறு டாலர் வாங்கி கொண்டு இரண்டு நாள் கழித்து ஒரு ரிபோர்ட் ·பேக்ஸ் செய்தார்கள். சாக்ரமெண்டோ வீட்டின் வரைபடம் ஒன்று போடப்பட்டு பரவலாகப் பத்து இடங்களில் சிவப்புப் பெருக்கல் குறி போடப்பட்டு, இந்த இடங்களில் கரையான், பூச்சி இருக்கலாம் என்று ஐயப்பட்டார்கள். இதை நிவர்த்தி செய்ய இரு வழி முறைகள் சொல்லியிருந்தார்கள்.

வழி1: (3 மாத உத்தரவாதம்) பத்து இடங்களிலும் கரையான்/பூச்சி கொல்லி திரவம் தெளிப்பது. (செய்ய ஒரு நாளாகும்)

வழி2: (3 வருட உத்திரவாதம்) வீடு முழுவதும் ஒரு பிலாஸ்டிக் உறையால் மூடி மருந்துப் புகை மூட்டம் போட்டுப் பூச்சிகளை ஒழித்தல் (செய்ய மூன்று நாள்).

வழி1-க்குச் செலவு 500 டாலர். வழி2-க்கு 7000 டாலர்.

ரகுவும் உமாவும் வழி 1-ஐத் தேர்ந்தெடுத்தார்கள். ஜெசிகாவிடமும் வீட்டுக்கு மருந்து தெளிக்கப் போகும் செய்தியைச் சொன்னார்கள்.

"நல்ல முடிவு. அவர்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் வீட்டைத் திறந்து விட்டு ஒத்துழைக்கிறேன்" என்றாள்.
மருந்து தெளிக்கப்பட்டு, வீட்டில் புழு பூச்சிகள் தற்போது இல்லை என்பதாய்ச் சான்றிதழ் வந்தது. அதன் பிரதியை வாரியத்துக்கு அனுப்பினான் ரகு. அந்த மாத வாடகைத் தவணை வந்தது. ஜெசிகாவிடமிருந்து பணம் வரவில்லை. உகாண்டா வங்கியில் தேவையான பணம் இல்லையென்பதால் செக்கைக் கணக்கில் வரவு வைக்க முடியாது" என்று ரகுவின் வங்கியிலிருந்து லெட்டர் வந்தது. ரகுவின் அலுவலகத்தில் ஐம்பது விழுக்காடு வேலை வெளிநாட்டுக்கு போவதால் பாதிப் பேரை வேலையிலிருந்து நீக்கலாமா, அல்லது அனைவரையும் வைத்துக் கொண்டு ஒரு நாளுக்குப் பாதி நேரம் மட்டும் வேலை செய்வதா என்ற விவாதம் எழுந்தது.

கடைசியில் ஒருநாளுக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை என்றும் மருத்துவக் காப்பீடு கிடையாது என்றும் முடிவாகியது. உமாவின் அலுவலகத்தில் சிறுகச்சிறுக ஆட்குறைப்பு நடந்தது. கழிப்பறைக்குப் போன ஆள் இருக்கைக்கு வருமுன் அவரைக் கழிப்பறை வாசலிலேயே சந்தித்துச் சீட்டுக் கிழித்தார்கள்.

கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வலுத்தது. 'பேசாம சேத்த காசை வெச்சிருந்தா எடுத்திட்டு ஊருக்கு ஓடியிருக்கலாம். அதை விட்டிட்டு வீட்டை வாங்கி, காசை அதில் கொட்டிட்டு, இப்ப வாடகையும் வராம, வீட்டையும் விக்க முடியாம எதுக்குச் சிரமப்படணும்' என்பதாகச் சண்டை எழுந்தது. இவர்கள் வீடு வாங்கி வாடகைக்கு விட்டுத் தடுமாறும் அவலம் நண்பர் களால் பெற்றோர்களுக்குத் தெரியவந்தது.

ரகுவின் அப்பா கோபமாக கடிதம் எழுதினார். வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து மகன் தன் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்விப்பான் என்று நம்பியிருக்க, இவன் வீடு வாங்கி வாடகைக்கு விடும் சுயநலத்தை, அக்கிரமத்தைக் கண்டித்தார். உமாவின் தந்தை தன் வணிகத்தைப் பெருக்க வட்டி கொடுத்து, வெளியில் கடன் வாங்கும்போது, தன்னிடம் கொடுத்து வைக்காமல் எதற்கு இவர்கள் வீடு வாங்கிக் குடிவைத்து கஷ்டப்பட வேண்டும் என்று கேட்டார்.

