|
எனது மனதின் ஆழத்திலிருந்து அனுதாபங்கள்! |
|
- அசோகன் பி.|ஜனவரி 2005| |
|
|
|
கடல்கொந்தளிப்பில் சிக்கி முன் கேட்டறியாத அளவில் உயிர் மற்றும் பொருள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எனது மனதின் ஆழத்திலிருந்து அனுதாபங்கள். இறந்தவர்களுக்குத் தென்றல் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தம்மாலியன்ற உதவியை அவசியம் செய்யவேண்டும்.
சென்ற வருடத்துப் புத்தகக் கண்காட்சி இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்போது நண்பர் பத்ரி சேஷாத்திரி அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. சென்ற வாரம் 'கிழக்கு பதிப்பகம்' என்ற பெயரில் அவர் நடத்தி வருவதைப் பற்றி அறிந்தேன். சென்ற வருடப் புத்தகக் கண்காட்சிக்குப் பின்னர் ஆரம்பித்து இந்தக் குறுகிய காலத்தில் அவரும் நண்பர்கள் சத்யா, பா. ராகவன் ஆகியோர் இப்பதிப்பகத்தின் மூலம் 50 புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளார்கள். அவர்களுடன் பேசிய பிறகு மிகுந்த நம்பிக்கை பிறந்தது - தரமுள்ள புத்தகங்களைத் தந்தால் தமிழ்நாட்டில் விற்கும். இதில் குறிப்பிடத் தக்க ஒரு செய்தி: சோதிடம், வாஸ்து போன்ற துறைகளில் ஒரு புத்தகம் கூட இல்லை. கிழக்கு பதிப்பகம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
baazee.com நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அவ்னீஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டதையும், பின்னர் அந்த வழக்கில் நமது போலீசாரின் நிலையையும் மிகவும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.
பஜாஜ் அவர்களது வலைவணிகத் தலத்தில் விற்கப்பட்ட ஒரு ஆபாசப் படத்துண்டுதான் காரணம். அறிவியலும் தொழில்நுட்பமும் மாறும் வேகத்தில், சமூகமும் மிக வேகமாக மாறி வருகிறது. சட்டமும், சமூகப் பார்வைகளும் அதற்கொப்ப மாறுவதில்லை. பஜாஜின் கைதுப் படலம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
டெல்லியில் ஒரு மாணவனும் மாணவியும் `சேர்ந்து' இருந்த போது செல்போன் மூலமாக எடுக்கப்பட்ட இந்தப் படத் துண்டு, MMS வழியாகப் பரவ, அதைப் பெற்ற ஒருவர் baazeeயில் விற்பனைக்கு வழங்கியதுதான் நடந்தது. பஜாஜ் முன்வந்து போலீசுடன் ஒத்துழைக்கும் பொருட்டு டெல்லி செல்ல, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். |
|
இந்த MMS காரணமாகப் பள்ளிகளில் செல் உபயோகிக்கத் தடை, அதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு...
குழந்தைகளுக்கு மனித நேயம், பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களும் கல்விச்சாலைகளும் அதை விடுத்துச் சட்டமியற்றுவதில் அர்த்தமில்லை. பள்ளி செல்லும் தமது குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது அவசியமெனில் நிழற்படம், மற்றும் சலனப் படம் எடுக்கும் வசதிகொண்ட தொலைபேசிகளை வாங்கித் தர வேண்டிய அவசியமென்ன? விடலைப் பருவத்தினர் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்துச் செயல் படாதவர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு, அதே சமயம் அவர்களைக் குழந்தைகளாகக் கருதாமல் நடத்துவதும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமலும் இருப்பது அடிப்படைத் தேவை.
ஒவ்வொரு தலைமுறையும் தனது மூத்த தலைமுறையின் பிடிவாதத்தையும், தம்மைப் புரிந்து கொள்ளாததையும் சாடுகிறது. அதே சமயம் அடுத்த தலைமுறையைத் தனது அளவுகோல்களால் மதிப்பிடுகிறது. மாற்றம் ஒன்றே நிச்சயம். அம்மாற்றத்தை வளர்ச்சியாக்குவது நமது கடமை.
Karen Armstrong எழுதிய History of God என்ற அருமையான புத்தகத்தைப் படித்தேன். யூத, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் ஆரம்பங்களும் அதன் பரிணாமங்களும் மிகக் கூர்மையாக அலசப்பட்டுள்ளன.
புத்தாண்டும் பொங்கலும் நல்லபடியாக வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் ஜனவரி 2005 |
|
|
|
|
|
|
|