Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
மிளகாய்ப் பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்!
- சரவணன்|மே 2002|
Share:
'மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்'. பாரதியார் குழந்தைகளுக்காக எழுதிய கதைகளின் தொகுப்பு இது!

இந்தத் தொகுப்பை வெளியிட்டு பாரதிக்குள் ஒளிந்து கிடந்த குழந்தை இலக்கிய எழுத்தாளர் முகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தினர். பழனியப்பா பிரதர்ஸ்! ஆம். கோனார் தமிழ் உரையைப் பதிப்பித்துக் கொண்டிருப்பவர்கள்தான். (பார்க்க: பேட்டி)

"இன்றைய குழந்தைகள் படிப்பதற்கு, ஆர்வத்தைத் தூண்டும்படியான புத்தகங்கள் இல்லை என்பதை உணர்ந்தோம். எனவே குழந்தைகளைக் கவருகிற விதத்தில் புத்தகங்களைப் பதிப்பிக்க ஆரம்பித்தோம். வெறும் அறிவுரைகளாக இல்லாமல் குழந்தைகள் விரும்புகிற விதத்தில் படக் கதைகளோடு அறிவை வளர்க்கும் கதைகளை முதன் முதலில் நாங்கள்தான் வெளியிட ஆரம்பித்தோம்" என்று தங்களது குழந்தைகளுக்கான புத்தகத் தயாரிப்பு நோக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் ப.செல்லப்பன்.

'பாப்பாவுக்கு-காந்தி', 'கௌதம புத்தர்', 'சூரப்புலி', 'மாயக்கள்ளன்', 'ஓநாய் ஜாக்கிரதை', 'காலம்', 'மரகதக் கண்ணன்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'குட்டிச் சாத்தான்', 'பூனைக் கல்யாணம்', 'பாப்பாவுக்கு காந்தி கதைகள்', 'பாப்பாவுக்குப் பாரதி', 'அதிசய நாய்', 'சிந்துபாத்தின் கடல் யாத்திரைகள்', 'ஓலைக்கிளி', 'பள்ளிப் பையன் கோபாலன்', 'வெள்ளை முயல்', 'ஓடி வந்த பையன்'.... என நூற்றுக்கணக்கான, குழந்தைகளுக்கான புத்தகங்களை இந்தப் பதிப்பகத்தினர் வெளி யிட்டுள்ளனர்.

'நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்' என்கிற தலைப்பில் 60 அறிஞர் பெருமக்களைப் பற்றிய அறுபது புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

"நல்லவனாக வாழ் என்பது நல்ல அறிவுரைதான். எப்படி நல்லவனாக வாழ்வது? தாய் சொல்லிய கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார் சிவாஜி. அரிச்சந்திரன் கதையைக் கேட்டு சத்தியம் தவறாத மகானானார் காந்தி. இது போன்ற நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் நிச்சயம் நாம் நல்லவனாக வாழலாம்.

நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள், தேசபக்தர்கள், அறிஞர்கள், மகான்கள், தொழில் வல்லுனர்கள் எத்தனை எத்தனையோ பேர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை இனிய தமிழில் எளிய நடையில் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்' என்னும் தலைப்பிலே வெளியிட்டுள்ளோம். இந்த வரிசை நூல்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்கள்.

சமயம் வளர்த்த சான்றோர்கள் என்ற தலைப்பின் கீழும் 9 நூல்களை வெளியிட்டுள்ளனர். அது பற்றிக் கூறுகையில், "இது இருபத்தோறாம் நூற்றாண்டுக் காலம். விஞ்ஞானம் மேலோங்கி மெய்ஞானம் குன்றியுள்ள காலம். பொய்யான புலன் நெறிகள்மீது மக்கள் போதையுற்று மயங்கும் காலம். பொருளாட்சி ஓங்கி அருளாட்சி வீழ்ச்சியுற்றுள்ள காலம். இந்தச் சூழ்நிலையில் இளம் நாற்றுகளாய் விளங்கும் இளைஞர் சமுதாயம் சுற்றியடிக்கும் சூறாவளியால் தடுமாறலாமா? வழியறியாது திணறலாமா?

கூடாது. செழித்து வளர வேண்டிய அந்த எதிர்காலப் பயிர்களுக்கு உரமாக அமைய இந்த வரிசை நூல்களை வழங்கியிருக்கிறோம்" என்கிறார்கள்.
பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பித்த கௌதமபுத்தர், காவேரியின் அன்பு, நாடு காத்த நல்லவர்கள், அழகான ஆலமரம் போன்ற புத்தகங்கள் இந்திய அரசினர் குழந்தை இலக்கியப் பரிசை வென்றுள்ளன.

நாட்டிய ராணி என்னும் புத்தகம் வானொலி சிறுவர் சங்கப் பரிசையும் கார்வண்ணன் கண்ட கனவு, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பொற்காசு, கடவுளின் கருணை, பண்பும் பாசமும், பாப்பா பாட்டு பாடுவோம், அப்பளராஜா, நாட்டுக்கு உழைத்த நல்லவர், அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன்... ஆகிய புத்தகங்கள் குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசயும் வென்றுள்ளன.

குழந்தைக் கவிஞர் என அழைக்கப்படும் அழ.வள்ளியப்பாவின் ஆரம்ப கால எழுத்துக்களைப் பதிப்பித்து ஊக்குவித்தவர்கள் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தினர்கள்தான். "அழ வள்ளியப்பாவும் என் அப்பா பழனியப்பனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அழ.வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தை எங்கள் வீட்டில்தான் ஆரம்பித்தார். அவருடைய பாடல்களை ஆரம்பத்தில் நாங்கள் பதிப்பித்தோம். 'அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம்' சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்துகிறார்கள். அந்த விழாவில் குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்துகிறார்கள். அந்த விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 'கோனார் நினைவுப் பரிசை' நாங்கள் வழங்குகிறோம்" என்று அழ.வள்ளியப்பா வுடனான உறவு பற்றி ப.செல்லப்பன் விளக்குகிறார்.

குழந்தைகளைக் கவருகிற விதத்தில் குழந்தை களுக்கான பாடல்களை ஒலிவடிவில் வெளி யிட்டுள்ளார்கள். 'பாப்பா பாடல்கள்' எனும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். "குழந்தை களுக்கு நல்ல கருத்துக்களைப் பாடல்களின் வழி கொடுத்தால் அவர்கள் மனதில் பதியும். சினிமா பாடல்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் அதே தரத்துடன் நல்ல பாடல்களைக் கொடுக்க முடியும் என்பதை இந்த ஒலிநாடா நிரூபித்தது" என்கிறார்.

ஒலிவடிவில் வெளியான பாப்பா பாடல் தொகுப்பு விரைவில் அனிமேஷன் படங்களுடன் சி.டியாகவும் வெளிவர இருக்கிறது. நாவல் சிறுகதைகள் எழுதுவது எப்படி? போன்ற புத்தகங்களையும் வெளியிட்டுள்ளனர். அறிவியல் செய்திகளையும் எளிமையான மொழி நடையில் விளக்குகிறபடியான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளனர். தரமான தயாரிப்புடனும் இவர்கள் புத்தகங்கள் இருக்கின்றன. தேசிய விருது பெற்ற 'பூனையார்' என்கிற புத்தகத்தை பூனை வடிவிலேயே இவர்கள் வெளியிட்டிருப்பதை இந்தயிடத்தில் குறிப்பிடலாம்.

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பிப்பதற்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கிறது. " இப்போது தொலைக் காட்சியின் வருகையால் குழந்தைகளிடையே படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது. மேலும் தமிழை அவர்கள் பாதிஆங்கிலம் கலந்து பேசுகிற நிலையும் இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களில்லை. நாம்தான். நாம்தான் அவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து படிக்க வைக்க வேண்டும். எனவே நாங்கள் குழந்தைகளைக் கவருகிற விதத்திலும், பிழையற்ற தமிழை அவர்களுக்குக் கற்பிக்கிற விதத்திலும் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ப.செல்லப்பன்.

புத்தகங்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பழனியப்பா பிரதர்ஸ்
25 பீட்டர்ஸ் சாலை, பழைய எண்: 14
இராயப்பேட்டை,
சென்னை- 600 014
மின்னஞ்சல்: sales@palbrothers.com

சரவணன்
Share: 
© Copyright 2020 Tamilonline