Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'நல்ல கீரை' ஜெகன்னாதன்
டி.வி. வரதராஜன்
- சந்திரமௌலி|ஆகஸ்டு 2014||(1 Comment)
Share:
துக்ளக் சத்யாவின் வசனத்தில் 'இது நம்ம நாடு' என்ற தனது புதிய நாடகத்தை அமெரிக்க நகரங்களில் வெற்றிகரமாக ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் குழுவினரோடு மேடை ஏற்றப் பரபரப்பாகச் செயல்படும் டி.வி. வரதராஜன் அவர்களோடு, ஒருநாள் முழுவதும் இருந்து, அவரது பலதுறை அனுபவங்களை, செயல்பாடுகளை, எதிர்காலத் திட்டங்களை கேட்டுத் தெரிந்துகொண்டதை இங்கே பகிர்கிறேன். அவர் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், நாடக, திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர், வங்கிப்பணியாளர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர். தமிழ்நாட்டில் தாமல் என்ற சிற்றூரைப் பூர்விகமாகக் கொண்ட வரதராஜன் திருவல்லிக்கேணியிலேயே பெரும்பாலும் வளர்ந்தவர். புராண, இதிகாசங்களில் பாண்டித்யம் பெற்றிருந்த தந்தை வழியாக வரதராஜனுக்கும், சகோதரர் தாமல் ராமகிருஷ்ணன், சகோதரி பெருந்தேவி ஆகியோருக்கும் பாண்டித்யம் ஏற்பட்டது. அவர்களும் இன்று பிரபல உபன்யாசர்கள். தந்தையின் இன்னொரு ஆர்வம் நாடகம். அந்தக் காலத்தில் ஹிந்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருடாந்திர நாடகத்தில், நல்ல தோற்றமுள்ள இவர் தந்தைதான் எப்போதும் கதாநாயகன். ஒத்திகைக்கு நான்கு வயது வரதராஜனும் அப்பாவுடன் போவார். நடிகர்களுக்குத் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே இட்லி, தோசை வரவழைப்பார்கள். ஆசாரமான வீட்டில் வெங்காயம் கிடையாது. பொடியன் சாப்பிட்டால் தப்பில்லை என்று வரதராஜனுக்கு விதிவிலக்கு. "நான் நாடகத்திற்கு வந்ததற்கு வெங்காயம் மிகப்பெரிய காரணம்" என்று சொல்லிச் சிரிக்கிறார் வரதராஜன்.

தொடர்ந்து அப்பாவுடன் போன வரதராஜனுக்குப் புராண நாடகங்களின் கடினமான வசனம் மொத்தமும் கேள்வி ஞானத்திலேயே அத்துப்படியாகிவிட்டது. அப்பாவின் வழிகாட்டலில் உச்சரிப்பு, உணர்ச்சிபாவம், மேடைத் தோற்றம் எல்லாம் கற்றுக்கொண்டு பள்ளி நாடகங்களில் நடித்தார் வரதராஜன். வரதராஜனை ஈர்த்தது அரசியல் மேடையும் தான். அண்ணா, நாவலர், கலைஞர், மபொசி போன்றோரின் அனல் பறக்கும் பேச்சுக்களாலும், ராஜாஜி , காமாராஜர் ஆகியோரின் யதார்த்தமான உரைகளாலும் ஈர்க்கப்பட்ட இவர் சென்னையில் அரசியல் கூட்டங்களுக்கும் போவது வாடிக்கை ஆனது.



மயிலை விவேகானந்தா கல்லூரியில் பட்டக் கல்வி பெற்று, பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை கிடைத்ததும், 21 வயதில் சொந்த மாமா பெண் உஷாவைத் திருமணம் செய்துகொண்டார். 1976ல் சென்னையில் தொலைக்காட்சி தொடங்கிய போது செய்தி வாசிக்கும் வேலைக்கு விண்ணப்பித்து, மூன்று கட்டத் தேர்வில் பங்கேற்ற 43 பேரில் தேர்வான ஒரே நபர் வரதராஜன். எஸ். வரதராஜன் அப்படித்தான் டிவி. வரதராஜன் ஆனார். வங்கியில் இவரை உற்சாகப்படுத்தி "வங்கிக்கும், தொலைக்காட்சிக்கும் ஒரு புதிய நட்சத்திரமாக இருப்பாய்" என்று தொலைநோக்கோடு அனுமதித்த வங்கி மேலாளரை நன்றியோடு நினைத்துக்கொள்கிறார்.

இருபத்தெட்டு ஆண்டுகளாகத் தவறில்லாத, தெளிவான உச்சரிப்பு, குறித்த நேரத்துக்குள் அனைத்துச் செய்திகளையும் வழங்குதல் என்று தொலைக்காட்சி நேயர்களிடம் நற்பெயர் பெற்றார். நேயர்கள் எதிர்பார்த்தது வரதராஜனின் செய்தி வாசிப்பின் முடிவில் வரும் அவரது ட்ரேட் மார்க் புன்னகை. டெலிப்ராம்ப்டர்கள் இல்லாத காலத்தில், கிட்டத்தட்ட இருபது பேர் தொகுத்தளிக்கும் செய்திகளை, நேரடி ஒளிபரப்பில் எந்த ஒத்திகையும் இல்லாமல் செய்திகளை வழங்குவது எளிதல்ல. இவர் திறமை காரணமாக முக்கிய நிகழ்வுகள், பொற்கோவில் வெள்ளை அறிக்கை போன்ற கஷ்டமான செய்திகளை வாசிக்க நிலைய இயக்குனர்கள் இவரையே பெரும்பாலும் நாடியிருக்கிறார்கள்.

தான் பெரிதும் விரும்பிய எம்ஜிஆர் உடல்நலம் குன்றி ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, எங்கே தான் வாசிக்கும் நேரம் அவரது மறைவுச்செய்தி வந்துவிடுமோ என்று பயந்து, செய்தி வாசிப்பதையே தவிர்த்தாராம். எம்ஜியார் பிழைத்து இந்தியா திரும்பி வந்தபோது அந்தச் செய்தியை உற்சாகமாக வழங்கியவர் இவரே. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் வெற்றிக்கு இவரே காரணம் என்று ஒரு பேச்சு நிலவியதும் உண்மை. 1983ல் உலகக்கோப்பைப் போட்டிகளின் போது இவர் செய்தி வாசித்த நாட்களிலெல்லாம் இந்தியா வெற்றி பெற்றது. இவர் வாசிக்காத இரண்டு நாட்களில் மட்டும் தோல்வி கண்டது. இந்தியா உலகக் கோப்பையை வென்ற செய்தியை அறிவித்ததும் இவரே.



தொலைக்காட்சிப் புகழ் இவருக்குத் தொல்லை ஆனதும் உண்டு. இந்திரா காந்தி ஜனதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட செய்தியைப் படித்ததற்காக ஒரு கும்பல் இவரை அடிக்கத் துரத்தியிருக்கிறது. எதிர்கட்சித் தலைவரான கலைஞரின் பிறந்த நாளைப் பற்றிச் செய்தி வாசிக்கவில்லை என்று ட்ராஃபிக் சிக்னலில் அறை விழுந்திருக்கிறது. பிற்காலத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்தாலும் அவற்றில் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பில் இருந்த சவால்கள் இல்லாததால் நிறுத்திக்கொண்டார். "என்னுடைய நாடக, தொலைக்காட்சித் தொடர், திரைப்பட வாய்ப்புக்களுக்குச் செய்தி வழங்கும் வேலையே நுழைவுச்சீட்டாக இருந்தது" என்று சொல்கிறார்.

வங்கியில் வேலை பார்த்து வந்தபோது வங்கிகளுக்கிடையேயான நாடகப்போட்டி ஒன்றில், தன் முதல் நாடகமான "என் கேள்விக்கு என்ன பதில்?" நாடகத்தை, ஒய்.ஜி. மகேந்திரா இயக்க, கதாநாயகனாக இவர் நடித்திருக்கிறார். நாடகம் வரதராஜனுக்குச் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது. அந்தப் பரிசினைக் கொடுத்த எம்ஜிஆர், இவரை மேடையில் ஆரத் தழுவிக்கொண்டார். "அதனால் அன்னைக்குப் போட்டிருந்த சட்டையைப் பல வருஷம் அப்படியே ஹேங்கரில் - சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் மாட்டியிருப்பதுபோல - வைத்து பூஜித்தேன்" என்று குழந்தைபோலச் சொல்கிறார்.

