Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பூரணி என் மருமகள்
தழும்புகள்
அண்ணாவின் காதல் கடிதம்
- லக்ஷ்மி சங்கர்|ஆகஸ்டு 2013|
Share:
"மாலா, இந்த 17ந்தேதி வேணுவுக்கு அறுபதாவது பொறந்த நாள். ஆனா அறுவதாம் கல்யாணம்னு ஒண்ணும் பண்ணிக்கப்போறதில்லியாம். சுகுணா சொன்னா. நாம ஏதாவது சர்ப்ரைஸா பண்ணலாமே. என்ன சொல்ற" என்றாள் பானு.

பானு "நாம" என்று குறிப்பிட்டது 30 வருடங்களுக்கு மேலாக நெருக்கமாகப் பழகிவரும் எங்கள் நண்பர்கள் வட்டத்தைப்பற்றி. 1970களிலேயே அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து இங்கேயே தங்கிவிட்டவர்கள் நாங்கள். எங்கள் பிள்ளைகள் பெண்களெல்லாம் படித்து முடித்து வீட்டைவிட்டுப் போய்விட்டார்கள்.

மளமளவென்று மெனு போட்டு யார் யார் என்னென்ன கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்து சர்ப்ரைஸ் பார்ட்டி என் வீட்டில் என்று முடிவானது. திட்டமிட்டபடி பார்ட்டி நடந்து முடிந்து, பாத்திரங்களைத் தேய்த்துப்போட்டு, உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

சென்ற மாதம் ராமின் தாயார் இறந்து விட்டார். சென்னைக்குப் போய்விட்டு வந்திருந்த அவர் சென்னையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ராமின் மனைவி கலா "நாந்தான் இந்தப் பாழாப்போன வேலைனால ராம்கூட போகமுடியாமப் போய்டுத்து" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். கலா ஒரு கைனகாலஜிஸ்ட். ராம் உடனே "இதோ பார் கலா, நானோ ரிடயராயாச்சு. சம்பாதிச்சது போறும். கையுங்காலும் நல்லாயிருக்கறச்சயே நாலு எடம் பார்த்துட்டு வரலாம்னா, நீதான் வரமாட்டேங்கறே" என்று அலுத்துக்கொண்டார்.

கலா உடனே "இன்னும் அஞ்சே வருஷம்; நானும் ரிடயராயிடுவேன். நாம ஆசைதீர ஊர் சுத்தலாம்" என்றாள்.

அதற்குள் குமார் "என்ன இருந்தாலும், நம்ம க்ரூப்லேயே லக்கி கப்பிள் மாலாவும், பரேஷுந்தான்; மாலா ஸ்கூல்ல வேல பாக்கறதுனாலே இந்த பேபி சிட்டர், சம்மர்ல குழந்தைங்கள என்ன பண்றது, வெகேஷன் டைம எப்படி கோஆர்டினேட் பண்றது, இந்தக் கஷ்டம் எதுவும் இல்ல. இப்பவும் ஒரு அவசரம்னா சட்டுனு கிளம்பிடலாம்" என்றார்.

நானும் பரேஷும் புன்னகைத்துக்கொண்டோம். குமார் சொன்னதில் உண்மையிருந்தது. அந்தக்காலத்தில் குழந்தைகள் பள்ளியிலிருந்து வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னோ பின்னோ நான் வீடு திரும்பிவிடுவேன். சம்மரில் ஊரிலிருந்து பெற்றோர்களைக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவென்று வரவழத்துப் பின்னர் வீட்டில் எரிமலைபோல் சண்டை வெடித்துத் தகராறுகள் ஏற்பட்டதில்லை. 2 வருடங்களுக்கு ஒருமுறை கோடை விடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம்.

பரேஷ் உடனே, "குமார், மாலாவோட ஹைஸ்கூல் கவுன்சலர் வேலைல அவ ஒண்ணும் கனத்த செக் வீட்டுக்குக் கொண்டுவரதில்ல. எல்லாத்துக்கும் நல்லது கெட்டது இருக்கு" என்றார். எங்கள் வட்டத்தில் எல்லாப் பெண்மணிகளும் எஞ்சினியர், டாக்டர் இப்படி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இதற்குள் மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது. "முன்ன மாதிரி இல்ல. அரட்டையடிச்சுண்டு ராவெல்லாம் கண் முழிக்க முடியாது. நைட் டிரைவிங் வேற கஷ்டமா இருக்கு. வயசாச்சு. மாத்திரையெல்லாம் வேற சாப்டணும்" என்று சொல்லிவிட்டு ஒவ்வொருவராகக் கிளம்பிவிட்டார்கள்.

பரேஷ் "ஆச்சு. போய்ப் படுத்துக்கலாம்" என்றார். நான் "நீங்க போங்க; எனக்கு என்னமோ தூக்கமே வரல. கொஞ்சம் டிவி பார்த்துட்டு வரேன்" என்றேன். பரேஷ் படுக்கப் போய்விட்டார்.
லிவிங் ரூமில் டிவியைப் போட்டேன்; அதில் கவனம் செல்லவில்லை.

மனதில் ஏதேதோ ஓடிற்று.

குமார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, நான் ஹைஸ்கூல் கவுன்சலராக இருப்பதனால் எனக்கும் பரேஷுக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறைவு என்று. என் உள்மன வேதனை யாருக்குத் தெரியும்? ஏன் கவுன்சலராக வேண்டுமென்று வெறியுடன் இருந்தேன்? சில ரகசியங்கள் கடைசிவரை வாழ்க்கையில் இரகசியங்களாகவே இருப்பதுதான் எல்லோருக்கும் நிம்மதியென்று தோன்றியது. மனம் வெடித்துவிடும்போல் இருந்தது.

அப்பொழுது எனக்கு ஆறு வயதிருக்கும். பக்கத்து வீட்டுப் பூமாவும் நானும் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். அண்ணாவுக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். அண்ணா மூக்கணாங் கயிற்றை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டகைப் பக்கம் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தேன். சாதரணமாகக் கோனார் பால் கறக்க வருவதற்கு முன் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கட்ட வேண்டியது அண்ணாவின் வேலை. உன்னைப் பிடித்துக் கட்டப்போகிறேன் என்று சில சமயம் என்னைப் பயமுறுத்துவான். நல்ல வேளை, அண்ணா என்னைக் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு ஆசைதீர விளையாடிவிட்டு வீட்டுக்குள் போனேன்.

அம்மா, "என்ன இந்தக் கோனாரைக் காணும்? சரி சரி. கை, காலெல்லாம் அலம்பிண்டு சீப்பை எடுத்துண்டு வா. பின்னிவிடறேன்" என்றாள்.

அம்மா எனக்குத் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தபோது கேட் திறக்கும் சத்தம் கேட்டது. அம்மா "கோனாரே, என்ன இவ்ளோ லேட்? மாடு பாவம் கத்தறது" என்றாள். "அதையேன் கேக்கிறீங்க? மருமவன் அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கறதா சேதி வந்துச்சு. போய்ட்டு வாரேன்" என்றார்.

பின்பக்கம் போன கோனார் தடதடவென்று ஒடிவந்தவர், "ஐயரூட்டம்மா, நம்ம தம்பி மாட்டுக் கொட்டாயில தூக்குல தொங்குது" என்றார்.

அதன்பிறகு நடந்ததை எல்லாம் ஒரு நாவல் அளவுக்குச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த அண்ணா தன் கிளாஸ்மேட் (கரெஸ்பாண்டென்ட் மகள்) ஜானகிக்கு ஒரு காதல் கடிதம் எழுதிப் போஸ்ட் செய்திருக்கிறான். போஸ்ட்மேன் போட்டுவிட்டுப் போயிருந்த கடிதத்தை எடுத்துப் படித்த ஜானகியின் அம்மா புருஷனிடம் புகார் செய்ய, தலைமை ஆசிரியர் அறைக்கு அழைக்கப்பட்ட அண்ணாவுக்குச் செமையான உதையுடன் பள்ளியைவிட்டு நீங்கிப்போகும்படி உத்தரவும் கொடுக்கப்பட்டது. பயந்துபோன அண்ணா, பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவது போல் வந்து கன்றுக்குட்டியைக் கட்டும் கயிற்றை எடுத்துத் தூக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்.
அம்மாவும் அப்பாவும் நடைப்பிணம் ஆனார்கள். பாட்டிதான் எனக்காக அவர்கள் வாழ வேண்டுமென்று உபதேசம் செய்தாள்.

"கோனார் வந்து சத்தம் போட்டாத்தானே அண்ணா கன்னுக்குட்டியைப் பிடித்துக் கட்டுவான்? கோனார் வரதுக்கு முன்னாடியே அண்ணா கயத்த எடுத்துண்டு போனா நீ ஏன் எங்கிட்ட சொல்லல?" அம்மா ஒருமுறை என்னை இப்படித் திட்டினாள்.

"அடிப்பாவி! குழந்தைக்கு என்னடி தெரியும்? இவளயும் கொன்னுடு உன் வார்த்தையால. வாய மூடுடி" என்று பாட்டி சத்தம் போட்டாள்.

அப்பாவின் அலுவலகக் கிளை ஒன்று கொல்கத்தாவில் இருந்தது. மாற்றல் வாங்கிக்கொண்டு கல்கத்தா வந்த என் பெற்றோர் தமிழகத்துடன் தங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். ஊரிலிருந்தும் யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை. நாங்களும் போகவில்லை.

கொல்கத்தா வந்தபிறகு அண்ணாவைப்பற்றி அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசுவதில்லை. அவனுடைய படம்கூட வீட்டில் எங்கும் மாட்டியிருக்காது. குழந்தைகளுக்கே இருக்கும் உள் சூட்சும உணர்வினால் அதே கோட்பாட்டையே நானும் பின்பற்றினேன்.

பள்ளியிலிருந்து நீக்கப்பட்டபோது, நாம் புரிந்துகொள்வோம் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் மேலே என்ன செய்யலாமென்று கேட்டிருப்பானே பிள்ளை. இப்படிப் பண்ணியிருக்க மாட்டானே. அதிகக் கெடுபிடியான பேரண்டிங் செய்துவிட்டோம் என்று சதா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என் பெற்றோர். நான் சைகாலஜி படிக்கவேண்டுமென்றேன். என் அம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை. என் விஷயத்தில் அவர்கள் எதையும் என்னிஷ்டத்திற்கு விட்டுவிட்டார்கள். அக்கறையற்ற அம்மா அப்பாவோ என்றுகூடச் சில சமயம் எனக்குத் தோன்றும்.

பக்கத்து ஃப்ளாட் பரேஷ் தாஸ்குப்தா என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொன்ன போதும் ஒன்றும் சொல்லவில்லை. என் கல்யாணத்திற்காகவே காத்திருந்த மாதிரி ஓரிரு வருடங்களுக்குள் இருவரும் போய்ச் சேர்ந்தார்கள்.

விடலைப் பருவத்தில் காதல் தோன்றுவது தப்பா? அண்ணா என்ன செய்துவிட்டான்? "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கடிதம் எழுதிப்போட்டான். ஜானகியை என்ன கற்பழித்தானா? அண்ணா ரவுடியும் இல்லை. வகுப்பில் 10 ரேங்குகளுக்குள் வாங்கும் நல்ல குடும்பத்துப் பையன். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என்றும் கலந்துகொள்வான். அதிகமாகப் புத்தகம் படித்துக் கற்பனை வளம் ஜாஸ்தி என்று அம்மா சொல்வாள். வயதுக்கோளாறு அவனைக் காதல் கடிதம் எழுத வைத்திருக்கிறது.

கரெஸ்பாண்டென்ட் சொன்னதைக் கேட்டவுடன் அண்ணாவைக் கூப்பிட்டு ஹெட்மாஸ்டர் படிப்பில் கவனம் செலுத்து என்று கண்டித்து அனுப்பியிருக்கலாம். பள்ளியைவிட்டு நீக்க வேண்டுமா? அண்ணா ஏன் அப்பா அம்மாவிடம் நடந்ததைச் சொல்லவில்லை? தப்பு செய்தாலும் காலைக் கட்டிக்கொண்டு சரணடையும் நெருக்கமில்லயா? எங்கள் குடும்பமே சிதைந்துவிட்டது. டிஸ்ஃபங்ஷனல் ஃபேமிலி என்கிறார்களே அப்படித்தான் இருந்தோம்.

கவுன்சலராக நான் இருக்கும் பள்ளியில் எண்ணூறுக்கும் மேல் மாணவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஒரு நூறு பேருக்காவது ஏதோ ஒரு கஷ்டம். காதல் கோளாறுகளும் உண்டு. முதல் காதலை எவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்கிறார்கள். சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கிறார்கள் அல்லது மனம் துவளுகிறார்கள் என்று ஆச்சரியப்படுவதுண்டு.

"மிஸஸ் மாலா வில் யு லிஸன் டு மீ?" என்று கேட்டுக்கொண்டு வரும் ஒவ்வொரு மாணவரும் எனக்கு அண்ணாவாகத்தான் தெரிகிறார்கள். அவரவர் பிரச்சனைக்கு மாற்றுக் கூறும்போது ஏதோ ஒரு மனநிறைவு.

டிவியை அணைத்துவிட்டுப் படுக்கப் போனேன்.

லக்ஷ்மி சங்கர்,
நார்கிராஸ், ஜார்ஜியா.
More

பூரணி என் மருமகள்
தழும்புகள்
Share: 
© Copyright 2020 Tamilonline