Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
யாருக்கு அம்மா புரியும்?
பிளாஸ்டிக் பணம்
புது சோஃபா
- எல்லே சுவாமிநாதன்|செப்டம்பர் 2013|
Share:
கையில் காப்பிக் கோப்பையோடு நிம்மதியாக விஜய் டிவியில் நீயா நானா பார்க்க சோஃபாவில் அமர்ந்தேன்.

"நிதானமா உட்கார்ந்து ஷோ பாக்க இன்னிக்கு நேரமில்ல. கிளம்புங்க கடைக்கு போகணும்," என்று அவசரப்படுத்தினாள் மனைவி.

"என்ன ஷாப்பிங். காலை ஆறுமணிதான் ஆறது!"

"என்னொட சினேகிதி ஞாயித்திகிழமை வராள். அதுக்குள்ள இந்த சோஃபாவை மாத்திட்டு புதிசா வாங்கணும். இன்னிக்கி சோஃபா வேர்ஹவுஸ்ல பெரிய சேல். ஆயிரம் டாலருக்கு மேல வாங்கினா பத்து சதவீதம் தள்ளுபடியாம். கடை ஏழு மணிக்கு திறப்பான். முதல் ஆளா போயிட்டா நல்ல சோஃபாவா வாங்கிடலாம். எழுந்துபோய் டிரஸ் பண்ணிக்கங்க."

"இந்த சோஃபா நன்னாதான இருக்கு. இதை ஏன் மாத்தணும். ஒரு கிழிசல், கரை இல்ல. உட்கார வசதியாத்தானே இருக்கு. வாங்கி அஞ்சு வருசம்கூட ஆகல."

"மாலா வருசாவருசம் வீட்டு ஃபர்னிச்சரை மாத்திடுவா. இந்த பழய சோஃபாவைப் பாத்தா கேலி பண்ணுவா. எனக்கு மானம் போகும். பேசாம என்கூட வாங்க."

அரைமணி பேசியும் அவளை மாற்ற முடியவில்லை. உடை மாற்றிக்கொண்டு கிளம்பினேன்.

சோஃபா வேர்ஹவுசில் பெரிய கூட்டம். உள்ளே பல தினுசுகளில் சோஃபாக்கள் தாறுமாறாகக் குவிக்கப்பட்டிருந்தன. மலிவான விலையில் இருந்த சோஃபாக்களில் பெண்கள் தங்கள் கைப்பை, கோட்டு வைத்து ரிசர்வ் செய்து அமர்ந்திருந்தார்கள். அருகில் போனதுமே இந்த சோஃபாவை நாங்க வாங்கிட்டோம் என்று சொல்லி விரட்டியடித்தார்கள்.

தேடிப்பிடித்து ஒரு சோஃபாவைக் காட்டினேன். "அது பிளாஸ்டிக். கீறல் விழும். வேண்டாம்" என்று விலக்கினாள்.

இன்னொரு சோஃபாவைக் காட்டினேன். "அது லெதர். குளிர் நாளுல ஜில்லுனு இருக்கும். வேண்டாம்" என்றாள்.

"இது வெள்ளைக் காட்டன் துணி. கறை படும். அழுக்காகும்" என்று இன்னொரு சோஃபாவைப் புறக்கணித்ததும் சோர்ந்துபோய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.

கடையை ஒரு சுற்று சுற்றிவிட்டு என்னிடம் வந்தாள். "என்ன இப்படி பொறுப்பில்லாம ஓய்வு எடுத்துக்கிறீங்க. நம்ம வீட்டுக்குதானே வாங்கறோம். எனக்கு கொஞ்சம் உதவினா என்ன?"

அங்கிருந்து சோஃபா அன்லிமிட்டட் என்ற கடைக்குப் போனோம். மூன்றுமாடிக் கட்டடம். எல்லா தளங்களிலும் சேர், சோஃபா எல்லாம் இருந்தன. கடையில் கூட்டமே இல்லை. ஒரு பருத்த பெண்மணி வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று கனிவாக விசாரித்தாள்.

"சோஃபாதானே..என்கூட வாங்க. உங்க வீட்டு ஃபர்னிச்சர் என்ன தீம்? ஏர்லி அமெரிக்கன், மாடர்ன், யூரோப்பியன், ஓரியன்டல்?"

சொல்லப்போனால் எங்க வீட்டில் வகைக்கு ஒன்றாக எல்லா வகையிலும் இருந்தன. என் மனைவி "மாடர்ன்" என்று துணிந்து சொன்னாள்.

"உங்களுக்கு என்ன பட்ஜட். நாலாயிரம் அஞ்சாயிரம் பரவாயில்லயா?"

நான் பதறிப்போய் "நானூறு, ஐநூறு ரேஞ்சில சொல்லுங்க" என்றேன்.

"ஐநூறுக்கு என்ன கிடைக்கும். மர பெஞ்சுதான் கிடைக்கும். மாலா என்ன நினைப்பா நம்மளப் பத்தி" என்று கடுகடுப்புடன் பதில் வந்தது.

பட்டேல் பர்னிச்சர்ல ஐநூறு டாலருக்கு சோஃபா, சேர், இரண்டு காஃபி டேபிள், லைட் செட், ஸ்டூல், கம்பளம், காலண்டர், கைமுறுக்கு எல்லாம் மொத்தமா ஒரு பேக்கேஜ் டீல் கொடுப்பதை நினைவுபடுத்தினேன்.

"பட்டேல் பிரதர்ஸ்ல பர்னிச்சர் வாங்கவே மாட்டேன். அதெல்லாம் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ஹாஸ்டல் ரூமுக்கு வாங்கறது. ஆயிரம் டாலருக்கு வாங்கறதே நம்ம ஸ்டேடஸுக்கு கேவலம். உங்களுக்கு என்ன தெரியும் பர்னிச்சர் பத்தி" என்று பொரிந்து தள்ளினாள்.

"மேடம் நீங்க இவளுக்கு சொல்லுங்க. எதுக்குக் காசை சோஃபால கொட்டணும். வீட்டில இருக்குற சோஃபாவே நன்னா இருக்கு" என்றேன் கடைக்காரப் பெண்மணியிடம்.

அவள் இதைப் புரிந்து கொண்டதுபோலத் தலையாட்டினாள். எனக்கு சாதகமாக ஏதோ சொல்லப் போகிறாள் என்றே எண்ணினேன்.

"எஸ் எஸ்" என்றவள் என் மனைவியைப் பார்த்து, "ஐ நோ த பிராப்ளம். லெட் மீ ஹாண்டில் திஸ்" என்றவள், என்னிடம் "சார் வாங்க, இந்த லேஸிபாய் சேர்ல உட்காருங்க" என்று குழைவாகச் சொன்னாள். நான் அமர்ந்தவுடன் ஏதோ பொத்தானை அமுக்க, நாற்காலி பின்புறமாய்ச் சாய்ந்து என்னைப் பள்ளத்தில் படுக்கையாகத் தள்ளியது. அது வசதியாகவே இருந்தது.

"ஹஸ்பெண்டையெல்லாம் ஷாப்பிங் போறச்ச கூட அழைச்சிட்டுப் போகக்கூடாது. நான் என் ஹஸ்பெண்டை இதுபோல வீட்லயே சேர்ல உட்காரவெச்சிட்டு ஒரு பெரிய பை உருளைகிழங்கு சிப்ஸ், டிவி ரிமோட் கண்ட்ரோலைக் கையில் கொடுத்திட்டு, தனியா ஷாப்பிங் போயிடுவேன். நான் காட்டற மாடல் சோஃபாவை நீங்க வாங்கினா இந்த லேஸிபாய் சேரையும் பாதி விலையில தரமுடியும் என்று சொல்லி, என்னிடம் கடையில் இருக்கும் சோஃபா பட்டியல் ஒன்றைக் கொடுத்து, "வி வில் ஸீ யு லேட்டர்" என்று என் மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். அந்தப் பட்டியல் விலைகளைப் பார்த்து மயங்கியவாறே கண்ணயர்ந்தேன்.

என் செல்ஃபோன் மணி அடிக்க விழித்தேன். என் மனைவிதான் தன் செல்போனில் என்னை அழைத்தாள். "ஒரு நல்ல சோஃபா பார்த்து வெச்சிருக்கேன். இதே தளத்துல கோடியில இருக்கோம், எழுந்து வாங்க என்றாள். என்னால் எழ முடியவில்லை. "எப்படி இந்த சேரை கீழ தள்ளி எறங்கணும்னு தெரியல. அவங்ககிட்ட கேட்டு சொல்லு" என்றேன்.
அந்தப் பெண்மணி அங்கிருந்தே ஒரு ரிமோட்டை அமுக்க என் நாற்காலி மடிந்து என் முதுகைத் தூக்கி எழுப்பிவிட்டது. சோஃபாக் கடலிடையே நடந்து அவர்களைக் கண்டு போய்ச் சேர்ந்து கொண்டேன்.

"இதுதான் நான் வாங்கப்போற சோஃபா. மைக்ரோ ஃபைபர், எஜிப்ஷியன் காட்டனாம்" என்று காட்டினாள். மங்கலான பழுப்புக் கலரில் கிழட்டு குண்டுக் குதிரைபோல இருந்தது.

"என்ன விலையாம்?"

"நாலாயிரம் டாலர். ஐம்பது பெர்சன்ட் தள்ளுபடியாம். நமக்கு ரெண்டாயிரத்துக்கு கிடைக்கிறது. நீங்க இருந்த சேர் நானூறுதான்."

"ரெண்டாயிரம் கூட ஜாஸ்தி. சேர் பட்டேல் பிரதர்ஸில இருநூறுக்கு கிடைக்கும். சேர் வேண்டாம்"

"சேர் வேணாமா ? சரி, வி வில் டேக் த சோஃபா" என்றாள்.

"கிரடிட் கார்டுல கடன் இருக்கு. ஆயிரம்தான் கடன் வாங்கலாம். பாங்கில இருக்கிற பணம் வருமான வரி கட்டவே சரியா இருக்கும். ஒருநாள் மத்தியானம் வந்துட்டுப் போற மாலாவுக்குன்னு வீண்செலவு தேவையா நமக்கு? யோசி" என்றேன்.

"உங்களுக்கு சோஃபா பிடிச்சிருக்கான்னு சொன்னா போதும். விலைய, வாங்கற விதத்தை நான் கவனிச்சுக்கிறேன். உங்க கிரடிட் கார்டைக் குடுங்க" என்றாள் அந்தப் பெண்மணி.

"எஸ் வி லைக் இட்" என்று சொல்லி, என் மனைவி தன் கிரடிட் கார்டைக் கொடுத்தாள்.

கடைக்காரப் பெண் எங்களை தன் அறைக்கு அழைத்துப் போனாள்.

கம்ப்யூட்டரில் எங்கள் வருமானம், தற்போதுள்ள கடன், வாங்கி அடைத்த கடன்கள், சேமிப்பு, நேரத்துக்கு கடன் தவணைகளைக் கட்டும் திறம், பொதுவான பொருளாதாரம் எல்லாம் அலசி ஆய்ந்து, "குட் நியூஸ். உங்களுக்கு எங்கள் கடையே ஐயாயிரம் டாலர் வரை பர்னிச்சர் வாங்க கிரடிட் கார்டு தரும். அப்ளிகேஷன் ஃபீஸ் நூறு டாலர். பர்னிச்சர் டெலிவரி சார்ஜ் நூறு டாலர். ஓகே?" என்றாள்.

"எப்ப டெலிவரி செய்வீங்க?"

"அடுத்த திங்கட்கிழமை"

"நோ..நோ... சனிக்கிழமைக்குள்ள வேணும் எங்களுக்கு, ஞாயித்திக்கிழமை கெஸ்ட் வராங்க."

அவள் மீண்டும் போனில் பேசிவிட்டு, "எங்க கம்பெனி ஆளுங்க வீக் எண்டுல டெலிவரி வேல செய்யறதில்ல. கூட ஐம்பது டாலர் கொடுத்தா, உங்களுக்குன்னு ஸ்பெஷலா சனிக்கிழமை டெலிவரி பண்றேன்னு சொல்றாங்க."

"சரி, கூடுதலா தரோம்" என்றாள் என் மனைவி.

சனிக்கிழமை காலையிலேயே என்னை எழுப்பிவிட்டாள். "இன்னிக்கி சோஃபா வரது. எட்டுலேருந்து பன்னண்டுக்குள்ள வருமாம். எங்கயும் வெளில போகவேண்டாம்" என்று உத்தரவிட்டாள். பத்துமணி வாக்கில் ஒரு டிரக் வந்தது. இரண்டு பேர் உள்ளெ வந்து பார்வையிட்டார்கள். சோஃபாவை எங்க போடணும் என்று கேட்டார்கள். நான் பழைய பச்சை சோஃபா இருந்த இடத்தைக் காட்டினேன்.

"சாரி, போடமுடியாது. இதை நாங்க நகர்த்த மாட்டோம் " என்றார்கள்.

கெஞ்சிக் கூத்தாடி ஐம்பது டாலர் கூடுதலாய் தர ஒப்புக்கொண்டபின், பழைய சோஃபாவை அலட்சியமாய்த் தூக்கி மாடி அறையில் போட்டு, புது சோஃபாவை வரவேற்பறையில் போட்டார்கள்.

மறுநாள் மாலாவும் அவள் கணவன் முகுந்தும் தங்கள் நாய் ஜிம்மியோடு வந்தார்கள். ஜிம்மி மாலாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சமர்த்தாய் வாசல் கதவருகே அமர்ந்தது. என் மனைவி அவர்களுக்கு வீட்டை சுத்திக் காண்பித்துவிட்டு, வரவேற்பறையில் புது சோஃபாவில் அமர வைத்தாள். அவர்கள் சோஃபாவை கவனித்தாகவே தெரியவில்லை.

அவர்கள் அதை சிலாகித்து ஏதாவது சொல்வார்கள் என்ற எண்ணத்தில், என் மனைவி "மைக்ரோஃபபர், எஜிப்ஷியன் காட்டனை எப்படிக் கிளீன் பண்ணணும் தெரியுமா மாலா?" என்றாள்.

மாலா "என்னது எஜிப்ஷியன் காட்டனா" என்று கேட்டு, "ஓ இந்த சோஃபாவா" என்று சோஃபாவைப் பார்த்து, "ஏய் முகுந்த்... லுக் ஹியர். எஜிப்ஷியன் காட்டனாம். கேனத்தனமா இருக்கு" என்று சொல்லிச் சிரித்தாள். "டோண்ட் பி மீன் மாலா" என்றானே தவிர, முகுந்துக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"டூ யு லைக் திஸ்? வாட் டூ யு திங்க் ஜிம்மி?" என்றாள் மாலா தன் நாயிடம். ஜிம்மி ஓடிவந்து சோஃபாவை முகர்ந்துவிட்டு தன் பின்னங்காலைத் தூக்கியது. நான் பதறிப்போய், "நாயை விரட்டுங்க, சோஃபாவில் அசிங்கம் பண்ணிடப் போறது" என்றேன்.

"நோ,நோ, பண்ணாது. ஜிம்மிக்கு டாய்லெட் டிரெய்னிங் கொடுத்திருக்கோம். சோஃபாவைப் பத்தி தன்னோட ஒப்பினியனை சிம்பாலிக்கா காட்டறது, அவ்வளவுதான்" என்றாள் மாலா.

"சோஃபா புதிசு மாலா, நாலாயிரம் டாலர். இப்பத்தான் வாங்கினோம்" என்றாள் என் மனைவி. ஐம்பது சதவீதம் கழிவை வசதியாய் மறந்துவிட்டாள்.

"இல்லம்மா..இதுபோல சோஃபா எங்க வீட்லயும் வாங்கியிருக்கோம். மூணே மாசத்துல திரிதிரியா பிரிஞ்சு அசிங்கமாயிடுச்சு. தூக்கி எறிஞ்சிட்டோம். இதுக்கு நாலாயிரம் ரொம்ப அதிகம். ஏமாந்து போயிட்டீங்க. உடனே திருப்பிக் கொடுத்திடுங்க" .

"புதிசா வேணும்னுதான் வாங்கினோம்" என்றாள் என் மனைவி.

"இது பார்க்கப் பழசா இருக்கு. இந்த இடத்துக்கு பொருத்தமாக்கூட இல்ல. நீ என்ன பண்றேன்னா, மாடியில் ரூம்ல பச்சை சோஃபா இருக்கே அது நல்லாவே இருக்கு. அதைக் கீழ கொண்டு வந்து வரவேற்பறையில் போடு. இதைத் தூக்கி மேல்ரூம்ல கண் மறைவா போட்டுரு" என்று மாலா அறிவுரை கொடுத்ததும், என் மனைவியின் முகம் கருத்தது.

அவர்கள் சாப்பிடக் கூடத் தங்கவில்லை. இன்னொரு உறவினர் வீட்ல பார்ட்டி இருக்கு, போகணும் என்று போய்விட்டார்கள்.

அவர்கள் போனவுடன் என் மனைவி சோஃபாக் கடையை டெலிபோனில் அழைத்து, சோஃபாவைத் திருப்ப எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள். திருப்ப எடுத்துக் கொண்டால் பத்து சதவீதம் விலையில் பிடித்துக் கொள்ளவும் சம்மதித்தாள். மறுநாள் திங்களன்று வந்த கடை ஆட்கள் சோஃபாவை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மேலே இருந்த பழைய சோஃபாவைக் கீழே எடுத்துப் போட மாட்டோம், அதை எங்கள் இன்சூரன்ஸ் அனுமதிக்காது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்கள்.

"அவன் போடாட்டி பரவாயில்லை. நாமளே போட்டுடலாம்..அவங்க எப்படி அலட்சியமாத் தூக்கினாங்க பாருங்க" என்று என் மனைவி சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை இவன்கண் விடுதல் என்று ஒரு முறை இருக்கிறதல்லவா? ஆனால் மனைவி சொல்லே மந்திரம் என்று செயல்படும்படி ஆனது.

சோஃபாவை நாங்கள் தூக்குவது ஒன்றும் எளிதாக இல்லை. கோணல் மாணாலாய் இழுத்ததில், சுவரில் ஒரு பள்ளம் விழுந்ததோடு, அறையில் இருந்த தரைக் கம்பளம் கிழிந்து, மாடி ஹாலின் மரத்தரையில் கோடு கோடாய் கீறலும் விழுந்தது. ஒரு வழியாய் மாடிப்படிவரை வந்தவுடன் எதிர்பாராமல் சோஃபா சரிந்து, சில படிகளை உடைத்து பாதி கீழ்ப்படியிலும் மீதி வாசல்பக்கமுமாய்ச் சரிந்து தொங்கியது. அதற்குமேல் அதை எங்களால் நகர்த்த முடியவில்லை. எனக்கு இடுப்பு பிடித்துக் கொள்ள என் மனைவிக்குக் கால் சுளுக்கிக் கொண்டது.

சரிந்த சோஃபாவில் அமர்ந்து "இன்னிக்கு நேரமாயிடுத்து. நாளைக்கு டெலிபோன் பண்ணி ரெண்டு ஆளை வரவழைத்து மெதுவா நகர்த்திக்கலாம். இப்ப பசிக்கிறது சாப்பிடலாம் வா" என்றதை என் மனைவி ஆமோதித்தாள்.

பிட்ஸா ஆர்டர் பண்ணச் சொன்னாள்.

என்ன சிரமம் என்றால் மாடிக்குப் போக அனுமார் லங்கைக்குப் போக கடல் தாண்டினது போல சோஃபாவைத் தாண்டிக் குதிக்க வேண்டியிருக்கிறது.

நல்ல வேளையாய் வாசல் கதவை பாதி திறக்க முடிகிறது. பிட்ஸாக்காரன் வரும்போது யார் போய் வாங்குவது என்று முடிவு செய்ய, சீட்டுக் குலுக்கிப் போடத் தொடங்கினோம்.

எல்லே சுவாமிநாதன்
More

யாருக்கு அம்மா புரியும்?
பிளாஸ்டிக் பணம்
Share: 




© Copyright 2020 Tamilonline