டாக்டர். ராஜ்குமார் பாரதி
|
|
|
|
|
எளிய குடும்பம் ஒன்றில் பிறந்து, சுயமுயற்சியால் டென்மார்க், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களில் பொறியாளராகப் பணியாற்றி, தனது உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்து, தற்போது அமெரிக்காவில் தொழில்முனைவோராக ஐந்து நிறுவனங்களை நடத்துமளவு வளர்ச்சி பெற்றவர் திரு. ராம் துக்காராம். தளராத ஊக்கம், கடும் உழைப்பு, நெறியான வாழ்க்கை, ஈட்டியதைச் சரியான நோக்கங்களுக்குச் செலவிடும் வள்ளன்மை என்ற பல குணங்கள் கொண்ட இவர் வளரும் தலைமுறைக்கு ஒரு நல்ல முன்னுதாரணம். தமது நேரம், செல்வம் ஆகியவற்றை TNF போன்ற சமுதாய அமைப்புகளை வளர்ப்பதில் செலவிடும் துக்காராம், பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் காலத்தில் நிதி கேட்டபோது, "நீங்கள் திரட்டுங்கள், அதற்கிணையாகத் தருகிறேன்" என்று கூறி, $60K வழங்கினார். இளமையில் அனுபவித்த வறுமை அவரது கையைக் கட்டிப் போடவில்லை. தென்றலுக்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து...
*****
சி.கே: உங்கள் சிறு பருவத்திலிருந்து தொடங்கலாமா? ராம்: சரி. நான் என் அம்மா ஊராகிய செம்பனார் கோவிலில் பிறந்தேன். தஞ்சாவூர் புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். ராஜா சர்ஃபோஜி கல்லுரியில் புகுமுக வகுப்பை முடித்தபின் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வந்தேன். 1958 லிருந்து 1963 வரை அங்கே படித்தேன். அப்பொழுதெல்லாம் பொறியியல் 5 வருடப் படிப்பு. பட்டம் பெற்றபொழுது என் வயது 20 வருடம், 3 மாதங்கள்தான்!
கே: கல்லூரிக் கால ஆர்வங்களைச் சொல்லுங்கள். ப: சர்ஃபோஜி கல்லூரியில் பட்டிமன்றச் செயலாளராக இருந்தேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் கலைச் செயலாளரானேன். அதற்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்தவர்கள், 13 வருட காலம், ஒருவருமே கல்லூரியிலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதில்லை! அந்தப் பொறுப்பு அப்படி. கலைச்செயலாளர் வெள்ளிக்கிழமை தோறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முதன்முதலாக ஒரு தமிழ்த் திரைப்படம் காட்ட ஏற்பாடு செய்தவன் நான். அதுவரை ஆங்கிலப் படங்கள் மட்டுமே காட்டப்பட்டன. எம்.ஜி.ஆரின் குலேபகாவலி அந்தப் படம். அதைப் பார்க்கக் கோட்டூர்புரம் கிராமமே திரண்டு வந்திருந்தது. அந்தக் காலத்தில் கோட்டூர்புரம் மிகச்சிறிய கிராமம்தான். நான் அந்தப் பதவிக்கு 1250 வாக்குகளில் 950 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தேன்.
கே: அப்படியா? ப: தேர்தலுக்கு முன் வேட்பாளர்கள் மாணவர் பொதுக்கூட்டத்தில் பேசவேண்டும். நானோ மேடையேறிப் பேசியதில்லை எனக்கு ஆங்கில அறிவும் குறைவு. நான் பேசவேண்டியதை மனப்பாடம் செய்திருந்தேன். மேடையேறி நின்றதும் உதறலெடுத்தது. "முதல்வர் அவர்களே" என்றேன். அவ்வளவுதான், அதற்குமேல் ஒரு வார்த்தை வரவில்லை. எழுதிக் கொண்டுவந்திருந்த காகிதத்தைக் கையில் எடுத்து மளமளவென்று படித்து முடித்தேன். மற்றவர்களும் பேச முயற்சி செய்தார்கள். அவர்கள் பேசியது செயற்கையாக இருந்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் நாமாக இருப்பதுதான் நல்லது என்பதை நான் அன்று கற்றுக்கொண்டேன்.
எனக்கு 2 சகோதரர்கள், 3 சகோதரிகள். இந்தப் பெரிய குடும்பத்தை என் அப்பா வேலை செய்து காப்பாற்ற வேண்டியிருந்தது. பொறியியல் கல்லுரியில் படிக்கும்பொழுது 'பட்டம் பெற்ற பிறகு வேலை செய்யக்கூடாது. சொந்தமாக வியாபாரம் செய்யவேண்டும்' என்று முடிவு செய்தேன்.
