Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
நலம்வாழ
நிமோனியா - ஒரு பார்வை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜனவரி 2015||(1 Comment)
Share:
Click Here Enlarge"யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. குளிர் வரும் பின்னே, இருமல் வரும் முன்னே என்பது அனுபவ மொழி. அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை அமெரிக்காவில் இருமலும் சளியும் எல்லோருக்கும் இலவசம். ஒரு சிலருக்கு இது ஃப்ளூ வைரஸ் மூலமாகவும், இன்னும் சிலருக்கு வேறு வைரஸ்கள் மூலமாகவும் வர, இன்னும் சிலருக்கு இந்த இருமல், சளிக்காய்ச்சலாக (Pneumonia) மாறுகிறது. இது கபம் நுரையீரலைத் தாக்குவதால் ஏற்படும் காய்ச்சல். நிமோனியாவின் வகைகள், அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்ப்பு வழிகளைப் பார்ப்போமா?

வகைகள்
1. Walking Pneumonia: இந்தவகை நிமோனியா இளவயதினர், முதியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எவரையும் தாக்கும். இது பொதுவகையற்ற (Atypical) நிமோனியா என்றும் அழைக்கப்படும். இது மைகோப்ளாஸ்மா என்ற நுண்ணுயிர்க் கிருமியால் வருவது. இந்த நோய்கண்டவர் தீவிர அறிகுறி எதுவும் இல்லாமல், வெறும் இருமல், காய்ச்சல் என்று மருத்துவ மனைக்கு நடந்து வருவதால் இந்த பெயர்.

2. Bacterial Pneumonia: இது பாக்டீரியா மூலம் வருவது. முக்கியமாக ஸ்ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்கலாம். நுரையீரல் நோய்கள் உடையவர், ஆஸ்த்மா, பிராங்கைடிஸ் அல்லது புகை பிடிப்பவர்களை அதிகம் தாக்கும். இவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டி வரலாம்.

3. Viral Pneumonia: ஃப்ளூ வைரஸ் அல்லது வேறு வைரஸ் மூலம் வரும் நிமோனியா.

4. Fungal Pneumonia: இது தடுப்புச் சக்தி குறைந்தவர்கள், புற்றுநோய் உள்ளவர்களைத் தாக்குவது. இதில் முக்கியமாக முதல் இரண்டு வகைகளைப் பற்றி அறிவோம்.

அறிகுறிகள்
இருமல்: வறண்ட இருமல் Walking Pnuemonia-வில் இருக்கும்.
சளி: பச்சையாகவோ மஞ்சளாகவோ இருக்கும்.
காய்ச்சல்: அதிகக் காய்ச்சலானால் பாக்டீரியாவால் இருக்கலாம். 100 அல்லது 101 என்றால் Walking Pneumonia-வாக இருக்கலாம்.
மூச்சு வாங்குதல், மூச்சிழுப்பு (wheezing), உடற்பயிற்சி செய்ய முடியாமல் தளர்ச்சி, மார்புவலி போன்றவை ஏற்படலாம். உடல்வலி, சோர்வு போன்றவையும் இருக்கலாம்.

முதலில் சாதாரண ஜலதோஷம்போல இருந்து, அடுத்த வாரம் சளி அதிகமானால், அது நிமோனியாவாக இருக்கக்கூடும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் அதிகக் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை நாடவேண்டும்.

யாருக்கு நிமோனியா வரும்?
யாருக்கு வேண்டுமானால் வரலாம். குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகம் வரலாம். முதியவர்களுக்கு நிமோனியா வந்தால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகம். வேறு சில காரணங்களால் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு நிமோனியா வரும் சாத்தியக்கூறு அதிகம். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு உடையவர்கள், இதயநோய் உடையவர்கள், நுரையீரல் நோய் இருப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், எதிர்ப்புச் சக்தி குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோருக்கு நிமோனியா வர வாய்ப்பு அதிகம்.
பின்விளைவுகள்
* மூச்சு தடைபடுதல்: மூச்சு வாங்குதல், மூச்சிழுப்பு, நடக்க முடியாமல் போதல் முதலியவை முதியோருக்கு ஏற்படலாம்.
* மனக்குழப்பம், உண்ண முடியாமை, ரத்தத்தில் சோடியம் அல்லது நீர்ப்பொருள் குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
* ரத்தத்தில் வெள்ளையணுக்கள் மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
* மூச்சு விடமுடியாமல் செயற்கை முறையில் மூச்சுவிட வேண்டிவரலாம். Ventilator வைத்துத் தீவிர சிகிச்சை முறையில் கவனிக்க வேண்டிவரும்.

சிகிச்சை
Walking Pnuemonia-விற்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் தேவைப்படும். இவற்றை எடுத்துக் கொண்டால் 3-4 நான்கு நாட்களில் குணம் ஏற்படலாம். குறிப்பாக ZPack, Levaquin போன்ற மருந்துகள் வழங்கப்படலாம். இதைத் தவிர இருமலுக்கு மருந்தும், இழுப்பு இருந்தால் அதை நுரையீரலுக்குள் செலுத்தும் Inhaler மருந்தும் கொடுக்கப்படலாம். இவர்கள் பள்ளி, அலுவலகத்தில் விடுப்புப் பெற்று, ஓய்வெடுத்தல் அவசியம். நல்ல உணவு, தூக்கம், ஓய்வு ஆகியவை எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும். பிறருக்குப் பரவாமல் இருக்கவும் உதவும். இவர்கள் இளவயதினராய் இருப்பதாலும் தீவிரம் குறைவாக இருப்பதினாலும் கவனக்குறைவாக இருக்கும் வாய்ப்பு அதிகம். பின்விளைவுகளைக் குறைக்க இவர்கள் தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.

பாக்டீரியல் நிமோனியா மிகக்குறுகிய காலத்தில் தீவிரமாகிவிடும். ஒரு சிலரை வீட்டில் வைத்தே குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கவே வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு IV மூலம் நுண்ணுயிர்க் கொல்லிகள் தேவைப்படும். ஆக்ஸிஜன் தேவைப்படலாம். நுரையீரல் மருந்துகள் Nebulizer மூலம் தேவைப்படலாம். இதனை மருத்துவர்கள் சில அறிகுறிகளை வைத்து முடிவுசெய்வர். வயது முதிர்ந்தவர்களுக்குத் தீவிரம் அதிகமாக இருக்கும். வைரல் அல்லது பூசண (Fungal) நிமோனியா அவ்வளவாகத் தாக்காது. ஆனால் இவற்றுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

தடுப்பு முறைகள்
நிமோனியாவிற்குத் தடுப்பூசி உள்ளது. இது 65 வயது மேற்பட்டோருக்கு அளிக்கப்படுகிறது. ஒருமுறை அளித்தால் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்குத் தடுப்புச்சக்தி இருக்கும். 50 வயது மேற்பட்டோருக்கு நிமோனியா வரும் அபாயம் இருந்தால் இதனை அளிக்க CDC ஒப்புக் கொண்டுள்ளது. மண்ணீரல் (Spleen) சரியாக வேலை செய்யாதவருக்கும், அதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள், எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. Pneumonia 13 மற்றும் 23 என்று இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் எது தகுந்தது என்று மருத்துவர் முடிவு செய்வர். இதை தற்போது Medicare அனுமதிக்கிறது. சின்னக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் உள்ளன.

இதைத் தவிர, ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். நிமோனியா, ஃப்ளூ வைரஸின் பின்விளைவாக ஏற்படலாம். அதனால் இந்தத் தடுப்பூசி கூடுதல் எதிர்ப்புச் சக்தி கொடுக்கிறது. ஃப்ளூ தடுப்பூசியை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும். வயது முதிர்ந்தவர்களும் நிமோனியா வரும் வாய்ப்பு மிகுந்தவர்களும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய்வாய்ப்பட்டால் வீட்டில் ஒய்வு எடுங்கள். அலுவலில் முக்கியச் சந்திப்பு, பள்ளியில் முக்கியத் தேர்வு என்று கிளம்பாதீர்கள். நிமோனியாவுக்கென்று விடுப்பு எடுத்துக்கொண்டு கடைகண்ணிக்குப் போகாதீர்கள். ஓய்வெடுங்கள். இருமல், சளி இருந்தால் பயணங்களை ஒத்திப்போடுங்கள். விமானத்தில் அருகிலிருப்பவர் அதிக இருமல், சளியுடன் இருந்தால், விமானப்பயணம் முடிந்ததும் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுங்கள். கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தால் நிமோனியா, இருமல் வருவதைத் தடுக்கலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline