|
|
|
அன்புள்ள சிநேகிதியே, நான் அமெரிக்காவில் 17 மாதங்களாக என் மகன் குடும்பத்துடன் இருக்கிறேன். இங்கே குடியுரிமை கிடைத்துவிட்டது. முதலில் மூன்று மாதம்தான் தங்குவதாகத் திட்டமிட்டேன். அப்புறம் கொரோனா வந்து இந்தியா திரும்பிப் போகமுடியாத நிலை. எனக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். இருவரும் சௌகரியமாக இருக்கிறார்கள். மூன்று பேரன், ஒரு பேத்தி. பிள்ளை வயிற்றுப் பேரன் காலேஜ் போக ஆரம்பித்துவிட்டான். அப்புறம் 12 வருடம் கழித்து ஒரு பெண். என் கணவர் தற்போது இல்லை. நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று 10 வருடம் ஆகிறது. இதுதான் என் குடும்பக்கதை. இந்தியாவில் பெரிய நண்பர்கள் வட்டம். இங்கே அதிகம் இல்லை.
இவர்கள் ஒரு மலை உச்சியில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். என் பேரன் ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு கரடியைப் பார்த்திருக்கிறான். அதிலிருந்து எனக்குத் தனியாக இருக்க பயம். இவர்கள் அடிக்கடி நடைப்பயணம், மலையேற்றம் என்று கிளம்பிப் போய்விடுகிறார்கள். எனக்குத் தனியாக இருக்க வெறுப்பாக இருக்கிறது. நடக்கவும் முடிவதில்லை. முட்டி வலி. என் மருமகள் பெங்காலி. சாப்பாட்டு விஷயத்திலும் எனக்குச் சரிப்பட்டு வருவதில்லை. வெளியில்தான் சமைக்கிறாள். இருந்தாலும் நான் மூக்கை மூடிக்கொண்டு உள்ளே இருந்து விடுவேன். வாடை தாங்க முடிவதில்லை. அவள் அதிகம் என்னுடன் பேசமாட்டாள். அவள் திருமணத்திற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்தேன் என்று கோபமோ என்னவோ! ஜாதிவிட்டு மணம் செய்யும்போது பெரியவர்கள் அப்படியே ஒத்துப் போவார்களா என்ன? நீங்களே நியாயம் சொல்லுங்கள். ஆகமொத்தம் எனக்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. இந்தியா போனாலும் என்னைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை.
என் பெண்ணிற்கு அவள் மாமனார், மாமியார் அடிக்கடி வந்து தங்கி விடுகிறார்கள். இவனாவது ஜாதி மாறிக் கல்யாணம் செய்துகொண்டான். அவளோ மதமே வேறு. கஷ்டப்பட்டுச் சேமித்து நல்ல படிப்புக் கொடுத்தால் இதுதான் எங்களுக்குக் கொடுத்து வைத்தது. நண்பர்கள், வேலையில் ஒன்றாக இருந்தவர்கள் இருந்தாலும், அவரவர் குடும்பம் என்று இருக்கிறதே! இங்கேயும் இருக்கப் பிடிக்கவில்லை. அங்கேயும் போகத் தயக்கமாக இருக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு வாழ்க்கையே இந்த வயதில் வெறுத்துப் போய்விடுகிறது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மருமகள் என்னைப் புரிந்துகொண்டு ஆசையாக இருந்தால் நன்றாக இருக்கும். பிள்ளை அவள் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை. பாதி நேரம் நானே என்னுடன் பேசிக்கொள்கிறேன். பேச ஆளில்லை. கண் மங்கலாக இருக்கிறது. எதுவும் படிக்க முடிவதில்லை ஏதோ எழுதவேண்டும் என்று தோன்றியது.
வணக்கம்.
இப்படிக்கு, ................. |
|
அன்புள்ள சிநேகிதியே உங்கள் வெறுமை, வெறுப்பு, பயம் எல்லாம் தெரிகிறது. எண்ணங்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம். போனவாரம் ஒரு செக்கப்புக்குப் போய்விட்டு அதன் மின்தூக்கி (elevator) பட்டனை அழுத்தினேன். உள்ளே நுழைந்தால் ஒரு 50-60க்குள் இருக்கும் ஒரு தாய். கூட ஆறடிக்கும் மேலே நல்ல வாட்டசாட்டமான, கம்பீரமான வாலிபன். தலையில் முடி இல்லை. அந்தத் தாய் அவன் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். எனக்குப் புரிந்தது. என் கண்கள் குளமாகிவிட்டன. அந்தத் தாய் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் கையை உயர்த்தி மேலே பார்த்துக் கையைக் கூப்பினேன் அவர் சொன்னது இதுதான், "இவன் ஹார்வர்டு பட்டதாரி. 3 Transplant இதுவரை. கணக்கில்லாத கீமோ" என்று அவளும் கையைத் தூக்கி மேலே பார்த்து விரித்தாள். அவர்கள் எதிரில் என் கண்ணீரை அடக்கிக்கொண்டேன். அவர்கள் தளம் வந்தவுடன் இறங்கிவிட்டார்கள். நான் ஆதுரத்துடன் கையை அசைத்தேன். எலவேட்டரை விட்டு இறங்கிய பின்னும் அந்தக் காட்சி - அந்தத் தாய், அந்த மகன் - என் மனதைவிட்டு இறங்கவில்லை.
இதுபோல எத்தனையோ ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கிறது. நாம் தலை வலித்தால் தவிக்கிறோம். உணவில் உப்பு குறைந்தால் குறை சொல்கிறோம். பிறர் நமக்கு ஏதுவாக இல்லையென்றால் வருத்தப்படுகிறோம். கோவிடைத் திட்டித் தீர்க்கிறோம். கோபத்தில் வார்த்தைகளை வீசுகிறோம். எல்லாரும் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் பிறருக்குச் செய்ததையே நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும், வெறுப்பும், கசப்பும், பயமும் போட்டி போட்டுக்கொண்டு நிறைந்து வழிகின்றன. நான் உங்களைப்பற்றி மட்டும் எழுதவில்லை. பொதுவாக என்னுடன் பேசிய, எனக்கு எழுதிய பலரையும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இறைவன்/இயற்கை நமக்குக் கொடுத்த ஆயுள், வாழ்க்கை, உறவுகள், குடும்பம், குழந்தைகள், கல்வி, பணம், வசதிகள், வாய்ப்புகள் என்று எவ்வளவோ இருக்கின்றன நாம் நன்றி சொல்ல.
எனக்குச் சில சிநேகிதர்கள், சிநேகிதிகள் இருக்கிறார்கள். 'Excellent Chitra Vaitheeswaran' என்பார் ஒருவர். எப்போது கூப்பிட்டாலும். 'Wonderful' என்று ஒரு சிநேகிதி சொல்லுவாள். "அருமை இதுக்கு மேல என்ன வேணும்" என்று இன்னொரு சிநேகிதி சொல்லுவாள். Keep Counting your blessings. உங்களுக்கு வாழ்க்கை அருமையாகத் தெரியும். I keep counting my blessings. Still Counting... Life is Beautiful.
வாழ்க வளமுடன்
|
|
|
|
|
|
|
|