கே: ஆகா! ப: பொறியியல் படிப்பை முடித்தவுடன் என் நண்பர்கள் கால்டெக்ஸ், ஆவடி ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, பர்மா ஷெல் (அந்நாட்களில் மிகவும் கவர்ச்சியானது) போன்றவற்றில் வேலையில் அமர்ந்தார்கள். நான் கிண்டியில் ஒரு சிறிய எந்திர நிறுவனத்தில், சம்பளமில்லாத அப்ரென்டிஸ் ஆகச் சேர்ந்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு எனக்கு டூல்ரூம் ஃபோர்மன் வேலை கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு மெட்ராஸ் பப்ளிக் சர்விஸ் கமிஷன் உருவானபொழுது துணைப் பொறியியலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. மெஷின் ஷாப் பொறியாளராகச் சிறிது காலம் வேலை செய்தேன். பின்னர் கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், அரசுத்துறையில் டை காஸ்டிங் கண்காணிப்பாளராகப் பணியாற்றினேன். எங்கள் நிறுவனம் இந்தியாவின் பெரிய வார்ப்பாலைகளுள் (foundry) ஒன்றாக இருந்தது. ராஜ்தூத், ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுக்கு பாகங்கள் செய்து அனுப்பிக்கொண்டிருந்தோம். அச்சமயத்தில் என்னுடைய மேலாளர், பதவியை விட்டுப் போகவே, எனக்கு ஜெனரல் சூப்பரின்டெண்டன்ட் ஆகப் பதவி உயர்வு கிடைத்தது. அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு வயது.
கே: வெளிநாடு போகும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? ப: வேலையில் 3, 4 வருட அனுபவம் ஆனது. வயது ஏறிக்கொண்டே போனது. எப்படியாது ஒரு வியாபாரம் தொடங்கவேண்டும் என்று ஒருநாள் தோன்றியது. எங்கள் குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம். எப்படி வெளிநாடு செல்வது? அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று மனுச்செய்ய வேண்டும் என்று சொல்லக்கூட எவரும் இல்லை
ஒருநாள் ஓர் உதிரிபாகம் என் கண்ணில் பட்டது. அதில் மெடாலிக், டென்மார்க் என்றிருந்தது. டென்மார்க் தூதரகத்துக்கு எழுதி மெடாலிக் நிறுவனத்தின் விலாசத்தை வாங்கி, அவர்களுக்கு, "என்னிடம் உங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்திரத்தின் பாகம் ஒன்று உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அங்கங்கே விடப்பட்ட உதிரிபாகமாக இருக்கலாம். நான் ஒரு வார்ப்பாலையில் கண்காணிப்பாளன். உங்கள் நிறுவனத்திற்கு வந்து அந்த முழு எந்திரத்தை இணைத்து, இயக்குவது எப்படி என்று கற்க ஆவலாயிருக்கிறேன்" என்று எழுதினேன். ஒரு மாதத்திற்குப் பின் பதில் வந்தது. நிறுவனத் தலைவர் ப்ரிங்க் மில்லரின் (Brink Miller) உதவியாளர், நான்கு மாதப் பயிற்சி தரத் தயாராக இருக்கிறோம், எப்பொழுது வரமுடியும் என்று கேட்டு எழுதியிருந்தார். எப்படிப் பயணச்சீட்டு வாங்குவது? அங்கே செலவிற்குப் பணம் திரட்டுவது எப்படி? என் உண்மை நிலையைக் கூறி, உதவிகேட்டுக் கடிதம் எழுதினேன். "மாதத்திற்கு 700 க்ரோனர் (கிட்டத்தட்ட 100 டாலர்) கொடுக்கத் தயாராயிருக்கிறோம்" என்று பதில் எழுதினார்கள். இது என் செலவுக்குப் போதாதுதான். ஆனால் எனக்கு உதவ வேண்டுமென்று அவர்களுக்கு என்ன கட்டாயம்? ஆனாலும் தந்தை உட்படப் பலரின் உதவியால் பணம் திரட்டினேன்.
கே: சுவாரசியமாக இருக்கிறது, சொல்லுங்கள். ப: 1967 மார்ச் மாதத்தில் டென்மார்க் போனேன். அங்கே அப்பொழுது கடுங்குளிர். நான் வேலைக்குச் சேர்ந்ததும் 400 க்ரோனர்கள் முன்பணம் கொடுத்தார்கள். அதை வைத்து நான் மேலங்கி, கால்சட்டை, காலணி போன்றவற்றை வாங்கிக் கொண்டேன். 4 மாதங்களில் 4 வேறு துறைகளில் வேலை பார்த்தேன். அதே காலகட்டத்தில் வார்ப்பாலைகள் சங்கத்திலிருந்து விலாசம் தெரிந்துகொண்டு இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள ஃபவுண்டரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பிவைத்தேன். நான் கடைசியாக வேலை பார்த்த மேலாளரிடம் சென்று, "ஜெர்மனியில் உங்கள் எந்திரங்களின் மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. உங்களுடையதோ பெரிய வார்ப்பாலை. ஏன், நீங்களே மாதிரிகள் உருவாக்கக் கூடாது? நான் வரைந்து தருகிறேன்" என்றேன்.
அவர் நிறுவனத் தலைவரிடம் பேசினார். 1,800 க்ரோனர்கள் மாதச் சம்பளம் சொல்லி வேலையில் அமர்த்தினார்கள். நல்ல சம்பளம் என்று சொல்லமுடியாது. நான்கு மாதங்கள் கழித்து வேலைதேடி இங்கிலாந்து சென்றேன். அப்பொழுது டென்மார்க்கில் என்னிடம் "உனக்கு இங்கிலாந்தில் வேலை பிடிக்காவிட்டால் இங்கே என்றும் திரும்பி வரலாம்" என்று கூறினார்கள். லண்டன் சூழ்நிலை எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே யாரும் கடினமாக உழைப்பதாகத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தேநீர் இடைவேளை என்றார்கள். கிரிக்கெட்டைப் பற்றிக் கூடிக்கூடிப் பேசினார்கள். நான் டென்மார்க் திரும்பிவிட்டேன். |
|
|
கே: பிறகு? ப: 1968ல் ஜெர்மனிக்குப் போனேன். ஃப்ரேங்க்ஃபர்ட்டில் வேலை. 800 மார்க் சம்பளம். வரி இல்லை. அதிகச் செலவில்லை. மாதம் 200 மார்க் மிச்சம் பிடித்தேன். இந்தியாவில் நான் டைகாஸ்ட் சூப்பரின்டெண்டன்ட் ஆக வேலை பார்த்தபோது சொந்தமாக எதையும் வரைந்தது கிடையாது.
டென்மார்க்கில் டிஸைனராகப் பணியேற்றபொழுது நானே வரையக் கற்றுக்கொண்டேன். ஜெர்மனியில் வாரத்தின் 5 நாட்கள் தவிர, சனிக்கிழமையும் வேலை செய்வேன். தினமும் 9 மணி நேரமாவது வேலை செய்வேன். ஜெர்மனியில், ஒவ்வொரு வருடமும் வொர்க் பெர்மிட் பெற வேண்டும் அந்தக் காலத்தில் கனடாவில், ஜெர்மனியிலிருந்து குடியேற விரும்புபவர்களை வரவேற்று விளம்பரம் வரும். நான் விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வில், "கனடாவில் சென்னைப் பொறியியல் பட்டத்திற்கு மதிப்புக் கிடையாது" என்று சொல்லி என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
கே: பிறகு எப்படிக் கனடா போனீர்கள்? ப: டென்மார்க்கில் இருந்தபோது, மாலை 4 மணிக்குமேல் எல்லாரும் போனபின், தனியாக 4 மணியிலிருந்து 11 வரை. என் நிறுவனத்தில் இருந்த சுமார் 5,000 அச்சுக்களின் வரைபடங்களைப் படித்துப் புரிந்து கொள்வேன். என்னுடைய படைப்பாற்றலை உபயோகித்து ஃபவுண்டரி மேகசினுக்கு என் கருத்துகளை எழுதுவேன். அவை பிரசுரமானது உண்டு. அதனால் நான் டைகாஸ்டிங் பத்திரிகையின் முதல்வரைத் தபால்மூலம் அறிந்திருந்தேன். அவருக்குக் கனடாவிலுள்ள வார்ப்பாலைகளின் விலாசம் கேட்டு எழுதினேன். அப்பொழுதிருந்த 54 வார்ப்பாலைகளின் விலாசங்களை அனுப்பினார். ஐம்பத்து நாலுக்கும் நான் விண்ணப்பம் அனுப்பினேன்.
நாலு பேர் என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். எனக்கு வேலை கொடுத்தால்தான் அங்கு வர இயலும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஒருநாள் திடீரென்று விஸ்கான்ஸின் நிறுவனத்திலிலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள். கூப்பிட்டவர் ஒரு ஜெர்மானியர். ஜெர்மனியிலிருந்து கொலம்பியா சென்று பின் விஸ்கான்ஸின் வந்தவர். அவர் சொன்னார் "நீங்கள் ரோம் சென்று எங்கள் நிறுவனத்தின் முதல்வர் வெப்ஸ்டரைச் சந்திக்க வேண்டும்". முதலில் ஆங்கிலத்தில் தொடங்கிப் பின்னர் அவர் ஜெர்மனில் பேசினார்.
1968ல் ஜெர்மனியில் யாரும் ஆங்கிலம் பேசவில்லை. நான் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஜெர்மன் மொழியைக் கற்பபேன். வானொலி கேட்பேன். ஒலிநாடாவைக் கேட்டுப் பயிற்சி செய்தேன். 4 மாதங்களில் சரளமாகப் பேச முடிந்தது. மொழியை ஜெர்மனியில் கற்றதால் ஆங்கில பாதிப்பு இல்லாமல் பேசமுடிந்தது. இந்தியனாகிய நான் சரளமாக ஜெர்மன் பேசியதில் அவருக்கு ஆச்சரியம்.
எனக்குத் தபாலில் ஓர் எந்திர பாகத்தின் வரைபடத்தை அனுப்பி வைத்தனர். அது 40 அடி நீளம் 3 1/2 அடி அகலம் கொண்டதாயிருந்தது. அப்படி ஒன்றை நான் பார்த்ததேயில்லை. அதில் ஒரு பாகத்தின் எடை எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து, அதன் அச்சுக்கான மாதிரிப் படத்தை வரையும்படியும், அந்த அச்சு தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கணக்கிடும்படியும் கேட்டிருந்தனர். அதற்கு 3 மாத காலம் அளித்திருந்தனர்.
அமெரிக்கக் காரின் வரைபடங்கள் மிக நீளமானவை. அவர்கள் மூன்றாம் ஆங்கிள் ப்ரொஜெக்ஷன் ஒன்றும் செய்வார்கள். என்னுடைய சிறிய அறையில் அந்த வரைபடத்தை முழுவதுமாக விரித்து வைக்கமுடியாது. வேலை போக என்னுடைய உபரி நேரத்தை இதில் செலவிட்டேன். 120 மணி நேரம் உழைத்திருப்பேன். தபால் செலவைக் குறைக்க வேண்டி மிக மெல்லிய தாள்களை உபயோகித்தேன். அதை அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். என்னுடைய ஜெர்மனி விசா ஜூன் 8ம் தேதி முடிவடைகிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் வாரம் 135 டாலர் சம்பளத்தில் வேலை கொடுப்பதாக டெலக்ஸ் அனுப்பினார்கள். 1969 ஜூனில் ஒண்டோரியோவில் குடியேறினேன்.
கே: நீங்கள் அவர்கள் கேட்டதை 3 மாதங்களில் டிசைன் செய்து அனுப்பினீர்கள்? ப: ஆமாம். என்னுடைய முதல் வேலையே நான் மாதிரிப் படம் வரைந்த பாகத்தைத் தயாரித்துச் சோதிப்பதுதான். ஃபோர்ட் நிறுவனத்தாருக்கு இந்தப் பாகம் தேவைப்பட்டது. அதன் படம் வரைந்து, மாதிரி தயாரித்து அது எந்திரத்தில் சிக்கலின்றி ஒடுமா என்று பரிசோதிப்பது எல்லாம் என் வேலையாக இருந்தது. ஃபோர்ட் 1971 மாடலில் முதன்முறையாக ஸ்டியரிங் காலம் ஹௌஸிங் வித் லாக் தயாரிக்க முற்பட்டார்கள். அந்த பாகத்தைத் தயாரிக்கும் வேலைதான் இது.
கே: இப்போது சீன் கனடாவுக்கு மாறுகிறது....? ப: ஆமாம். என்னுடைய மேலாளர் செக் நாட்டைச் சேர்ந்தவர். அதில் 25 வருடங்களாக வேலை செய்பவர். நான் யோசித்தேன். என்னால் இதுபோல் நீண்டகாலம் வேலை செய்ய முடியாதென்று தோன்றியது. முன்னுக்கு வர வேண்டுமென்றால் கனடா நாட்டுக் கல்வித் தகுதி வேண்டுமென்று புரிந்தது. 1970ல் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விண்ட்ஸர் பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலைப் பொறியியலில் (industrial Engineering) முதுகலைப் பட்டம் படிக்கச் சேர்ந்தேன். 800 டாலர் உதவித்தொகை அளிக்கப்பட்டது.
கல்லூரியில் எனக்கு உபரிப் பொழுது நிறைய இருந்தது. பணமும் தேவைப்பட்டது. பகுதிநேர வேலை தேடினேன். ஒரு வார்ப்பாலையில் வேலை ஒன்று கிடைத்தது. அவர்கள் உன் பதவியை என்னவென்று சொல்வதென்றார்கள். இங்கே எத்தனை பொறியாளர்கள் பணி செய்கிறார்கள் என்று கேட்டேன். யாருமில்லை என்றார்கள். உடனே "நான்தான் இனிமேல் உங்கள் தலைமைப் பொறியாளர்" என்றேன்.
கே: வொண்டர்ஃபுல். சொல்லுங்க.... ப: அந்தச் சமயத்தில் என் அப்பா, "உனக்கு வயதாகிக்கொண்டே போகிறது. திருமணம் செய்துகொள்" என்று எழுதினார். என்னிடம் சேமிப்பு என்று ஒன்றும் இல்லை. எனக்கு 26, 27 வயதிருக்கும். Fly Now, Pay Later திட்டத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா சென்றேன். என் அப்பா என்னுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்மேல் எனக்கு அளவுகடந்த மரியாதை. அதனால் அவரிடம் மனம்விட்டுப் பேசமுடியாது. அவருடைய படம் எப்பொழுதும் என் மேசைமேல் இருக்கும். வெளிநாட்டில் இருந்ததால் நான் பெரிய ஆள் என்று பலர் நினைத்திருந்தார்கள். இங்கே எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.
என் அப்பாவின் சக ஊழியர், ஒருவிதத்தில் எங்களுக்கு மிகத் தூரத்துச் சொந்தம். திருவல்லிக்கேணியில் இருந்தார்கள். பெண் ராணி மேரிக் கல்லூரியில் முதுகலை படித்திருந்தார். ஆகஸ்ட் 24ம் தேதி சந்தித்தோம். ஒன்றும் பேசவில்லை. செப்டெம்பர் 2ம் தேதி திருமணம்.
அச்சமயத்தில் இந்திய டைகாஸ்டிங் சொசைடிக்காக ஒரு கருத்தரங்கு தில்லியில் ஏற்பாடு செய்திருந்தேன். பத்திரிகைக் கட்டுரைகள் மூலமும் என்னை அறிந்திருந்தார்கள். 1971 செப்டெம்பர் 5, 6, 7 மூன்று நாட்களும் செமினார். அவர்கள் சென்னையிலிருந்து தில்லிக்குப் பயணச்சீட்டு கொடுத்திருந்தார்கள். அங்குதான் என் தேனிலவு. நான் 9ம் தேதி கனடா திரும்பினேன். என் மனைவி அக்டோபர் மாதம் கனடா வந்தார்.
மனைவியும் உடன் இருந்ததால் செலவைச் சமாளிக்க எனக்கு முழுநேர வேலை தேவைப்பட்டது. ஒருநாள் உற்பத்திப் பொறியாளர் தேவை என்ற விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். நேர்காணல் கால்ஃப், ஒண்டோரியோவில். எங்கள் காரில் ஏர்கண்டிஷனர் வேலை செய்யவில்லை. ஜூன் மாதம். 90, 100 டிகிரி வெயில். 2 மாதத்திற்குத்தான் இந்தக் கஷ்டமிருக்குமென்று மனைவியிடம் சொல்லியிருந்தேன். வேலை கிடைக்காவிட்டால் வருத்தப்படுவார் என்பதால் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனேன். 3 மணி நேரம் நேர்காணல். என் மனைவி கொதிக்கும் வண்டியில் உட்கார்ந்திருந்தார்.
அந்தத் தொழிற்சாலையில் சுமார் 250 பேர் வேலை செய்தனர். நிறைய காஸ்டிங் ப்ரோசெஸ் எந்திரங்கள், ஃபினிஷிங் ஆபரேஷன்ஸ் இருந்தன. அங்கே 12,000 டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்தது. முதன்முதலாக ஒரு நல்ல வேலை; நல்ல சம்பளம். ஆனால் கனடாவில் இருந்துகொண்டு முன்னேற்றம் அடையமுடியாது என்று புரிந்தது. கனடாவில் இருந்த 54 வார்ப்பாலைகளில் இரண்டுதான் பெரியவை. அதில் ஒன்று ஜெனரல் எலக்ட்ரிக்.
கே: அமெரிக்காவுக்கு எப்படி வந்தீர்கள்? ப: அமெரிக்காவுக்குக் குடிபெயர முடிவு செய்து டைகாஸ்டிங் பத்திரிகையில் வேலை கேட்டு விளம்பரம் செய்தேன். விஸ்கான்ஸினில் நேர்காணல் ஒன்றிற்குச் சென்றேன். நாள் முழுவதும் நீடித்தது நேர்காணல். சிறிய நிறுவனம். நிறுவன உரிமையாளரே பேட்டி கண்டார். அங்கு 18 மாதம் பணியாற்றிய பிறகு துணைத்தலைவர் (உற்பத்தி) ஆகப் பதவி உயர்வு கொடுத்தார்கள்.
அச்சமயம் அவர் மகன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். அவரிடம் வேறோரிடத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றைத் துவங்கி அதில் எனக்கொரு சிறிய பங்கு தாருங்கள், நான் கவனித்துக் கொள்கிறேன் என்றேன். அதற்கு அவர் ஒப்பவில்லை. நானே தொழில் தொடங்க முடிவு செய்தேன். வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒருநாள் ஒரு சிறிய வார்ப்பாலை விலைக்கு வந்தது. என்னிடம் 1200 டாலரே கையிருப்பு. மூன்று நண்பர்கள் தலா 25,000 டாலர் போட்டு ஆரம்பித்தோம். நான் என் பங்குக்கு வீட்டை அடமானம் வைத்து பணம் கடனாகப் பெற்றேன். 2 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதும் விஸ்கான்சினில் புதிய தொழிற்சாலை ஒன்றை வாங்கினோம். நான் தொழிலை கவனிக்க சிகாகோ செல்லவேண்டி வந்தது.
தொழில் வளர்ந்து 50 மில்லியனை எட்டும்போது என் தொழில் பங்காளர்கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. அவர்களுடைய பங்கைத் திருப்பித் தரவேண்டி வந்தது. மேலும் தொழிலில் முதலீடு செய்யவும் பணம் தேவைப்பட்டதால் மீண்டும் ஒரு பெருந்தொகையைக் கடனாக வாங்கினேன். தொழில் வளர்ந்து 120 மில்லியனை எட்டியது. அந்தச் சமயத்தில் நேர்ந்த எனது முதலீட்டு வங்கியில் நேர்ந்த சில சம்பவங்களால் நான் வேறிடத்தில் நிதி பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதலீட்டை விரிவாக்க நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்தத் தொடங்கினேன். தொழில் வளர, வளர ஒரு கட்டத்தில் என் உதவி தேவையில்லை என்று அந்த நிறுவனம் என்னை வெளியேற்றியது. நான் வெளியேறி 13i Capital என்ற பங்கு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன்மூலம் நான் புதிய கம்பெனிகளைத் தொடங்கவோ, நடக்கும் சிறிய உற்பத்தி நிறுவனங்களைக் கையிலெடுத்து, வளர்ச்சிப் பாதையிலிட்டு, விற்கவோ முடியும். மேலும் American Metal Technologies என்ற 4 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். அதில் இன்றைக்கு 220 பேர் வேலை செய்கிறார்கள். என்னை வெளியேற்றிய நிறுவனத்தின் தொழில் முடங்கிவிடவே, அது இயங்கிவந்த கட்டிடத்தை நானே விலைக்கு வாங்கினேன். என் முதல் நிறுவனம் இருந்த அதே இடத்தில்தான் இன்று எங்கள் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று 60 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்து உள்ளது. பல தொழில்களை வாங்கி இருக்கிறோம். பலவற்றை விற்றிருக்கிறோம். இன்று எங்களுக்குச் சொந்தமான ஐந்து நிறுவனங்களில் முன்னூறுக்கு மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
என்னோடு பல சிறு முதலீட்டுப் பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களோடு நான் கால்ஃப் விளையாடுகிறேன். அதில்கூட நான் ஏமாற்ற மாட்டேன் என்பதால் அவர்களுக்கு என்மீது நம்பிக்கை உள்ளது. எல்லா நிறுவனங்களுமே தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.
கே: இந்தியாவிலும் உங்கள் நிறுவனம் உள்ளதா ? ப: ஆமாம். நான் TNFல் கலந்துகொள்ள 3 மாதத்திற்கு ஒருமுறை இந்தியா செல்வதால் அங்கும் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தேன். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு அதன் வருவாயை அங்குள்ள தன்னார்வ நிறுவங்களுக்கு அளிப்பதும் என் குறிக்கோள்.
கே: தமிழ் நாடு அறக்கட்டளையில் (TNF) உங்கள் பங்கு குறித்துக் கூறுங்கள்? 1978ல் சேர்ந்தேன். 1989ல் career guidance program தொடங்கினேன். 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வருடம் 900 மாணவர்கள் பங்கேற்றனர்.
TNF இந்த ஆண்டு 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1989 என்.ஜி.ஆர். அறக்கட்டளை டாக்டர். பெரியசாமியின் மூலம் தமிழ்நாடு அறக்கட்டளைக்குக் கட்டடம் கட்ட ஓர் இடத்தை வழங்கினார்கள். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கவேண்டும். அன்று குழுவில் இருந்த C.K. மோகனம், நீங்கள் பொறுப்பெடுத்துக் கட்டி முடியுங்கள் என்றார். நான் ஒப்புக்கொண்டு துவங்க நினைக்கையில் யாரோ ஒருவர் அந்த இடம் தனக்குரியது என்று வழக்குப்போட்டார். வழக்கு சென்னை உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாம் சென்றுவரப் பல ஆண்டுகள் ஆயின. இத்தனைக்கும் நீதிபதி. வேணுகோபால், டாக்டர். அனந்தகிருஷ்ணன், டாக்டர். தெய்வமணி, பேரா. அய்யாசாமி, அப்பல்லோ மருத்துவமனை கஜராஜ் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். ஒருவாறாக இப்பிரச்சனை முடிந்து நிலம் TNFக்கு வந்து சேர்ந்தது. பணமெல்லாம் கோர்ட் ,கேஸ் என்று போய்விட்டது. இப்போது கட்டடம் கட்டப் பணம் வேண்டும். எல்லாப் பக்கமும் பணம் கேட்டேன். அதிகம் தேறவில்லை.
நானே ஏதாவது செய்வது என்று தீர்மானித்தேன். டாக்டர். ராஜ் (நரம்பியல் நிபுணர்) எனக்கு $20,000 கொடுத்தார். எனக்கு என் தந்தை ஒரு வீடு கொடுத்தார். அமெரிக்க பிரஜையான எனக்கு இந்தியாவில் வீடு எதற்கு? அந்த வீடு கட்ட அவர் என்னிடம் பணம் பெற்றதில்லை. அதை விற்று TNF கட்டடம் கட்டக் கொடுத்தேன். ஒரு கட்டடத்திற்கு என் தந்தையின் பெயரை இட்டேன்.
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், "உயர்கல்வி பெற கிராமத்து மக்கள் நகரங்களுக்குச் செல்கின்றனர். நாம் ஏன் உயர்கல்வி, கணினி வகுப்புகளை அங்கேயே நடத்தக்கூடாது?" என்றார். அதன்படி நடமாடும் கணினி மையத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அடுத்து பள்ளி அங்கன்வாடிகளுக்கு 'புகையாத அடுப்பு' திட்டத்தில், திருமதி. பமேலா வால்ஷ் மற்றும் தமிழக அரசாங்கத்தின் நமக்கு நாமே திட்டத்துடன் TNF இணைந்து 12,000 அங்கன்வாடிகளுக்கு அடுப்புகள் வழங்கினோம்.
கே: பெர்க்கலி பல்கலைகழகத்தில் தமிழ்ப் பீடம் அமைப்பதில் உங்கள் பங்களிப்பு என்ன? ப: இதனை ஆரம்பிக்க மொத்தம் $400K தேவைப்பட்டது. $120K தேவைப்பட்ட நிலையில் இளங்கோ என்னை நாடினார். வசூலாகும் டாலருக்கு இணையாகத் தருகிறேன் என்றேன். $60K திரட்டப்பட, $60K நான் கொடுத்தேன். Federation of Indiaவின் முயற்சியால் இது சாத்தியமாயிற்று. இன்னும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவப்பட வேண்டும். தமிழ்ச் சங்கங்கள் இணைந்து இதனைச் செய்யவேண்டும். FeTNAவும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
கே: நீங்கள் கால்ஃப் (Golf) நன்றாக விளையாடுவீர்களாமே ? ப: நான் விஸ்கான்சினில் இருந்தபோது, அங்குள்ளோர் சனிக்கிழமைதோறும் கால்ஃப் விளையாடப் போய்விடுவார்கள். நானும் அதைக் கற்றுக்கொண்டு விளையாட ஆரம்பித்தேன். இடைவேளைகளில் கம்பெனிப் பிரச்சனைகள் குறித்துப் பேசுவோம். திங்கள் அன்று வேலைக்குச் செல்லும்போது செய்யவேண்டியது என்ன என்பது எனக்கு தெரிந்திருக்கும். பின்பு ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5:30 மணிக்கு விளையாட ஆரம்பித்தேன். பின்பு வேலைநாட்களில் ஆடினேன். வேலையும் நன்றாக நடந்தது. பின்பு சிகாகோ சென்றோம். அங்கே கன்ட்ரி கிளப்பில் சேர்ந்தேன். பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இந்தோ அமெரிக்கன் கால்ஃப் அசோசியேஷன் தொடங்கி 16 வருடங்கள் போட்டிகள் நடத்தியிருக்கிறேன்.
கே: உங்கள் ஈடுபாடுகளை உங்கள் மகன்கள் மேலெடுத்துச் செல்கிறார்களா? ப: நான் வேலூரில் கணினிப் பயிற்சி நடத்த என் மகன் நவீனையும் அழைத்துச் சென்றேன். அவனும் தொண்டு புரிந்தான். பணமும் கொடுத்தான். சியாட்டல், வாஷிங்டன் போன்ற இடங்களின் America India Foundation-க்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறான். சிகாகோ, நியூ யார்க், பிரின்ஸ்டன் ஆகிய இடங்களிலும் தொண்டு செய்திருக்கிறான். என் குழந்தைகள் இருவரும் நன்றாக கால்ஃப் விளையாடுவார்கள். பள்ளி, கல்லூரிக்காக விளையாடியிருக்கிறார்கள். பெற்றோர்கள் செய்வதைப் பிள்ளைகள் பின்பற்றுவார்கள். நாம்தான் அவர்களுக்கு முன்மாதிரிகள்.
கே: உங்களை பாதித்த மனிதர்கள் யார்? முதலாவது நீதிபதி. வேணுகோபால். அவர் இறுதியில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே உயிர்நீத்தார். 60 மேற்பட்ட நல்ல நூல்களை எழுதியிருக்கிறார். அடுத்தவர். டாக்டர். அனந்தகிருஷ்ணன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ந்தவர். எதையும் தெளிவாகச் சொல்பவர். கல்வியில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர். இவர்கள் இருவரைத் தவிர என் தந்தை. என்னுள் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும், விழுமியங்களுக்கும் காரணமானவர். அவரின் கடின உழைப்புதான் என்னுள் விழுந்த விதை.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் ஒலிபெயர்ப்பு: யூகி தமிழ்வடிவம்: லக்ஷ்மி ஷங்கர், அட்லாண்டா; நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
*****
தந்தையின் நேர்மை நான் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அப்பா தாசில்தார். நாணயமிக்கவர். அன்று ஜனவரி முதல் தேதி. ஒருவர் என் அப்பாவைத் தேடி வந்தார். அவர் 2 கூடைகளில் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப் பழங்கள் கொண்டு வந்திருந்தார். அப்பா வேலையில் ஆழ்ந்திருந்தார். ஒருவர் பார்க்க வந்திருப்பதைச் சொன்னேன். வெளியில் வந்த அவர் வந்திருந்தவரைப் பார்த்துக் கத்தினார். அவ்வளவு பழங்களையும் தெருவில் விட்டெறிந்துவிட்டார். அப்பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று முதிர்ச்சியடைந்த பிறகுதான் விளங்கியது. அன்று வந்திருந்தவருக்கு எங்களால் ஆப்பிள் போன்ற பழங்கள் வாங்க முடியாது என்று தெரியும். ஆகவே கையூட்டாக அந்தப் பழக்கூடைகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
ராம் துக்காராம்
*****
நம்மால் நிறைய முடியும் அமெரிக்கக் குடும்பங்கள் வருவாயில் 9 சதவீதத்தை தருமம் செய்கிறார்கள். இந்தியர்கள் ஏனோ அவ்வாறு செய்வதில்லை. சமுதாயம் மூலம் நாம் எத்தனையோ பலன்களை அடைகிறோம். அந்தச் சமுதாயத்துக்கு நாம் திரும்பக் கொடுக்க வேண்டாமா? இந்தச் சமூகத்தின் குரலே நம் சந்ததிகளின் குரலும். இந்தச் சமூகம் எப்படி வலுப்பெறும்? இங்கு 50,000க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆனால் 700 குடும்பங்களே TNF போன்றவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர். 700 குடும்பங்களால் இவ்வளவு நன்மைகளைச் சமூகத்திற்கு செய்ய முடியுமெனில் 7000 குடும்பங்கள் சேர்ந்தால் இன்னும் எவ்வளவு செய்ய முடியும்!
ராம் துக்காராம்
*****
தலைவன் செய்ய வேண்டியது 45 வருடங்களுக்கு முன் நான் படித்த 'Bravely, bravely in Business' என்ற புத்தகத்தில் 16 விதிமுறைகள் சொல்லப்பட்டிருந்தன. முக்கியமானது, பொய் சொல்லக்கூடாதென்பது. என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் "நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய் சொல்லக்கூடாது" என்று சொல்வேன். அடுத்து, நல்ல தலைவராயிருப்பவர் குறிக்கோளை நோக்கிய தலைவனாக இருக்க வேண்டும். (Principle Centered Leadership). ஸ்டீவ் கவி கூறியது இது. ஒரு நல்ல தலைவன் அந்தத் தருணத்தில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வேலையே செய்துகொண்டு அல்லது எப்பொழுதும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு இருக்கக்கூடாது; சதா கால்ஃப் விளையாடவும் கூடாது; எது முக்கியம் என்பதை நிர்ணயம் செய்து, நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட வேண்டும். உங்கள் மனைவியின் கை ஒடிந்துவிட்டதென்றால் போட்டது போட்டபடி போட்டுவிட்டு, ஓடிப்போய் மனைவிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ராம் துக்காராம் |
|
|
More
டாக்டர். ராஜ்குமார் பாரதி
|
|
|
|
|
|
|
|