|
|
|
|
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்ட பிரகாஷின் இலக்கிய ஆர்வம் பரந்துபட்டது. இளவயதிலேயே பிரகாஷிற்கு இலக்கிய ஆர்வம் வந்துவிட்டது. மணிக்கொடி கால எழுத்தாளர்களின் படைப்புகள் அவரைக் கவர்ந்தன. குறிப்பாக மௌனியின் படைப்புகள். எது இலக்கியம், எது இலக்கியமாகாது என்ற புரிதலும் தெளிவும் ஏற்பட்டது. தான் வாசித்தவற்றை, தன்னைக் கவர்ந்தவற்றை பிறரிடம் தெரிவிப்பதிலும் உரையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், அதற்காக "சும்மா இலக்கிய கும்பல்" என்ற அமைப்பு உட்பட பல இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தினார். அவற்றின் மூலம் இலக்கிய விமர்சனக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் வங்காள இலக்கியங்கள் மீதும் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என ஆழ்ந்த வாசிப்பும் தேடலும் கொண்டவராக இருந்தார். அரசுப் பணியில் சிலகாலம் இருந்தாலும் சுதந்திர மனப்பான்மை காரணமாக அதிலிருந்து விலகிச் சொந்தமாகத் தொழில்கள் தொடங்கினார். அரசு ஒப்பந்தக்காரர், வெங்காய மண்டி, சாப்பாட்டு மெஸ், ரப்பர் ஸ்டாம்ப் கடை, அச்சகம் எனப் பல தொழில்களை மேற்கொண்டார். அவரது ரப்பர் ஸ்டாம்ப் கடையும், ஜி.எம்.எல். அச்சகமும் இலக்கிய ஆர்வலர்களின் வேடந்தாங்கலாகின.
"தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை", "தனி முதலி", "ஒளிவட்டம்", "தாரி", "கூடுசாலை", 'தளி' போன்ற பல இலக்கிய அமைப்புகள் மூலம் தொடர்ந்து தனது இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வந்த அவர், "பாலம்" என்ற சிற்றிதழையும் மிகுந்த சிக்கல்களுக்கிடையே நடத்தி வந்தார். அது நின்று போனதும் தொடர்ந்து வெவ்வேறு கால கட்டங்களில் "வைகை", "சாளரம்", "குயுக்தம்" போன்ற இதழ்களை நடத்தினார். சுவாமிநாத ஆத்ரேயன் உள்ளிட்ட பல பிரபல இலக்கியவாதிகளின் சிறுகதைகள், கட்டுரைகள் அவற்றில் வெளியாகின. இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களின் பயிற்சிப் பட்டறையாகவும் அவை விளங்கின.
தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய ஆர்வலர் மட்டுமல்ல; சிறந்த சிறுகதை, நாவலாசிரியரும் கூட. "கள்ளம்", "மிஷன் தெரு", "கரமுண்டார் வீடு", "மீனின் சிறகுகள்" போன்ற இவரது நாவல்களும், "பற்றி எரிந்த தென்னை மரம்", "வத்ஸலி", "ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்", "மேபல்", "அங்கிள்", "இராவண சீதை" போன்ற சிறுகதைகளும் பலத்த விவாதம் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தின. "கள்ளம்" நாவல் தன் குடும்பத்தைத் துறந்து சேரிக்குச் சென்று வாழும் ஓர் ஓவியனின் வாழ்வை காமத்தினூடே பேசுகிறது. பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நாவல்களுள் இதுவும் ஒன்று. இவை தவிர ப்ரகாஷ், சாகித்ய அகாதமிக்காக க.நா.சு.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். "நாட்டுப்புறச் சிறுகதைகள்" தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். தனது படைப்புகளுக்காக "கதா", "குமரன் ஆசான்", "அக்னி" உட்படப் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். அவரது பல படைப்புகள் இன்னமும் அச்சேறாமல் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுகதை, நாவல் மட்டுமில்லாது கவிஞராகவும் அவர் முத்திரை பதித்திருக்கிறார்.
காலம் மனிதனைத் தின்று கொண்டிருந்தது. மனிதர்கள் காலத்தை நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். காலம் என்பது கற்பனை. அதில் இன்னொரு கற்பனை மனிதன்.
- என்னும் அவர் கவிதை சிறந்ததோர் உதாரணம்.
