Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு மணி நேரம்
தேனக்காவின் கல்யாணம்
வயசு காலத்தில்
- தங்கம் ராமசாமி|ஜூலை 2013|
Share:
ஹாலில் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழுந்த சிவகாமி பல்துலக்கிவிட்டு காஃபி குடிக்க ரெடியானாள். மருமகள் சுஜாதா அவசர அவசரமாகக் கணவன் ரமேஷுக்குக் காலை உணவு, மதிய உணவு எல்லாம் செய்து முடித்துத் தானும் ஆஃபீஸ் கிளம்பப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். "குளிர் வாட்டி எடுக்கிறதே" என்று கூறிக்கொண்டே சமையலுள்ளை எட்டிப் பார்த்தாள். ‘ஹூம் காபி ரெடி’ என்று முணுமுணுத்தபடி டேபிளை நெருங்கி உட்காரும் சமயம் உள்ளே மருமகள் தமிழும் ஆங்கிலமும் கலந்து பிள்ளை ரமேஷிடம் கடுகடுவெனப் பேசுவது காதில் விழுந்தது. ‘சே, சர்க்கரை இல்லை. கசக்கிறது’ என்றபடி சிவகாமி சர்க்கரையை எடுத்தாள். "அவாவா தேவையானபடி கலந்து குடிக்கலாமில்லே. நான் என்ன செர்வன்ட்டா?" அவள் வெடிப்பது காதில் கேட்டது. பொறுமையுடன் காபியைக் குடித்து முடித்துத் திரும்ப பெட்ரூமை நோக்கி நடந்தாள் சிவகாமி.

"ஹூம் என்ன மாதிரி சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம்" மனதில் கடந்த காலம் நிழலாடியது. கணவர் பெரிய ஆஃபீசர். சமையலுக்கு, கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள். பெரிய பங்களா, தோட்டம், சகல வசதிகள். கணவர் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூறமாட்டார். காலையில் எழுந்து டி.வி., பேப்பர் படிப்பது - இதுதான் சிவகாமியின் வாழ்க்கை. சமையற்கார மாமி நறுவிசாகச் சமையல் முடித்து பூசைக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைப்பாள். ஆள் பூக்களைப் பறித்து வைத்து விடுவான். "சிவகாமி நான் ஆஃபீஸ் கிளம்பறேன்" என்று கணவர் சென்றுவிடுவார். பிறந்த வீட்டிலும் செல்லம்ந்தான். பணக்கார தோரணையில் இருந்தவள். புகுந்த வீட்டிலும் அதே மாதிரி நிறையச் சலுகைகளுடன் இருந்தாள். ஒரே மகன் ரமேஷ், இதோ யு.எஸ்ஸில் பெரிய கம்ப்யூட்டர் இஞ்சினியர்.

கணவரும் ஒருநாள் ’மேஸிவ் அட்டாக்’ வந்து இறந்துவிடவே ரமேஷ் அம்மாவை அமெரிக்கா அழைத்து வந்துவிட்டான். பழைய நாட்கள் இனி வரவா போகிறது? மருமகள் ஜாடைமாடையாகத் திட்டுவதும், ஆர்டர் போடுவதும் சிவகாமிக்கு எரிச்சலும் வெறுப்பும் மூண்டுவரும். என்ன செய்வது? ரொம்பக் கோவக்காரி என்று பேர் எடுத்தவள், இன்றைக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது.

தானே போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். சென்னையில் தினந்தினம் விதவிதமான சமையல். மாமி பொறுமையாய் சாம்பார் தான், தனியாய் வடித்து ஓரமாய்ப் போட்டுப் பரிமாறுவாள். அப்பளம் சூடாகப் பொரித்துப் போடுவாள். வாய்க்கு ருசியாகச் சாப்பாடு. கணவர்கூட எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவார். சிவகாமிக்குத் துளி உப்பு, புளி கூடுதலாய் இருந்தால் கோபம் வந்துவிடும். இங்கே என்ன செய்வது!

வந்த புதிதில் கொஞ்சம் மரியாதை, கவனிப்பு இருந்தது. பிறகு எல்லாமே குறைந்துவிட்டது. "டேபிளில் இருக்கு சாப்பிடுங்கோ" சொல்லிவிட்டுப் போய் விடுவாள் மருமகள். இந்த அமெரிக்காவில் பெண்மணிகள் பண்ற அட்டகாசம்... அப்பப்பா...!

ஒருநாள் சமைத்து மூணு நாளைக்கு அதேதான். எதை எடுத்தாலும் ஃப்ரீசரில் போட்டு தேவையான போது எடுத்துச் சாப்பிடுவது, என்ன கண்றாவியோ?

சிவகாமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

குளித்து முடித்துச் சாப்பிட உட்கார்ந்தாள். "சமையலா இது. சே! வாயில் வைக்க முடியலை. பாவம் பிள்ளை எப்படித்தான் சாப்பிடறானோ உப்புசப்பில்லாமல்." ஏதோ பேருக்குச் சாப்பிட்டு முடித்தாள். பகலில் டி.வி., புத்தகம். பொழுது போகணுமே. நம்ப ஊரானால் கோயில், குளம் போகலாம். இங்கே கட்டிப்போட்ட மாதிரிதான் இருக்க வேண்டியிருக்கு.
சிவகாமி தன்னுடைய சிறுவயது வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். வசதியான குடும்பமானாலும் கட்டுப்பாடுகள் அதிகம். மடி, ஆசாரம் சொல்லி முடியாது. வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வேளைக்கு டாண் டாணென்று மாமியார், மாமனாரை கவனித்துச் சாப்பாடு போடுவது, வீட்டைப் பரமாரிப்பது என்று வேலைகள் நிறையவே இருக்கும். மரியாதை துளியும் குறையக் கூடாது. எல்லோரும் சாப்பிட்ட பின்தான் சாப்பிட வேண்டும். மாமியார் வெடுக்கென்று தேள் கொட்டுவது போலத்தான் பேசுவார். எல்லாம் கேட்டுக்கொண்டு அடங்கி இருந்தாச்சு. ஹூம். இப்போ இப்படி ஒரு அமெரிக்க வாழ்க்கை. மாமியார், மாமனார் இறந்தபின் சுதந்தரமாயும் இருந்தாச்சு. எல்லாம் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.

மறுநாள் காலை வாக்கிங் போய்விட்டு உள்ளே வரும்போது சுஜாதாவின் குரல் கணீரென்று காதில் விழுந்தது. ஒட்டுக் கேட்கக் கூடாதுதான். இருந்தாலும் பேச்சு தன்னைப் பற்றி இருக்கவே, சற்று உற்றுக் கேட்டாள். ஏனோ தவறென்று தோன்றவில்லை, சிவகாமிக்கு.

"லுக் ஹியர். நான் சொல்றது தப்பாப் படலாம். உங்க அம்மா செல்லமா வளர்ந்தவங்களா இருக்கலாம். உங்க வீட்ல சமையலுக்கு ஆள் படைன்னு அதிகாரமா இருந்திருக்கலாம். நாம இப்போ இருக்கறது அமெரிக்கா அதைப் புரிஞ்சிட்டு அனுசரிச்சுப் போகலாமில்லையா? நான் ஃப்ராங்கா பேசினா பொல்லாதவள்னு பேர்தான் வரும். காலை வேளையில் டி.வி. ரொம்ப அவசியமா? கூடமாட கிச்சன்ல ஏதாவது ஹெல்ப் பண்ணக்கூடாதா? பகல்ல சும்மாத்தானே இருக்காங்க. துணிகளை மெஷின்ல போட்டு டிரையர்ல மாத்தக் கூடாதா? இங்கே தண்ணீ இழுக்கணுமா, தூக்கணுமா? சின்னச் சின்ன வேலை கூடச் செய்யக்கூடாதா? நான் சாயங்காலம் வரச்சே சோறு தின்ன தட்டு டம்ளர் வரை சின்க்ல குமிஞ்சு கிடக்கு. டிஷ் வாஷர்ல போடலாமில்லையா? நானும் வேலை செஞ்சுட்டுத்தானே வரேன்? நான் ஒண்ணும் செர்வன்ட் இல்ல, சும்மா ஓடி ஓடி உழைக்கறதுக்கு" - படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.

பையன் என்ன சொல்கிறான் என்று உற்றுக் கேட்டாள். "சுஜா கொஞ்சம் பொறுமையா இரு. பாவம் அம்மா ரொம்ப சொகுசா இருந்தவங்க. அவங்களை ஒண்ணும் சொல்லாதே, எனக்குக் கஷ்டமாயிருக்கு" என்று கூறவானோ, சபலத்துடன் நின்றாள் சிவகாமி.

"சுஜா
, நான் கொஞ்சம் அட்வைஸ் பண்றேன் அம்மாவுக்கு. சரி கட்டறேன். அமெரிக்க லைஃப பழக்கிவிடறேன். எனக்கும் உன்னைப் பார்த்தா ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஐயோ பாவம்னுதான் இருக்கு. பார், நாளையிலேர்ந்து எப்படி மாத்திக் காட்டறேன். டேக் இட் ஈஸி. தாஜா பண்ணி வேலை வாங்கறேன். ஓகேயா?" என்று அவளைக் கன்னத்தில் தட்டிக் கொஞ்சினான்.

சிவகாமிக்கு முதலில் "அடப்பாவி என் வயிற்றில் பிறந்த பிள்ளையா நீ. அம்மா என்கிற அனுதாபமே இல்லாம இப்படிப் பேசறே!" என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் சுஜாதா சொல்வதிலும் கொஞ்சம் நியாயம் இருப்பதாக மனசாட்சி முணுமுணுத்தது. ஓசைப்படாமல் போய் வாக்குவம் க்ளீனிங் மெஷினைக் கையிலெடுத்தாள்.

புதுசாகத்தான் இருந்தது வயசு காலத்தில் வேலை செய்வது. ஆனாலும்..... இது அமெரிக்கா!

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
More

ஒரு மணி நேரம்
தேனக்காவின் கல்யாணம்
Share: 
© Copyright 2020 Tamilonline