Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
பரத்வாஜ் ராமன்
- அரவிந்த்|அக்டோபர் 2013||(1 Comment)
Share:
'வீணை' என்றாலே பாலசந்தர்; பாலசந்தர் என்றாலே வீணை என்று சொல்லுமளவுக்கு இந்த இசைக்கருவியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் வீணை எஸ். பாலசந்தர். மிகவும் கடினமான அவரது பாணியைப் பின்பற்றி வருகிறார், பாலசந்தரின் பேரனும், வளர்ந்துவரும் வீணைக் கலைஞருமான பரத்வாஜ் ராமன். 29 வயதாகும் பரத்வாஜ் தாத்தாவிடம் நேரடியாகக் கற்கவில்லை என்றாலும் அவரது கச்சேரிகளை ஒலிப்பேழையில் கேட்டுக் கேட்டுத் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். லால்குடி ஜெயராமனின் சகோதரி திருமதி பத்மாவதி அனந்தகோபாலன், பரத்வாஜின் குரு. நாரத கான சபாவின் இளநிலை வீணை வித்வான் விருது, லலிதா பத்மநாபன் இசைக்கலைஞர் விருது போன்ற விருதுகளையும் பல பாராட்டுக்களையும் பெற்றிருக்கும் பரத்வாஜ், வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் கர்நாடக இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பயணம், புகைப்படம் எடுப்பது பிடித்தமான பொழுதுபோக்குகள். முழுநேர இசைக்கலைஞரான இவர், மாணவர்களுக்கு வீணை கற்றுக்கொடுத்து வருகிறார். தந்தை எஸ்.பி.எஸ். ராமன் தமிழகத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர். தாய் தர்மா ராமனும் வழக்கறிஞர்தான். பரத்வாஜ் ராமனுடன் உரையாடியதில் இருந்து...

கே: உங்கள் அரங்கேற்றம் எப்போது நடந்தது?
ப: என்னுடைய பத்தாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. தாத்தாவின் (வீணை பாலசந்தர்) நினைவு தினத்தை ஒட்டி நடந்த கச்சேரி அது. பல வருடங்களாக நடந்து வரும் அந்தக் கச்சேரியில் என்னை ஒருமுறை வாசிக்கச் சொன்னார்கள். அதற்கு நல்ல வரவேற்பு. பத்திரிகைகளிலும் அதுபற்றிய செய்திகள் வெளியாகின. எனக்கு அது ஒரு ஊக்குவிப்பாக இருந்தது. பின்னர் அவ்வப்போது கச்சேரிகள் செய்தேன். கூடவே சாதகமும் படிப்பும் தொடர்ந்தன.

கே: உங்கள் தாத்தா எஸ். பாலசந்தர் பற்றிய உங்கள் நினைவுகள் என்ன?
ப: எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் காலமாகி விட்டார். அதனால் அவரிடமிருந்து நேரடியாக எதையும் கற்க முடியவில்லை. அவருடைய கச்சேரிகள், வீடியோ, ஆடியோ பதிவுகளைக் கேட்டுக் கேட்டுத்தான் கற்றுக் கொண்டேன். எனது குருநாதர் பத்மாவதி அனந்தகோபாலன். அவருக்கு மானசீக குரு என் தாத்தா. நான் அவரிடம் சங்கீதம் கற்க ஆரம்பித்தது என் தாத்தா சொல்லித்தான்.

கே: எஸ்.பாலசந்தரின் பாணி தனித்துவமிக்கது. பயில மிகவும் கடினமானது. நீங்கள் எப்படி அதனைக் கைக்கொண்டீர்கள்?
ப: அவர் மாதிரியே வாசிக்க வேண்டும் என்று நான் ஏதும் முயற்சி செய்யவில்லை. அவர் என்னவெல்லாம் வீணையில் செய்திருக்கிறார் என்பதை நானும் முயற்சித்தேன். அப்படிக் கற்றுக்கொண்டதுதான் அது. அவர் ஆரம்பத்தில் கஞ்சிராதான் வாசித்துக் கொண்டிருந்தார். பின் சிதாருக்கு மாறினார். இறுதியாக அவர் தேர்ந்தெடுத்ததுதான் வீணை. அவர் ஏன் அப்படி மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அந்த அனுபவத்தை நாமும் பெறவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. அப்படி ஆரம்பித்ததுதான்.