தனக்கு வேலையில் கஷ்டம் இருப்பதாகவும், வீட்டுக்கடன் தவணை கொடுக்கக் கூடப் பணம் கொடுக்க இயலவில்லை என்றும் ஜெசிகா வாடகை தராதது தனக்கு வருத்தமாயிருக்கிறது என்று ரகு ஒரு கடிதம் போட்டான். பதில் கடிதத்தில், வீடு மருந்து தெளித்த போது தான் வீட்டில் தங்கக் கூடாது என்று இன்ஸ்பெக்டர் சொன்னதால், தான் ஹாலிடே-இன் ஓட்டலில் இரண்டு நாள் தங்க நேர்ந்து, தன்னுடைய நாயும் நாய்க்கான 'கேனைன் மோட்டல் 'காப்பிடத்தில் தங்கவும் நேர்ந்து, முன்னூற்று ஐம்பது டாலர் செலவானதற்கான பில்லின் பிரதியை இ¨ணைத்து, இதை வாடகையில் கழித்துக் கொள்ளப் போவதாயும் குறிப்பிட்டு இருந்தாள்.

உமாவுக்கு கண்ணில் ரத்தம் வடிந்தது. "நாம் ஊர் சுத்தி பார்க்கபோனா சீப்பா முப்பது டாலர் ஓட்டல்ல தங்கறோம். நம்ப குடுத்தனக் காரி ஹாலிடே இன்ல தங்கறா. அவ நாய் அம்பது டாலருக்கு எங்கயோ ஸ்பெசல் ஓட்டல்ல தங்குதாம்...."என்று வயிறெரிந்தாள்.

இதோடு இல்லாமல் வாரியம் ஒரு கடிதம் போட்டது. கரையான் ஒழிப்பு தாற்காலிகமாக செய்யப் பட்டிருப்பதாகவும், மூன்று மாத உத்திரவாதமே கிடைத்து இருப்பதாகவும், லீசில் காலம் இரண்டு வருடமாக இருப்பதால் மூன்று மாதம் கழித்து மறுபடியும் கரையான் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள். ஜெசிகாவிடமிருந்து வந்த லெட்டரில் தண்ணீரில் வேகமும் சூடும் குறைவாக இருப்பதால் காலையில் எழுந்து அனைவரும் குளித்துவிட்டு வெளியே போவது கஷ்டமாக இருப்பதாகவும் இதை உடனே கவனிக்காவிடில் குடியிருப்பு வாரியம் இதில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தாள்.

உமாவுக்கு கோபத்தோடு வியப்பும் ஏற்பட்ட்து. "அனைவரும்" குளித்துன்னா? இவ ஒருத்தி தானே! வீட்ல வேற யாரு இருக்கா. நீங்க போயி இத விசாரிச்சிட்டு வாங்க. இப்ப பாதி நேரம் சும்மா தானே இருக்கீங்க"என்றாள். ரகு இதை ரசிக்கவில்லை.

ரகு கடுப்புடன் கிளம்பிப்போனான். வீட்டில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தான்.

அங்கே முதிய பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளிடம் கேட்ட போது, "உன் வீடா அது? நல்ல பொண்ணைக் கொண்டுவந்து குடி வைத்திருக்கிறாய். வீட்டில் தடித்தடியாய் மூணு பேர் இருக்கான்கள். ராத்திரி பூரா பாட்டு, கூத்து, குடி. காலையில எழுந்து வெளியே போயிடறான்கள். சாயங்காலம் நிறையக் கார் வருது. ஏதோ போதைப்பொருள் வியபாரம் நடக்குதோனு தோணுது. சனியன் பிடிச்ச நாயை வேற என் பெட்ரூம்கிட்டக் கட்டிட்டுப் போயிடறாங்க. அது பகலெல்லாம் குலைக்குது. தூங்க முடியல. நீ நாய் வெச்சிக்க ஏன் பர்மிசன் குடுத்த?" என்று பொரிந்து தள்ளினாள்.

"மூணு பேரு இருக்காங்களா?" என்றான் ரகு வியப்புடன்.

"ஆமாம். போன மாசம் வந்தான்கள். சாயங்காலம் வரை இருந்தா நீயே பார்க்கலாம். தலைக்கு ஐநூறு டாலர்னா நாலு ரூமுக்கு ரெண்டாயிரம் டாலர். ஆமா நீ என்ன வாடகை வசூலிக்கறே? அவளுக்கு வேலை, வெட்டி இருக்கா?" என்றாள்.

அவனால் தங்க இயலவில்லை. அன்று மாலை சான் ஹொசேயில் ஒரு புது வேலைக்குத் தொலைபேசி நேர்காணல் இருந்தது. திரும்பிப் போய் உமாவிடம் சொன்னான்.

உமா நொந்து நூலானாள். உங்களுக்குப் பாதி நேரம் வேலையாப் போனதும் நல்லது தான். இனிமே இவளை எப்படி விரட்டறதுன்னு பார்க்கணும். அந்த வீட்ல யாரு இருக்கானு பாத்திட்டு வாங்க. போட்டோ எடுங்க. காமிரா சும்மாதானே இருக்கு? இவள் நிஜமாவே வேலை செய்யறாளா பாருங்க?" என்றாள்.
ஜெசிகா கொடுத்த கார்டில், ஜெசிக்கா ஆண்டர்சன், பி.டி., ஹெட், வில்லியம் ஸ்கூல், சான் ஹொசே என்றிருந்தது. "பாச்லர் ஆப் டீச்சிங்கா இருக்கும் போல" என்றாள் உமா. அட்டையின் பின்னால் இருந்த வாசகம் "டூ மார்ட்டினிஸ் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே" அவளுக்குப் புரியவில்லை.

மறுநாள் ரகு சற்று சீக்கிரம் சாக்ரமெண்டோவில் ஜெசிகா வேலை செய்யும் இடத்தில் போய் விசாரித்தான். அவன் நினைத்த மாதிரி பள்ளி அல்ல அது. வில்லியம் ஸ்கூல் ஆப் பார் டெண்டிங் என்ற அந்தப் பள்ளி, மதுபானக் கடைகளில் வேலை செய்வோர்க்கு எப்படி பானங்கள் கலப்பது என்று சொல்லித் தரும் இடம். ஜெசிகாதான் அதற்குத் தலைமை ஆசிரியை. பி.டி. என்றால் பார் டெண்டராம். ஜெசிகா அங்கு இல்லை. வீட்டுக்குப் போனான்.

வீட்டு வாசலில் நாலு கார்கள் இருந்தன. ரகு மணியை அழுத்த, ஜெசிகா வெளியே வந்தாள். "ஆ, ரகு! வாருங்கள் என்ன விசயம்? சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கிறீர்கள்? சாப்பிட வருகிறீர்களா? வான்கோழி சமைத்திருக்கிறேன்" என்றாள்.

ரகு கோபத்தை அடக்கிக்கொண்டு "நான் வேறு காரணத்துக்காக வந்திருக்கிறேன்" என்றான்.

"ஓ, குழாயில் தண்ணீர் வராதது பற்றி தானே? மிக்க நன்றி ரகு.. பாத் ரூம் இந்தப்பக்கம்."

"நான் முதலில் எல்லா அறைகளையும் பார்க்க வேண்டும்"

ஜெசிகா அவனை எல்லா அறைக்கும் அழைத்து போனாள். ஒவ்வொரு அறையிலும் ஒரு படுக்கை, பெட்டி. ஜெசிகாவின் அறையில் ஒரு பெரிய மரப்பெட்டி... இதில்தான் போதை சாமான் இருக்குமோ... சடக்கென திறந்தான். அதிலிருந்து புஸ்ஸெனச் சீறி ஆறடி நீள மலைப்பாம்பு வெளிப்பட்டது.

ஜெசிகா குனிந்து அதை வாரியெடுத்தாள். "ஓ ரகு, என்ன காரியம் செய்தீர்கள்.. என்னைக் கேட்காமல் பெட்டியை ஏன் திறந்தீர்கள்? இது ஜான். அவனுக்கு உடம்பு சரியில்லை. ஜான்.. கோவிச்சுக்காதே. இது வீட்டுச் சொந்தக்காரர் ரகு. ஒரு முத்தம் கொடு" என்று ரகுவின் கன்னத்தருகே நீட்ட அது ஆவலுடன் முன்னேற... ரகு அய்யோ என்று அலறிப் பின்னால் போனான்.

இது கடித்து வைத்து நாளைக்கு ஆபீசில் 'கன்னத்தில் என்னங்க காயம்" என்று கேட்டு, 'மலைப்பாம்பு செஞ்ச மாயம்ங்க'னு பதில் சொல்லி சே.. மானம் போகுமே.

"ரகு உங்களுக்கு என்ன பார்க்க வேண்டும்? என் நண்பர்கள் சமையலறையில் இருக்கிறார் கள். வாருங்கள், பிறகு பேசலாம்" என்றாள் ஜெசிகா. சமையலறைக்குப் போய் அங்கே இருந்த மூன்று வாட்ட சாட்டமான ஆப்பிரிக்கர்களை அறிமுகம் செய்தாள்.

"இவர்கள் உகாண்டாவிலிருந்து வந்திருக் கிறார்கள். என் உறவினர்கள். இவர் வீட்டு ஓனர் ரகு, இவன் பக்லு, இது பிண்டா, இது பொல்லே" என்று அறிமுகம் செய்ய அவர்கள் கையில் ரொட்டியுடன் 'ஹை!' என்றார்கள்.

ஜெசிகா "ரகு, உங்களுக்கும் ஒரு தட்டு போடவா?" என்றாள்.

ரகு, "இல்ல நான் சாப்பிட்டாச்சு. உங்ககிட்ட முக்கிய விசயம் பேசணும். சாப்பாடு முடிச்சிட்டு வாங்க. வெளிய காத்திருக்கேன்" என்றான்.

"ஹால் சோபாவில் அமருங்கள். இதோ வருகிறேன்" என்றாள் ஜெசிகா.
ரகு சோபாவில் அமரவும் நாய் அவன் எதிரில் வந்து கம்பீரமாக அமர்ந்து கொண்டது. நாயை போட்டோ எடுக்கலாம் என்று காமிராவைத் திறக்கவும் நாய் பயங்கர உறுமலை வெளியிட்டது. ரகு மனதை மாற்றிக் கொண்டான்.

இடம், காலம், ஏவல், பொருள் எல்லாம் பார்த்துதானே செயல்பட வேண்டும்?

அவள் வெளியே வந்தவுடன், "ஜெசிகா நீங்கள் செய்வது பிடிக்கவில்லை. உங்கள் பங்கு வீட்டு வாடகை தருவதில்லை. இதுவரை முன்பணம் வரவில்லை. வீட்டில் நாய் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லவில்லை. இப்போழுது ஒரு பாம்பும் இருக்கிறது. மூன்று பேர்கள் உங்களுடன் சேர்ந்து வசிக்கிறார்கள். இதற்கு என் அனுமதி பெறவில்லை. இவர்களுக்கு அறை வாடகைக்கு விட்டுச் சம்பாதிப்பதாய் எண்ணுகிறேன். நீங்கள் பள்ளி ஆசிரியை என்று நினைத்தேன். ஆனால் ஏதோ மதுபானம் கலப்பது பற்றி போதிக்கிறீர்களாம். நீங்கள் வீட்டை காலி செய்து விடுங்கள்" என்றான்.

ஜெசிகா கோபத்துடன், "இதை என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். இங்கிருப்பவர்கள் என் ஊரிலிருந்து வந்தவர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாடகை தருகிறார்கள் என்று யார் சொன்னது? நாயும் மலைப்பாம்பும் என் செல்லப் பிராணி கள். சாதாரண அபார்ட்மெண்டு அறைகளில் இவற்றை வளர்க்க அனுமதி தருவதில்லை. அதனாலேயே வீட்டை வாடகைக்கு எடுத்தேன். நீங்கள் வீட்டு சொந்தக்காரராக இருக்கலாம், நான் குடித்தனக்காரிதான். இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து சோதனை போட உங்களுக்கு உரிமை இல்லை. என் தனிமையில், என் சொந்த வாழ்வில் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள்.

நான் எந்தப் பள்ளியில் என்ன போதித்தால் உமக்கு என்ன? அப்படி இங்கு வீட்டுக்கு வர வலுவான காரணம் இருந்தால் 24 மணி நேரம் முன்பு தெரிவித்து என் அனுமதி பெற்ற பிறகே இனி வரலாம். வீட்டில் தண்ணீர் அழுத்தம் போதவில்லை. ஹீட்டரில் வெப்பம் இல்லை. சன்னல்கள் சரியாகப் பொருந்தாமையால் இரவில் குளிர்காற்று வீட்டுக்குள் வருகிறது. இதையெல்லாம் இனி நான் பொறுக்க மாட்டேன். நான் வாடகை தரவில்லை என்கிறீர்களே, இரண்டு நாள் வெளியே தங்கியதுக்கு பில் யார் தருவார்கள். சில்லரை யாக இந்த வீட்டில் எத்தனை ரிப்பேர் செய்திருக்கிறேன் என்று பட்டியல் அனுப்புகிறேன். நீங்கள் எனக்குப் பணம் தர வேண்டியதாக இருக்கும். நீங்கள் போகலாம். எழுத்து பூர்வமாய் அனுமதி வாங்கி என்னை சந்தியுங்கள்" என்று சொல்லி நாயை ஒரு பார்வை விட்டு, "மிஸ்டர் ரகு வீட்டுக்கு போகத்தயார். அவருக்கு கதவு வரை போய் வழி அனுப்பிவிடு" என்றாள்.

காது விரைக்க நாய் எழுந்து ரகுவின் பேண்டைக் கவ்வ ரகு தெருவுக்கு ஓடிக் காரில் ஏறினான்.

வீட்டுக்குப் போய் உமாவிடம் நடந்ததை சொன்னான். மறுநாள் உமா அன்று தபாலில் வந்த லெட்டரைக் காட்டினாள்.

"குடித்தனக்காரருக்கு நல்ல அழுத்தத்தில் குளிர்ந்த/சுடு நீர் கிடைக்க வேண்டும். வீட்டை வெப்பமாக்கும் ஹீட்டர் பழுது பார்க்கப்பட்டு பில்டர் அடிக்கடி மாற்றப்பட வேண்டும். சுவரில் உள்ள பெயிண்டில் ஈயக் கலப்பு இல்லை/உண்டு என்பது தெளிவு படுத்த வேண்டும். ஈயம் ரத்தத்தில் கலந்தால் நோய்வரும் சாத்தியக் கூறு உள்ளது. இதையெல்லாம் சரி செய்து சான்றிதழுடன் எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பினாலொழிய உங்கள் வாடகை இனி தரப்படமாட்டாது," வாரியத்திலிருந்து வந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

பட்டேலுக்கு இது மாதிரிப் பிரச்னை இல்லாம எப்படி சமாளிக்கறான்?

மறு நாளைக்கே "வீட்டை விற்கப் போகிறேன். காலி பண்ணு" என்று சொல்லி ஒரு லெட்டர் போட்டான்.

"வீடு 24 மாத லீசில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆறுமாத காலமே ஆகியிருப்பதால் வீட்டுச் சொந்தக்காரர் லீசை முறிக்கக் குடித்தனக்காரருக்கு பாக்கி 18 மாத வாடகை கொடுக்க வேண்டும். அவருக்குப் புது வீடு பார்க்க ஆகும் செலவுகளையும் தர வேண்டும். இதை நீங்கள் அறிவீர்கள் (வாடகை கட்டுப்பாடு / குடியிருப்பு வாரிய விதி எண் 56 ஏ)" என்று நினைக்கிறேன் என்று ஜெசிகா பதில் கடிதம் போட்டாள்.

"குடித்தனம் இருப்பவர்களின் மதம், இனம், தோல் நிறம், மொழி பாகுபாடுகளால் எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது. நீங்கள் கருப்பு என்றால் அமங்கலம், சனீஸ்வரன் என்று நம்புகிறீர்களாம். கருப்புத் தோல் நிறத்தை விரும்பாதவராம். குடித்தனக்காரர்களின் கூட இருக்கும் நண்பர்கள் கருப்பு நிறத்தவர் என்பதால் உங்களுக்கு வெறுப்பு இருக்கிறதாம். உங்கள் குடித்தனக்காரர் எங்களுக்கு ஒரு புகார் அனுப்பி இருக்கிறார். அதை ஆய்ந்து வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நீங்கள் அபராதம் கட்டுவதுடன் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும். உங்கள் பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்" என்று வாரியம் அச்சுறுத்தியது.

ரகுவும் உமாவும் மிரண்டு போனார்கள். தங்கள் நண்பர் பட்டேலை அழைத்து யோசனை கேட்டார்கள். இதை ஒரு வக்கீல் மூலமாகச் சமாளிப்பது நல்லது என்று சொல்லி அவன் தன் வக்கீல் நண்பர் சத்தீஷ் பட்டேலின் பெயரைச் சிபாரிசு செய்தான்.

இவர்கள் போய் வக்கீலிடம் பேசினார்கள். "ஏன் இந்த வாரியம் எங்களை இப்படி உயிர் எடுக்கிறது?" என்று அழுதார்கள். சதீஷ் நடந்ததைத் தீர விசாரித்து அறிந்து கொண்டான்.

"இது இந்தியாவில் உள்ள வாடகை கட்டுப்பாடு அல்ல. இங்கு குழந்தைகள் தாங்கள் குடியிருக்கும் பகுதிப் பள்ளிகளுக்கே போக வேண்டும். சமூகத்தின் அடியில் உள்ள சில ஏழை மக்கள் மேற்குடி மக்கள் இருக்கும் நல்ல இடங்களில் குடியிருந்து நல்ல கல்வி பெற இவர்கள் வாடகை உதவி தருகிறார்கள். ஒரு பகுதிக்கு வாரியமும் ஒரு பகுதிக்கு வாடகைக்கு எடுத்தவரும் பொறுப்பு. வாரியத்தின் சட்ட திட்டங்கள் கடுமையானவை. அதைத் தப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கிடக்கட்டும். நீங்கள் சாதாரணமாக கருப்பு நிறத்தைப் பற்றிச் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு திரித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இங்குள்ள ஆப்பிரிக்க மக்கள் தங்களை 'நீக்ரோ' என்று இனப்பெயரால் அழைப்பது விரும்பவில்லை. தங்களை 'ப்ளாக்' என்றே சொல்லிக் கொள்கிறார்கள். இதை விளக்கி எழுதி ஒரு மன்னிப்பு கடிதம் போட்டு சமாளித்துவிடலாம். சட்டப்படி ஜெசிகாவின் பங்கு வாடகை வராததால், அவளை காலி செய்யச் சொல்ல முடியும். இந்த லீகல் எவிக்ஷனுக்கு ஐநூறு டாலர் செலவாகும்" என்றான்.

வாரியத்துக்கு மன்னிப்புக் கடிதம் போட்டு ஜெசிகாவுக்கு 'மூன்று நாளில் வாடகை கொடு, அல்லது வீட்டைக் காலி பண்ணு' என நோட்டீசு அனுப்பப்பட்டது. அது அனுப்பிய மறுநாள் ஜெசிகாவிடமிருந்து ஒரு வக்கீல் நோட்டீசு வந்தது. தன் வியாபாரத்தில் (வில்லியம் ஸ்கூல் ஆப் பார் டெண்டிங்) ஏற்பட்ட நஷ்டத்தால் வாடகை கொடுக்க இயலாமல் போனதென்றும் தன் கடன்களிலிருந்து சாப்டர்-13 பேங்க்ரப்ட்சி மூலம் நிவாரணம் பெற எண்ணுவதாகவும் கடன்காரர் பட்டியலில் ரகு/உமா சேர்க்கப்பட்டு விட்டதாகவும், மனுதாரர்/கடன்காரர் சந்திப்பு அடுத்த 60 நாளில் சாக்ரமெண்டோ பேங்க்ரப்ட்சி கோர்ட்டில் நடக்குமென்று கண்டிருந்தது.

இது இவர்களுக்குக் குழப்பமாய் இருந்தது. சதீஷ் இதை விளக்கினான். வியாபாரத்தில் நஷ்டம் அடைபவர்கள் கடன் அதிகமாகிச் சொத்து குறைந்தபோது, வியாபாரத்தை நிறுத்திவிடாமல் தொடர்ந்தபடி, கடன்களைச் சிறிது சிறிதாக அடைக்கும் திட்டத்தை ஜெசிகா பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறாள் என்று சதீஷ் சொன்னதும் ரகுவுக்கு கோபம் வந்தது.

"அவள் வியாபாரத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் அவளுக்குதானே வீடு வாடகைக்குக் கொடுத்தேன்? ஒரு வியாபார நிறுவனத்துக்குக் கொடுக்கவில்லையே?" என்று கத்தினான்.

சதீஷ் அவனை அடக்கினான். "நீ சொல்வது எனக்குப் புரிகிறது. யாரும் எப்படியும் வழக்குத் தொடரலாம், அது அவர்கள் உரிமை. இதை நாம் கோர்ட்டில் போய் வாதாடி, வாடகை சமாசாரம் இந்த வழக்கில் சேர்க்க முடியாது என்று வாதிட வேண்டும். எனக்கு ஒரு நாள் கோர்ட் செலவு நாநூறு டாலர். நீ கவலைப் படாதே. ஜெயித்து விடலாம். ஆனால நாம் கோர்ட் குறிப்பிட்ட தேதி வரை காத்திருக்க வேண்டும்" என்றான்.

"இதை நானே செய்து விடலாமா? கோர்ட்டில் என் வார்த்தையை ஏற்றுக் கொள்வார்களா?" என்று கேட்டான் ரகு.

"இதுக்குன்னு நீ போயி வக்கீலுக்குப் படிச்சிட்டு வரவா போற. நான் இருக்கனே.

நீ போய் ஏதாவது குழப்பிவிட்டால் அது உனக்குப் பாதகமாகிவிடும்" என்று சதீஷ் எச்சரித்தான்.

இரண்டு மாதங்கள் வாரியம் பணம் கொடுக்கவில்லை.

கோர்ட்டில் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்னால் ரகுவுக்கு தபாலில் ரெஜிஸ்டர் லெட்டர் வந்தது. அதில் ஜெசிகா சாப்டர்-13 பேங்ரப்ட்சி திட்டததை திரும்பப் பெற்றுக் கொண்டு, சாப்டர்-7 பேங்க்ரப்ட்சி மூலம் தன் கடன்களை ரத்து செய்யக் கோருவதாயும் அது சம்பந்தமான கூட்டம் சாக்ரமெண்டோ கோர்ட்டில் அடுத்த 30 நாட்களில் தேதி குறிப்பிடப்படும் என்றும் வக்கீல் மூலம் தெரிவித்திருந்தாள்.

"இது என்ன புதுசா தொந்தரவு?" என்றாள் உமா.

சதீஷிடம் போனார்கள். "இது தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. தங்கள் கடன்கள் சொத்துகளை மிஞ்சிவிட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டு விடுவார்கள். அவர்களுடைய கிரடிட் கார்டு, வாடகை, மருத்துவ கடன்கள், சில்லரை கடன்கள் அழிக்கப்பட்டுவிடும். அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பழைய கார், துணி மணிகள் தவிர பாக்கி இருக்கிற சொத்துகள் விற்கப்பட்டுச் செலவுபோக பாக்கிக் கடன்காரர்களுக்குச் சிறிது கிடைக் கலாம். சாப்டர் 13-ஐ விட 7 மூலமாக அவளுக்கு பலன் அதிகம். கோர்ட்டில் இதில் தீர்ப்பளிக்க 8 மாதத்திலிருந்து ஒரு வருடம் ஆகலாம். ஏனென்றால் ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் முடியாமல் இருக்கின்றன. அதுவரை வீட்டுக்கு வாடகை கிடைக்காது, அதை விற்கவோ இன்னொருவரைக் குடி வைக்கவோ இயலாது" என்றான்.

ஒன்பது மாதம் கழித்து கோர்ட் ஜெசிகாவின் கடன்களை ரத்து செய்து அவள் சொத்து களின் மதிப்பு மிகச்சிறிய அளவே என்றும் தீர்மானித்தது.

"அப்பாடா வீடு கைக்கு வந்துடும்" என்று இவர்கள் சாக்ரமெண்டோவுக்கு போனார்கள்.

ஜெசிகா, "கோர்ட் எனக்கு நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டது, இருந்தாலும் நான் உடனே இப்பொழுது காலி செய்வதாக இல்லை. நீங்கள் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வீடு, வாடகை என்று இங்கு வந்து என்னைத் தொந்திரவு செய்யாதீர்கள்" என்று சொல்லிக் கதவைச் சாத்தி விட்டாள்.

சதீஷின் ஆலோசனைப்படி எவிக்ஷன் கோர்ட்டில் ஜெசிகா வீட்டைக் காலி செய்ய மனுப்போட்டார்கள். அந்த வழக்கு விசாரணைக்கு வர மூன்று மாதமாகியது. கோர்ட்டில் அவள் வாடகை தராததற்காகக் காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பாகிவிட்டது. தன்னு டைய செல்லப்பிராணியான பாம்பு ஜானுக்கு உடல் நலம் சரியில்லாததால் இன்னும் இருவாரம் கூடுதலாய்த் தங்க அவள் கேட்ட அவகாசம் நிராகரிக்கப்பட்டது. அடுத்த வாரம் அவள் காலி செய்ய வேண்டுமென்றும் செய்யாதபட்சத்தில் கோர்ட் மார்ஷல் அவள் உடமைகளை எடுத்து வெளியே போட்டு வீட்டை சீல் வைத்து விடலாமென்றும் தீர்ப்பானது.

ரகுவும் உமாவும் அவள் காலி செய்து விட்டதை உறுதி செய்து கொள்ள அடுத்த வாரம் சாக்ரமெண்டோ போனார்கள்.

"போகுமுன் ஒரு வீட்டுத் தரகரையும் கையோட அழச்சிட்டுப் போவோம். வீடு என்ன விலைக்குப் போகும்னு தெரிஞ்சு வித்து ஒழிச்சிடுவோம்" என்றாள் உமா. ரகுவும் சம்மதித்தான்.

தரகரோடு அவர்கள் வீட்டுக்கு போனதும் அவள் முதல் நாளே காலி செய்துவிட்டு போனது தெரிந்தது. வீடு மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் ஓட்டைகள் இருந்தன. கம்பளம் கிழிக்கப்பட்டு இருந்தது. குழாய்கள் உடைக்கப்பட்டு இருந்தன. வாசலில் புல் தண்ணீர் விடாமல் காய்ந்து வைக்கோலாய் ஆகியிருந்தது. சன்னல் கண்ணாடிகள் விரிசலோடு இருந்தன. "என்ன இப்படி நாசம் பண்ணிட்டா?" என்றாள். உமா. "சில குடித்தனக்காரர்கள் எவிக்ஷனுக்குப் பிறகு கோவத்துல இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுண்டு" என்றார் தரகர்.

"இந்த வீடு என்ன விலைக்கு போகும்?"

"மூணரை நாலு லட்சம் போயிருக்கும் ஒழுங்காய் இருந்தால். இந்த நிலைமையில் ரெண்டு லட்சம் கிடைத்தால் அதிர்ஷ்டம். நீங்களே ரிப்பேர் செய்தால், அதிக விலை கேட்டுப் பார்க்கலாம். அல்லது அதிக வாடகைக்கு விடலாம்" என்றார் தரகர்.

"வாடகை வேலையே வேண்டாம்" என்றார்கள் இருவரும்.

"வித்து வரும் பணத்தை எப்படி முதலீடு செய்யப் போகிறீர்கள்? வேறெங்காவது வாங்கி விடலாமா? வங்கியில், பங்கு மார்க்கெட்டில்..."

இருவரும் கைகூப்பிச் சொன்னார்கள், "எப்படியாவது இந்த வீட்டை வித்துட்டு ஆளை விடும்... சட்டி சுட்டதடா கை விட்டதாடான்னு ஆயிடுச்சு.. எங்களால இனி எதையும் நம்ப முடியாது... பணத்தைத் தலைகாணிக்குக் கீழே வைத்துக் கொள்வதே மேல் என்று நினைக்கிறோம்."

"எதில் தலையிட்டாலும் தீர விசாரித்துச் செய்தால் அதிக பிரச்னை இராது. தெரிந்தவர்களிடம் கேட்டு பிரச்னையின் எல்லாக் கூறுகளையும் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது" என்றார் தரகர்.

அவருக்கு அறிவுரை சொல்லும் நேரம்...!

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்.
More

தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம்
Share: 
© Copyright 2020 Tamilonline