|
|
|
நமது உடலில் மிக முக்கியமான பகுதியாக முதுகுத்தண்டு செயல்படுகிறது. இந்தத் தண்டுவடத்தில் கோளாறு ஏற்பட்டால் அது கை, கால் செயல்பாடுகளைப் பாதிக்கும். அதனால்தானோ என்னவோ நமக்கு ஒன்றல்ல இரண்டல்ல 24 முதுகெலும்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை கழுத்துப் பகுதி (Cervical), மேல்முதுகு (Thoracic), கீழ்முதுகு (Lumbar) என்று பிரிக்கலாம். இவை முறையே 7, 12, 5 எலும்புகளைக் கொண்டுள்ளன. இதற்குக் கீழே Sacrum மற்றும் Coccyx எலும்பு உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி எலும்புகளாகி, இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே இருக்கும் ஒரு பாதையில் நமது நரம்புகளின் இணக்கமான தண்டுவடம் அமைந்துள்ளது. இந்த முதுகெலும்பில் கோளாறு ஏற்பட்டால், நரம்புகள் அழுந்தி, அதனால் வலி, நமைச்சல் ஏற்படலாம், செயல்திறன் பாதிக்கப்படலாம். இந்தக் கட்டுரையில் குறிப்பாக முதுகுத்தண்டின் துளை சுருங்குதல் மற்றும் அடைப்பு (Spinal Stenosis) ஏற்படுவதால் வரும் பாதிப்புகளை அறியலாம். அறிகுறிகள் முதுகுத் தண்டில் அடைப்பு ஏற்பட்ட பகுதியில் வலி இருக்கும். குறிப்பாக, கழுத்து, கீழ்முதுகுப் பகுதிகள் பாதிக்கப்படும். இதனால் வலியும் நமைச்சலும் உண்டாகும். கழுத்து, கீழ்முதுகுப் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் முறையே கைகளில் நமைச்சலும், கால்களில் நமைச்சலும் ஏற்படலாம். கீழ்முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டால், நடக்கும்போது வலி இருக்கும். குறிப்பாக மலையிறக்கத்தில் வலி உருவாகும். முதுகை வளைத்து நடக்கும்போது, வலி குறைவாகவும், முதுகை நேராக்கி நடக்கும்போது வலி கூடுதலாகவும் இருக்கும். ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். காரணங்கள் இந்த அடைப்பு பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகுதான் ஏற்படும். வயது குறைந்தவருக்கு இந்த வகை அடைப்பு இருந்தால், பெரும்பாலும் அவர்களுக்கு பிறப்பிலேயே ஏற்படும் எலும்பு மற்றும் தசை வியாதி ஏதேனும் இருக்க வாய்ப்புண்டு. வயதானால் எலும்புகளின் தேய்மானம் ஏற்படும். அவரவர் தொழில்முறை, நிற்கும், நடக்கும் பாங்கு, முதுகை வளைத்துச் செய்யும் வேலைகள் போன்றவற்றால் இந்த வகைத் தேய்மானம் ஏற்படும். இதைத் தவிர, வேறு சில விபத்துகள் மூலமும் அடைப்பு உருவாகலாம். முதுகெலும்பில் சிறிய வளர்ச்சி இருக்கலாம். இதை முள் (Spur) என்று சொல்வர். ஓர் எலும்பு இன்னோர் எலும்புக்கு முன்னால் நகர்ந்துவிடலாம் இதை 'Spondylolisthesis' என்று அழைப்பதுண்டு. இதைத் தவிர கனமான பொருட்களைக் கையாளும்போது கவனம் செலுத்தாவிட்டால், முதுகுத்தகடு இறங்கி 'Disc Herniation' ஏற்படலாம். இதனாலும் காலப்போக்கில் அடைப்பு உருவாகலாம்.
பரிசோதனைகள் முதுகில் எப்போதும் முணுமுணு என்று வலி இருந்துகொண்டே இருந்தால் அதற்கான காரணத்தை அறியவேண்டும். ஓரிரு வாரங்களில் சரியாகாமல் முதுகுவலி தொடர்ந்தால், அவர்களுக்கு Physical Therapy அளிக்க வேண்டும். இதில் உடற்பயிற்சிகள் சொல்லித் தரப்படும். 6-8 வாரங்கள் பயிற்சிகள் செய்தபின்னரும், வலி, நமைச்சல் தொடர்ந்திருந்தாலோ அல்லது செயல்திறன் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு MRI scan செய்யவேண்டும். முதுகுத் தண்டை எக்ஸ்ரே எடுக்கலாம். இதில் சில தேய்மானங்கள் கண்டுபிடிக்கலாம். ஆனால் அடைப்பு மற்றும் அதன் தீவிரத்தை அறிய MRI தேவைப்படும். |
|
சிகிச்சைகள் இந்தவகை அடைப்பு ஏற்பட்டால் அது உடலமைப்பை பாதிக்கிறது. அதனால் இதை முழுமையாக மருந்துகளால் குணப்படுத்துவது கடினம். வலி மாத்திரைகள் சற்று உதவலாம். நரம்பு வலியைக் குறைக்கச் சில பிரத்யேக மாத்திரைகள் உள்ளன. இவை வலிப்பு மாத்திரை வகையைச் சார்ந்தவை. இவை காபாபென்டின் அல்லது லிரிகா என்று அழைக்கப்படும். இவை தவிரவும் அட்வில், மொத்ரின் போன்ற வலி மாத்திரைகளும், Tramadol என்ற மாத்திரையும் கொடுக்கப்படலாம். இவை யாவும் தற்காலிக நிவாரணம் அளிப்பவை. உடலியல் சிகிச்சையைத் தொடர்ந்து செய்யவேண்டும். வீட்டிலேயே சில பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கனமான எடையை வைத்து 'Traction' வைப்பதும் உதவலாம்.
முதுகெலும்பு நிபுணர்கள் முதுகுவடத்தில் ஊசிமூலம் மருந்து ஏற்றுவர். இதை 4 வார இடைவெளியில் மூன்றுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உடலமைப்பில் ஏற்பட்ட பாதிப்பை முழுதாகக் குறைக்க அறுவைசிகிச்சை மட்டுமே உதவும். பிணியாளர் வயது, செயல்திறன், பிற நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து அறுவைசிகிச்சை செய்யமுடியுமா என்பது நிர்ணயிக்கப்படும். நிபுணர்கள் Laminectomy என்று சொல்லப்படும் அறுவைசிகிச்சை செய்வர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட ஒரு முள்ளெலும்பு அகற்றப்படும். இதனால் அடைப்பு நீங்கி விடும். நரம்புகள் நசுங்குவது குறைவதால், முழுதான நிவாரணம் கிடைக்கும். ஆனால் அறுவை சிகிச்சையில் பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால் ஆலோசித்து முடிவு செய்யவேண்டும்.
24 முள்ளெலும்புகள் இருந்தாலும் ஒரு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டாலே வாழ்க்கை முறை பாதிக்கப்படுவதாலேயே வாழ்வில் தைரியமின்றி கோழையாய் இருப்பவராய் முதுகெலும்பு இல்லதாவர் என்று சொல்கிறார்கள் போல. அதனால் நிற்பதுவே, நடப்பதுவே, குனிவதுவே, நிமிர்வதுவே என்ற நமது அன்றாடச் செயல்களை, முதுகெலும்பை பாதிக்காத வண்ணம் செய்வது அவசியம். அப்போது தண்டுவடம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|