சிறந்த நடிகர் தேர்வு இவருள் இருந்த நாடக ஆசையை உசுப்பிவிட்டது. நண்பர் சீனாவோடு இணைந்து கிரியேடிவ் எண்டர்டெயினர்ஸ் என்ற ஒரு அமெச்சூர் நாடகக்குழுவை ஆரம்பித்து, வெங்கட், வேதம் புதிது கண்ணன், கிரேசி மோகன் போன்றோரின் நாடகங்களை வெற்றிகரமாக மேடை ஏற்றினார். 'யாமிருக்க பயமேன்?', '36 பீரங்கி லேன்', 'சொல்லடி சிவசக்தி', 'அவனுடைய செல்லம்மா', என்று சபாதோறும் வெற்றிநடை போடத் தொடங்கினார். தொலைக்காட்சியில் 'கல்யாணத்துக்குக் கல்யாணம்', 'சொல்லடி சிவசக்தி' போன்ற பிரபல தொடர்களை தயாரித்து நடித்தார்.



ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 1994ல் யுனைடட் விஷுவல்ஸ் என்ற நாடகக்குழுவைத் தொடங்கினார். அறிமுக எழுத்தாளர் ரவியின் 'ஜோடிப் பொருத்தம்' நாடகத்தில் தொடங்கி 15க்கும் மேற்பட்ட வெற்றி நாடகங்களை வழங்கி வருகிறார். இவரது நாடகங்கள் அன்றாட மக்களின் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அடி நாதமாகக் கொண்டவை. ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, அனாவசிய ஜோக்குகளோ, வலியத் திணிக்கப்பட்ட சென்டிமென்ட்களோ இருக்காது. இவற்றை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கும் இவருக்குப் பக்கபலமாக இவரது நாடக ஆசிரியர்கள் வெங்கட், வேதம் புதிது கண்ணன், ரவி, சி.வி. சந்திரமோகன் ஆகியோரோடு இப்போது துக்ளக் சத்யாவும் இருக்கிறார்கள்.

தானே எழுதி மேடையேற்றிய தனது நாடகங்களை மற்ற குழுக்கள் மேடையேற்ற அனுமதிக்காத சோ, 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' நாடகத்தை மீண்டும் மேடையேற்ற அனுமதித்ததைப் பெரும் அங்கீகாரமாக என்ணுகிறார் வரதராஜன். தனியார் தொலைக்காட்சித் தொடர்களில் இவரை அறிமுகம் செய்தது கே. பாலசந்தர். அவரது சீரியல்களில் எல்லாவற்றிலும் வரதராஜனுக்கு ஒரு முக்கியப் பாத்திரம் நிச்சயம் உண்டு. 'சஹானா' தொடரில் நான்கு பக்க வசனத்தை, கஷ்டமான கேமரா கோணத்தில் வைக்கப்பட்ட காட்சியில் ஒரே டேக்கில் பேசி நடித்தார். "உடனேயே கே.பி. சார் என்னைக் கட்டி அணைத்துப் பாராட்டினார்" என்று பெருமையோடு கூறுகிறார். இவர் மூன்றாண்டுகளுக்கு மேலாகத் தொகுத்து வழங்கிய 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சி இன்னும் சன் தொலைக்காட்சியில் சூரிய வணக்கமாக நடைபோடுகிறது.
"சென்னைத் தொலைக்காட்சியிலே ஒரு பிரபலமாக என்னுடைய பேட்டியே ஒளிபரப்பான போது எனக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு" என்கிறார் டி.வி.வி. தமிழ் நாடக உலகத்துக்குத் தன்னால் இயன்றதைச் செய்யும் பொறுப்புணர்வோடு, 2005ல் நகரம் முழுவதும் நாள்தோறும் நாடக விழாவைச் சொந்த முயற்சியில் சென்னையில் நடத்தினார். ஒரு மாதம் ஆறு சபாக்களில் 28 நாடகங்களை வெவ்வேறு நாடகக் குழுக்கள் நடத்தின. நாடகங்களுக்கு அனுமதி இலவசம் என்றாலும், குழுக்களுக்கு சன்மானம், பழம்பெரும் நடிகர்களுக்கு விருது என்று திருவிழாவை ஜமாய்த்திருக்கிறார். தமிழ் நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றைச் சமீபத்தில் ஆரம்பித்து, நாடகக் குழுக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், அமெச்சூர் நாடக நடிகர்களுக்கும் தொழில்முறை கலைஞர்களுக்குக் கிடைக்கும் ரயில் கட்டண சலுகை கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். வளரும் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் (இந்தக் கட்டுரையாளர் உட்பட) ஊக்குவித்து, வாய்ப்புகள் கிடைக்க வழி செய்கிறார்.

அமெரிக்காவில் முதன்முறையாக 2005ல் கலிஃபோர்னியாவில் தீபா ராமானுஜம் குழுவினருடனும், பின்னர் பல பெரும் நகரங்களில் டாக்டர். சாரநாதனின் ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் குழுவினருடனும் இணைந்தும், பின்னர் 2006 மற்றும் 2008லும் நாடகங்களை நடத்தியிருக்கிறார். இவரது சமீபத்திய நாடகமான துக்ளக் சத்யாவின் "இது நம்ம நாடு" ஹூஸ்டனில் இரண்டு முறையும், டாலசில் ஒருமுறையும் ஜூன் மாதம் அரங்கு நிறைந்த காட்சியாக வரவேற்புக் கண்டது. புகழையும், பணத்தையும் சாதாரண மனிதனைவிடச் சற்று அதிகமாகவே சம்பாதித்துவிட்டதாகச் சொல்லும் இவர் இப்போது ஆத்ம திருப்தி ஒன்றையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

அறுபது வயதைக்கடந்துவிட்டாலும், கவலையில்லாத மனதாலும், தூய பழக்கங்களாலும் வரதராஜன் பார்வைக்கு இருபது வருடம் குறைவாகத்தான் தெரிகிறார். இன்னும் பல்லாண்டுகள் உடல் நலத்தோடும், தெளிந்த சிந்தையோடும் தமிழ் நாடக உலகை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி இட்டுச் செல்லட்டும்.

சந்திப்பு: ஹூஸ்டன் சந்திரமௌலி

*****


ஜில்லுனு ஒரு காஃபி
1970களில் ஒய்.ஜி. மகேந்திரா எங்கள் முதல் நாடகமான 'என் கேள்விக்கென்ன பதில்?' நாடகத்தை இயக்கிய காலத்துல நாடகத்தைப் பத்தி விவாதிக்க அவரோட மாமனார் வீட்டுல கூடுவோம். அப்போ "ஜில்லு எல்லாருக்கும் காஃபி கொடு, ஜில்லு எல்லாருக்கும் டிஃபன் கொடு"னு சொன்னதும், துறுதுறுனு ஒரு சின்னப்பெண் சிரிச்ச முகத்தோட எங்களை உபசரிப்பாங்க. ஜில்லுனு செல்லமாக கூப்பிடப்பட்ட ஒய்.ஜி.எம்.மின் மைத்துனி, இன்று திருமதி. லதா ரஜினிகாந்த்!

- டி.வி. வரதராஜன்

*****


எந்த பாலச்சந்தர்?
விசுவோட 'பட்டுக்கோட்டை பெரியப்பா' படத்தைப் பார்த்துட்டு, அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த என்னைப் பாராட்ட கே. பாலச்சந்தர் சார் என் வீட்டுக்கு ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த என் மனைவிகிட்ட "நான் பாலச்சந்தர் பேசறேன்"னு சொன்னதுக்கு, என் மனைவி "அவர் செய்திகள் படிக்கப் போயிருக்கார். வந்ததும் உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொல்றேன். ஆமா நீங்க எந்த பாலசந்தர்?"னு கேட்டிருக்கா. அதுக்கு நிதானமா தான் டைரக்டர் பாலசந்தர்னு கோபமே இல்லாமல் விளக்கிட்டு, "பாராட்டறவங்கதான் ஃபோன் பண்ணனும், அதனாலே அவர் எனக்கு ஃபோன் பண்ணவேண்டாம். நானே நாளைக்கு காலைல ஃபோன் பண்றேன்னு" சொல்லிட்டு, மறுநாள் மனசு நிறைய என் நடிப்பைப் பாராட்டவும் செய்தார். இந்தப் பெருந்தன்மை, தன்னடக்கம் எங்க குரு பாலசந்தர் சாருக்கு மட்டும்தான் வரும். 2005ல் நாடக விழா நடத்தப்போறேனு சொல்லி ஆசி வாங்கப் போனபோது, இது பெரிய விஷயமாச்சே, முடியுமான்னு அக்கறையோட கவலைப்பட்டாலும், ஆசி வழங்கி, 10000 ரூபாய் நன்கொடை குடுத்து விழாவுக்கு பிள்ளையார் சுழி போட்டவரும் அவர்தான்.

