|
|
புஷ் வென்று விட்டார். சென்ற முறை போல் இழுபறி ஆகாமல் முடிந்ததைத் தவிர வேறு ஒன்றும் நல்லதாய்ச் சொல்ல இருப்பதாய்ப் படவில்லை. இந்த ஓட்டு அமெரிக்க மக்கள் தமது பயத்தில் போட்டது - அவர்களைப் பயமுறுத்துவதில் வெற்றி கண்டவர்களை வெற்றிபெறச் செய்து விட்டனர். இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. இதனால், வலதுசாரியினர் மற்றும் பழமைவாதிகளின் அதிகாரபலம் வலுக்குமானால், எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி என்ற கேள்விக்குத் தவறாகப் பதிலளித்ததாகச் சொல்லிக்கொள்ள வேண்டி வரலாம். காலின் பௌவல் பதவி விலகல் பல கேள்விகளை எழுப்புகிறது, பார்ப்போம். சகிப்புத் தன்மை, மற்றும் மாறுபட்ட கருத்துக்களை மதிக்கும் மனப்பான்மை காணக் கிடைக்காத ஒன்றாகி விடும் போலிருக்கிறது.
ஹாலந்து நாட்டில், தியோ வான் கோ (Theo von Gogh) என்ற திரைப்பட இயக்குனர் இஸ்லாமிய மதத்தைப் பற்றி - குறிப்பாக அம்மதத்தில் பெண்கள் நிலை பற்றி - மூன்று படங்கள் எடுப்பதாக அறிவித்து, முதல் குறும்படம் வெளிவந்தது. அதன் அணுகுமுறை மற்றும் காட்சியமைப்புகளினால் கோபமடைந்த ஒருவர் அவரைக் கொலை செய்து விட்டார்.
இதை வெறும் ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவரது செய்கையாகக் கொள்ள முடியாது. எல்லா மதங்களிலும் (இது மதங்களைப் போல் மக்களைப் பிரிக்கும் பிற அமைப்புகளுக்கும் பொருந்தும்) தமது அடிப்படைகளைக் கேள்விக்குட் படுத்தினால் அதைச் சார்ந்த அனைவரும் அக்கேள்விகளை முழுமூச்சாய் எதிர்ப்பதே வழக்கம். (குறைந்தது கண்டனம் - உச்சமாய் இதுபோல் `தண்டனை').
பிற கருத்துக்களை, அவை மாறுபட்டவை என்ற ஒரே காரணத்துக்காக எதிர்ப்பது நாகரீகமடைந்ததாகச் சொல்லப்படும் சமூகங்களுக்கு அழகில்லை - அச்சமூகங்கள் உலகில் எங்கிருந்தாலும். |
|
யாசர் அரா·பத்தின் மறைவினால், பாலஸ்தீனர்கள் ஒரு பெரிய தலைவரை இழந்து நிற்கின்றார்கள். மத்திய கிழக்கின் ஆறாப் பிரச்சினையில் ஒரு நம்பிக்கைக் கீற்றுக்குக் காரணமாக இருந்தவர் அவர். நாடில்லா நாடாக இருக்கும் அம்மக்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கவலைகள் மற்றும் கனவுகளின் குவிமையமாக இருந்தவர். அருக்குப் பின் அப்பகுதியின் அரசியல் எவ்வழி இருக்குமோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். மத்தியக் கிழக்கில் அடக்குமுறையில்லா அமைதி நிலவ வேண்டும்;
தென்றல் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி மற்றும் பண்டிகைக்கால வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் டிசம்பர் 2004 |
|
|
|
|
|
|
|