பையனைப் பருந்து தூக்கிப் போனது!
|
|
மகிழ்ச்சியான குழந்தைகள் தேசத்தின் பெருமை! |
|
- சரவணன்|ஏப்ரல் 2002| |
|
|
|
1977-ஆம் ஆண்டு மால்கம் ஆதிசேஷையா அவர்களின் பெருமுயற்சியால் மாநில பள்ளி சாரா கல்விக் கருவூலம் என்கிற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஏழு மாநிலங்களில் மட்டுமே ஆரம்பித்த நிலையிலிருந்த இந்தத் திட்டம், இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிளை விட்டுப் பரவியிருக்கிறது.
தமிழ்நாடு மாநில பள்ளி சாரா கல்விக் கருவூலம் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் தமிழ் மொழி மற்றும் வாழ்வியல் பாடங்களைக் கற்றுத் தருவதில், இன்று வரை முனைப்புடன் பணியாற்றி வருகிறது.
"நாமெல்லாம் மனித உரிமை சிந்தனைகள் பற்றிப் பேசுகிறோம். சுதந்திரச் சிந்தனை பற்றிப் பேசுகிறோம். ஆனால் குழந்தைகளின் உரிமை கள் குறித்துச் சிந்திப்பதில்லை. குழந்தைகளைக் குழந்தைகளாகவே நடத்த முற்படுவதில்லை. குழந்தைகள் உலகம் என்பது தனியானது. அதில் நம்மால் நுழைய முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்றால், அவர்களை நம்முடைய உலகத்துக்கு இழுத்து வருகிறோம். இதனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படுகிறது. அவர்கள் சுபாவப்படி அவர்களை விடுவதில்லை. அவர்களை உணர்வுகளை மதித்து அவர்களை வளர்ப்பதன் மூலம், மகிழ்ச்சியான குழந்தை களாக அவர்களை உருவாக்க முடியும். மகிழ்ச்சியான குழந்தைகளே தேசத்தின் பெருமை" என்கிறார் ஜான் ஏ. ஜோசப். இவர் மாநில பள்ளி சாரா கல்விக் கருவூலத்தின் இயக்குனர் பொறுப்பிலிருக்கிறார்.
இவரை ஆசிரியராகக் கொண்டு 'ஏற்றம்' என்கிற மாத இதழும் வெளியாகிக் கொண்டி ருக்கிறது. இந்த இதழ் 25 வருடங்களாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான கதைகள், அறிவியல் செய்திகள், துணுக்குகள் என்று குழந்தை களுக்குப் புரிகிற விதத்தில் இந்த இதழில் கட்டுரைகள் வெளியாகின்றன. சுமார் 3000 பிரதிகள் வரை அச்சடித்து வெளியிடுகின்றனர். தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளிலெல்லாம் இந்த இதழை இடம் பெறச் செய்வதுதான் எங்களின் நோக்கம் என்கிறார் இதன் ஆசிரியர். ழுழுக்கவும் எளிமையான நடையில் அதிகமான தகவல்களை உள்ளடக்கி இந்த இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
'ஏற்றம்' இதழ் தவிர்த்து இந்த அமைப்பு குழந்தைகளுக்கான பல்வேறு புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறது. இந்தப் புத்தகங்கள் 'வளர்கல்வி' என்ற திட்டத்தின் கீழ்க் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அரசு இந்தத் திட்டத் துக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது.
'தமிழைப் பிழையின்றி எழுதுவது எப்படி?' என்கிற புத்தகம் ஆரம்ப நிலையிலுள்ளவர்க ளுக்குத் தமிழ்க் கற்றுத் தரும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விளக்கப் படங்களுடன் இந்தப் புத்தகத்தின் வழியாக எளிமையாகத் தமிழ்க் கற்றுத் தரப்படுகிறது. 'வாழ்க நலமுடன்' என்கிற புத்தகம் குழந்தை களின் மருத்துவ அறிவை மேம்படுத்தும் வகையில் செய்திகளைத் தாங்கியுள்ளது.
குழந்தைகளுக்கான 'மண்வாசனைக் கதைகள்' இந்தப் புத்தகம் நல்ல வடிவ நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக நாட்டுப் புறங்களில் வழங்கப்பட்டு வரும் கதைகளை குழந்தைகளுக்குப் புரிகிற மொழிநடையில் டாக்டர்.சு.பாலசுப்ரமணியன் தொகுத்து எழுதியிருக்கிறார். பாட்டி கதை சொல்லும் பாணியில் அமைந்த இந்தக் கதைகளைக் கண்டிப்பாகக் குழந்தைகள் விரும்பிப் படிப் பார்கள் என்று சொல்லலாம்!
'புதிர்க்கதைகள்' ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு புதிர் வைத்து அதை அவிழ்க்கும் படியாக கதைப் போக்கு அமைந்திருக்கிறது. 'தவறு செய்தால் தண்டனை கிடைக்கும்' கதை நீதி நெறியைப் படக் கதைகளின் வழியாகப் போதிக்கிறது. காமிக்ஸ் படிக்க விருப்பமுள்ள குழந்தைகளால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக விரும்பப்படும். |
|
'வாசித்தல் திறன் வளர்ப்போம்' என்கிற புத்தகம் வாசிக்கும் முறைகள் பற்றியும், அதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பது பற்றியும், எழுத்துருக் களைக் கண்டறிவது பற்றியும் விளக்கிச் சொல்கிறது. இதில் விளையாட்டுக்களுடனும், படக் கதைகளுடனும் கூடிய முறையில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.
பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெயில் முறையிலான புத்தகங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அதுவுமில்லாமல் பிரெயில் எழுத்து முறையில் பார்வையற்றவர்களுள் சாதனையாளர்களாகத் திகழ்ந்தவர்களின் கதைகளைப் புத்தகமாக வெளியிட்டு, பார்வையற்ற மாணவர் களை ஊக்கப்படுத்தியிருக்கின்றனர்.
14-வயதிலிருந்து 19 வயது வரையிலானவர் களுக்குப் பாலியல் கல்வி அளிக்கும் விதமாகவும் இந்த அமைப்பினர் புத்தகங்கள் பல வெளி யிட்டிருக்கின்றனர். "இந்த வயதில் குழந்தைகள் புதிரான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். குழப்பமான மனநிலையில் சிக்கித் தவிப்பார்கள். அதனால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படும் எனவே குழப்பமான மனநிலையைப் போக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற் காகத்தான் இந்தப் புத்தகங்கள் வெளியிடப் பட்டுள்ளன" என்கிறார்கள்.
ஏன் கதைகளை மட்டுமே வெளியிடுகிறீர்கள் என்று கேட்டால், "குழந்தைகளின் பிரியம் எப்போதும் கதைகளின் மீதுதான். எனவேதான் பெரும்பாலும் கதைகளின் வழியாகவே நாங்கள் நல்ல தகவல்களை அவர்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறோம்" என்கிறார் ஜான் ஏ.ஜோசப்.
'மேடையில் பேசுவது எப்படி?' என்பது போன்ற கட்டுரைகளை 'ஏற்றம்' இதழ் வெளியிட்டுக் குழந்தகளுக்குப் பல்துறை அறிவையும் போதித்து வருகிறது. 'வார்த்தை விளையாட்டு' என்கிற பகுதி மூலம் குழந்தைகள் தங்களுடைய தமிழறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிறுவனம் 'புத்தகப் பயணம்' என்கிற பெயரில் நடமாடும் புத்தகக் கண்காட்சியையும் நடத்தி வருகிறது. ஒரு பேருந்து முழுக்க புத்தகங்களை நிறைத்து பள்ளிகள், மக்கள்கூடும் இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறது. "மனிதர்கள் புத்தகங்களைப் பெரும் பாலும் நாடி வருவதில்லை. அதனால் நாங்கள் புத்தகங்களுடன் மனிதர்களை நாடிச் செல்கி றோம். அதற்கு வரவேற்பு இருக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி இல்லாமல், இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் ஆர்வமாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றதைப் பார்க்கையில், சந்தோசமடைந்தோம்" என் கிறார் இயக்குனர்.
புத்தகங்களைப் பெற விரும்புபவர்கள் கீழ்க் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
இயக்குனர் மாநில பள்ளி சாராக் கல்விக் கருவூலம் 20, முதல் தெரு, வெங்கடரத்தினம் நகர் விரிவு அடையாறு, சென்னை - 600 020 தொலைபேசி: 91-44-4914147, 4416171 தொலைநகல்: 91-44-4911922 மின்னஞ்சல்: srctn@md3.vsnl.net.in
மாநில பள்ளி சாரா கல்விக் கருவூலம் வெளியிட்ட 'புதிர்க் கதைகள்' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...
சரவணன் |
|
|
More
பையனைப் பருந்து தூக்கிப் போனது!
|
|
|
|
|
|
|