க.நா.சு., வெங்கட் சாமிநாதன், கரிச்சான்குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் ஆகியோருடன் மிக நெருக்கமான நட்புக் கொண்டிருந்தவர் ப்ரகாஷ். ஃபிரெஞ்சு, ஜெர்மன், வங்காளி, கன்னடம், மலையாளம் எனப் பன்மொழிகள் அறிந்திருந்த அவருக்கு பைபிள் மனப்பாடம். வேத, உபநிஷத்துகளின் மீதும் ஆர்வமுண்டு. சம்ஸ்கிருதத்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவரும்கூட. தனது தனிப்பட்ட ஆன்மீகத் தேடல் காரணமாக கேரளா உட்படப் பல இடங்களுக்கும் சென்று பல ஆன்மீகவாதிகளைத் தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருந்தார் என்றாலும் யாரும் இவரை ஈர்க்கவில்லை. |
|
இந்தி இலக்கியச் சிற்பி பிரேம் சந்தின் பணியைப் போற்றும் வகையில் தஞ்சையில் அவருக்காக ப்ரகாஷ் நடத்திய கூட்டம் அக்கால இலக்கியவாதிகளை வியக்க வைத்த ஒன்று. பி.கே. புக்ஸ் என்ற பதிப்பகத்தையும் நடத்தி வந்த பிரகாஷ், வெங்கட் சாமிநாதனுக்காகவே வெசாஎ (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்) என்ற இலக்கிய இதழை நடத்தினார். இது குறித்து வெங்கட் சாமிநாதன், "பிரகாஷ் நாவல்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எழுத்தாளன் என்று தன்னைக் காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வப்போது 'நாடோடிக் கதைகள்' என்று தாமரையில் எழுதியிருப்பது தெரியும். மற்றபடி அவர் தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மேலும் அவருக்கு தெலுங்கு, மலையாளம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். லாரி ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்சும் வைத்திருந்தார். அவர் நிறைந்த படிப்பாளி. வங்காளி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் ஆழ்ந்த வாசிப்பு உடையவர். பல புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். நல்ல ஞாபக சக்தி உடையவர். 'வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்' என்பதைச் சுருக்கி 'வெசாஎ' என்ற தலைப்பில் ஒரு புதிய பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனாலும் பிடிவாதமாக நடத்தினார். இரண்டு இதழ் வந்தது. மூன்றாவது இதழ் வரும்போது அவர் இல்லை" என்கிறார்.
தஞ்சை ப்ரகாஷ் சிறந்த உரையாடல்காரர். நல்ல கதைசொல்லியும் கூட. அவர் நடத்தி வந்த "கதைசொல்லிகள்" என்ற இலக்கிய அமைப்பு மிகவும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் தஞ்சைப் பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்குக் கீழே அவர் "கதைசொல்லிகள்" நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவரது நிகழ்ச்சிகளில் அக்கால பிரபல இலக்கியவாதிகள் பலரும் பெருவிருப்புடன் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய முன்னணி இலக்கியவாதிகள் பலருக்கும் உந்துசக்தியாக விளங்கியவர் பிரகாஷ். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவித்து, நெறிப்படுத்தி, அவர்களுக்கு இலக்கியத்தின் நெளிவு, சுளிவுகளையும் நுட்பங்களையும் போதித்தார். பல இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்தார். இன்றைய முன்னணிக் கவிஞர் நட்சத்திரன், சுந்தர சுகன், புத்தகன், யுகபாரதி போன்ற பலரும் ப்ரகாஷால் பட்டை தீட்டப்பட்டவர்களே! அவரைப் பின்பற்றிய இத்தகைய இலக்கிய ஆர்வலர்களால் 'ஆசான்' என்று அவர் மதிப்புடன் அழைக்கப்பட்டார். தஞ்சை ப்ரகாஷ் பற்றி, "சிறந்த கதை சொல்லியாகவும் கடித இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மையானவராகவும் அவர் இருந்தார். தினசரி ஒரு புதிய விஷயத்தை அவரிடம் கற்க முடியும். சொல்லுவதற்கு செய்திகள் அவரிடம் நிறைய இருந்தன. தீரத்தீர தகவல்களைச் சேர்த்துக் கொள்வதில் இறுதிவரை ஆர்வமுடையவராகவே தென்பட்டார்" என்கிறார், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி.
உளவியல் ரீதியாகக் காமத்தை அவதானித்து அதனைப் படைப்பில் காட்சிப்படுத்தியவர் ப்ரகாஷ் என்று கூறலாம். அவர் அதை மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் என்பதை அவரது பல சிறுகதைகள் அடையாளம் காட்டுகின்றன. ஆபாசம் மற்றும் கலையுணர்வு இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய எல்லைக்கோட்டைத் தனது படைப்புகள் மூலம் நுணுக்கமாகப் பிரித்துக் காட்டியிருப்பதே அவரது வெற்றி. "காமம் மனிதனை அவன் வயது, சாதி, உறவு, மதம், வர்க்க பேதங்களைக் கடந்து எப்படி அலைக்கழிக்கின்றது என்பதை இவரது கதைகள் விரித்துச் சொல்கின்றன" என்கிறார் காவ்யா சண்முகசுந்தரம், ப்ரகாஷின் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில்.
சிறுநீரகக் கோளாறினால் அவதிப்பட்டு வந்த ப்ரகாஷ், சிகிச்சை பலனின்றி ஃபிப்ரவரி 27, 2000 அன்று காலமானார். இவரது மறைவுக்குப் பின் இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு "தஞ்சைப் பிரகாஷ் கதைகள்" என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. ஜி. நாகராஜன், ஆதவன் வரிசையில் வைத்து மதிப்பிடத் தகுந்தவர் தஞ்சை ப்ரகாஷ்
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|