- டி.வி. வரதராஜன்

*****


கலைஞர் திருப்பிப் போட்ட தோசை
1996ல், ராஜ் டிவியில் பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். திமுக கூட்டணி மறுபடியும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது 1969 ல் பொதுக்கூட்ட மேடையில் கலைஞர் சொன்ன ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தேன். கலைஞர் சொன்னது இதுதான்: "அண்ணா அவர்கள் ஆட்சி என்பது தோசை மாதிரி. அதை ஒவ்வொரு தேர்தலுக்கும் திருப்பிப் போடவேண்டும் என்று சொன்னார். அது கழகம் அல்லாத ஆட்சியைப் பற்றி. கழக ஆட்சி என்பது தோசை அல்ல. ஆப்பம் போன்றது. தொடர்ந்து ஒரே பக்கமாக வெந்து கொண்டிருக்க வேண்டும். எனவே தொடர்ந்து எங்களுக்கே வாக்களியுங்கள்". சாதாரண மக்களுக்குக்கூடப் புரியற மாதிரி இப்படி நயமாகப் பேச அவருக்கு மட்டுமே வரும். அன்றிரவு நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும்போது, கலைஞர் நேரடி ஒளிபரப்பின் போதே தொடர்பு கொண்டு, 69ல் சொன்னதை நினைவோடு நான் சொன்னதைப் பெரிதும் பாராட்டினார்.

- டி.வி. வரதராஜன்

*****




டின்னர் தந்த மன்னாதிமன்னன்
நான் எம்.ஜி.ஆரின் பரம விசிறி. ஒரு சுதந்திர தின விழாவில் கோட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சியைப் படம்பிடிச்சுட்டு கிளம்பும்போது, எம்.ஜி.ஆர். என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, அன்பா விசாரிச்சு, சாப்பிட்டுட்டு போகசொன்னார். வேறு வேலை இருக்குன்னு சொன்னதைச் சட்டை பண்ணாமல் எங்களைச் சாப்பிட வெச்சார். அன்னிக்கு மதியம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்ல சம்பந்தி போஜனம். முதல்வர் கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சியையும் கவர் பண்ணிட்டு கிளம்பும்போது எங்களையும் மதிய உணவு அங்கியே சாப்பிட வெச்சார். விடைபெற்று கிளம்பும்போது, "காலையிலும், மதியமும் உங்க புண்ணியத்துல சாப்பாடு ஆச்சு. ராத்திரி டின்னருக்குதான் என்ன பண்றதுனு பாக்கணும்"னு எம்.ஜி.ஆர்கிட்ட சாதாரணமாச் சொல்லிட்டு கெளம்பிட்டேன். ராத்திரி காவல்துறை பரிசு வழங்கற விழா. அங்கேயும் முதல்வர் தலைமை. அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்துக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் என்னைப் பார்த்துக் கையைக் கூப்பிச் சிரித்தார்.

ராத்திரி பதினோரு மணிக்கு நிகழ்ச்சி முடிஞ்சு முதல்வர் போனப்புறம் கிளம்பும்போது ஒரு காவல்துறை உயரதிகாரி கையில ஒரு பெரிய பழமூட்டையோட மூச்சிரைக்க வந்து, "வரதராஜன், முதலமைச்சர் இதை உங்ககிட்ட குடுக்கச் சொன்னார். இது உங்க "டின்னருக்குனு" சொல்லச் சொன்னார்"னு குடுத்ததும், எனக்கு மூச்சு நின்னுடும்போல ஆயிடுச்சு. நான் போற போக்கில சொன்னதை ஞாபகம் வெச்சுக்கிட்டு எல்லா ஓட்டலும் மூடிட்ட அந்த ராத்திரி வேளைல பழங்களை வாங்கி வரச்சொல்லி 'டின்னருக்குனு' மறக்காம சொல்ல வெச்சிருக்காறேன்னு நினைச்சபோது, நெகிழ்ச்சியில் கண்ணீர் வழிந்தது.

- டி.வி. வரதராஜன்

*****


கர்ம யோகி கலாம்
டெல்லியில் நாடகம் நடத்தப் போனபோது குடியரசுத் தலைவராக இருந்த திரு. அப்துல் கலாமை அவரது மாளிகையில் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சது. எந்த பந்தாவும் இல்லாமல் எழுந்து வந்து என்னையும், குழுவினரையும் அன்பாக வரவேற்று ஒருமணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். புகழ்பெற்ற மொகல் கார்டன்ஸுக்கு எங்களைக் கூட்டிப்போய்க் காட்டினார். "வரதராஜன் இந்த ரோஜாவைப் பாருங்க, இது ஒரு பெரிய தத்துவத்தை சொல்லுது இல்லை? நல்லவனுக்கும் இப்படியே மலருது, கெட்டவனுக்கும் இதே மலர்ச்சியைக் காட்டுது"ன்னு கர்மயோகத்தை சர்வ சாதாரணமா எடுத்துச் சொன்னார். நாட்டின் முதல் குடிமகனோட அதுவும் அவர் மாளிகையிலேயே நம்ம மொழில சகஜமாப் பேசமுடிஞ்சது எங்கள் அதிர்ஷ்டம்.

- டி.வி. வரதராஜன்

*****




மோதிக்கு சொன்ன ஆரூடம்
2011 நவம்பரில் அகமதாபாதில் நாடகம் நடத்தப் போனோம். அப்போது குஜராத் முதல்வராக இருந்த திரு. நரேந்திர மோதியை சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். அனுப்பிய மூன்றே மணி நேரத்தில் அவரோட பி.ஏ. ஃபோன் பண்ணி விவரமெல்லாம் கேட்டுக்கிட்டார். மோதி சீனாவிலிருந்து அன்றுதான் இந்தியா வருவதால் வேறு நாளில் எங்களால் சந்திக்க முடியுமான்னு கேட்டார். அந்தத் தேதியை விட்டால் வேறு தேதி எங்களுக்கு இல்லை. அன்றிரவே மோதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். பிறகுதான், அதே நேரத்தில் அகமதாபாதில் எங்க நாடகம் நடக்க இருப்பது நினைவுக்கு வந்து, மறுபடி பி.ஏ.வுக்கு ஃபோன் பண்ணினேன். சரி, இந்த முறை மோதியைப் பார்க்கமுடியாதுன்னு நெனச்சேன். கொஞ்ச நேரத்திலேயே அவரோட பி.ஏ. ஃபோன்பண்ணி, அன்னிக்கு மதியம் உங்களை 'உங்க வசதிக்கு ஏற்ப' முதல்வர் அவர் வீட்டிலேயே சந்திப்பார்னு சொன்னார். எங்களுக்கு நல்ல வரவேற்பு, அருமையான குஜராத்தி சாப்பாடு. "வணக்கம் வாங்க"னு தமிழ்ல சொன்னபடி, கூப்பின கைகளோட மோதி வந்தார். காலைலதான் சீனாவிலேருந்து வந்திருந்தாலும், ஒன்றரை மணி நேரம் எங்களோட பேசினார். குழந்தைக்குரிய உற்சாகத்தோட குஜராத்துல தான் கொண்டு வந்திருக்கிற திட்டங்களை விளக்கிச் சொன்னார். அவரோட தொகுதியான மணிநகர்ல பெரும்பாலும் தமிழர்கள் இருக்கிறதாலே, தானும் தமிழர்களோட பிரதிநிதிதான்னு பெருமையா சொல்லிக்கிட்டார். அடுத்த பிரதமர் நீங்கதானு நாங்க சொன்னபோது, அது கடவுள் கையில் இருக்கு. இன்னிக்கு குஜராத் முதல்வரா இருக்க வெச்சது கடவுள். இந்தக் கடமையை ஒழுங்கா செய்யப் பார்க்கிறேன்னு அடக்கத்தோட சொன்னார். கிளம்பும்போது குழுவில் சிலர் அவர் காலில் விழுந்தபோது, பதறிப்போய் தடுத்து விட்டு "நீங்க எல்லாம் கலைஞர்கள். கலைவாணி குடியிருக்கிற உங்க சிரசை என் பாதங்கள் ஸ்பரிசிச்சா என் தலைக்கு கர்வம் ஏறிடும். அதனால தயவுசெய்து யார் காலிலும் விழாதீங்க"ன்னு அட்வைஸ் பண்ணினார். அவருடைய அடக்கம், எளிமை, கடமையுணர்வு இதெல்லாம்தான் இன்னிக்கு அவரைப் பிரதமர் பதவில உட்கார்த்தியிருக்குங்கிறதுல சந்தேகமே இல்லை.

- டி.வி. வரதராஜன்

*****


உயிருள்ளவரை உஷா
பதினெட்டு வயதில் மணந்து முப்பத்து மூன்று ஆண்டுகள் குடும்ப வாழ்வு நடத்தி, இரண்டு மணியான பெண்களைப் பெற்று, கூட்டுக் குடித்தனத்தையும், பல தொழில்களில் ஈடுபட்டு பரபரப்பாக இயங்கும் கணவனையும் அனுசரித்த பெண்மணி வரதராஜனின் மனைவி திருமதி. உஷா. நாடகம் நடத்துவதை வீட்டில் மற்றவர்கள் சற்றே எதிர்த்தபோது, அவற்றைத் தாண்டி ஊக்கம் கொடுத்தவர். முதல் பெண்ணுக்கு, இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு, நாடகம் நடத்தப் போன ஒரே தகப்பனார் வரதராஜனாகத்தான் இருக்கும் என்றால், அவரைச் சிரித்தபடி வழியனுப்பிய ஒரே மனைவியும் நிச்சயம் உஷாவாகத்தான் இருப்பார். நாடக விழா நடத்தியபோது பின்புலமாத்தில் அத்தனை ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டவர் உஷா. 2006ல் வரதராஜனுடன் தன் மகளைப் பார்க்க பூனா செல்லும்போது நள்ளிரவில் ஆந்திரபிரதேசம் ராய்ச்சூரில் ரயிலிலேயே உஷாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பெரிய சந்திப்பாக இருந்தாலும், மருத்துவ வசதியோ, வீல்சேரோ, ஆம்புலன்ஸோ கிடைக்காமல் மொழி புரியாத ஊரில் நிலைமை புரிந்து கொள்ளாத ரயில்வே அதிகாரியோடு போராடி எப்படியோ மனைவியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்குள் அந்த அன்பு உயிர் பிரிந்துவிட்டது. "என் மனைவி உயிர்போன விஷயத்தைக்கூட ஒரு செய்தி மாதிரி என் சகோதரனுக்கு டெலிஃபோனில் உரக்கச் சொன்னேன். உடனே அக்கம்பக்கத்திலிருந்து உதவிக்கு ஆட்கள் வந்துவிட்டனர்" என்று அந்த சோகத்தை நினைவு கூர்ந்தார். மனைவி பெயரில் ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து நலிந்தோருக்குக் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார். தான் பட்ட வேதனை பிறர் படக்கூடாது என்ற எண்ணத்தில் ரயில்வே துறையினருக்கு விண்ணப்பித்து, இன்று ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் அவசர மருத்துவ உதவி உடனே கிடைக்கக் காரணமாயிருந்திருக்கிறார். இதைச் சொல்லும்போது கூட அந்த நேரத்தில் சரியான உதவி அளிக்காத அந்த நிலைய அதிகாரியைப் பற்றிக் கடுமையான ஒரு வார்த்தை அவர் சொல்லவில்லை.

- ஹூஸ்டன் சந்திரமௌலி
More

'நல்ல கீரை' ஜெகன்னாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline