Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
சுடுகின்ற நிஜங்கள்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|மார்ச் 2015||(1 Comment)
Share:
Click Here Enlargeசமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறுவைசிகிச்சை மருத்துவர் டாக்டர். அதுல் கவாண்டே எழுதிய 'Being Mortal' என்ற புத்தகம் படித்தேன். மருத்துவர்களுக்கு மட்டுமில்லாமல் நோயாளிக்கும், மூப்படையும் மனிதருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி. அழைக்காமல் வரும் சில நோய்களைப்பற்றியும், நோய்முற்றினால் வரும் மரணம்பற்றியும், தவிர்க்க முயன்றாலும் நிற்காது நம் வீட்டுக்கதவைத் தட்டும் மூப்புப்பற்றியும் மிகத்தெளிவாக எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில கருத்துக்களையும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் நோய் தணிப்புச் சிகிச்சையும் (Palliative Care), வீட்டில் இறுதிநிலை மருத்துவம் (Home Hospice) பற்றியும் உங்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதுமை
இது தவிர்க்க முடியாத நிதர்சனம். மரணமும் வரிகளும்தான் நிச்சயமானவை என்று பெஞ்சமின் ஃப்ராங்க்லின் சொன்னார். அதனுடன் முதுமையைச் சேர்த்துக்கொள்ளலாம். முதுகுவலியும், மூட்டுவலியும் அறுபதாகிவிட்டதை நினைவுபடுத்தும். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வாழ்முறை மாறுபடத் துவங்குகிறது. சுதந்திரமாகச் செய்யும் நடவடிக்கைகளைச் செய்யமுடியாமல் இன்னொருவரைச் சார்ந்து செய்யவேண்டி வரும்போது வயதுகூடுவது தெரிகிறது. அன்றாடச் செயல்களான பல்தேய்ப்பது, குளிப்பது, சமைப்பது, உண்பது, கழிப்பது, சுத்தப்படுத்துவது, நடப்பது, தூங்குவது என்ற சின்னச்சின்ன செயல்களைச் சுதந்திரமாக செய்யமுடியாத நிலை வரும்போது, குடும்பத்தினர், செவிலியர், முதியோர் காப்பகம் இவற்றை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மேற்கத்திய கலாசாரமும், இந்திய கலாசாரமும் இதில் சற்று வேறுபட்டாலும், இந்த அவசர யுகத்தில் முதியோர் காப்பகங்களும், உதவியோடு வாழ்தல் (Assited Living) என்று சொல்லப்படும் முதியோருக்கான தனியார் இல்லங்களும் நிறைய முளைத்துக் கொண்டிருக்கின்றன. எனக்கு அந்தப் பிரச்சனை வராது என்று யாராலும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. அறிவியல் வல்லுனர்கள், பணக்கார பிரபலங்கள், மருத்துவர்கள் என்று பாகுபாடில்லாமல் அனைவரையும் சமமாகப் பாவிப்பது முதுமை.

நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, மூச்சுத்திணறல் என்பவை இருந்தாலோ, பார்வை மங்கினாலோ, காது கேளாதுபோனாலோ இன்னும் பிரச்சனை அதிகமாகும். மனக்குறுக்க நோய் (Dementia) தாக்கினால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவிடும். இறப்பதேமேல் என்று சொல்லுமளவுக்கு முதுமை பலரை எண்ணவைப்பது உண்மை. வாழ்நாள் எவ்வளவென்று நிர்ணயிக்க முடியாத நிலையில் இறுதிக்காலத்தில் தனக்கு என்னென்ன வேண்டும், என்னென்ன வேண்டாம் என்று யோசித்து அதை நெருங்கிய குடும்பத்தினரிடமும், முதன்மை மருத்துவரிடமும் கூறிவிடுவது Advance Directives என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றிப் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மூச்சு நின்றுபோனால், மூச்சுக்குழாய் வைத்து நுரையீரலை வேலை செய்யவைப்பதும், இருதயம் நின்றுபோனால், அதற்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பதும் இதில் முக்கியமான முடிவுகள். இவை வேண்டாமென்று நினைப்பவர்கள் அமெரிக்காவில் Do Not Intubate, Do Not Resuscitate என்று சொல்வார்கள், அதற்கான வாழுகை உயிலை (Living Will) வக்கீலைப் பார்த்து எழுதிவைப்பது நல்லது. இதைத்தவிர, உண்ணமுடியாமல் போனால் உணவுக்குழாய் போடுவது, தீவிர அறுவை சிகிச்சை செய்வது, சிறுநீர்ப்பிரிப்பு (Dialysis), புற்றுநோய் இருந்தால் கீமோதெரபி எடுத்துக்கொள்வது என்று பல விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைப்பற்றிக் குடும்பத்தினரோ, மருத்துவரோ முடிவு செய்வதைவிட, நோயாளியே தனக்கு வேண்டியதை முடிவுசெய்வது நல்லது.
நோயின் தீவிரமும், இறுதிக்காலமும்
முற்றிய நிலையில் பல நோய்களுக்கு மருந்துகள் செய்யும் நன்மையைவிடத் தீமைகள் அதிகமாக இருக்கலாம். மருந்துகள், அவற்றின் பக்கவிளைவைத் தணிக்க மேலும் மருந்துகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகலாம். மருத்துவரிடம் 'இந்த நோய்க்குத் தீர்வே கிடையாதா?' நோயாளி கேட்டால், அவர் மருந்துகளைக் கொடுத்தவண்ணம் இருப்பார். ஆனால் மருந்துகளின் பக்கவிளைவாகத் தீமை ஏற்படுவதாகத் தோன்றினால் அதைக் கட்டுப்படுத்த இருதரப்பினரும் பேசவேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நோயாளியும், மருத்துவரும் பேசாமல் தவிர்ப்பதில் நோயாளிக்குத்தான் அவஸ்தை.

அன்புக்குரியரவர்கள் சிரமப்படுவதைப் பார்ப்பது கடினம்தான். நம் குடும்பத்தினரை இழக்க நம் மனம் பக்குவப்படுவதில்லை. அதனால் இன்னும், இன்னும் என்று சிகிச்சைகளை நாடுகிறோம். பலவேளைகளில் ஒருபடி பின்சென்று குடும்பத்தினர் பேசவேண்டும். நோயாளிக்கு எது முக்கியம், அவர் விருப்பம் என்ன என்பதைக் கேட்டறிய வேண்டும். ஆயுளை நீட்டிப்பதில் அவருக்கு விருப்பமென்றால் சிகிச்சை தொடரலாம். பின்விளைவுகளைத் தாங்கமுடியாது போனால் சிகிச்சையை நிறுத்த யோசிக்கவேண்டும். நோயின் தீவிரம்பற்றியும், சிகிச்சை முறைகளின் நன்மை தீமைகளைப் பற்றியும், மருத்துவரிடம் பேசவேண்டும். இந்த விவாதங்கள் கடினமானவை. மனதைக் கனக்கவைப்பவை. ஆனால் தவிர்ப்பதில் யாருக்கும் லாபம் இல்லை. மரணம்பற்றி நான் பயப்படவில்லை ஆனால் பிறரைச் சார்ந்திருப்பதையும், வெறும் ஜடமாய் நீடித்திருப்பதையும் விரும்பவில்லை என்று எத்தனையோ நோயாளிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

அதனால் நோயாளியின் விருப்பு வெறுப்பைத் தெரிந்துகொள்வது பிற்காலத்தில் அவர்கள் முடிவெடுக்க முடியாதநிலை வரும்போது நாம் முடிவெடுக்க உதவும். குற்றவுணர்வு இல்லாமல் முடிவுகளை மருத்துவரிடம் சொல்ல உதவும்.

மரணத்தறுவாயில்
இது மிகவும் கடினமான தருணம். 'மக்கட்பேறும் மரணமும் மகேசனும் அறியாதது' என்று சொல்வார்கள். எப்போது நிகழும் என்று யாராலும் சொல்லமுடியாது. இந்த நிஜத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி வந்தால், வலியின்றி சுலபமாகத் தூங்கும்போது நிகழவேண்டும் என்று உலகில் பலர் விரும்புவதுண்டு. இந்த விருப்பம் நாடு, மொழி, இனம், வயது கடந்தது. மரணத்தறுவாயில் வலியைக் குறைப்பதும், நோயின் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைப்பதும், அந்த இறுதி நாட்களில் வேதனை குறைப்பதும் Palliative Care என்று சொல்லப்படும் சிகிச்சை முறை. இது அமெரிக்காவில் ஒரு தனி சிறப்புமருத்துவப் பகுதியாக உருவாகிவருகிறது. இதை மருத்துவ மனையிலும் ஆரம்பிக்கலாம். நோயாளியின் விருப்பத்திறக்கேற்ப அவரவர் வீட்டிலுங்கூட இந்த சிகிச்சைமுறை பெறலாம். இதை Home Hospice என்று சொல்வர். இது மருத்துவர், செவிலியர், சமூகப்பணியாளர், மருத்துவ உதவியாளர், மத ஆலோசகர் என்று பலரை உள்ளடக்கியது. அவரவர் தேவைக்கேற்ப இந்தக் குழு செயல்படும். நோயாளியையும் அவர் குடுபத்தினரையும் இறுதிக்காலத்தில் மன உளைச்சல், உடல் நோவின்றி வழிநடத்துவதே இந்தக் குழுவின் நோக்கம்.

இந்த வசதியை யார் வேண்டுமானாலும் பெறலாம். இருதயநோய், நுரையீரல்நோய், பக்கவாதம், புற்றுநோய், முதுமை, தீவிர மறதிநோய் என்று பாகுபாடில்லாமால் யார் வேண்டுமானாலும் பெறலாம். மரணம் ஆறு மாதங்களுக்குள் நிகழக்கூடிய அபாயம் இருக்குமேயானால் ஹோம் ஹாஸ்பைஸ் வசதிகளைப் பெறலாம். மருத்துவர்கள் நினைத்தபடி ஆறுமாதங்களில் மரணம் நிகழவில்லை என்றாலும், இந்த வசதிகளை நிறுத்திவிட்டுப் பின்னர் வேண்டும்போது தொடரலாம். மருத்துவக் காப்பீடுகளின் தேவைக்காக இந்த ஆறு மாதக் கட்டாயம். மருத்துவமனையில் 15 நாட்களும், வீடுகளில் 6 மாதமும் இந்தவகைச் சிகிச்சைக்குக் காப்பீடு நிறுவனங்கள் ஒப்புக்கொள்கின்றன. இதில் மருந்துகள், வலி நிவாரணம், செவிலியர் வருகை, பிராணவாயு சிகிச்சை முதலியவை அடக்கம்.

ஆக, சுடுகின்ற நிஜங்களான நோய், மருந்து, மூப்பு, மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவையும் பக்குவத்தையும் பெருக்கிக்கொள்வோம். மேலும் விவரம் அறிய: www.mayoclinic.org

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 
© Copyright 2020 Tamilonline