|
|
|
|
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம்-அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச்செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடிபெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.
வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காக 'தமிழொளி' என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை 'வையவன்' என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் 'அமுதசுரபி' இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.
இவரது முதல் புதினம் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான 'ஜமுனா'விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதிக் குவித்தார். 'உயிரோட்டம்', 'மணல்வெளி மான்கள்', 'கன்னியராகி நிலவினிலாடி', 'வைரமணிக் கதைகள்', 'ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம்' போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். 'பாடிப்பறந்த குயில்', 'நங்கூரம்', 'செண்பக மரங்கள்', 'தீபிகா' போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. 'நிசப்த கோபுரம்', 'வெடிவாழைப்பூ' போன்றவை இவரது கவிதை நூல்கள். 'கண்ணாடிச் சிறையில் சில கடல்கள்', 'ஒரு புதிய பறவை' போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. 'ஆனந்த பவன்', 'இடிபாடுகள்' போன்றவை நாடகங்கள். 'ஆனந்தபவன்' பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. 'Loving Animals', 'Nation builder Nehru' போன்ற இவரது ஆங்கில நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு "வையவன் கதைகள்" என்ற தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.
நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும். வார்த்தை ஜாலங்களோ, மிகைபடக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்திரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. |
|
வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் 'காமுகண்டே டைரி' என்ற நாவலை 'ஒரு காதல் டைரி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த 'மகாபலியின் மக்கள்' (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. 'ஆண்மை', 'மாலை மயக்கம்' போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ்சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. 'மகாகவி' என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி - ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் 'ஜெகசிற்பியன் ஒரு பார்வை' நூலும் குறிப்பிடத்தகுந்தது. 'ஆழ்கடலியல்', 'லேசர்', 'அழிவில்லா ஆற்றல்', 'விண்வெளியும் மனித மேம்பாடும்', 'நோயறியும் கருவிகள்' போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதைவசனத்தில் உருவான 'நம்ம ஊரு நல்ல ஊரு' குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.
சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த 'தாரிணி பதிப்பகம்' மூலம் தமிழிலும், 'English Titles' பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் 'ஐக்கியா டிரஸ்ட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப்பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.
மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் டாக்டர் ஜீவகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|