கே: உங்கள் கச்சேரிகள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: சென்னையில் கச்சேரிகள் செய்திருக்கிறேன். இண்டியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து என்று நிறைய அதுபற்றி விமர்சனங்கள் வந்திருக்கின்றன. மும்பை ஷண்முகானந்த சபா, ஃபைன் ஆர்ட் சொசைட்டியில் கச்சேரி செய்திருக்கிறேன். ஷிமோகாவிலும் கச்சேரி செய்திருக்கிறேன். மூன்று வருடம் முன்பு லண்டன், ஸ்காட்லாந்து சென்று சில கச்சேரிகள் செய்தேன். நல்ல வரவேற்பு. இரண்டு வருடம் முன்னால் சிங்கப்பூர் சென்று வந்தேன். சிலர் தாத்தா மாதிரியே வாசிக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர். சிலர் தாத்தாவின் பாணியோடு உங்கள் பாணியையும் கலந்து வாசிக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். சங்கீதம் என்பது மிகப்பெரிய கடல். நான் இன்னமும் அதைக் கற்கும் மாணவனாகத்தான் இருக்கிறேன். ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன்.



கே: வீணை தவிர பிடித்த பிற இசைக்கருவிகள் என்னென்ன, எவற்றை வாசிப்பீர்கள்?
ப: முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் பல இசைக் கருவிகளை வாசிப்பதுண்டு என்றாலும் என் கவனமெல்லாம் வீணை மீதுதான். முழுமையாகக் கச்சேரி செய்யுமளவிற்கு நான் வாசிப்பது வீணை மட்டும்தான். சிதாரைத் தானாகவே கற்றுக் கொண்டு எட்டு மாதத்தில் ஒரு கச்சேரியே நிகழ்த்தியவர் தாத்தா பாலசந்தர். அவர் ஒரு பல்துறை விற்பன்னர். அவர் செய்ததை எல்லாம் நானும் செய்து பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் தாத்தா மாதிரி யாரும் வரமுடியாது. அவர் ஒரு லெஜண்ட். அவர் ஒரு தனிப்பிறவி.

கே: உங்களுக்கு ஃப்யூஷன் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?
ப: ஃப்யூஷனுக்கு எல்லாம் நான் அதிகம் செல்வதில்லை. அதை பரீட்சார்த்தமாகச் செய்து பார்க்கலாம். அதிலேயே முழுமூச்சாக இறங்குவதில், அதையே தொழிலாக வைத்துக்கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை. நம் கர்நாடக இசையிலேயே எவ்வளவோ இருக்கிறது. இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு அதில் நிறைய விஷயம் இருக்கிறது. இதுவரை கண்டுபிடித்ததே ஒரு பருக்கை மாதிரிதான். இந்திய இசையில் நிறையச் செய்திருக்கிறார்கள். எழுதி வைத்துச் சென்றவை மிகவும் கொஞ்சம்தான். நாம்தான் அவற்றை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்திற்குச் சொன்னால் ஏன் தவில் வித்வான்கள் எல்லாம் சுவாமி உலா வரும்போது கழுத்தில் கட்டிக் கொண்டு தவில் வாசித்தார்கள், ஏன் நின்றுகொண்டு வாசித்தார்கள், சுவாமி புறப்பாட்டின்போது மட்டும் ஏன் வாசிக்க வேண்டும் - இப்படி நிறைய விஷயங்கள் ஆராய வேண்டியவை உள்ளன. அதற்கே நம் வாழ்நாள் போதாது.

கே: தினமும் சங்கீத சாதகம் செய்வீங்களா? எவ்வளவு நேரம்?
ப: குறைந்தது ஒரு ஆறு மணி நேரமாவது சாதகம் செய்யவேண்டும். ஒரு ஆஃபிஸில் நீங்கள் செலவழிக்கும் நேரம் சாதகத்துக்கும் வேண்டும். அப்போதுதான் அது நல்ல பயிற்சியாக இருக்கும். நான் பகலில் சாதகம் செய்யமாட்டேன். எந்தவித சப்தமும், தொந்தரவும் இல்லாத, அமைதியான இரவில்தான் சாதகம் செய்வேன். இரவு 9 மணிக்கு மேல் ஆரம்பித்து விடியற்காலை 3 மணிவரை செய்வேன். அந்த நேரத்தில் பயிற்சி செய்வது அமைதியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.

கே: வீணை இசையில் என்னென்ன புதுமைகளைச் செய்ய நினைக்கிறீர்கள்?
ப: வீணைபற்றிய ஆராய்ச்சி ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதை இசை குறித்த ஆராய்ச்சி என்று சொல்ல முடியாது.
கே: என்ன அது?
ப: வீணையை மரத்தில் செய்கிறார்கள். மிகவும் வெப்பமான சென்னை போன்ற இடத்தில் கச்சேரி செய்து விட்டு, மறுநாள் குளிரான வெளிநாட்டில் கச்சேரி செய்யும் போது, மெழுகு வைத்து 'ரிக்' செய்யப்பட்ட இடங்களிலெல்லாம் மெழுகு விரிசல் கண்டுவிடுகிறது. அதுபோல வாசிக்கும் 'ரிக்' எல்லாம் பித்தளைகளில் வைக்கிறார்கள். அது நாளடைவில் ஒரு மாதிரி 'துரு' ஏறியதுபோல் ஆகிவிடுகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்காக நான் ஃஃபைபர் வீணை ஒன்றைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். எங்கெல்லாம் பித்தளை வருகிறதோ அங்கெல்லாம் எவர்சில்வர் வைத்துப் பண்ணலாம் என்று ஒரு ஐடியா. அது நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது, முழுமையடையவில்லை. கூடிய விரைவில் அதை முடித்துவிடுவேன். அது பயன்பாட்டுக்கு வந்தால் வீணைக் கலைஞர்களுக்கு, மிகவும் உதவியாக இருக்கும். கிடார் போல வீணையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு போகமுடியும். வீணையைப் பிரித்துத் திரும்ப மாட்டி, கச்சேரி செய்யும் அமைப்பில் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது நன்றாகவே வந்திருக்கிறது.

கே: சென்ற வெளிநாடுகளில் பிடித்தது எது?
ப: லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து அலுக்கவே அலுக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவை.

கே: அங்கு கச்சேரிகளை எப்படி ரசித்தனர்?
ப: நல்ல வரவேற்பு. அது மட்டுமல்ல. அங்குள்ள வெளிநாட்டவர்கள் நம்மிடம் வந்து எப்படி இதில் வாசிக்கிறீர்கள், எப்படி இந்த ஒலி வருகிறது, எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள். பலரும் இதைக் கற்க ஆர்வமாக இருக்கிறார்கள். நம் இசையின் மகத்துவம் அது. வெளிநாடுகளில் வாத்தியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ராகத்துக்கு, இசைக்கு, ட்யூனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு தியாகராஜர் கிருதி என்று எடுத்துக் கொண்டால் நான் அதை விளக்கி, தியாகையர் எந்தச் சூழலில் அந்தப் பாடலைப் பாடினார், அப்போது அவர் எந்த நிலைமையில் இருந்தார், அதன் பாவம் என்ன, ராகம் என்ன என்றெல்லாம் விளக்கி கச்சேரிகள் செய்வேன். அவர்கள் அதனை மிகவும் விரும்பி இறுதிவரை இருந்து கேட்டுச் செல்கின்றனர்.

கே: உங்களுக்குப் பிடித்த ராகம் எது?
ப: எல்லா ராகமுமே பிடித்தவைதாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு, அலாதி. சிறப்பு. ஒன்றில் இருப்பது மற்றொன்றில் இருக்காது. நுணுக்கமான சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கும். அழகு இருக்கும். மகத்துவம் இருக்கும். அதனால் எல்லா ராகங்களுமே எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு ராகத்திலும் இருக்கும் நுணுக்கத்தை எவ்வளவு தூரம் என்னால் புரிந்து கொண்டு வழங்க முடிகிறது என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.



கே: பிடித்த இசைக் கலைஞர்கள் யார், யார்?
ப: எல்லாக் கலைஞர்களையும் பிடிக்கும். சங்கீத மும்மூர்த்திகளை எனக்கு மிகவும் பிடிக்கும். தீக்ஷிதர் பாடல் ஒன்றைக் கற்றுக்கொண்டால் ஒரு ராகத்தை, அதன் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ளலாம். தியாகையரின் பாடல்கள் மிக எளிமையானவை. ஆனால் பாடலின் பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது உங்களை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும். அந்த வார்த்தைகளைப் பார்த்தாலே அவர் எவ்வளவு பக்தியோடு பாடியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதுபோல சியாமா சாஸ்திரி. அவர் சாகித்யம் ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம்.

கே: உங்களது குடும்பம் குறித்து...
ப: என் தந்தை எஸ்.பி.எஸ். ராமன் வழக்கறிஞர். நன்றாக இசை அறிந்தவர். ஆனால் என் தாத்தா மாதிரி தன்னால் வாசிக்க முடியுமா என்ற ஒரு சிறு ஐயம் வந்ததால் இசையைத் தொழிலாக மேற்கொள்ளவில்லை. அம்மாவும் வக்கீல். இசை, நாட்டிய ஆர்வம் மிக்கவர். நிறையச் செயல்விளக்கம் கொடுத்து வருகிறார். அவர்கள் இருவரும் தரும் ஊக்கத்தில்தான் என்னால் இசைக் கலைஞனாக இருக்க முடிகிறது. மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதுபோல எனக்கு இவர்கள் பெற்றோர்களாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். என் இசையார்வத்தைப் புரிந்துகொண்டு, என்னை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாமல், தங்கள் ஆசைகளை என்மேல் திணிக்காமல் சுதந்திரமாக என்னை வளரவிட்டதற்கு நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

விரைந்து பணம் பண்ணும் இந்த உலகத்தில், என்னைப் போன்ற இளைஞர்கள் லட்ச லட்சமாகப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்னை, ‘வேலைக்குப்போ, சம்பாதி' என்று வற்புறுத்தாமல், "இசையை நீ பரப்பு" என்று என்போக்கில் போக அனுமதித்திருப்பதே ரொம்பப் பெரிய விஷயம். அதற்காக நான் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் இன்று இசைத்துறைக்கே நிறையப் படித்துவிட்டுத்தான் வருகிறார்கள். ஒருவேளை இது சரியாக அமையவில்லை என்றால் வேறு வேலைக்குப் போய்விடலாம், அல்லது தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். அது சரியானதும்கூட. அப்படியிருக்க, எத்தனை பெற்றோர்களால் இன்றைக்கு அப்படி அனுமதிக்க முடியும்? அந்த வகையில் நான் என்றென்றும் நன்றி சொல்ல வேண்டும்.

"கற்கவும் சாதிக்கவும் நிறைய இருக்கிறது" என்று கண்கள் நிறையக் கனவுகளோடு பேசுகிறார் பரத்வாஜ் ராமன். கனவை நனவாக்கும் உழைப்பும் அவரிடம் இருக்கிறது. பிறகென்ன! அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

உரையாடல் : அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline