Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
கைப்பிடிக் கடலை
அர்த்தத்தின் தேடல்
கனிந்து வரும் பசுபோல்!
கல்யாண மாமி
- ரவிசங்கர்|அக்டோபர் 2013||(2 Comments)
Share:
வெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு. இப்பல்லாம் காண்ட்ராக்ட் கலியாணம், ரொம்ப சுலபமாப் போச்சு. சமையல்காரரிலிருந்து சரக்கு மாஸ்டர் ஆகி இப்போது கல்யாண காண்ட்ராக்டரா இருக்கிற கும்பகோணம் நடராஜ சர்மாவுக்கு மட்டும் மார்க்கெட் பிடிக்கும் வேலையே இல்லை. அதற்குக் காரணம் அவரது நேர்மை, சுவையான சமையல், அமைதியான குணம் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதில் மிக முக்கியக் காரணங்கள் இரண்டு. முதல் காரணம் கல்யாண மாமி. அடுத்த காரணம் மாமி இல்லாமல் இதைச் செய்வதில்லை என்ற எண்ணத்தால் ஒரு நேரத்தில் ஒரு கல்யாணம் மட்டுமே எடுக்கும் அவரது வைராக்கியம். எண்பது வயதில் சிவப்பழமான சர்மாவிடம் கேட்டால், "எல்லாத்துக்கும் கல்யாணம் முன்ன நிக்கறா. பசங்க எல்லாம் மணியானவங்க. எல்லாரும் சேர்ந்து கலக்கறாங்க. இதில் நான் என்ன பண்ணறேன்" என்று அடக்கமாகச் சொல்வார்.

சராசரி உயரம், மாநிறம், மூக்கிலும் காதிலும் மட்டும் குறைந்தபட்ச நகைகள். கழுத்தில் திருமாங்கல்யம் தவிர இருப்பதே தெரியாத ஒரு மெல்லிசு சங்கிலி, மஞ்சள் பூசிய கருணை ததும்பும் களையான முகம், அழகான கொஞ்சம் பெரிய குங்குமப் பொட்டு, மேலே சின்ன கீற்றாக விபூதி, எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பாங்கு, மனிதர்களோடு சுலபமாக ஒட்டிக் கொள்ளும் குணம் என்று மாமியின் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண் வீட்டுக்காரர்கள் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே சர்மாவும் மாமியும் வந்துவிடுவார்கள். சர்மா மாமா வாழை மரம், மாவிலைத் தோரணம், பந்தல் அலங்காரம் என்று பிசி ஆகிவிட, கோலம் போட்டு, ஆரத்தி கரைத்து, சந்தனம் குங்குமம், வெற்றிலை பாக்கு, பன்னீர், சர்க்கரை, கற்கண்டு என்று சப்ஜாடா எடுத்து வைத்துத் தயாராகி விடுவார் மாமி. அப்போது ஓடும் ஓட்டம், கட்டு சாதம் முடிந்து, பொண்ணு மாப்பிள்ளை கிளம்பி, சமையல் கட்டெல்லாம் அலம்பி விட்டு அப்பாடா என்று ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறு, "நாராயணா ஒரு டம்ளர் மோர் இருந்தா குடுடா குழந்தை" என்று சமையல்காரரிடம் கேட்கும்போதுதான் நிற்கும். அனேகமாக அந்த ஒரு டம்ளர் மோர்தான் இரண்டு நாட்களில் மாமி சாப்பிடும் முதல் சாப்பாடாக இருக்கும்.

மாமியை நான் முதலில் பார்த்தது என் நண்பனின் தங்கை திருமணத்தில். அப்போதே மாமி என் நினைவில் ஒரு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அப்போது எங்கள் குடும்பம் அபுதாபியில் இருந்தது. என் அப்பா அங்கே எண்ணெய்த் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து திரும்பிப் போனதும் பல நாட்களுக்கு மாமி பிரதாபத்தையே பேசிக்கொண்டிருந்தேன் என்றால் பாருங்களேன். மாமியின் புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. ஆனால் யாருக்கும் மாமியிடம் கேட்கும் தைரியம் இல்லை. மாமி புருஷனுடன் இல்லை என்பதும் அவரது கணவர் துபாய்க்குப் பல வருஷங்களுக்கு முன்பே வேலைக்குச் சென்றார் என்பதும் அவருக்குச் சற்று நெருக்கமானவர்களுக்குத் தெரியும். மாமியின் குணத்துக்கு இந்த விஷயம் யாருக்குமே பெரிதாகத் தெரியவில்லை. அப்படியே கேட்டாலும் மாமி திறமையாக மழுப்பிவிடுவார்.

என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், கல்யாணங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டுதான் இருக்கும். மனிதர்களைப் பார்த்தவுடனே மாமி இவர்களில் யார் பிரச்சனை பண்ணுவார் என்று தெரிந்து கொள்வார். அப்போதிருந்து எது செய்தாலும் அவரிடம் அப்ரூவல் வாங்கப்படும். சாப்பாடு முதல் சயன அறை ஏஸி வரை விசேஷ கவனிப்பு யதார்த்தமாக அளிக்கப்படும். எப்படியாவது எந்தப் பிரச்சனையும் வராதவாறு மாமி பார்த்துக் கொள்வார். கல்யாணப் பெண்ணின் பெற்றோர் செய்யும் சொதப்பல்கள் வெகு சகஜமாகச் சரி செய்யப்படும். கல்யாணப் பெண்ணுக்கு அவள் இருபது வருடங்களாகக் கற்றிராத, கற்றுத் தரப்பட்டிராத பல விஷயங்கள் இந்த இரண்டு நாட்களில், கிடைக்கும் சொற்ப நேரத்தில் மாமியால் கற்பிக்கப்படும். அவரது அம்மாவுக்கும் எதிர்காலத்தில் சம்பந்திகளைச் சமாளிக்கும் வித்தைகள் போதிக்கப்படும். இருவீட்டுக் குழந்தைகளுக்கும் தலை வாருவது முதல் சாதம் ஊட்டுவதுவரை மாமியின் கைவண்ணம் இருக்கும். இத்தனைக்கும் மாமிக்குக் குழந்தை இல்லை. கல்யாணத்தின்போது எப்போதும் அவர் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே பல குழந்தைகள் சுற்றுவது சகஜம். கட்டுச் சாதத்தின் போது மாமி இருபக்க வீட்டாருடனும் ஐக்கியம் ஆகி இருப்பார். மணப்பெண் தன் பெற்றோரை பிரிவதைவிட மாமியைப் பிரிவதற்கே அதிகம் அழுவாள். பல நேரங்களில் பெண்ணைக் கொண்டுபோய் மாப்பிள்ளை வீட்டில் விடுவதற்கும், பெண் வெளிநாடு போனால் ஏர்போர்ட்டில் டாடா காட்டுவதற்கும் கூட மாமி போகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது; பல பந்தங்கள் பிள்ளை பிறப்பு, கிரஹப்பிரவேசம், பூணூல் என்று தொடரும் கதையும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இது எதற்குமே மாமி அலுத்துக்கொள்ளவே மாட்டார். தன் டிரேட்மார்க் புன்னகையுடன் எல்லா உதவியும் செய்வார்.

மாமியை நான் அடுத்தபடி என் ஒன்றுவிட்ட தங்கையின் திருமணத்தின் போது பார்த்தேன். சித்தப்பா வீட்டுக்கு எல்லாமே மாமிதான். அவர் ஏற்கனவே அவர்களுக்கு ரொம்ப அறிமுகம் ஆனவராகத் தெரிந்தார். சித்தியும் சித்தப்பாவும் மாமி வீட்டுக்கே போய் குங்குமமும் பத்திரிக்கையும் கொடுத்து, "எம் பொண் ஆத்திலேயிருந்து கிளம்பச்சேயே பழுத்த சுமங்கலியா நீங்க எதுத்தாப்பல வரணும். அப்போதான் எங்களுக்கு நல்ல சகுனம்" அப்படின்னு அழைக்க, இது என்னடி கூத்து என்று மாமி போலியாக அலுத்துக் கொண்டாலும், அந்த ஓரங்க நாடகத்துக்கும் ஒத்தாசை செய்யவே செய்தார். அப்போது மஸ்கட்டில் இருந்த என் அப்பாவால் முன்னதாகக் கல்யாணத்துக்கு வர முடியவில்லை என்பதால் நாங்கள் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே ஃப்ளைட்டில் வந்துவிட்டோம். அப்பா ஜானவாசத்தன்று ராத்திரிதான் வந்தார். வந்ததும் வராததுமாக அவரை நான் மாமியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தேன். ஒரு நமட்டுச் சிரிப்புடன் மாமி அப்பாவிடம், "நிலைமையைப் பார்த்தாயா ரங்கா, உன் பிள்ளை உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டி இருக்கிறது" என்றார். "மாமி, அப்படின்னா உங்களுக்கு அப்பாவை முன்னமே தெரியுமா?" என்று ஆச்சரியமாகக் கேட்டேன். "உன் அப்பனிடமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளேன்" என்றார் மாமி. அதற்குள் அம்மா மாமியை அழைக்கவே, "இதோ வந்துட்டேண்டியம்மா" என்று போய்விட்டார்.

நிஜமாகவே என் அப்பாவுக்கும் மாமிக்கும் முன் அறிமுகம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அப்பா எப்போதுமே எனக்கு ஒரு நண்பர் போலத்தான் பழகுவார். மாமியிடம் பேசிக்கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் ஒரு சங்கடம் தெரிந்ததையும் அதை மறைத்துக்கொண்டு அவர் யதார்த்தம் தோன்றப் பேசியதையும் என்னால் உணர முடிந்தது. சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. ஆனால், அன்று இரவுவரை அதைப்பற்றி அவரிடம் கேட்க நேரம் கிடைக்கவில்லை. ராத்திரி கலக்கல் ரிசப்ஷன் சாப்பாட்டுக்குப் பிறகு எல்லாரையும் கவனித்துவிட்டு, அப்பாடா என்று உட்கார்ந்திருந்தேன். ஒரு கல்யாணத்தில்தான் எல்லாருக்கும் எத்தனை எத்தனை வேலைகள்? "என்னடா குழந்தை, டயர்டா இருக்கா? சித்த இருடாப்பா வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு மாமி உள்ளே போனார்.

தூங்கப் போகலாமா என்று நினைத்தபோது அப்பா, "ரகு, மொட்டைமாடிக்குப் படுக்கப் போறேன் வரயா?" என்றார். "நீங்க போங்கப்பா. இதோ வந்துட்டேன்". மாமி கையில் ஒரு டம்ளரோடு வந்தார். "கார்த்தாலேயிருந்து பார்க்கறேன். இருமிண்டே இருக்கையே. இந்தா பசும்பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டிருக்கேன் குடி. தொண்டைக்கு இதமா இருக்கும்" அந்த வாஞ்சை வழியும் குரலைக் கேட்டபோது மாமி ஒரு யூனிவர்சல் அம்மா மாதிரி விஸ்வரூபமாகத் தெரிந்தாள்.

என்னதான் ஏஸி அறைகள் இருந்தாலும், மொட்டைமாடித் தூக்கம் கல்யாண வீடுகளில் ரசிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. அங்கங்கே சின்னச்சின்ன குழுக்களாக சீட்டுக் கச்சேரியும், அரட்டைக் கச்சேரியும் வெற்றிலை பாக்குப் புகையிலையுமாகக் களைகட்டி இருந்தது. ஒரு தனி மூலையில் அப்பா ஜமுக்காளத்தில் எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கிப் படுத்திருந்தார். "வா ரகு.." என்று நகர்ந்து இடம் கொடுத்தார். எங்கிருந்தோ ஒரு தலையணையும் ஏற்பாடு செய்திருந்தார். கால் நீட்டிப் படுத்த நான் ஆவல் தாங்காமல் கேட்டேன், "சொல்லுங்கப்பா.. மாமியை உங்களுக்கு எப்போதிருந்து எப்படித் தெரியும்?". அப்பா அந்தக் கதையைச் சொல்லலானார்.

"அவள் எனக்குச் சிறுவயதுத் தோழிடா. என் க்ளாஸ்மேட்டும் கூட. ஒண்ணாம் க்ளாஸிலிருந்து பத்தாவது வரை ஒண்ணாவே படிச்சோம். எங்காத்துக்கு நாலாவது ஆத்திலதான் அவா இருந்தா. அவளோட அப்பா ராமஸ்வாமி அய்யர் எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார். எங்க அக்ரஹாரத்திலயே கொஞ்சம் வசதியான குடும்பம் அவாளுடையது. பிதுரார்ஜித சொத்து நிலம் நீச்சுன்னு காவேரிக் கரையில் இருந்தது. வாத்தியார் மாமா தன் மூணு பொண்ணுக்கும் நதிகளோட பேரை வைத்தார். பாகீரதி, அதான் உங்க கல்யாண மாமி மூத்தவ. அடுத்து காவேரி, நர்மதான்னு ரெண்டு தங்கைகள். அந்தக் காலத்திலயெல்லாம் தங்கைகளோட பிறந்த மூத்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஒரு அம்மா ஸ்தானம் கிடைக்கும். பாகியோட அம்மா டீ.பி. வந்து ரொம்பக் கஷ்டப்பட்டா. அப்பல்லாம் இப்போ மாதிரி ட்ரீட்மெண்ட் வசதி கிடையாது. அதுவும் எங்கள் கிராமம் கொள்ளிடக்கரையில் ஒரு குக்கிராமம். ஒரு குளிர்காலத்தில டீ.பீ.யோட ஆஸ்த்மாவும் சேர்ந்து கொள்ள ஒரு நல்லநாளில் மாமி சுமங்கலியாப் போய்ச் சேர்ந்தாள். அப்போ எட்டாவதே படிச்சிண்டிருந்த பாகி குடும்ப ரெஸ்பான்சிபிலிடியைச் சந்தோஷமா எடுத்துண்டா. தட்டுத் தடுமாறி பத்தாவதும் முடிச்சா.

அந்தக் காலத்திலயெல்லாம் சமஞ்ச பொண்ணைச் சமையல் ரூமுக்கு அனுப்புன்னு தஞ்சாவூர் ஜில்லாவில ஒரு சொலவடையே உண்டு. பத்தாவது படிச்ச பொண்ணைக் குதிராட்டம் வீட்டில வெச்சிண்டு இருக்கான்னு பேச்சு வரப்படாதுன்னு வாத்தியார் அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிச்சார். தங்கைகளைக் கவனம் கொண்டு லோக்கலிலேயே மாப்பிள்ளை பாக்கச் சொல்லி பாகி சொன்ன எதுவும் மாமா காதில் ஏறவில்லை. பாகி ரொம்பச் செல்லம் அவருக்கு. இத்தனைக்கும் அப்பல்லாம் பாகி ரொம்பவே அழகா இருப்பா. வாழ்க்கைமுழுக்க இந்த மாதிரி பொண்ணோட வாழணும்கிற ஆசை எங்கள் க்ரூப்பில் எல்லாருக்கும் இருந்தது உண்மை. ஆனா எழுவதுகள்ளல்லாம் சமவயசுல வரன் பாக்கறது இல்லை. கொறைஞ்சது எட்டு வயசாவது வித்தியாசம் இருக்கணும்னு நினைப்பா. இதெல்லாம் தெரிஞ்சே நிராசைப்பட்டுப் போனவங்க எங்க செட்ல எவ்வளவோ பேர்.
கல்யாணத் தரகர் மூலமா ஐஐடியில கெமிக்கல் படிச்சு வடக்கே உத்தியோகமா இருக்கிற ஒரு வரனை வாத்தியார் முடிவு பண்ணார். நன்னா விசாரிச்சேளான்னு பலர் கேட்டது மாமாவின் காதிலேயே ஏறலை. அந்த அளவுக்கு ஐஐடி அவர் கண்ணை மறைச்சது. அதில சீட் கிடைக்கணும்னாலே நல்ல குணமும் படிப்பும் இருந்தாதான் முடியும்னு அவர் நினைச்சார். பொத்தாம் பொதுவாப் பாத்தா அப்ப அது ஓரளவு உண்மையாயும் இருந்தது. பையனுக்கு அப்பா அம்மா இல்லைன்னு சித்தப்பா சித்திதான் கல்யாணம் பண்ணி வெச்சா. அண்ணன் தங்கை, மாமனார், மாமியார் பிக்கல் பிடுங்கல் இல்லைன்னு வாத்தியார் சந்தோஷப்பட்டது பலருக்குக் கொஞ்சம் அதிகமாவே பட்டது உண்மை. தெருப்பூரா பந்தலும், கோட்டை அடுப்பும், மல்லாரி கோஷ்டியின் ரெட்டை நாயனமும், சிவப்பு கலர் ஜானவாசக் காரும் தஞ்சாவூர் சமையல்காரர்களுமா தடபுடலா அஞ்சு நாளுக்கு நடந்த கல்யாணம் அது.

ஆனா பாகிக்கு அந்த வாழ்க்கை ரொம்பநாள் நிலைக்கலே. ஊருக்குப் போனதும் கொஞ்சம் கொஞ்சமா மாப்பிள்ளையின் சுயரூபம் தெரிந்த்து. தினமும் க்ளப்புக்குப் போய் சீட்டாடிட்டு வரதும், குடிச்சிட்டு வரதும், பாகியை அடிச்சு உதைக்கிறதும், சித்திரவதை பண்ணறதுமா அவனோட அட்டகாசம் நாளுக்குநாள் அதிகமாயிண்டே போச்சு. அவருக்கு இன்னொரு பெண்ணோடவும் தொடர்பு இருக்கிறதா வதந்தி. ஆனா பாகி எதையுமே தன் பிறந்தாத்துக்குச் சொல்லலை. கடைசியில தீபாவளிக்குக் கூப்பிட மாமா வடதேசம் போன அன்னிக்கு, ஆத்துக்காரால அடிச்சி வெளியே தள்ளப்பட்டு, ராத்திரி பூரா அழுது முகமெல்லாம் வீங்கி வாசப்படியில படுத்துண்டிருந்த தன் பெண்ணைப் பார்த்து ஆடிப் போனார். அன்னிக்கே அவளை ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டார்.

வாழாவெட்டியா இருக்கறது அந்தக் காலகட்டத்துல ரொம்பவே கஷ்டம். காமிரா ரூமும் கண்ணீருமா இருந்த பாகியின் வாழ்க்கையிலும் கொஞ்சம் வெளிச்சம் தெரிவதுபோல இருந்தது. ரெண்டு மூணு மாசத்துக்குப் பிறகு மாப்பிள்ளை திரும்பிவந்து, தப்புக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். கெட்ட சகவாசத்துனால இந்தப் புத்தி மாறாட்டம் ஏற்பட்டதுன்னும், தான் வேற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டதாவும் சொல்லி பாகியைத் தன்னோடு அனுப்புமாறு கெஞ்சினார். தெருவிலிருந்த மாமாக்கள் எல்லாம் பஞ்சாயத்து பண்ணி, நீரடிச்சு நீர் விலகாதுன்னெல்லாம் வசனம் பேசி, மாமிகளெல்லாம், "பாகி உனக்கு நல்ல காலம் பொறந்துடுத்துடி" அப்படின்னு கலாட்டா பண்ணி ஒரு வழியா பாகியின் மறு புக்ககப் பிரவேசம் நடந்தது. அப்புறம் ஒரு வருஷம் எந்தத் தகவலும் இல்லை. திடீர்னு ஒருநாள் மாப்பிள்ளை பாகியுடன் வந்து தான் துபாய்க்கு வேலை கிடைத்துப் போவதாகவும் அங்கே போய் ஸெட்டில் ஆனதும் வீடு வாசலெல்லாம் பார்த்துட்டு வந்து மனைவியைக் கூட்டிப் போவதாகவும் சொல்லி விட்டுச் சென்றார். அதுக்கப்புறம் ஆள் அட்ரஸே இல்லை. இடையிலே அப்பாவும் மண்டையைப் போட பாகி குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் மறுபடி எடுத்துண்டா. சொத்தெல்லாம் வித்துட்டுத் தங்கைகளோட சென்னையில செட்டில் ஆனா. தங்கைகளைப் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணமெல்லாம் பண்ணிவெச்சா. பிழைப்புக்கு வழியோட ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கிறதால சர்மா மாமாவோட சேர்ந்து இந்த வேலையைப் பாக்கறா" ஒரு பெருமூச்சுடன் அப்பா கதையை முடிச்சார்.

எங்கள் இருவருக்கும் இடையில் கொஞ்ச நேரத்துக்கு ஒரு மௌனம். தயங்கியவாறு, "அப்பா.. மாமியோட பேசும்போது உங்கள் கண்ணில் ஒரு சங்கடம் தெரிஞ்சது. அதற்கு எதாவது விசேஷ அர்த்தம் இருக்காப்பா?" என்றேன். "சீச்சீ.... அதெல்லாம் ஒண்ணும் இல்லை ரகு" அப்பா பொய் சொல்வது நன்றாகத் தெரிந்தது. கொஞ்சநேரத்துக்குப் பின் அப்பா தன் கையை நகர்த்தி என் கையைப் பிடித்தவாறு மெல்லப் பேசினார்.

"எனக்குப் பொய் பேச சரியாத் தெரியலே ரகு. அதுவும் உங்கிட்ட மறைக்க முடியலே. எனக்கும் யாரிடமாவது சொன்னா ஆறுதலா இருக்கும்போலத் தோணுது. நான் இப்ப சொல்லறதைப் பரம ரகசியமா வெச்சிப்பையா ரகு?" என்று கேட்டார். நான் அப்பாவை நோக்கித் திரும்பிப் படுத்து அவரது அடுத்த கையை ஆதரவாகத் தொட்டவாறு, "சொல்லுங்கப்பா" என்றேன்.

"ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்ன, நான் மாற்றலாகி மஸ்கட் வந்து கொஞ்ச மாசம் தனியா இருந்தேனோல்லயோ அப்ப ஒருநாள் என் கலீக் ஒருவருடைய அம்மாவைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்க ஜெனரல் வார்டில் எலும்பும் தோலுமா இருந்த ஒரு உருவத்தைப் பார்த்து ஆடிப் போய்ட்டேன். அது பாகியோட புருஷன். கவனிக்க யாரும் இல்லாததால், ஆஸ்பத்திரியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. குடலெல்லாம் வெந்துபோய் மரணத் தறுவாயில் இருந்தார். அதுக்கு அடுத்த வாரம் ஒரு கல்யாணத்துக்காகச் சென்னை வந்தபோது பாகியைப் பார்த்தேன். அவகிட்ட ஏனோ எனக்குச் சொல்ல வாய் வரலே. இந்த வேலை அவளுடைய நல்ல குணத்துக்காகக் கிடைத்த ஒன்றுன்னாலும் சுமங்கலித்தன்மை அதுக்கு ஒரு வேல்யூ அடிஷனா இருக்குது அப்படின்றதும் உண்மைதானே ரகு! அவ புருஷன் இருந்த வரைக்கும் அவளுக்கு எந்த சொத்து சுகமும் தர முடியல்லே. வாழாத ஒரு வாழ்க்கைக்காக அவனது மரணத்தால அவளது சௌமங்கல்யத்தைப் பறிக்கறது ரொம்ப அயோக்கியத்தனமா எனக்குத் தோணித்து. திரும்பிப் போன ரெண்டு நாளில அவன் செத்துப் போனான். நானே அவனது பிணத்தை வாங்கி, நண்பர்கள் உதவியுடன் தகனம் செய்துட்டேன். எனது செயலுக்கு ஒரு பரிகாரமா அது இருக்கட்டுமே. நான் செய்தது தப்பா ரகு?" அப்பாவின் கண்களில் கண்ணீர்.

நான் மெதுவாக அப்பாவின் கண்ணீரைத் துடைத்தேன். "இல்லவே இல்லைப்பா. நீங்க செய்தது தான் ரொம்ப சரி. ஐயாம் ரியலி ப்ரௌட் ஆஃப் யூப்பா!" ஆறுதலாக அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மனதின் கனம் நீங்கியதால் அப்பா ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.

ரவிசங்கர்,
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி
More

கைப்பிடிக் கடலை
அர்த்தத்தின் தேடல்
கனிந்து வரும் பசுபோல்!
Share: 
© Copyright 2020 Tamilonline