Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
முன்னோடி
விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
- |ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlargeஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் தொழில்நுட்ப வல்லுனருமான டாக்டர் அப்துல்கலாம், "India 2020 - A Vision For the nex millennium" என்ற நூலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

முன்னேறிய நாடுகளின் வரிசையில் இடம் பெறும் ஆசையுடைய நாடு, முக்கியமான தொழில் நுட்பங்களில் வலிமை பெற்றதாகவும், தனது வலிமையைத் தானே தனது படைப்புத் திறன் மூலம் தரத்தில் உயர்த்தும் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இந்தக் கருத்து செயல்பூர்வமான கருத்தாக உருமாற்றம் பெற தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டாக்டர் அப்துல்கலாம் செலவிட்டுள்ளார். இந்தியாவை தொழில்நுட்பம் எனும் ஆயுதம் தாங்கிய நாடாக பரிணமிக்கச் செய்ய தனது தீவிரமான சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளார்.

இத்தகைய மறுமலர்ச்சிக்குக் காரணமான டாக்டர் அப்துல்கலாம், தமிழ்நாட்டின் இரா மேஸ்வரம் தீவில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் 1931ல் பிறந்தார். தந்தை ஜைனுல்லாபுதீன். தாய் ஆஷியம்மா. ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்திலேயே கற்றார். மதவேறுபாடுகள் அற்ற ஒருமைப்பாட்டுச் சூழலில் அவர் ஆரம்ப கல்வி கற்றார். தொடர்ந்து ராமநாதபுரம் ஸ்வார்ட்ஜ் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

பள்ளிக்காலத்திலேயே பறவைக் கூட்டங் களைக் கண்டு அதிசயத்துப் போவார். தானும் அதைப்போல் பறக்க வேண்டும் என்பதை லட்சியமாகவே வளர்த்துக் கொண்டவர். 'ஆகாயத்தில் பறந்த முதற் குழந்தை நானா கத்தான் இருப்பேன்' என்று வேடிக்கையாக சொல்வார்.

''ஒவ்வொருவரின் வாழ்விலும் பல புயல்களையும் மிகச் சில தென்றல்களையுமே எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும் போது பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும் ஓரிரு சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெற வேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால் அவை உழைப்பாக மாறி நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம்.''

இவ்வாறு புலம்படுத்தும் அப்துல்கலாம் தனது வாழ்க்கையை இதற்கான வேள்விக் களமாக மாற்றியமைத்தார். வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற ஆத்மப் பரிசோதனைக்கு தன்னையே ஆட்படுத்தினார். ''ஆசை, நம்பிக் கை, எதிர்பார்ப்பு என மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும்'' என்ற தனது ஆசிரியரின் கூற்றை தொடர்ந்து உரசிப் பார்த்து வெற்றி காணத் தொடங்கினார்.

1950ம் ஆண்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி; பின்னர் சென்னை குரோம்பேட்டை எம்ஐடிக்கு விண்ணப்பித்தார். இவரது பெயரும் தெரிவு செய்யப்பட்ட மாணவர் பட்டியலில் இடம்பெற்றது. படிப்பைத் தொடர ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அவ்வளவு தொகையை அப்பா கொடுக்க முடியாத நிலைமை என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றார். அப்போது அவரது தங்கை ஜோஹரா தனது சங்கிலி யையும் வளையல்களையும் அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவினார். தனது படிப்பை முடித்தார். பட்டம் பெற்றார்.

எம்ஐடியில் விமானப் பொறியியல் பட்டதாரி யானவுடன் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வந்தன. ஒன்று விமானப்படை வேலை. அடுத்தது பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி (விமானம்) இயக்குநகரத்தில் வேலை. (Directorate of Technical Development and production - DTD & P (Air).

பள்ளிக்கால கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் விமானப்படை வேலையில் சேர தில்லி சென்றார். நேர்முக தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சோர்வடையவில்லை. தோல்வியை மறந்து DTP &P(Air) அலுவலகத் தில் முதுநிலை விஞ்ஞானியாகச் சேர்ந்தார்.

இயக்குநரக தொழில்நுட்ப மையத்தில் நியமனம் பெற்றார். விமானத்தை ஓட்ட முடியாமல் போனாலும் குறைந்தபட்சம் அதைத் திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு உதவி செய்பவராக மாறினார். முதல் வருடப் பணியில் சூப்பர் சோனிக் டார்கட் விமானத்தை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது. இந்த அனுபவம் அவரை மேலும் மேலும் பல்வேறு தொழில்நுட்ப கற்கைகளுக்கு தள்ளியது. விமானப்பராமரிப்பில் அடிப்படை அனுபவம் மற்றும் ராணுவத் தளவாட சோதனை நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அப்துல் கலாம் ஈடுபட்டு வந்தார். இத்துறைசார் ஆராய்ச்சித் தகைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வளர்ந்தார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை விவகாரங் களுடன் தொடர்புடையவராகவும் தொழில்நுட்ப ஆராய்ச்சித் திறன் மிக்கவராகவும் வளர்ந்தார். உயர்ந்தார். அவரது பணிக்காலத்தில் அவருக்கு வந்த இடர்களும் தோல்விகளும் ஏராளம். ஆனால் அதைக் கண்டெல்லாம் அவர் அஞ்சவில்லை.

அவர் தலைமையில் உருவான நந்திஹோவர் ரக விமானம் கருவிலேயே அழிந்தது. ராட்டோ திட்டம் கைவிடப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட எஸ்எல்வி -3 ராக்கெட் நான்காவது கட்டத்தில் விழுந்தது. தொடர்ந்து வந்த கேலிகளையும், கிண்டல்களையும் சவாலாக எடுத்து மேலும் மேலும் சளைக்காது முன்னேறினார். ராக்கெட் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கெளரவம் சேர்த்ததில் டாக்டர் அப்துல் கலாமுக்கு பெரும் பங்குண்டு.
தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து இந்தியப் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும் பதவி வகித்தார். தனது விடாமுயற்சியும், தீவிரமும் நிறைந்த எண்ணங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தனது வாழ்நாளிலேயே நிரூபித்து சமாகலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிதான் டாக்டர் அப்துல்கலாம்.

பல்வேறு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் பத்மவிபூஷன் (1990) பத்மபூஷன் (1981), பாரதரத்னா போன்ற உயர் விருதுகளையும் பெற்றுள்ளார். விருதுகள் பதவிகளுக்கு அப்பால் விஞ்ஞான மனோபாவம் கொண்ட ஆராயச்சித் திறன் அவரை பதவிகளில் இருந்து விடுவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாரளாக பேராசிரியராக நியமனம் செய்ய வைத்துள்ளது.

விஞ்ஞானி விக்ரம் சாராபாய் 1963இல் இந்தியா எந்தவித விஞ்ஞான வளர்ச்சியை பெறும் முன்பே, எப்படி இந்தியாவை வளமான நாடாக மாற்ற முடியும் என்ற எண்ண எழுச்சியைப் பரப்பினார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் மூச்சும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் சுற்றியே இருந்தது. அவர் இஸ்ரோ' என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை இந்த நாட்டுக்குக் கொடுத்தார்.

1969இல் 'கம்யூனிகேஷன் சாட்டிலைட்' எனப்படும் தொடர்புச் சாதன செயற்கைக் கோள்களை எந்த நாடும் வானவெளியில் ஏவிவிடவில்லை. அந்தக் கால கட்டத்திலேயே விக்ரம் சாராபாய், இந்தியா எப்படி பெரிய ராக்கெட்டுகளைக் கொண்டு தொடர்புச் சாதன செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்று வான்வெளி ஆராய்ச்சித் திட்டத்தை வெளி யிட்டார். அந்த மாபெரும் விஞ்ஞானியின் தலைமையில் எங்களுக்குப் பணி புரியக் கிடைத்தது பெரிய வாய்ப்பாகும் என அப்துல்கலாம் கூறுவார். விக்ரம்சாராபாய் ஒரு தொலைநோக்கு கொண்ட விஞ்ஞானி என அப்துல்கலாம் புகழாரம் சூட்டுகின்றார்.

விக்ரம் சாராபாயின் எண்ணங்களில் உருவான வான்வெளி ஆராய்ச்சித் திட்டம் 25 ஆண்டு களில் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் நாட்டில் தோன்றக் காரணமானது. இந்தத் தோற்றுவிப்பாளர்களில் தோன்றிய விஞ்ஞானி தான் அப்துல் கலாம்.

இன்று இந்தியா பலவிதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி மிக முக்கியமான வான்வெளித் தொடர்பு சாதனங்களை ஏற்படுத்தியிருப்பது, வான்வெளி ஆராய்ச்சிக்கும் பொருளாதார, மேம்பாட்டுக்கும் அடிக்கல்லாக அமைந்து வருகிறது. இந்த உருவாக்கத்தில் அப்துல்கலாமின் பங்களிப்பு முக்கியமானது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகலம், எஸ்எல்வி - 3 திட்டத்திலும், அக்னி திட்டங்களிலும் ஆழமான ஈடுபாடு கொண்ட வராக டாக்டர் அப்துல்கலாம் இருந்துள்ளார். 1998 மே மாதத்தில் நடைபெற்ற அணுகுண்டு வெடிப்பு சோதனையில் முழுமையாக பங்கேற்றவர்.

விண்வெளி, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, அணுசக்தி என்ற மூன்று விஞ்ஞான அமைப்பு களிலும் பணியாற்றி சாதனைகள் நிகழ்த்தி நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானி அப்துல்கலாம். இவரது ஆராய்ச்சித் தேட்டம், விஞ்ஞான நோக்கு நவஇந்தியா பற்றிய கனவுகளுக்கான நிஜங்கள்.

தேசக் கனவுகளில் விளைந்த முன்னோடி விஞ்ஞானியாக டாக்டர் அப்துல் கலாம் இருக்கின்றார். சுயசார்பு லட்சியம் தொழில்நுட்ப தொலைநோக்கு - 2020 என்று இரு திட்டங்களின் பலனாக இந்திய தேசம் வலுவான, வளர்ச்சியடைந்த ஓர் தேசமாக உருப்பெற உயர்வடைய தனது எண்ணங்களாலும் செயல் களாலும் அயராது உழைத்த பெருந்தகை டாக்டர் அப்துல்கலாம். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெருமைதரக்கூடியது. மேலும் அவரது விடாப்பிடியான உறுதியும் எண்ணங் களும் ஆராய்ச்சி வேகமும் இளந்தலைமுறை கையகப்படுத்த வேண்டிய உயரிய பண்புகளாகும்.
Share: 




© Copyright 2020 Tamilonline