|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே:
எங்கள் குடும்பத்தில் சமீபத்தில் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. நான் தென்றல் அதிகம் படித்தது இல்லை. என்னுடைய நெருங்கிய தோழிதான் இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்தவள். அதாவது இந்தக் குடும்ப நிகழ்ச்சியை உங்களுக்கு எழுதி, உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆலோசனை கூறினாள். நிச்சயமாக ஊர், பெயர் என்று வெளியில் வராது என்று வாக்குறுதியும் கொடுத்தாள். அந்த நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
என்னுடைய மாமியார் இளம் விதவை. இவர் ஒரே மகன். 12-13 வயதில் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தார். என் மாமியார், வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பைத் திறந்தவெளிப் பல்கலையில் படித்து முன்னுக்கு வந்தவர். எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. எங்கள் குடும்பம் பழைய சம்பிரதாயத்தில் ஊறிப்போனவது. நான் படித்திருந்தாலும், பூஜை, பண்டிகை தினங்களை இந்தியாவில் இருப்பது போல்தான் செய்து கொண்டிருப்பேன். அதனாலேயே எங்கள் பாட்டி, மாமியாருக்கு என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும். போன வருடம் அந்தப் பாட்டி இறந்து போய்விட்டார். விசா பிரச்சனைகளால் நாங்கள் இன்னும் இந்தியாவிற்குப் போக முடியாத நிலை. என் அக்கா, தம்பி எல்லோரும் இங்கு இருப்பதால் எங்கள் அப்பா, அம்மா இங்கே இரண்டுமுறை வந்திருக்கிறார்கள். என் மாமியார் சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். அடுத்த வருடம் வரவழைத்து 2-3 மாதம் தங்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. இதற்கிடையில் என் மாமியார் ஏதோ சமூகநல அமைப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
இரண்டு வாரத்துக்கு முன்பு என்னுடைய அம்மா போன் செய்து, உன் மாமியாரைப் பற்றி ஏதோ கேள்விப்பட்டேனே, நிஜமா என்று கேட்டார். நான் அதை நம்பவில்லை. ஆகவே என் சிநேகிதியை அவளுடைய தொடர்புகளை வைத்து என்ன உண்மை என்று கேட்கச் சொன்னேன். என் கணவரிடம் அதுபற்றி ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை.
| என் மாமியார் தன்னுடன் தன்னார்வத் தொண்டு செய்துகொண்டிருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். யாரிடமும் அதைப்பற்றித் தெரிவிக்கவில்லை. அந்த மனிதர் விவாகரத்து பெற்றவர். 3 குழந்தைகள் உண்டு. | |
விஷயமும் தெரிய வந்தது. நடந்தது அனைத்தும் உண்மைதான். என் மாமியார் தன்னுடன் தன்னார்வத் தொண்டு செய்துகொண்டிருந்த ஒருவரை (வயதிலும் சிறியவர் என்று கேள்விப்படுகிறேன்) திருமணம் செய்து கொண்டிருக்கிறார். யாரிடமும் அதைப்பற்றித் தெரிவிக்கவில்லை. அந்த மனிதர் விவாகரத்து பெற்றவர். 3 குழந்தைகள் உண்டு. அவர்களும் பெரியவர்கள்தான். எனக்கு இந்தச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குழப்பமாகவும் இருந்தது. என் கணவரிடம் அன்று இரவு மெல்ல ஆரம்பித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், சுபாவத்திலேயே அவர் ரியாக்ஷன் காட்டக்கூடிய குணம் கொண்டவரும் இல்லை. இருந்தாலும் இந்த தனிப்பட்ட வகையில் தன்னைப் பாதிக்கும் விஷயத்துக்குக் கூடவா சும்மா இருக்க வேண்டும். எனக்குக் கோபம் வந்தது. "உங்களுக்குத் தெரிந்து ரகசியமாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் அம்மா செய்தது நியாயமா?" என்று சண்டை போட்டேன். அவர், "முன்பு எப்போ யாரையோ ரெஃபர் செய்து என் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள். அது அவரவர் வாழ்க்கை. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்று பதில் சொன்னேன். அவ்வளவுதான். போன வாரம் உங்கள் இருவரிடமும் கொஞ்சம் பேச வேண்டும். எப்போது நேரம் என்று ஈமெயில் அனுப்பியிருந்தாள். நமக்குத்தான் நாம் பார்த்துக் கொள்வதற்கே நேரம் இல்லையே. அதனால் ஏதோ பிராபர்டி, பேங்க் பேலன்ஸ் என்று பேசப் போகிறார் என்று நினைத்தேன். இப்போது இதற்காக இருக்குமோ என்று யோசிக்கிறேன்" என்றார்.
"உங்களுக்கு இது நியாயமாகத் தெரிகிறதா? எப்படி ஒரு அம்மா பெற்ற பிள்ளைக்குக் கூடத் தெரியாமல் இப்படி மற்றவர்கள் சிரிப்பதுபோல ஒரு காரியம் பண்ணியிருக்கிறார். எப்படி இந்த செய்தியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றேன். "அம்மா எந்த நோக்கத்தில் அப்படிச் செய்தாள் என்று தெரியாது. முதலில் உன்னுடைய 'source' நம்பிக்கைக்குரியதா என்று தெரியாது. கூப்பிட்டுப் பார்க்கிறேன். ஆனால் சின்ன வயதில் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கிறது போல நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று கேட்பேன். அம்மா சிரிப்பாள். இப்போதுகூட 'I am happy for her'" என்றார். இந்த ஊரில் பத்து வருடங்களுக்கு மேல் இருந்ததாலேயோ என்னவோ, அவருக்குள் இப்படி மாற்றம் ஏற்பட்டிருப்பது போலத் தோன்றியது. என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அவமானமாகவே இருக்கிறது.
என் அம்மா, முன்பே சொல்லுவாள் உன் மாமியாரை விதவை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி அழகு செய்து கொள்கிறாள் என்று. அதுவும் இவ்வளவு ரகசியமாக. அடுத்த வருடம் என் அப்பாவிற்கு 60 வயது. இங்கே சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுத்தான் என் மாமியாரையும் வரவழைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். புதிதாக ஒரு ஃபிளாட் வாங்கியிருந்தோம். அதில்தான் இருக்கிறார் மாமியார். என் உறவுகளுக்கு முன் எனக்கு மிகவும் தலைகுனிவாக இருக்கிறது. அப்படியே அவருக்கு ஆசை இருந்தால் 20 வருடங்களுக்கு முன்பே செய்து கொண்டிருக்கலாமே! அதுவும் இந்த வயதான காலத்தில் போய் ஏன்? எனக்கு அவரோடு போனில் பேசக்கூடப் பிடிக்கவில்லை. அவர் செய்தது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள். ஏன் இப்படி புத்தி கெட்டுப் போய்க் கிடக்கிறது. அவர்மேல் இருந்த பரிதாபமெல்லாம் போய்விட்டது. மரியாதையும் போய்விட்டது. எனக்கு என் கணவர் மீதும் கோபம் கோபமாக வருகிறது. இனி இந்த வீட்டிற்கு எப்படி அவர் அம்மாவை வரவழைப்பேன்? எங்களுக்கு கிரீன் கார்ட் சீக்கிரம் கிடைத்து விடும். இந்தியா போனால் எங்கே தங்குவோம். சே, everything is messed up. என் கணவர் பக்க உறவினர்களும் கேலியாகப் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். எங்களுடைய திருமணம் கொஞ்சம் ஜாதி வித்தியாசம் என்று அவருடைய பல உறவினர்கள் எங்கள் காதலைப் பரிகாசம் செய்தனர். எனக்குள் இன்னும் படபடப்பும், ஒரு சங்கடமான உணர்ச்சியும் (கோபமா, அவமானமா, ஏமாற்றமா) தெரியவில்லை. இதெல்லாம் அடங்க, நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
இப்படிக்கு ........................ |
|
அன்புள்ள சிநேகிதியே,
நீங்கள் பேசிய அந்த 2 மணி நேர உரையாடலில் ஒரு குறுநாவலே எழுதி விடலாம். அதை தென்றலில் அரைப்பகுதியாகச் சுருக்கும்போது சில விஷயங்கள் விட்டுப் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் எல்லா விவரமும் அறிந்தவள் என்ற முறையில் என் கருத்தை எழுதுகிறேன்.
நாமே நமக்கென்று காலத்துக்கேற்ப சில சமுதாய விதிகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன்படியே நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, ஒரு கட்டுக்கோப்பில் இருக்கும்போது, சமூகத்தில் நீதியும், நிம்மதியும் இருக்கிறது என்ற நினைப்பில் வாழ்கிறோம். ஆனால் விதி என்கிற ஒரு சொல் (ஒரு வினை) விதிமுறைகளை சிலருக்கு எதிர்க்க வைக்கிறது. சமுதாய விதி நம் வாழ்க்கை முறைக்குச் சாதகமாக அமையாமல், எப்போது பாதகமாக மாறுகிறதோ, அப்போது ஆரம்பித்து விடுகிறது உள்மனப் போராட்டம், கொந்தளிப்பு எல்லாம். சிலர் உடனே பாதையை மாற்றி, எறியும் கற்களை தாங்கிக் கொள்கிறார்கள். சிலருக்கு அந்த வலியை எதிர்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. சிலர் தன் நிலைமையில் இருந்த பலரை முன்னால் போகவிட்டு அவர்கள் அனுபவத்தைப் பார்த்துவிட்டு, பாதையை மாற்றிக் கொள்வார்கள். பெண்களின் திருமணம், படிப்பு Social Exposure எல்லாம் 50 வருடங்களுக்கு முன் இருந்த நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள். ஒவ்வொரு முன்னேற்றப் படிக்கல்லைத் தாண்டுவதற்கும், விதிமுறைக்கு முரண்பாடாக முன்வைத்தவர்கள் பலமாக அடிவாங்கி, பின்னால் வருபவருக்குக் கொஞ்சம் தைரியத்தையும், அனுபவத்தையும் வழங்கி இருக்கிறார்கள். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது சமூகக் கோட்பாடுகள்.
உங்கள் மாமியாரை எடுத்துக் கொள்வோம். இளம் வயதில் கணவனை இழந்து, ஒரு 12 வயது மகனை முன்னுக்குக் கொண்டுவர வேண்டிய நிலைமை. அப்போது அவருடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? நிரந்தர வேலை வேண்டும். அந்த வேலையில் உயரப் படிப்பு வேண்டும். அந்த மகனைப் பார்த்துக் கொள்ள ஓர் உறவு வேண்டும். ஓர் இயந்திரமாகத்தான் இருந்திருக்கும் அந்த வாழ்க்கை. அப்படி இருந்தால்தான் காதல், தாம்பத்ய சுகம் போன்ற நிலைகளை உள்ளேயே அடக்கி, வெளியில் கொண்டுவர முடியாமல் இருக்கும். மேற்படிப்பு ஒரு சவால். வேலை உயர்வு ஒரு சவால். மகனின் எதிர்காலம், அவன் வெளிநாட்டுப் பயணம், அவன் திருமணம் என்று சவால்களை இலக்குகளாக மாற்றி அந்தப் பாதையில் போய்க்கொண்டே இருந்திருப்பாள் அந்தத் தாய்.
அப்புறம் ஒரு காலகட்டத்தில் அந்தப் பாதை முடிந்து போகிறது. மகன் அருகில் இல்லை, பல வருடங்களாக. மணம் முடிந்த பிறகு, மனதாலும் நெருக்கம் கொஞ்சம் தளர்ந்துதான் இருக்கும். பக்கத்துணையாக இருந்த ஒரே உறவும் (பாட்டி) போய்விட்டாள். பார்க்கும் வேலையும் வயதின் காரணமாக இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அப்போது என்ன தோன்றும்? தனிமை. தனிமை மட்டும்தானா? அதைக்கூடச் சமாளித்து விடலாம். ஆனால் ஓர் இலக்கு இல்லாத வாழ்க்கையில் ஏற்படும் வெறுமை இருக்கிறதே, அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். இல்லை, அவர்கள் நிலைமையில் தங்களை இருத்தி, அவர்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்பவர்களுக்குத் தான் தெரியும்.
நாம் எப்போதும் ஒரு திருமண பந்தத்தை உடல் உறவோடு மட்டுமே சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். This is a kind of mental conditioning. அதற்கு ஆசைப்பட்டிருந்தால் 20 வருடங்களுக்கு முன்பே இந்த முயற்சி எடுத்திருக்கலாமே! யார் முன்வந்திருந்தாலும் தன்னுடைய மகனின் பாதுகாப்புக்கும், பாசத்துக்கும் அது இடையூறாக இருக்கும் என்று நினைத்துத்தான், அதைச் செய்யாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
| உங்கள் மாமியாருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனாலும், வாழ்க்கைத் துணை என்ற பெயரில் அங்கே அவருக்கு உடனே உதவி அளிக்க அந்த நபர் இருக்கிறார். உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் எந்தக் குற்றவுணர்ச்சியும் இருக்காது. | |
இந்த வயதில் அவருக்கு ஒரு பாதுகாப்பு தேவையாக இருந்திருக்கும். ஒரு துணை தேவைப்பட்டிருக்கும். மனோபலம் கிடைத்திருக்கும். ஒரு நட்பு இருந்திருக்கக் கூடும். எத்தனையோ பரிமாணங்கள். எத்தனை வயதானாலும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அடிக்கடிச் சந்திப்பதை வேறு கோணத்தில் பார்க்கும் சமூகத்தை, ஒத்துக் கொள்ள வேண்டிய வகையில் உதவி செய்வது இந்த 'Legal Certificate'. இது இரகசிய திருமணமாகத்தான் பெரும்பாலும் இருக்கும். உங்கள் மாமியார் படித்துப் பதவியில் இருந்தவர். அவர் தேர்ந்தெடுத்தவரும் அந்தச் சமூக நிலைமையில்தான் இருப்பார் என நினைக்கிறேன். இருவரும் இதுபற்றி நிறைய யோசித்து, நிறையச் சிந்தித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மனதில் என்னவகையான embarrassment இருந்தது என்று யாருக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை யார் விளம்பரம் செய்து பெருமை தேடிக்கொள்வார்கள்?
உங்கள் கணவருக்குச் சொல்லியிருக்கலாம் முதலில். ஆனால் இதில் அந்தத் தாய்க்கு என்ன emotional block இருந்தது என்று தெரியுமா? சிறிது காலம், ஊர் வம்பில் பெயரில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கும் இதுவும் இதைவிட முரண்பாடான செய்தி கிடைக்கும்வரை.
நீங்கள் வயதில் சிறியவர். பழைய சம்பிரதாயங்களில் ஊறியிருக்கிறீர்கள். நான் வயதில் பெரியவள். புதிய முரண்பாடுகளை, அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். உங்களுக்கும் சிறிதுகாலம் ஆகும் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட. ஆனால் அவமானப்பட வேண்டாம். இங்கே உங்கள் குற்றம் எதுவும் இல்லை. அந்த மாமியாரை வேறு கோணத்திலிருந்து பாருங்கள். 20 வருடங்கள் அந்தத் தாய் அவனை வளர்த்து, வாழ்க்கையில் முன்னேற வைத்து உங்களுக்கு அளித்திருக்கிறாள்.
உங்கள் மாமியாருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனாலும், வாழ்க்கைத் துணை என்ற பெயரில் அங்கே அவருக்கு உடனே உதவி அளிக்க அந்த நபர் இருக்கிறார். விசா, படிப்பு என்று நீங்கள் போக முடியாமைல், பார்க்க முடியாமல் இருந்த வருடங்களில், அவர் அனுபவித்த தனிமை இனி இருக்காது. உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் குற்றவுணர்ச்சியும் இருக்காது. யாருக்கு என்ன நிலை, எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது.Just accept her as a good mother & move on.
வாழ்த்துகள் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|
|